
‘‘தன்னுடைய பழைய போலீஸ் படங்களின் சாயல் வந்திடக் கூடாதுன்னு ரவி கவனமா இருந்தார். நானும் ரொம்பவே கவனமா இருந்தேன். வேறு படங்களில் பார்த்த மாதிரி இதில் இருக்கமாட்டார்.
`வாமனன்', ‘என்றென்றும் புன்னகை', ‘மனிதன்' என வெவ்வேறு ஜானர்களில் ஜனரஞ்சகமான படங்களைக் கொடுப்பவர் இயக்குநர் அஹமத். இந்த முறை ஜெயம் ரவியை வைத்து ‘இறைவன்' என்ற போலீஸ் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ‘‘முந்தைய படமான ‘மனிதன்' எனக்கும், உதயநிதிக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அவருடன் பயணிக்க நினைத்திருந்தேன். அவர் அரசியல் பாதைக்குத் திரும்பிவிட்டார். ஒரே மாதிரிப் படங்கள் செய்திடக் கூடாதுன்னு உறுதியாக இருந்தேன். ‘என்றென்றும் புன்னகை' காமெடியில் நல்ல வெற்றி பெற்றதும் அடுத்தடுத்து அதே மாதிரி படங்கள் வந்தன. எதையும் ஏத்துக்காமல் சீரியஸான கோர்ட் ரூம் டிராமாவாக ‘மனிதன்' இயக்கினேன். அதற்குப் பிறகு, இந்த ஸ்கிரிப்ட் தான் என்னை உள்ளே கொண்டுபோய் நிறுத்தியது. ஆழமா இறங்கலாம்னு பரபரக்கச் சொன்னது. நல்ல சினிமா எது என்பதில் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும். எனக்கு ஒரு கருத்து இருக்கும். ஆனால் இரண்டு பேரும் ஒத்துப் போகும் இடம் வரும் இல்லையா... அந்த இடத்தில் ‘இறைவன்' இருக்கும்’’ - சிறப்பாகப் பேச ஆரம்பிக்கிறார் அஹமத்.

``2016-ல் ‘மனிதன்' வெளியானது. இப்போ ‘இறைவன்.' ஏன் இவ்வளவு இடைவெளி?’’
‘‘நான் நினைச்ச ஸ்கிரிப்ட் வரணும். சினிமா மட்டுமே எனக்கு வேலைன்னு கிடையாது. சினிமா மாதிரியே தீவிரமாக விளம்பரத் துறையிலும் இயங்கிட்டிருக்கேன். இதற்கு முன்னாடி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக ‘ஜன கண மன'ன்னு ஒரு படம் ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட ஆறு நாடுகளில் போய் படம் பிடிச்சோம். ரவியும் டாப்ஸியும் நடிச்சிருந்தாங்க. ஆக்ஷனில் அவ்வளவு மெனக்கெட்டோம். அறுபது சதவிகிதம் வரை முடிச்சிருந்த சூழலில் கொரோனா வந்து படத்தை அப்படியே நிறுத்த வேண்டியதாயிடுச்சு. இப்போ இதை முடிச்சிட்டு அடுத்த கட்டமாக மூன்று மாதத்திற்குள் மீதிப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். ஆக்ஷனில் அந்தப் படம் முக்கியமான பங்காற்றும் என நம்புகிறேன். இந்த ரெண்டு படத்திற்கும் பின்னணியில் தயாரிப்பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருக்கார்.’’
`` `இறைவன்' தலைப்பு, ஹீரோ போலீஸ்... என்ன ஸ்பெஷல்?’’
