சினிமா
தொடர்கள்
Published:Updated:

“சினிமா தொழில்நுட்பத்தில் மட்டும் மாறியிருக்கிறது!”

அகத்தியன்
பிரீமியம் ஸ்டோரி
News
அகத்தியன்

இளவயதிலேயே விதை விழுந்துவிட்டது. படங்கள் பார்த்துட்டு இருக்கும்போதே திரைக்கதைன்னு புதுசா ஒரு வார்த்தை வந்தது.

இயக்குநர் அகத்தியனுக்கு அறிமுகம் தேவையில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றவர். காதல்கோட்டை, கோகுலத்தில் சீதை, விடுகதை என அவர் தந்ததெல்லாம் திரைக்கதையின் மாயாஜாலம். அனுபவங்களின் முற்றத்தில் அமர்ந்து அவர் பேச, கூட இருந்து கேட்பதே சுகானுபவம்.

“சினிமாவால் ஈர்க்கப்பட்டு என்னை அறியாமலேயே சினிமாவுக்கு வந்தவன் நான். மற்றபடி சினிமாவை வாழ வைக்கணும்னெல்லாம் வந்தவன் கிடையாது. இன்னைக்கு வரைக்கும் என் படங்கள் உசத்தியானவைன்னு நான் சொல்லிக்கொண்டது கிடையாது. என் சில படங்களைப் பொறுப்பாகச் செய்திருக்கேன். அவ்வளவுதான். இப்போது காணக்கிடைக்கிற உலக சினிமாக்களைப் பார்க்கிறபோது நான் ஒண்ணுமே செய்யலைன்னுதான் சொல்லணும். இதைத் தன்னடக்கம்னு யாரும் நினைக்க வேண்டாம். உண்மை அதுதான். இதுதான் இறுதி வடிவம்னு எந்த ஒரு படத்தையும் நான் இதுவரை தந்ததில்லை. ரிலீசான பிறகுதான் ‘அடடா, இதை அருமையாகச் செய்திருக்கலாமே’ன்னு தோணும். பழைய படங்கள் மெலோ டிராமாவாக இருந்தன. பாடல்கள் நிறைந்திருந்தன எனச் சொல்கிறார்கள். ஆனால் அதில் அழகும் நேர்த்தியும் படிப்பினையும் இருந்தன. எல்லாமே மாறும்போது சினிமாவும் மாறத்தானே செய்யும்” சரளமாகப் பேசுகிறார் அகத்தியன்.

 “சினிமா தொழில்நுட்பத்தில் மட்டும் மாறியிருக்கிறது!”

``கிராமத்திலிருந்து சினிமாதான் சரின்னு எப்படி வந்தீங்க?’’

“இளவயதிலேயே விதை விழுந்துவிட்டது. படங்கள் பார்த்துட்டு இருக்கும்போதே திரைக்கதைன்னு புதுசா ஒரு வார்த்தை வந்தது. திராவிட இயக்க சினிமாக்களின் வசனங்கள் ஈர்த்தன. அப்பத்தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைக்கதைப் புத்தகம் வருது. ‘அபூர்வ ராகங்கள்’ பார்த்தால் அதில் ஜெயசுதா, மேஜர் சுந்தரராஜன் கிட்டே கேட்கிற கேள்வியிலே படத்தோட திரைக்கதை இருக்கு. அப்பதான் பாக்யராஜ் படத்தின் திரைக்கதை அவ்வளவு எளிமையா வருது. நான் முன்னாடி ‘டைட்டானிக்கை நாலைந்து வார்த்தைகளில் சொல்லுங்க பார்ப்போம்’னு நண்பர்களிடம் சொல்லுவேன். ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள். அவளை இளைஞன் காப்பாத்துறான். கப்பலே உடையுது. அப்பவும் அவளைக் காப்பாத்துறான். இதாங்க அடிப்படை. காதல் கண்களில் ஆரம்பித்து இதயத்தில் முடியும்னா, ஏன் நம்ம காதல் இதயத்தில் ஆரம்பித்துக் கண்களில் முடியக் கூடாதுன்னு நினைச்சேன். அதுதான் காதல் கோட்டை. ரம்மியில் 13 சீட்டைக் கையில் எடுக்கிறோம். சீட்டுக்கள் சேராமல் இருக்கு. எதிரே கட்டுல பொருந்துகிற சீட்டு இருக்கும். அப்படித்தான் நம்மகிட்டே ஒரு கதை இருக்கு. தேவையில்லாதது நம்மகிட்ட இருக்கும். தேவையானது வெளியே இருக்கும். அப்படியே நிகழ்ச்சிகளை, சம்பவங்களை, சூழலைத் தொடுத்தால் திரைக்கதை. அதற்கு வாழ்ந்த வாழ்க்கையும், கிடைச்ச அனுபவமும், படித்த படிப்பும் நிச்சயம் உதவியா இருக்கும்.

