
கவினுக்கு இணையாக நடிப்பிலும் சண்டை போடுகிறார் சிந்துவாக வரும் அபர்ணா தாஸ். குறிப்பாக க்ளைமாக்ஸில் உண்மை தெரிந்து கலங்கி அழும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பு.
காதலி பிரிந்து சென்றபின், ‘சிங்கிள் ஃபாதராக' குழந்தையை வளர்க்கப் போராடும் நாயகனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே இந்த ‘டாடா.'
பொறியியல் படிக்கும் கவினும் அபர்ணா தாஸும் காதலிக்கிறார்கள். எதிர்பாராத விதமாகக் கல்லூரி முடிக்கும் முன்னரே அபர்ணா கர்ப்பமாகிவிட, சில பிரச்னைகளால் குழந்தையை வளர்க்கும் முழுப் பொறுப்பும் கவினிடமே வருகிறது. நண்பர்களின் உதவியுடன் அதைச் செய்யும் கவின், தன் கரியரில் முன்னேறினாரா, மீண்டும் அபர்ணாவுடன் இணைந்தாரா என்பதே இந்தப் படத்தின் கதை.
மணிகண்டனாகத் தோன்றும் கவின், பொறுப்பற்ற கல்லூரி மாணவன், பொறுப்புமிக்க அப்பா என இரண்டு பரிமாணங்களில் கவனம் ஈர்க்கிறார். தற்கொலை செய்ய முயல்பவரைக் கையாளும் விதம் ‘மாஸ் ஹீரோ' பில்டப் என்றால், குழந்தையை நினைத்து ஆட்டோவில் கலங்கும் தருணம், இறுதிக் காட்சியில் கதவருகில் நின்று கதறியழும் அந்த நொடி போன்றவற்றில் நாயக பிம்பம் உடைத்து, நடிகராகவும் ஜொலிக்கிறார்.

கவினுக்கு இணையாக நடிப்பிலும் சண்டை போடுகிறார் சிந்துவாக வரும் அபர்ணா தாஸ். குறிப்பாக க்ளைமாக்ஸில் உண்மை தெரிந்து கலங்கி அழும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பு. நாயகனின் நண்பர்களாக வரும் ஹரீஷ், வி.டி.வி கணேஷ் இருவருக்கும் பழக்கப்பட்ட வேடங்கள்தான் என்றாலும் பல இடங்களில் நெகிழச் செய்கிறார்கள். பிரதீப், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குகிறார். சீனியர்கள் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய வேலையில்லை. அதிகம் பேசாமல் அழகாக நடித்திருக்கிறார் குழந்தை நட்சத்திரம் இளன்.
படத்துக்குத் தன் பின்னணி இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஜென் மார்ட்டின். திரைக்கதையைச் சிதைக்காமல் வரும் மூன்று பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. எழிலரசனின் ஒளிப்பதிவும், கதிரேஷ் அழகேசனின் படத்தொகுப்பும் கதைக்குத் தேவையானவற்றைச் செய்திருக்கின்றன.

எங்குமே தேங்கி நிற்காத திரைக்கதையில் எமோஷனல் தருணங்கள், காமெடிக் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு. ‘‘உங்களால நாங்க நல்லாருக்கணும். ஆனா, உங்களவிட நல்லா இருந்துடக் கூடாது’’ என வசனங்களும் சிறப்பு. முதற்பாதியில் கட்டமைக்கப்பட்ட அந்த எதார்த்தம், இரண்டாம் பாதியில் வரும் ஆபீஸ் அவுட்டிங், சூப் சாங், அலுவலக மேனேஜரின் இம்சைகள் போன்ற காட்சிகளால் வழக்கமான சினிமாவாகிறது. என்னதான் தவிர்த்தாலும் கவினின் பாத்திர வார்ப்பில் வெளிப்படும் அந்த ஆண் மையவாதப் பார்வை சிக்கலே! ‘‘இதெல்லாம் நீ இருந்து பண்ணியிருக்கணும்’’ என இறுதியில் அபர்ணாவிடம் அவர் சொல்லும் வசனம் ஓர் உதாரணம்.
இத்தகைய சின்னச்சின்னக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தக் கால சமூகத்துக்கு ஏற்றவாறு காட்சிகளை அடுக்கி அப்ளாஸ் அள்ளுகிறான் இந்த ‘டாடா.'