‘‘ரவி பண்ணாத ரோல் கிடையாது. ‘டிக் டிக் டிக்'னு விண்வெளியில்கூட பறந்துட்டு வந்துட்டார். போலீஸ் படங்களும் பண்ணிட்டார். அவர் செய்யாத ரோல் ஒண்ணு இருக்கணும். அது அவருக்குப் பிடிக்கிறதோடு, எனக்கும் பிடிக்கணும். இந்தப் படத்தில் ரவி போலீஸாக வந்தாலும், அவர் இது மாதிரி படம் பண்ணினது இல்லை. மனிதன் எப்படி ‘இறைவன்' ஆகிறான் என்று சில விஷயங்களும் இதில் இருக்கு. ஒரு சில அனுபவங்களினால் மனிதனே இறைவன் மாதிரியாகிவிடுகிற இடங்கள் இருக்கு. ஒரு சைக்கோ வில்லனைப் பிடிக்க முயல்கிற ஹீரோவுக்கு, அந்த வேலையில் ஈடுபடும்போது பர்சனல் வாழ்க்கை பாதிக்கப்படுது. பிடிச்சே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வரும்போது அவ்வளவு நெருக்கடி வருது. சில விஷயங்களை இறைவன் பார்த்துப்பான்னு விட்டுவிட முடியாது. நாம்தான் அதைப் பார்த்துக்கணும்னு நினைக்கிற ஹீரோவாக ரவி இதில் இருக்கிறார். சைக்கோவிற்கும் ரவிக்கும் நடக்கிற உரையாடல்கள், ஒரு புள்ளியைக் கண்டுபிடிச்சு அதை நூல் பிடிச்சுப் போகிற விதம்னு எல்லாமே சுவாரஸ்யமா இருக்கும். மாட்டித் திணறும் ஒரு போலீஸ் அதிகாரியாக ரவி எப்படி கில்லருக்குப் புரிகிற பாஷையில் களமிறங்கிச் செய்கிறார்னு யூகிக்கமுடியாத பரபரப்பான கணங்களும் இருக்கு. ஹீரோன்னு ஒரு இடத்தில் கதை நிற்காது. அடுத்தடுத்த பாய்ச்சல், விசாரணைகள்னு ரவியின் நடிப்பு இதில் வேறு விதத்தில் இருந்தது. அவரே பல இடங்களில் ரசிச்சார். சினிமா என்பது ஒருவரின் நடிப்பு சார்ந்தது மட்டுமல்ல, எல்லாம் கூடி வரணும். எல்லாவித ரோல்களையும் ரவி இறங்கி ஒரு கை பார்ப்பார். அதனால்தான் இன்னமும் நிலையான ஒரு இடத்தில் அவரால் இந்தக் கனவுத் தொழிற்சாலைக்குள் நீடித்து நிற்க முடிகிறது. ‘இறைவன்' படத்தில் அவருக்கான இடங்கள் எல்லாமே ஸ்பெஷல்னு நினைக்கிறேன்.’’
`` ‘தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவி, நயன்தாரா உங்க படத்தில் சேர்ந்து நடிச்சிருக்காங்களே?’’
‘‘இதிலும் அந்த மேஜிக் இருக்கு. இப்ப நயனே லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்குப் போய் நிற்கிறாங்க. அவங்களுக்குக் கதை பிடிக்கணும். தான் அதில் என்ன விதத்தில் இருக்கோம், எப்படிப் பொருந்திப்போகிறோம் என்பதை மட்டும்தான் அவர் பார்க்கிறார். அவருக்கு திருப்தி கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். அப்புறம் அவர் மனதளவில் அப்படியே தன்னைக் கொண்டு வந்து சேர்ப்பார். ‘தனி ஒருவன்' படம் அவ்வளவு சீரியஸாகப் போகும்போதும் ரவி - நயன்தாரா லவ் போர்ஷன் அவ்வளவு அழகா இருக்கும். இப்போ ஓ.டி.