அத்தியாயம் 1
Published:Updated:

டின்னர் : என்னைத் தன் மகன் போலவே பாவிக்கிறார் ஜானகி அம்மா - விஜயகாந்த்

V.N.Janaki, Vijayakanth, Premalatha Vijayakanth
பிரீமியம் ஸ்டோரி
News
V.N.Janaki, Vijayakanth, Premalatha Vijayakanth ( Vikatan Archives )

“விஜயகாந்த் ஜானகி அம்மாவுக்கு கொடுக்க நினைத்தப் பரிசு என்ன தெரியுமா...” 1994ல் விஜயகாந்த் ஜானகி அம்மாவை சந்தித்த போது....

சென்னை, வாஹினி ஸ்டுடியோவில் 'பதவிப்பிரமாணம்’ படப்பிடிப்பு; கோர்ட் செட்; பான்ட்டுக்குள் சட்டையை 'இன்’ பண்ணிய விஜயகாந்த். ''மிகப் பிடித்தமான ஒருவருக்கு நீங்கள் டின்னர் கொடுக்க வேண்டும். நீங்கள் விருந்துக்கு அழைக்கும் வி.ஐ.பி. யாராக இருக்கும்?''

''வி.வி.ஐ.பி-க்கும் மேம்பட்ட, என் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சாமியை (அதீத பக்தி. சாமி என்றே குறிப்பிடுகிறார்) அழைக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அது இயலாதே! அதனால், அவர் துணைவியார் ஜானகி அம்மாளை அழைப்பேன்.

அவர்களது வளர்ப்பு மகன் அப்புவுக்குச் சொந்தமான,  தி. நகரில் உள்ள அப்பு ஹவுஸில் 'நல்லவன்’ பட ஷூட்டிங் நடந்தது. அங்கே இரண்டு வீடுகள். ஒன்று படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்படுகிறது. பக்கத்து வீட்டில் அப்பு குடியிருக்கிறார். ஷூட்டிங் நடந்தபோது ஜானகி அம்மாள் அப்பு வீட்டில் இருந்திருக்கிறார். அவர் எங்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தார்.

Vijayakanth family
Vijayakanth family
Vikatan Archives

அன்றுதான் அந்த அம்மாவுடன் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் ராதிகா, எஸ்.எஸ்.சந்திரன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவையும் சாப்பிட அழைத்தார். எஸ்.எஸ்.சந்திரன் மட்டும் 'அம்மா, அரசியல்ரீதியாக நான் உங்களைத் தாக்கிப் பேசுகிறவன். உப்பைத் தின்றால் துரோகம் செய்தவனாகிவிடுவேன். சாப்பிடக் கூப்பிட்டதற்கு ரொம்ப நன்றி!’ என்று கூறி கும்பிட்டுவிட்டு, சாப்பிட மறுத்துவிட்டார். நாங்கள் சாப்பிட்டோம்.

அதன்பின், இன்றுவரை என்னைத் தன் மகன்போலவே அம்மா பாவிக்கிறார்கள். என் கல்யாணத்துக்கு வரும்படி அழைத்தேன். 'மண நாளன்று என்னால் வர இயலாது. பின்னர் எப்போதாவது உங்கள் வீட்டுக்கு வருகிறேன்’ என்றார்கள். அதே போல எங்கள் வீட்டுக்கும் வந்தார்கள். எனக்கும் என் மனைவி பிரேமலதாவுக்கும் எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த மோதிரம், செயின் பரிசளித்தார்கள். இன்று வரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து எங்களை ஆசீர்வதிக்கிறார்கள். நானும் என் மனைவியும் அவரை 'அம்மா’ என்றுதான் அழைப்போம். என் மகன்கள் (விஜய் பிரபாகரனும், சண்முக பாண்டியனும்) அவரைப் 'பாட்டி’ என்று கூறி, அவரின் மடியிலேறி விளையாடுவார்கள். ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குப் போய் வரும்போதெல்லாம் என் பிள்ளைகளுக்கு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வந்து கொடுப்பார்....''

''எங்கு வைத்து விருந்து கொடுப்பீர்கள்?''

''எங்கள் வீட்டில்தான். வீட்டில் விருந்து தருவதுதான் முறை. ஓட்டலில் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அதுவும், எல்லா அயிட்டங்களையும் என் மனைவியே தன் கைப்படத் தயாரித்து, அவளே பரிமாறுவாள்!''

''விருந்தில் என்னென்ன அயிட்டம் இருக்கும்?''

''எம்.ஜி.ஆர். என்றால் கருவாடு, மீன், காடை, கோழி, ஆட்டுக்கறி, இறால் என்று அவருக்குப் பிடித்தமான எல்லா அயிட்டங்களையும் வகைவகையாகச் செய்து குவித்து விடுவோம். பாஸந்தி என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அம்மா என்ன சாப்பிடுவார்கள், அவர்களுக்கு எது எது பிடிக்கும் என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றையெல்லாம் செய்து பரிமாறுவோம்.''

''டின்னர் டேபிளிலா, தரையில் அமர்ந்தபடியா..?''

''நான் எங்கள் வீட்டில் மாடியில் கீழே உட்கார்ந்து வாழை இலையில்தான் சாப்பிடுவேன். வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டார்களா என்பதைத் தெரிந்து கொண்டபின்தான் நான் சாப்பிடுவேன். எம்.ஜி.ஆர். அவர்களும் அப்படித்தான். அவரைப் போலவே பல பழக்கவழக்கங்கள் என்னிடம் இருப்பதாக அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். நான் என்றால் கீழே உட்கார்ந்துவிடலாம். அம்மாவுக்கு டேபிளில்தான் டின்னர்!''

V.N.Janaki, Vijayakanth, Premalatha Vijayakanth
V.N.Janaki, Vijayakanth, Premalatha Vijayakanth
Vikatan Archives

''ஜானகி அம்மாள் உங்களுக்குச் சொன்ன புத்திமதி ஏதாவது..?''

'''தானத்திலே சிறந்தது அன்னதானம். ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவுங்கள். கொடுப்பதால் நாம் குறைந்து போய்விடமாட்டோம்’ என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.''

''உங்கள் கெஸ்ட்டுக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?''

''அவர்கள் பார்க்காத பரிசுகளா? கொடுத்தே பழக்கப்பட்டு விட்ட அவர்களுக்கு நாங்கள் என்ன தரமுடியும்? ஆனாலும் எனக்கு ஒரு ஆசை. அந்தப் புண்ணிய தம்பதிகள் (எம்.ஜி.ஆர். - ஜானகி அம்மாள்) சேர்ந்து நிற்கும் படம் ஒன்றை (இதுவரை அவர்களேகூட பார்த்திராத படமாகத் தேர்ந்தெடுத்து) பெரிதாக பிரின்ட் போட்டு எங்களின் சிறிய பரிசாகக் கொடுக்க ஆசை. நானும், என் மனைவியும் காலைத் தொட்டுக் கும்பிடுவதுபோல் தனியாகப் படமெடுத்து, அவர்கள் காலில் விழுந்து நாங்கள் வணங்குவதுபோல வெட்டி, ஒட்டிச் சேர்த்து, அதை அம்மாவுக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டும்!''விஜயகாந்த் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஆத்மார்த்தமாக, அவரது அடிமனதிலிருந்து வந்தது. எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் கண்களிலே நீர்க்கோவை.

- 'புல்லட் அங்கிள்’

(30.01.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)