சினிமா
Published:Updated:

விஷால், எஸ்.ஜே.சூர்யா - ரெண்டுபேருமே டபுள் ஆக்‌ஷன்! - ‘மார்க் ஆண்டனி’ மாஸ் அப்டேட்

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால்

இது ஆக்‌ஷன் அள்ளும் கேங்ஸ்டர் படம். 1975-ல இருந்து 1995 வரையிலான காலகட்டங்களில் நடக்கற கதை. இதுல டைம் டிராவலையும் கலந்து புதுவித ஜானர்ல கொடுத்திருக்கேன்.

``இதுக்கு முன்னாடி நான் இயக்கின ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா', ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ‘பஹிரா' படங்கள்னால, ‘இவர் இப்படித்தான், ஒருமாதிரியான ஜானர்ல படம் பண்ணுவார்’னு ஒரு பெயர் வந்திடுச்சு. அதை இந்த ‘மார்க் ஆண்டனி' மாத்திடும். இதுல ஒரு புது ஜானரைக் கையில் எடுத்திருக்கேன். விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில்னு வித்தியாசமான கூட்டணியோடு இறங்கியிருக்கேன். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு மிரட்டலான விருந்து காத்திருக்கு...'' - திருப்தியும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

``அப்படி என்ன ஜானர்னு சொல்லுங்களேன்?’’

‘‘இது ஆக்‌ஷன் அள்ளும் கேங்ஸ்டர் படம். 1975-ல இருந்து 1995 வரையிலான காலகட்டங்களில் நடக்கற கதை. இதுல டைம் டிராவலையும் கலந்து புதுவித ஜானர்ல கொடுத்திருக்கேன். விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ஒய்.ஜி.மகேந்திரன், ரிதுவர்மா, அபிநயா, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மலேசியா நடிகர் டி.எஸ்.ஜே என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. கேங்ஸ்டர்ஸ், அவங்களுக்குள் நடக்கும் சண்டைகள், துரோகங்கள், வன்மங்கள், எமோஷன்கள், குடும்ப உணர்வுகள்னு பல திசைகளிலும் படம் பயணிக்கும். இடையே 1965 காலகட்டமும் வந்துபோகும். சமீபத்தில் வெளியான இதோட மோஷன் போஸ்டர்ல அத்தனை பேரின் தோற்றங்களும் பாராட்டுகளைக் குவிச்சது.

மார்க் ஆண்டனி படத்தில்...
மார்க் ஆண்டனி படத்தில்...

இப்படி ஒரு கதைக்குத் தொழில்நுட்பக் குழு முக்கியமானது. ‘கவண்’ ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். மலையாளத்தில் பிஸியான கேமராமேன் அவர். படத்துக்கு இசை, ஜி.வி.பிரகாஷ். இந்த பிரீயட் படத்துக்கு வலுச்சேர்க்கற கூட்டணியா கலை இயக்குநர் விஜய் முருகனோட வேலைகள் பேசப்படும். 1975 காலகட்டத்தைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கார். படத்துல கதாநாயகன் – வில்லன் என்பதைத் தாண்டி, எல்லார்க்குள்ளேயுமே ஒரு டெவில் இருப்பான். அவன் நல்லவனுக் குள்ளேயும் இருப்பான். அப்படி ஒரு டெவிலா இதுல எஸ்.ஜே.சூர்யா சார் மிரட்டியிருக்கார். ஒரே நேரத்துல நூறு விஷயத்தை யோசிக்கற கேரக்டர். நாலு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திட்டார். விஷால் சாரின் `எனிமி' படப்பிடிப்பில்தான் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் சாரே இதையும் தயாரிக்கறது சந்தோஷமா இருக்கு. அவர்கிட்ட எது கேட்டாலும் மாட்டேன்னு சொல்ல மாட்டார். ‘படம் பெஸ்ட்டா இருக்கணும். அதுக்காக எதுவேணா பண்ணலாம்'னு செலவுகளைத் துணிந்து பண்ணியிருக்கார். இதுமாதிரி பீரியட் படத்துல செட்களுக்கு எப்படி நுணுக்கமா மெனக் கெடணுமோ அப்படி உடைகளும் சவாலான வேலையா அமையும். காஸ்ட்யூமர் சத்யா வொர்க்கும் ‘வலிமை’ விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கும் படத்தை வேற பரிமாணத்துக்குக் கொண்டு போயிருக்கு.’’

``விஷாலுக்கு இதுல டபுள் ஆக்‌ஷனா?’’

