Published:Updated:

Vaathi Review: இந்த `வாத்தி' பரேடு எடுத்து பட்டையைக் கிளப்புகிறாரா, இல்லை தூங்க வைக்கிறாரா?

Vaathi Review

முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளை அடுக்கி விறுவிறுவென பயணிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் அடுத்து என்ன செய்வது என அறியாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது!

Published:Updated:

Vaathi Review: இந்த `வாத்தி' பரேடு எடுத்து பட்டையைக் கிளப்புகிறாரா, இல்லை தூங்க வைக்கிறாரா?

முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளை அடுக்கி விறுவிறுவென பயணிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் அடுத்து என்ன செய்வது என அறியாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது!

Vaathi Review
தனியார்ப் பள்ளிகளின் வியாபார வெறியால் கல்வி மறுக்கப்படும் ஒரு கிராமத்தின் மீட்பராக வரும் பள்ளி ஆசிரியரின் கதைதான் `வாத்தி'.

90-களில் உலகமயமாகும் இந்தியாவில், 'அதிகப் பணம் கட்டினால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும்' என்னும் பிம்பத்தைக் கட்டமைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றன தனியார்ப் பள்ளிகளும், கோச்சிங் சென்டர்களும். சிறந்த ஆசிரியர்களையெல்லாம் இவர்கள் விலைக்கு வாங்கிவிட, கேட்பாரற்று கிடக்கின்றன அரசுப்பள்ளிகள். இந்த நிலையை மாற்ற புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என அரசு முடிவெடுக்க, அரசுப்பள்ளிகளை நாங்களே தத்தெடுத்து நடத்துகிறோம் என அறிவிக்கின்றன தனியார்ப் பள்ளிகள். ஆனால், கண்துடைப்பாக மூன்றாம் தர ஆசிரியர்களையும் பயிற்சி ஆசிரியர்களையுமே அரசுப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றன.

'வாத்தி' தனுஷ்
'வாத்தி' தனுஷ்

அப்படித் தமிழக - ஆந்திர எல்லையில் இருக்கும் சோழவரம் எனும் கிராமத்திற்குச் செல்லும் 'வாத்தி' தனுஷ், தொடர் இன்னல்களைக் கடந்து கல்வியின் முக்கியத்துவத்தை அங்கிருப்பவர்களுக்குப் புரியவைத்தாரா, அவரின் மாணவர்கள் சாதித்தனரா என்பதைத் தெலுங்குப் படங்களின் கமெர்ஷியல் மீட்டரில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

படத்தின் முக்கிய பலம் தனுஷ். நடிப்புக்குப் பெரிய தீனி இல்லையென்றாலும் மாணவர்களின் அபிமான வாத்தியாக மனம் கவர்கிறார். வில்லனாக சமுத்திரக்கனி; தனியார்ப் பள்ளிகளின் அட்டூழியங்களை, லாப வெறியை ஒற்றை ஆளாகத் திரையில் கடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு. ஆனால், கோட்-சூட் அணிந்து ஹீரோவிடம் சவால்விடும் வசனங்களை மட்டுமே பேசும் டெம்ப்ளேட் வில்லனாகவே வந்துபோகிறார். தனுஷுடனான 'சார் - மேடம்' ரொமான்ஸ் க்யூட்டாக இருந்தாலும், சம்யுக்தாவுக்கு அதைத் தாண்டி பெரிதாக எந்த வேலையும் இல்லை.

ஒப்பீட்டளவில் கென் கருணாஸுக்குக் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாதியில் வரும் ஷா ரா காமெடி காட்சிகள் எடுபடவில்லை. துணைநடிகர்களில் இவர்கள் தவிர்த்து பெரும்பாலானவர்கள் தெலுங்குத் தேச இறக்குமதிகளே. தமிழக - ஆந்திர எல்லையில் நடக்கும் கதை என முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள்தான். ஆனால், அனைத்து விஷயங்களிலும் இப்படி தமிழ் - தெலுங்கு என இரண்டு தரப்புக்கும் நடுவில் சிக்கி நிற்பதால் ஒரு வித செயற்கைத்தனம் படமெங்கிலும் வழிந்தோடுகிறது. குறிப்பாக, லிப் சிங்க் பிரச்னைகள் நிறையவே எட்டிப் பார்க்கின்றன.

'வாத்தி' தனுஷ்
'வாத்தி' தனுஷ்
முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளை அடுக்கி விறுவிறுவென பயணிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் அடுத்து என்ன செய்வது என அறியாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது. நோக்கம் சரியானதாக இருந்தாலும், ஊர்க்கூட்டத்தில் அப்துல் கலாம் கதை சொன்னதும் மொத்த ஊரும் திருந்திவிடுவது, ஒரே வகுப்பில் சாதிய ஒடுக்குமுறை பிரச்னையைத் தீர்ப்பது எனப் பல காட்சிகள் `இதெல்லாம் எப்படி பாஸ் சாத்தியம்?' என யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் நிற்கின்றன.

'வா வாத்தி', 'நாடோடி மன்னன்' பாடல்களில் ஈர்க்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பின்னணி இசையிலும் படத்திற்குப் பலம் சேர்கிறார். ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவும் நவீன் நூலியின் எடிட்டிங்கும் படத்துக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கின்றன. பீரியட் படம் என்பதால் காட்சிகள் பலவற்றையும் செட் போட்டே எடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் அவை செட்கள் என அப்பட்டமாகத் தெரிவது நெருடல்.

'வாத்தி' தனுஷ்
'வாத்தி' தனுஷ்

கல்வியை வைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் நிறையப் பணம் சம்பாதிப்பதை எதிர்க்கும் 'வாத்தி' அதற்கு முழு மாற்றாக அரசுப் பள்ளிகளைப் பரிந்துரைக்கிறாரா, தனியார்ப் பள்ளிகளே நியாயமான கட்டணத்தில் இயங்கலாம் எனப் பரிந்துரைக்கிறாரா என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. அரசுப் பள்ளிகளின் தேவைகளையோ அல்லது இதுவரையிலான சமூகத்தில் அரசுப் பள்ளிகள் ஏற்படுத்திய முன்னேற்றத்தைப் பற்றியோ 'வாத்தி' எங்குமே வாய் திறக்கவில்லை. படத்தில் TNPCEE தேர்வு பற்றிக் காட்டப்படுகிறது. கொள்ளையடிக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அடித்தளமிடும் நுழைவுத் தேர்வுகளை வசனங்கள் அளவில் கூட 'வாத்தி' எவ்வகையிலும் எதிர்க்கவில்லை.

கல்வி அனைவருக்குமானது என்ற மெசேஜை இன்னும் அழுத்தமாக சினிமாத்தனங்களை குறைத்துச் சொல்லியிருந்தால் இந்த `வாத்தி' பாஸ் மார்க் பெற்றிருப்பார்.