பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இளசுகளின் கிரஷ் யார்? - ஒரு ஜாலி அலசல்

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பல்லவி

பார்த்தவுடன் ஈர்க்கும் வசீகரம்... கண்களை எடுக்காமல் பார்க்க வைக்கும் ‘ஸ்க்ரீன் பிரசன்ஸ்!’

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஶ்ரீதேவி, குஷ்பு, சிம்ரன் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் கனவு நாயகர்களும் கனவு நாயகிகளும் இளைஞர்களை ஈர்ப்பார்கள். 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் எனப் பலதரப்பினரும் நிறைந்த இன்றைய காலத்தில் யார் கனவு நாயகன்கள் மற்றும் நாயகிகள் எனத் தெரிந்துகொள்வது சமூகக்கடமை இல்லையா?

‘பார்த்தவுடன் ஈர்க்கும் வசீகரம்... கண்களை எடுக்காமல் பார்க்க வைக்கும் ‘ஸ்க்ரீன் பிரசன்ஸ்!’ தற்போதைய தமிழ் சினிமாவில் உங்களின் கனவுநாயகன்/நாயகி யார்?’ - இந்தக் கேள்வியை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் முன்வைத்தோம். ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் என வரிசையாகப் பதில்கள் வந்து விழுந்தன. ‘மொட்டை ராஜேந்திரன்’, ‘எம்.எஸ்.பாஸ்கர்’ என்று கலாய்த்த நல்லுள்ளங்களின் பதில்களைப் புன்னகையுடன் கடந்தோம்.

‘திருமணம் ஆகாத நாயகன், நாயகி மட்டும்தான் கனவு நாயகன், கனவு நாயகி’ என்று இபிகோ 143 சொல்வதால் ரஜினி, கமல், தல, தளபதி ரசிகர்களின் தர்பார் மய்யங்களிலிருந்து வந்த வெறித்தனமான, விசுவாசமான பதில்களையும் அதே புன்னகையுடன் ஓரங்கட்டி வைத்தோம். அதற்கப்புறம் கனவுச் சுற்றில் இருந்தவர்கள் யார் யார்?

ஹரிஷ் கல்யாண், நித்யா மேனன், அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு , ஆத்மிகா
ஹரிஷ் கல்யாண், நித்யா மேனன், அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு , ஆத்மிகா

விஜய் தேவரகொண்டா, நிவின் பாலி, துல்கர் சல்மான் ஆகியோருக்கும் கணிசமான ரசிகைகள் கூட்டம் இருக்கிறது என்றாலும் தமிழ் சினிமா நாயகர்களை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டோம்.

பெரும்பாலான பதில்களின் அடிப்படையில் பார்த்தால் கனவுக்கோட்டையைக் கைப்பற்ற நடக்கும் யுத்தத்தில் முன்னணியில் இருக்கும் குட்டி இளவரசர்கள் துருவ் விக்ரமும், ஹரிஷ் கல்யாணும்தான்.

இவர்களுடன் போட்டியில் நிற்பது ‘இதயம்’ முரளியின் இனிய மகன் அதர்வா. இன்னோர் ஆச்சர்யமான செய்தி, ‘கோதாவில் நாங்க எப்போதும் இருக்கிறோம்’ என ஆஜர் ஆகும் சிம்பு ரசிகர்கள்.

அனுஷ்கா, ப்ரியா பவானி சங்கர், நிவின் பாலி
அனுஷ்கா, ப்ரியா பவானி சங்கர், நிவின் பாலி

கனவு நாயகிக்கான போட்டியில் ஆத்மிகா, அதுல்யா எனக் குட்டி இளவரசிகளுக்கு முதலில் மளமளவென வந்து விழுந்தன ஓட்டுகள். ‘அட நம்ம வீட்டுப் பொண்ணுப்பா’ என்று ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அபிமானத்துடன் ஆதரவு தெரிவித்தவர்கள் உண்டு. `மாஸ்டர்’ நாயகி என்பதாலேயே மாளவிகா மோகனனுக்கு மாலையும் பூங்கொத்தும் கொடுக்கத் தயாரான தமிழ் சினிமா ரசிகர்களும் கணிசம். ‘மறுவார்த்தை பேசாதே’ என தனுஷ் மருகி உருகிய மேகா ஆகாஷுக்கும் சரமாரியான வாக்குகள் விழுந்தன.

ஆண்டுக்கு ஒரு படம் என சிங்கிள்ஸ் தட்டி விளையாடிக்கொண்டு இருந்த ப்ரியா பவானி சங்கருக்கு, இந்த ஆண்டு ரிலீஸுக்காகக் காத்திருப்பதோ ஆறு படங்கள். செய்தி வாசிப்பாளராக இருந்த காலத்திலேயே, இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது இன்ஸ்டாவில் தனிப் பட்டாளமே வைத்திருக்கிறார் ப்ரியா என்பதால் அவரது அழகையும் ஆராதிக்க ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ‘பிரேமம்’ படத்துக்கு மலர் டீச்சராக நடித்தபோதே மானாவாரியாக மார்க் போட்ட தமிழன், ‘ரவுடி பேபி’ என்று ரகளை ஆட்டம் போடும்போது சாய் பல்லவியைக் கைவிட்டுவிடுவானா என்ன? மலர் டீச்சரின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் ஹார்ட்டின்களாலேயே கையெழுத்துபோட விசிறிகள் கூட்டம் உண்டு. ‘ஓ காதல் கண்மணி’ என்று நித்யா மேனன்மீது க்ரஷ் ஆகி, ‘நினை வெல்லாம் நித்யா’ என்று லவ் ஸ்டேட்டஸ் போடுவதிலும் ஆர்வம் காட்டினார்கள் பலர்.

நயன்தாரா, விஜய் தேவரகொண்டா
நயன்தாரா, விஜய் தேவரகொண்டா

இந்தப் புதுவரவுகளைத் தாண்டி ‘நயன்தாரா தற்கொலைப்படை’, ‘அனுஷ்கா ஆர்மி’யைச் சேர்ந்த வர்களும் களத்தில் குதித்துக் கனவு நாயகிகள் குறித்துக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குப்பதிவில் கலந்துகொண்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. காதலர்தின வாழ்த்துகள்!