``ஆமா. அப்பா மார்க்கும் அவர்தான், மகன் ஆண்டனியும் அவர்தான். விஷால் சாரை எனக்குப் பல வருஷங்களா தெரியும். அப்ப நான் உதவி இயக்குநர்கூட இல்ல. ஜி.வி.பிரகாஷ் சாரோட இருப்பேன். அந்தச் சமயத்துல விஷால் சாரை `நான் சிகப்பு மனிதன்' படப்பிடிப்பில் சந்திச்சேன். அவ்ளோ எளிமையா பழகினார். `த்ரிஷா இல்லனா நயன்தாரா' வெளியானதும் அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. எனக்கு ஆச்சரியமாகிடுச்சு. `உங்க படம் நல்லா இருக்குதுன்னு பேச்சு இருக்கு. வாழ்த்துகள்’னு பாராட்டினார். அதோட தெலுங்கு ரைட்ஸை வாங்கவும் விரும்பினார். ஆனா, அதுக்கான சூழல் அமையல. என் ரெண்டாவது படமே விஷால் சாரோடதான் பண்ணுறதா இருந்துச்சு. அதன்பிறகு நான் ‘தபாங் 3' டப்பிங்ல வசனம் எழுதின வேலைகள்ல இருந்தபோது, அந்த ஸ்டூடியோவில அவர் ‘ஆக்‌ஷன்’ படத்திற்கு டப்பிங் பேச வந்திருந்தார். என்கிட்ட ‘என்ன படம் பண்ணுறீங்க?’ன்னு விசாரிச்சார். ‘நீங்கதான் படம் கொடுக்கறேன்னு எஸ்கேப் ஆகிட்டீங்க’ன்னு ஜாலியா சொன்னேன். உடனே அவர், `நல்ல கதையா இருந்தா சொல்லுங்க, பண்ணலாம்’னார். அப்புறம் அவர் ‘எனிமி’ முடிச்சதும்தான் `மார்க் ஆண்டனி'க்குள் வந்தார்.''

`` `புஷ்பா' சுனில், இப்ப தமிழ்ல டாப் ஹீரோக்கள் படங்களா கைவசம் வச்சிருக்கார். அவரை எப்படிப் பிடிச்சீங்க?’’

‘‘தமிழ்ல முதலில் அவர் கமிட் ஆன படம் `மார்க் ஆண்டனி'தான். காமெடியனாக இருந்து குணச்சித்திரமானார். கதாநாயகனா கலக்கினார். வில்லனாகவும் அசத்தினவர். இந்தக் கதையைக் கேட்டதுமே நடிக்க வந்தார். இப்ப அவர் ‘ஜப்பான்’, ‘மாவீரன்’, ‘ஜெயிலர்’னு வரிசையா பண்ணிட்டிருக்கார். தமிழ்ல ஒரு பெரிய ரவுண்ட் அவருக்குக் காத்திருக்கு.’’

``உங்க முந்தைய படங்களைப் பார்த்தாலே, நீங்க இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்னு புரியும்... அவரையும் நடிக்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க...’’

‘‘ஆஹா! எஸ்.ஜே.சூர்யா சாருடன் நாலு வருஷத்துக்கு முன்னாடியே ஒரு படம் பண்ணுறதா இருந்தது. அப்புறம் வேற வேற படங்களுக்காக அவர்கிட்ட கேட்பேன். ஒவ்வொருமுறையும் அவர், ‘இல்ல சார், வேற ஏதாவது பயங்கரமா பண்ணணும்’னு சொல்லிட்டே இருப்பார். அப்புறம், இந்தப் படத்துக்காக கேட்டேன். ‘வேணாம் சார், என்னை விட்டுடுங்க’னு சொல்லிட்டார். ஆனாலும் நான் அவர்கிட்ட ‘உங்களுக்கு இதுல சூப்பர் கேரக்டர் சார். கதையைக் கேட்டபிறகு உங்க முடிவைச் சொல்லுங்க’ன்னு ஃபாலோ பண்ணிட்டே இருந்தேன். ஒருநாள் அவரும் விஷால் சாரும் டப்பிங் ஸ்டூடியோவுல சந்திச்சாங்க. அப்ப அவர்கிட்ட விஷால் சார், ‘நீங்க ‘மார்க் ஆண்டனி’ கதையைக் கேட்டீங்களா?’ன்னு கேட்டிருக்கார். இவரும் ‘இல்லீங்ளே சார்’னு சொன்னதும், ‘கதையைக் கேளுங்க. உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னதும்தான் சூர்யா சார் கதையைக் கேட்டார். கேட்ட கணமே நெகிழ்ந்துட்டார். நான் அவரோட பயங்கரமான ரசிகன். காலேஜ் டைம்ல அவர் குரல்ல பேசி, மிமிக்ரியும் பண்ணியிருக்கேன். அவரோட வாய்ஸ்ல படத்துல வரும் அவர் கேரக்டரை விளக்கினேன். ஆச்சரியமாகிட்டார். இந்தக் கதையின் முதல் பாதியே நாலு மணிநேரம் சொன்னேன். அடுத்த பாதியும் நாலு மணி நேரம் போச்சு. இப்படி ரொம்ப விலாவாரியாகக் கதையைச் சொன்னதும், இன்னும் ஆர்வமாகிட்டார். படத்துல எஸ்.ஜே.சூர்யா சாரோட கேரக்டர் பெயர் ஜாக்கி பாண்டியன். அவரே மகன் மதன்பாண்டியன் ஆகவும் வர்றார். அவருக்கும் இதுல டபுள் ரோல். ஜாக்கி பாண்டியனுக்கு இன்னொரு பையனும் உண்டு. அவர் பெயர் அருண்பாண்டியன். அதைப் போல செல்வராகவன் சாரும் இதுவரை பார்த்திராத ஒரு கேரக்டர்ல கலக்கியிருக்கார். இதுல அவர் ஒரு பாடலுக்கு ஆடியுமிருக்கார். முக்கியமான ஒரு விஷயம், ஸ்பாட்டுல இத்தனை பெரியாட்கள் இருந்தாலும், யாருக்குமே ஈகோ கிடையாது. அவ்ளோ நட்பா பழகினாங்க.’’

