சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

டைரி - சினிமா விமர்சனம்

அருள்நிதி
பிரீமியம் ஸ்டோரி
News
அருள்நிதி

படத்தின் பலம் இரண்டாம் பாதிதான். வரிசை கட்டி வரும் ட்விஸ்ட்கள் நம்மை யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.

பாக்கெட் க்ரைம் நாவல்களின் தாக்கத்தில் வெளியாயிருக்கும், ஹாரரா த்ரில்லரா என வகைபிரிக்க முடியாத படமே இந்த ‘டைரி'.

காவல்துறை பயிற்சி எஸ்.ஐயான அருள்நிதிக்கு அவர் இஷ்டப்படி ஒரு பழைய தீர்க்கப்படாத வழக்கைத் தேர்ந்தெடுத்து முடித்து வைக்கும் வேலை தரப்படுகிறது. அப்படி அவர் கண்ணை மூடிக்கொண்டு எடுக்கும் ஒரு பைல், 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொள்ளை + கொலைச் சம்பவத்திற்கு அவரை இட்டுச் செல்கிறது. அதை விசாரிக்க விசாரிக்க புதிது புதிதாய் பல கேள்விகள் தோன்றுகின்றன. இன்னொருபுறம் ஊட்டியிலிருந்து கோவை கிளம்புகிறது ஓர் அரசுப் பேருந்து. ஒரு வழக்கறிஞர் குடும்பம், ஒரு கல்லூரி மாணவி, காதலித்து வீட்டைவிட்டு ஓடி வரும் இளம் ஜோடி என அதில் கலவையான கூட்டம். ஒருகட்டத்தில் அருள்நிதியும் அந்தப் பேருந்தில் ஏற, அதன்பின் நிகழ்பவையே கதை.

டைரி - சினிமா விமர்சனம்

க்ரைம் த்ரில்லர் ஜானர் படங்களுக்காகவே தமிழ் சினிமாவில் உருவான நாயகன் போல மாறிவிட்டார் அருள்நிதி. அந்த மாதிரியான வேடங்கள் அவருக்குப் பொருந்திப் போவதும் ஒரு காரணம். நடிப்பில் மிகை, குறை ஒன்றுமில்லை. ஆனால் ஒரே ஜானரில் தொடர்ந்து நடிக்கும்போது கதைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்துதல் நலம். நாயகியாக பவித்ரா மாரிமுத்து. ‘ஏதோ செய்யப்போகிறார்' என்பது போல அறிமுகமாகி எதுவுமே செய்யாத வழக்கமான ஹீரோயினாகிப் போகிறார்.

திருவிழா காலத்துப் பேருந்து போலவே படத்திலும் எக்கச்சக்க கூட்டம். அதில் ரஞ்சனாவுக்கு மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சாம்ஸ், ஷா ரா என காமெடிக்கு இருவர். சாம்ஸ் ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஷா ராவின் நகைச்சுவை படத்தையும் தாண்டிய ‘ஹாரர்'.

ரான் ஈத்தன் யோஹனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். மாயத்தன்மை கொண்ட மலைப்பரப்பில் எக்ஸ்ட்ரா மர்மம் சேர்க்கிறது அரவிந்த சிங்கின் ஒளிப்பதிவு.

டைரி - சினிமா விமர்சனம்

படத்தின் பலம் இரண்டாம் பாதிதான். வரிசை கட்டி வரும் ட்விஸ்ட்கள் நம்மை யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் இயக்குநர் இன்னாசி பாண்டியனுக்கு ஓரளவு வெற்றியே. ஆனால் அதற்கும் சேர்த்து முதல் பாதி திரைக்கதை ஏகத்துக்கும் சோதிக்கிறது.

எக்கச்சக்க கேரக்டர்கள், அவர்கள் ஒவ்வொருக்குமான பின்கதை என விவரணைக்கு ஏகப்பட்ட நேரத்தை இயக்குநர் எடுத்துக்கொள்ள, கதை எங்குமே நகராத உணர்வைத் தருகிறது. போக, த்ரில்லராய் தொடங்கி இடைவேளையில் ஹாரராய் இடைவெளி விட்டு பின்னர் பேன்டஸி, சயின்ஸ் பிக்‌ஷன் பக்கம் ஒதுங்கி என ஏகப்பட்ட ஜானர்களில் பயணித்து தடுமாறுகிறது படம்.

நடுநடுவே ஒன்றிரண்டு திகில் பக்கங்கள் என்றில்லாமல் பக்கத்துக்குப் பக்கம் கோவையாய் திக்திக் கூட்டியிருந்தால் கவர்ந்திருக்கும் இந்த ‘டைரி'.