சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்

தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்

தான் எடுத்த குறும்படத்தை சற்றே இ...ழு...த்...து திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.

தன் கனவில் வரும் மரண அறிவிப்பு பலித்துவிடாமல் காப்பாற்றப் போராடும் கிராமத்து மச்சானே இந்த தெய்வ மச்சான்!

சிறுவயது முதல் விமல் கனவில் வரும் சாட்டைக்காரர் வேல ராமமூர்த்தியின் மரண அறிவிப்பெல்லாம் பலித்துவிடுகிறது. நீண்ட நாள்களாகத் தடைபட்டுவரும் தன் தங்கை அனிதா சம்பத் திருமணத்துக்கு சூப்பர் மாப்பிள்ளை அமைந்து எல்லாம் கைகூடி வரும் வேளை. சாட்டைக்காரர் மீண்டும் விமல் கனவில் வந்து, ‘தங்கச்சி மாப்பிள்ளை, ரெண்டே நாளில் செத்துடுவான்!' என அதிர்ச்சியைக் கிளப்புகிறார். இதனால் விமல் எடுக்கும் அதிரடி முடிவையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி காக்டெய்லாக்கித் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.

தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்
தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்

கிராமத்து இளந்தாரியாக விமல், ஃபிட்டான ரெடிமேடு சட்டைக்குள் சிக்கெனப் பொருந்திப்போகிறார். விமலின் கேரக்டர் பார்த்துப் பழகியதுதான் என்றாலும், டைமிங் காமெடிகளிலும் சேட்டைகளிலும் மனதை ஈர்க்கிறார். தங்கை கணவரை அவர் கோழிபோல் அடைகாக்கும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தியேட்டர் குலுங்குகிறது. கிட்டத்தட்ட படத்தில் இரண்டாவது நாயகனைப் போல் விமலுடன் வரும் ‘பங்காளி' பால சரவணன் காமெடியில் அலப்பறையைக் கூட்ட உதவியிருக்கிறார். தீபா ஷங்கரும் அவரின் கணவராக வரும் ‘விலங்கு' கிச்சா ரவியும் காமெடிக் காதுகுத்துக்கு தங்கள் பங்குக்கு மொய் செய்திருக்கிறார்கள்.

தங்கையாக அனிதா சம்பத், திருமணம் தடைபடும் காட்சிகளில் சோகத்தையும், திருமணத்துக்குப் பிறகு வரும் பூரிப்பையும் முகத்தில் காட்டி நடிப்பில் பாஸ் ஆகிறார். அவர் கணவராக வரும் வத்சன் வீரமணி கவனிக்க வைக்கிறார்.

‘ஆடுகளம்' நரேன் வித்தியாசமான வில்லனாக படத்தின் கலகலப்புக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்கிறார். விமலின் அப்பாவாக வரும் பாண்டியராஜனையும், கனவில் வரும் சாட்டைக்காரர் வேலராமமூர்த்தியையும் இன்னும்கூடப் பயன்படுத்தியிருக்கலாம். நாயகி நேஹா ஜாவுக்கும் பெரிதாய் வேலை இல்லை.

நகைச்சுவைக் கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை கேமில் ஜே அலெக்ஸ் சிறப்பாகச் செய்திருக்கிறார். கதை நிகழும் கொடைக்கானல் மலையடிவார அய்யம்பாளையம் கிராமம் கண்களுக்குள் நிற்கிறது. அஜீஸின் பின்னணி இசை கவனிக்க வைக்கும் அளவுக்கு காட்வின் ஜெ.கோடனின் பாடல்களின் இசை இல்லாதது குறையே!

தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்
தெய்வ மச்சான் - சினிமா விமர்சனம்

தான் எடுத்த குறும்படத்தை சற்றே இ...ழு...த்...து திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார். ‘அடுத்து நிகழவிருக்கும் மரணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஹீரோ' என்ற ஒன்லைனில் இருந்த சுவாரஸ்யம் படத்தின் திரைக்கதையில் இல்லை. பிராட்கேஜில் காமெடி எக்ஸ்பிரஸாய் கலகலவெனப் பயணித்திருக்க வேண்டிய கதை அண்ணன்-தங்கைப் பாசம், பழிவாங்க சபதம் செய்யும் வில்லன் எனப் பழைய மீட்டர் கேஜில் ஓடி ஸ்லோவாகி இரண்டாம் பாதியில் பொறுமையை சோதிக்கிறது.

ஆனாலும் கோடை வெயிலுக்கு ஏற்ற பதநீர்தான் இந்த தெய்வ மச்சான்!