ஒரு நல்ல சினிமாவுக்குத் திரைக்கதைதான் அச்சாணி. நாம இன்னும் அதை சரியாகப் புரிஞ்சுக்கலை. இங்கு பல பேர் சினிமாவில் வருவதற்கு முன்னாடி வாழ்க்கையைத் தெரிஞ்சுக்க எடுத்த முயற்சியை சினிமாவுக்கு வந்த பின்னாடி செய்யறதில்லை. எனக்கு இன்னமும் அன்றாட வாழ்க்கையின் அத்தனை விஷயங்களும் தெரியும். உண்மையில் எதார்த்தமான சினிமா எடுப்பதைப் போல சுலபமான ஒரு விஷயம் கிடையாது. உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிற மாதிரி எளிமையானது அது. எந்த ஒப்பனையும் இல்லாமல் பார்க்கிறது, வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவில்லாமல் தரிசித்து உணர்வுபூர்வமாகச் சொல்வது... இதெல்லாம் கூடி வந்தால் நல்ல சினிமா தயார்!”

 “சினிமா தொழில்நுட்பத்தில் மட்டும் மாறியிருக்கிறது!”

``இப்போ சினிமா அதிகமும் மாறியிருக்கே...’’

“மாறணும். டெக்னிக்கலாக எங்கோ போயிருக்காங்க. ஆனால் பழகின திரைக்கதைக்குள்ளே உழன்றுகிட்டே இருக்காங்க. மண்டேலாவின் சுயசரிதையை எடுத்தாங்க. இங்கே அவ்வளவு தகுதியான கதைகள் இருக்கு. நாம் ஆடியன்ஸை வேறு விதமாகப் பழக்கப்படுத்தி வச்சிருக்கோம். ‘அறம்’ படத்தில் ஒரு குழந்தை பெரும் துளைக்குள் விழுந்தது. இதில் எவ்வளவு தூரம் நாம் எமோஷனல் ஆனோம். அதில் நிர்வாகத்தின் குளறுபடிகள் எவ்வளவு வெளியே தெரிந்தன. சசியால் தொடுக்கப்பட்ட ‘பூ’ எவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது. டெக்னிக்கல் வளர்ச்சி பழைய கதைகளில் கொண்டுபோய்க் கொட்டுவதற்கா வந்தது? எம்ஜிஆர் தரையில் அடிச்சதை இப்போது பறந்து பறந்து அடிக்கிறார்கள். சில்ரன் ஆஃப் ஹெவனில் அந்த இரண்டு செருப்புகளுக்காக ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம் வாங்க வேண்டும் என்று நாம் பதறியது நிஜம்தானே! சினிமாவின் மிகப்பெரிய க்ளைமாக்ஸ் அது. உதிரிப்பூக்களில் பார்த்த க்ளைமாக்ஸ் மாதிரி இன்னும் எந்தத் தமிழ் சினிமாவிலும் காணக்கிடைக்கவில்லை. முதன்முறையாக ஒரு கெட்டவனுக்காக அழ வைத்த படம் அது. பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் மாதிரியான ஆரோக்கியமான போட்டி இப்போ இல்லை. அப்படி வருகிற சிலபேர் முதல் படத்தில் நல்ல உயரத்திற்குப் போறாங்க. அடுத்த படத்தில் ஆர்ட்டிஸ்ட்கிட்டே போய்ச் சிக்கிடுறாங்க. அப்புறம் பழைய வட்டம்தான்.”

