
இந்தப் படம் ஆரம்பமாகும்போது, ‘பேச்சுலர்’ ஷூட்டிங் போய்க்கிட்டிருந்தது. இந்தப் படத்துடைய தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷை வெச்சு இன்னொரு படம் பண்ணிக் கிட்டிருந்தார்.
‘`2011- ல என்னுடைய முதல் படம் ‘வெப்பம்’ வெளியானது. நானி, நித்யா மேனனை அப்போ பெருசா யாருக்கும் தெரியாது. தவிர, ‘வெப்பம்’ படத்துடைய கன்டென்ட் அந்தச் சமயத்துல கொஞ்சம் அட்வான்ஸாவே இருந்தது. எப்போ என்ன மாதிரியான படைப்புகளைக் கொடுக்கணுங்கிறதும் ஒரு கலைதான். இப்போ எல்லாமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. மக்கள் இப்போ அட்வான்ஸா இருக்காங்க. வெவ்வேறு மொழிப் படங்களைப் பார்க்குறாங்க. தொழில்நுட்ப ரீதியா நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு, இப்போ மீண்டும் படம் இயக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ - மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார், இயக்குநர் அஞ்சனா அலிகான்.

``10 வருடங்கள் இடைவெளிக்கு என்ன காரணம் ?’’
‘`என் கணவர் ஒரு பைலட். அவருக்கு கத்தார் ஏர்வேஸ்ல வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. என் பசங்க ஸ்கூல் படிச்சுக்கிட்டிருந்தாங்க. ரெண்டு நாட்டுலயும் அங்க ஒரு கால், இங்க ஒரு கால் வெச்சுக்கிட்டு படம் பண்றது முடியாது. 2015-ல இன்னொரு படமும் ஆரம்பமாச்சு. ஆனா, அந்தப் படத்தைச் சில காரணங்களால முழுமையா முடிக்க முடியலை. பசங்க ஒரு பக்கம் இருப்பாங்க, நான் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுக்கிட்டிருந்தேன். ரொம்ப கஷ்டமா இருந்தது. நாம ஏதோ ஒரு வேலையைத்தான் பண்ணணும்னு நினைச்சு பசங்க, குடும்பம்னு இருந்துட்டேன். இப்போ அவங்க வளர்ந்துட்டாங்க. சரி, நம்ம வேலையைப் பார்க்கலாம்னு மறுபடியும் சினிமாவுக்கு வந்துட்டேன். ஆனா, இந்தப் பத்து வருஷத்துல அவ்ளோ ஸ்க்ரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். ஒவ்வொண்ணா பண்ணுவேன்.’’


``முகென் ராவை வெச்சே ‘வெற்றி’, ‘மதில் மேல் காதல்’னு ரெண்டு படம் இயக்குறீங்களே !’’
‘`தயாரிப்பு நிறுவனம் என்கிட்ட ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில டைட்டில் ஜெயிச்ச முகென் ராவை நாங்க கமிட் பண்ணியிருக்கோம். உங்ககிட்ட ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்க. அவரை வெச்சுப் படம் பண்ணலாம்’னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான், முகென் ராவ் யாருன்னு பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தது கிடையாது. நான் எழுதி வெச்சிருந்த கதையைச் சொன்னேன். அதுதான் ‘மதில் மேல் காதல்.’ இந்தப் பட ஷூட்டிங் முதல் ஷெட்யூல் முடிஞ்சிருந்தபோது, லாக்டெளன் வந்தது. வீட்ல இருந்த ரெண்டு மாசம் ‘வெற்றி’ கதையை முடிச்சிட்டேன். கோபக்கார இளைஞனைப் பத்தின கதை. ஹீரோவை 17 வயசுல இருந்தே காட்டணும். ஸ்கூல், காலேஜ் போர்ஷனுக்கு முகென் சரியா இருப்பார்னு தோணுச்சு. அப்படியே ‘வெற்றி’ ஆரம்பமாகிடுச்சு.’’



``ஹீரோயின் திவ்யபாரதியை ‘பேச்சுலர்’ பார்த்துட்டு கமிட் பண்ணுனீங்களா, இல்லை, முன்னாடியே படத்துக்குள்ள வந்துட்டாங்களா ?’’
‘`இந்தப் படம் ஆரம்பமாகும்போது, ‘பேச்சுலர்’ ஷூட்டிங் போய்க்கிட்டிருந்தது. இந்தப் படத்துடைய தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷை வெச்சு இன்னொரு படம் பண்ணிக் கிட்டிருந்தார். அப்போ ஒரு நாள் ஜி.வியை மீட் பண்ணும்போது, என் படத்தைப் பத்திப் பேசிக்கிட்டி ருந்தோம். அப்போ ஜி.வி.பிரகாஷ்தான் திவ்யபாரதி பெயரைச் சொல்லி ‘ட்ரை பண்ணிப் பாருங்க. நல்ல பர்ஃபாமர்’னு சொன்னார். அப்புறம், அவங்களை மீட் பண்ணினேன். எனக்கும் அவங்க இந்தக் கதைக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுச்சு. அப்படியே படத்துக்குள்ள வந்துட்டாங்க. ‘பேச்சுலர்’ படத்துல அவங்களுக்கு நல்ல பெயர் கிடைச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுலயும் சூப்பரா பண்ணியிருக்காங்க. தவிர, சாக்ஷி அகர்வால் இன்னொரு லீடு கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. விஜய் டி.வி பாலா செமயா கலக்கியிருக்கார். அவருடைய கவுன்டர்ஸ் க்ரியேட்டிவிட்டி, சான்ஸே இல்லை. நிவாஸ் கே பிரசன்னாவுடைய மியூசிக் படத்துக்கு பெரிய ப்ளஸா இருக்கும். கெளதம் ஜார்ஜுடைய ஒளிப்பதிவு கதை க்ளாஸியா காட்டியிருக்கு. என் நண்பர் ஆண்டனிதான் இதுக்கு எடிட்டர். அவருடைய வொர்க் பத்தி நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்லை.’’