சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

என்ன பண்றாங்க இவங்க?

ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயஸ்ரீ

குடும்பப்பாங்கான அழகில் பார்ப்பவர்களை உருகி நெகிழ்ந்து காதலிக்கவைத்த ஏஞ்சல் சுவலட்சுமி. மேற்குவங்கத்தில் பிறந்து வளர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிய கதாநாயகிகளுள் சிலர் இப்போது என்ன செய்கிறார்கள்?
என்ன பண்றாங்க இவங்க?

சுவலட்சுமி

குடும்பப்பாங்கான அழகில் பார்ப்பவர்களை உருகி நெகிழ்ந்து காதலிக்கவைத்த ஏஞ்சல் சுவலட்சுமி. மேற்குவங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். சின்ன வயதிலேயே கிளாசிக்கல், ஃபோக் என சத்யஜித் ரே எழுதிய ‘உடோரன்’ படத்தில் பெருமைமிகு அறிமுகம். அஜித்தின் ‘ஆசை’ மூலம் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து ‘கோகுலத்தில் சீதை’யாக இடம்பிடித்தார். என்.எஃப்.டி.சி தயாரித்த ‘நதிக்கரையினிலே’ வரை பட்டி தொட்டி ரசிகர்கள் மனதில் வலம் வந்தவர், 2002-ல் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விடைபெற்றுவிட்டார். கணவர் கொல்கத்தாகாரர் தான். அவரது பெயர் ஸ்வாஹதோ பானர்ஜி, அமெரிக்காவில் பணிபுரிகிறார். திருமணத்திற்குப் பிறகு சுவலட்சுமியும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இப்போது ‘அவரா இவர்’ என்கிற ரேஞ்சில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சராசரி பெண்ணாக, தங்களின் ஒரே ஒரு செல்ல மகளுடன், பொறுப்பான அம்மாவாகவும், இல்லத்தரசியாகவும் சான்பிராஸிஸ்கோவில் உலா வருகிறார்.

என்ன பண்றாங்க இவங்க?

ஜெனிலியா

செம வாலு, வெள்ளந்திப் புன்னகை, துள்ளல் துறுதுறு என மிளிரும் ஹீரோயின் ரோலுக்கு இன்னமும் ரெஃபரன்ஸ் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஹாசினியான ஜெனிலியா. பாலிவுட்டில் தன் கரியரைத் தொடங்கியவர், தமிழில் ‘சச்சின்’, ‘உத்தமபுத்திரன்’ எனச் சில படங்களில் சிறகடித்தார். அதன்பின், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012-ல் திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஜெனி- ரித்தேஷ் தம்பதிகளுக்கு ரியான் தேஷ்முக், ரஹைல் தேஷ்முக் என இரண்டு குட்டி இளவரசன்கள் இருக்கிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுத்த ஜெனிலியா, அதன்பின் இந்தி, மராத்தியில் நடிக்க ஆரம்பித்து, இப்போது இன்னும் ஒருபடி மேலே முன்னேறியிருக்கிறார். கணவர் ஹீரோவாக நடித்த ‘மௌலி’ மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இப்போதும் அதே எனர்ஜியுடன் கலக்கும் ஜெனி, சென்ற வருடம் வெளியான நானா படேகரின் ‘இட்ஸ் மை லைஃப்’-ல் ஹீரோ யினாகவும் அசத்தியிருக்கிறார். மறுபடியும் தமிழுக்கு எப்போ வருவீங்க ஹாசினி?!

என்ன பண்றாங்க இவங்க?