விஷால், எஸ்.ஜே.சூர்யா
விஷால், எஸ்.ஜே.சூர்யா

``பிரபுதேவாவின் ‘பஹிரா’ பல வருஷம் தாமதமா ரிலீஸ் ஆச்சுன்னு வருத்தம் இருக்குதா?’’

‘'எல்லாருக்குமே வருத்தம் இருக்கு. ‘பஹிரா’ 2018-ல ஆரம்பிச்ச படம். ஏன் தாமதம் ஆச்சுன்னு தெரியல. அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் ரிலீஸ் ஆச்சு. 2018-ல அந்தப் படம் வந்திருந்தால் சரியானதா இருந்திருக்கும். ஒரு படத்தை முடிச்சிட்டு ஒரு வருஷத்துக்குப் பிறகு பார்த்தாலே, அது பழசா தெரியும். இந்த இடைப்பட்ட காலத்துல கொரோனால ரெண்டு வருஷம் போயிடுச்சு. ஓ.டி.டி பெரிய அளவுல வளர்ந்து நிற்குது. நிறைய ஜானர்கள் புதுசு புதுசா மக்கள்கிட்ட ரீச் ஆகிடுச்சு. அதனாலேயே ‘பஹிரா’ பொருந்தாமல் போயிருக்கலாம். ஆனால், பிரபுதேவா சார் அவ்ளோ ஒத்துழைச்சார்.''

`` `படப்பிடிப்பில் விபத்து... விஷால் உயிர் தப்பினார்'னு செய்திகள் வந்ததே... அன்னிக்கு உண்மையில என்ன நடந்துச்சு?’’

“அன்னிக்கு எல்லாருமே உயிர் தப்பினது கடவுள் செயல்தான். சென்னையில் ஈ.வி.பி ஸ்டூடியோவுல முக்கியமான சீனைப் படமாக்கிட்டிருந்தோம். கிட்டத்தட்ட 15 நாள்கள் அங்கே ஷூட் போயிட்டிருந்தது. ஒரு பெரிய சுவரை, ஒரு லாரி இடிச்சிட்டு வந்து நிற்கணும். அந்த சீன் எடுக்கறப்ப ஸ்பாட்டுல விஷால், எஸ்.ஜே.சூர்யா, 350 ஜிம்பாய்ஸ்னு எல்லாருமே இருக்காங்க. எஸ்.ஜே.சூர்யா சார் விஷால் சாரை உதைச்சதும், விஷால் சார் ஒரு இடத்துல விழுந்து கிடக்கணும். ஒரு லாரி நேரா வரணும். ஆனா, அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எங்களுக்கு நேரே வந்திடுச்சு. அங்கே இருந்த எஸ்.ஜே.சூர்யா சாருக்கும், சுத்தி இருந்த ஜிம் பாய்ஸுக்கும் `ஏதோ விபரீதம்’னு தெரிஞ்சிடுச்சு. விஷால் சாரை நோக்கி லாரி வரவும், அவர் சீன் இன்னும் முடியல போலிருக்குன்னு ஃபைட் சீனை மனசுல வச்சு குப்புறப் படுத்துக்கிட்டார். அதனால அவருக்கு அங்கே என்ன நடக்குதுன்னு தெரியல.

லாரி நிற்காமல் சுவரை நோக்கி வந்துச்சு. நானும் தயாரிப்பாளரும் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டிருந்தோம். நல்லவேளையாக லாரியை டிரைவர் வலது பக்கம் திருப்பிட்டார். நாங்களும் இடது பக்கம் ஜம்ப் அடிச்சு, தப்பிச்சோம். கடவுள் அருளால் நாங்க உயிர் தப்பினோம். அந்தப் பதினைந்து நிமிஷத்துல அத்தனை பேரும் ஆடிப்போயிட்டோம். மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. நாங்க தப்பிச்சது தெய்வச் செயல்தான்'' நெகிழ்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.