டி தளங்கள் வந்து திரும்பின பக்கமெல்லாம் த்ரில்லர் என ஆன பிறகு, அதற்கான தனி நியாயம் செய்ய வேண்டியிருக்கு. த்ரில்லரில் நேரடியான ‘ஓப்பன் ப்ளே'ன்னு இருக்கு. அடுத்து யாருமே யூகிக்க முடியாதபடிக்குக் கடைசி வரைக்கும் விரட்டிப் போய்ப் பிடிப்பது ஒரு வகை. இந்தக் கில்லரைத் தேடிப் போகும் பயணத்தில் யதார்த்தமும் இருக்கும். அட்ரினலின் எகிறும் பதைபதைப்பும், எமோஷனும் கலந்து பயணமாகும் கதை என்பதில் விசேஷம். ரவிக்கு சரிக்கு சமமாக நிற்கிற கில்லருக்கு ஒரு சரியான ஆள் வேணும். இரண்டு பேருக்குமான துரத்தலில், போட்டியில் அடுத்தடுத்து ஒருத்தருக்கொருத்தர் தூக்கி சாப்பிடுகிற இடங்களில் வகையான ஆள் வேணும். அப்படி வந்தார் ராகுல் போஸ். மும்பையில் போய்ப் பிடிச்சேன். அடுத்து என்ன என ஓடும் படத்திற்கு, ‘அடுத்தது என்ன' என ஓடும் கலைஞர்களும் கிடைத்தது நல்ல விஷயம். அதோடு நரேன், விஜயலட்சுமி, பக்ஸ், ஆஷிஷ் வித்யார்த்தின்னு அருமையான நடிகர்களுக்கு நல்ல கேரக்டர்கள் அமைஞ்சிருக்கு. எனக்கு யுவன் ஷங்கர் ராஜா எப்பவும் ஸ்பெஷல். ‘வாமனன்' படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் இணைஞ்சிருக்கோம். ஒரு படத்தைப் புரிந்து கொள்கிற இயல்புதான் அவர்கிட்டே எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம். சொல்லில் வருவது பாதின்னு சொல்வாங்க. அது மாதிரி டைரக்டர் சொல்றதை ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டு ஒளிப்பதிவாளர் ஒரு மாதிரி எடுப்பாங்க. அப்படி எதுவும் இல்லாமல் எனக்கு உறுதுணையா இருந்து தன்னுடைய முழு உழைப்பைக் கொடுத்தார், ஒளிப்பதிவாளர் ஹரி கே.வேதாந்த். ஒரு ஒளிப்பதிவாளர் அப்படியே அலைவரிசையில் இழைந்துபோவது ரொம்ப அபூர்வம்.’’

``மற்ற போலீஸ் வேடங்களிலிருந்து எப்படி ரவி இதில் மாறுபடுவார்?’’
‘‘தன்னுடைய பழைய போலீஸ் படங்களின் சாயல் வந்திடக் கூடாதுன்னு ரவி கவனமா இருந்தார். நானும் ரொம்பவே கவனமா இருந்தேன். வேறு படங்களில் பார்த்த மாதிரி இதில் இருக்கமாட்டார். ஒரு விஷயம் நடந்தால், அது ஏன் நடக்கிறது என்பதற்கு ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும். அதைக் கண்டறிவது மூலமாகவே என் கதைகள் உருவாகுது. ஆர்கனைஸ்டு க்ரைம் உருவாகிற விதமும், அதை டீல் பண்ணுகிற விதமும் சரியான காரணங்களோட அமையணும். இதைப் புரிந்துகொண்டு ரவி உண்மையாக உழைத்திருப்பதால் அவுட்புட்டும் அப்படியே வந்திருக்கு. அதோடு அவர் இதில் ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் இடம் இருப்பதை உணர்ந்துகொண்டார். எமோஷன் மீறும்போது, சுயம் அழியும்போது, பர்சனல் வாழ்க்கை பாதிக்கப்படும்போதுதானே யோசனையும், திட்டமிடலும் வரும். இதில் ரவியும் இருக்கணும். கூடவே பெரிய பலமாக நயனும் இருக்கணும். கேரக்டரும் இதில் தவறிப் போயிடக்கூடாது. இது ரவி - நயன் படம்னு தேடி வர்றவங்களுக்கு முழுத் திருப்தி இருக்கும். கேரக்டர் என்ன, கதை என்னன்னு தேடிட்டு வர்றவங்களுக்கும் வேண்டியது கிடைக்கும்.’’