ரீமாசென்

ரீமாசென்னை மறக்க முடியுமா என்ன? ‘தூள்’, ‘கிரி’, ‘செல்லமே’ என ஒரு காலத்தில் கலக்கியவர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ வில்லியாகவும் கெத்து காட்டியவர். பெங்காலி தியேட்டர் ஆர்ட்டிஸ்டான ரீமா, ‘மின்னலே’ மூலம் தமிழுக்கு வந்தார். அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ பாகங்களில் நடிக்கும் போது, அதாவது 2012-ல் மும்பைத் தொழிலதிபரான ஷிவ்கரன்சிங்கைக் கரம்பிடித்தார். இப்போது ஸ்கூலுக்குப் போகும் வயதில் க்யூட்டான ஒரு மகனும் இருக்கிறார். பையன் பெயர் ருத்ரவீர் சிங். மும்பையில் செட்டில் ஆகிவிட்ட ரீமா, சமீபத்தில்தான் தனது ஒன்பதாவது திருமண நாளையும் கொண்டாடி மகிழ்ந்தார். ‘‘என் முகத்தில் எப்பவும் புன்னகை பூத்துக் குலுங்க கணவர்தான் காரணம்” என நெகிழ்ந்து மகிழ்கிறார். முழு நேர இல்லத்தரசியாக மாறிவிட்ட ரீமாவின் நட்பு வட்டத்தில் நமக்குத் தெரிந்த முகமாக ‘வெற்றிக் கொடி கட்டு’ மாளவிகா மட்டும் இருக்கிறார்.

என்ன பண்றாங்க இவங்க?

ஜெயஸ்ரீ

‘தென்றலே என்னைத் தொடு’வில் கவிதை பாடும் குயிலாக அறிமுகமானவர் ஜெய. தமிழில் ஒன்றரை டஜன் படங்களில் சிறகடித்தவர், திருமணமாகி அமெரிக்காவில் கணவர் சந்திரசேகர், குழந்தைகளோடு செட்டில் ஆனார். கடைசியாக எஸ்.வி.சேகரின் ‘மணல்கயிறு’ மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அமெரிக்காவில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் 20 வருடங்களுக்கு மேலாக புராஜெக்ட் மேனேஜராகப் பணிபுரிந்துவருகிறார். கோலிவுட்டின் எய்ட்டீஸ் ஹீரோயின்கள் அத்தனை பேருடனும் டச்சில் இருக்கிறார். வருடா வருடம் சென்னையில் நடைபெற்று வரும் பிலிம் ஃபெஸ்டிவலுக்குப் பறந்து வருவதும் உண்டு. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜெய, வீட்டில் கிச்சன் குயினாகவும் அசத்துகிறார். வெஜ் பிரியாணியிலிருந்து அத்திப்பழ பிட்சா வரை விதவிதமாக சமைத்தும் கலக்கிவருகிறார்.

என்ன பண்றாங்க இவங்க?

‘நிழல்கள்’ ரோகிணி

எய்ட்டீஸ் ஹீரோயினான ரோகிணியை இப்போது சந்தித்தாலும் ‘நிழல்கள்’ படத்தில் வரும் ‘பூங்கதவே தாழ்திறவாய்...’ பாடல்தான் நினைவில் இனிக்கும். தமிழில் ‘ஒருவர் வாழும் ஆலயம்’ தவிர மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். அதன்பின், அமெரிக்கா பறந்தார்.

‘‘என்னோட ஒரிஜினல் பெயர் ராதிகா. ‘நிழல்கள்’ல தான் பாரதிராஜா சார் என் பெயரை ரோகிணின்னு மாத்தி வச்சார். முப்பது வருஷமா அமெரிக்காவில்தான் இருக்கேன். கணவர் நீகார் கிரி, சென்னைக்காரர். ஃபாரீன்ல இப்ப பிசினஸ்மேன். பையன் அவனீஷ், ஒர்க் பண்றான். பொண்ணு லாஸியாவுக்கு இப்பதான் பதினெட்டு வயசு தாண்டியிருக்கு. சின்ன வயசில இருந்து எனக்கு டான்ஸ் தெரியும். அமெரிக்கா போனதிலிருந்து ஐ.டி நிறுவனத்துல ஒர்க் பண்ணினேன். அப்புறம் அஞ்சலி நாட்டியாலயாங்கற பெயர்ல ஒரு டான்ஸ் ஸ்கூலை சக்சஸ்ஃபுல்லா 15 வருஷத்துக்கு மேலா நடத்திட்டு வர்றேன். ஒவ்வொரு சங்கீத சீசனுக்கும் சென்னை வந்துட்டிருக்கேன். என்னோட மாணவிகளுக்கும் இங்கே அரகேற்றம் பண்ணவும் செய்றேன்” என்கிறார் ரோகிணி.