 “சினிமா தொழில்நுட்பத்தில் மட்டும் மாறியிருக்கிறது!”

``அஜித்திற்கு ஒரு இடம் கொடுத்தீர்கள். இன்னும் தொடர்பில் இருக்கிறாரா?’’

“அந்த அஜித் ஆரம்பக்கால அஜித். இப்போது அவரின் இடம் வேறு விதமானது. ‘காதல் கோட்டை’யை ‘அது உங்க படம் சார்’ என்றுதான் சொல்வார். அவருக்கு வேறு முத்திரை தேவைப்பட்டது. அவருக்கான யோசனைகள் வேறு வகையில் இருந்தன. என்னால் அவர் இடத்திற்கும் அவரால் என் இடத்திற்கும் வரமுடியாது. எங்கேயாவது எப்போதாவது சந்தித்தால் விசாரித்துக்கொள்வோம். அதற்கு மேல் எந்தத் தொடர்பும் கிடையாது.”

``இத்தனை நாள் பெற்ற பாடம் என்ன?’’

“எவ்வளவு புத்திசாலி என்றாலும் காலம் உங்களுக்குக் கைகொடுக்கவில்லை என்றால் பலனில்லை. எனக்குத் தெரிந்து எம்ஜிஆர் மட்டும்தான் கடைசிவரை வெற்றியை ருசித்து வந்திருக்கிறார். உண்மை, நேர்மை, கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கை உங்களை நிச்சயம் உயர்த்தி வைக்கும். எதார்த்தமான வாழ்க்கையிலிருந்து எப்போதும் ஒதுங்கக்கூடாது. காரில் போனாலும் மனதில் பழைய வாழ்க்கையை மட்டுமே வாழணும். எல்லோரையும்போல அன்பின் பலத்தையும் பலவீனத்தையும் சுமந்து வாழ்பவன்தான் படைப்பாளி. சினிமாவில் நான் தேடித்தேடிச் சேகரித்த அறிவும் அனுபவமும் இன்னும் பயன்படணும்னு நினைப்பேன். அறிந்ததையும் உணர்ந்ததையும் என் இளைய தலைமுறைக்கு விட்டுப் போகணும்னு விரும்புகிறேன். எல்லா வகையான பூட்டுகளையும் திறக்கும் சாவி கலைஞர்களிடம்தான் இருக்கிறது. கடைசி வரைக்கும் வாழ்க்கையைப் படிக்கிற படைப்பாளியாக இருக்க விரும்புகிறேன்.”

``இயக்குநர்களில் யாரை விரும்புகிறீர்கள்?’’

“வெற்றிமாறன். ஒவ்வொரு படத்திற்கும் வேறு களம் காண்கிறார். புதுசாக இருக்கிறது. அவரும் ஹீரோவைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் அந்த படம் அவருடைய படமாகவே இருக்கிறது. அவருடைய ஹீரோக்கள் அவருடைய கேரக்டராகவே மாறிவிடுகிறார்கள். தன்னுடைய கதையே ேவணும் என்ற அவசியம் இல்லாமல் நல்ல கதை வெளியே இருந்தால் தேடி எடுக்கிறார். போதாததற்கு நல்ல வாசகராகவும் இருக்கிறார். சறுக்கலும் இல்லாமல் நிதானமாக இருக்கிறார். இதெல்லாம் சேர்த்துத்தான் வெற்றிமாறன் சுவாரஸ்யப்படுத்துகிறார். அடுத்து இப்போது பார்த்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங் பெரியசாமி. பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற இமேஜை சாதாரணமாக உடைத்து எறிந்து மக்களும் அதைக் கேள்வி கேட்காமல் பார்த்து ரசிக்க விட்டதெல்லாம் நல்ல டெக்னிக். இவரின் அடுத்த படத்தைப் பார்க்க வேண்டும்.”