
நாடகம் போடுற குடும்பத்துல இருந்து வர்றவர் வைபவ். எப்பவுமே ஒரு நாடகத்துல பபூன் கேரக்டர் எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ணும்.
“படத்தின் போஸ்டரைப் பார்த்துட்டு ‘இது முழுக்க முழுக்க நாடகக் கதையா’ன்னு கேட்குறாங்க. இது நாடகக் கதையில்லை. ஆனா, நாடகக் கலைஞர்களைப் பத்தின கதை. படம் முழுக்க காமெடி இருந்தாலும் சீரியஸான ஒரு விஷயத்தைப் பேசுற படமா ‘பபூன்’ இருக்கும்’’ என உற்சாகமாகத் தனது முதல் படைப்பைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் அசோக் வீரப்பன். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, இயக்குநராக புரொமோஷன் ஆகியிருப்பவர்.
‘‘ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை நிலப்பரப்பு சார்ந்த கதை இது. சின்ன வயசுல இருந்து நாடகங்கள் பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். வருஷத்துல 200 நாள்கள் நாடகம் இருக்குதுன்னா, அந்த 200 நாளும் தூக்கமிருக்காது. நைட் 10 மணிக்கு ஆரம்பிச்சு, காலையில ஆறு மணி வரைக்கும் நடிப்பாங்க. பார்க்க ஆள் இருந்தாலும், இல்லாமப்போனாலும், இவங்க நடிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க. அதெல்லாம் பார்த்து வியந்திருக்கேன். அரிதாரம் பூசி மேடையில ஒரு மாதிரி இருப்பாங்க, நாடகம் முடிஞ்சதும் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிடுவாங்க. அந்தக் கலைஞர்களுடைய உண்மை முகத்தைப் பார்க்க, நாடகம் முடிஞ்சு அவங்க கிளம்புற வரை காத்திருந்திருக்கேன். அரிதாரம் கலைத்த பின்பு அவங்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையைப் பதிவு பண்ண நினைச்சேன்.’’
``ஜாலியான வைபவ் இப்படி ஒரு கதையில் எப்படி?’’
‘‘நாடகம் போடுற குடும்பத்துல இருந்து வர்றவர் வைபவ். எப்பவுமே ஒரு நாடகத்துல பபூன் கேரக்டர் எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ணும். அதுல நடிக்கிறவங்களும் ரொம்ப கேஷுவலா பண்ணி, நம்மளை ரசிக்க வெச்சுட்டுப் போயிடுவாங்க. வைபவ் அப்படி நடிக்கக் கூடியவர். அதே சமயம், ஹ்யூமரா கலக்கிடுவார். அவர் இந்தக் கேரக்டருக்கு செட்டாவார்னு தோணுச்சு. கதை சொன்னதும், ‘கிராமத்துப் படங்கள் பெருசா முயற்சி பண்ணுனதில்லை. எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருக்கு. எப்போ ஷூட்டிங்’னு கேட்டார். இந்தக் கேரக்டர் தனக்கு வேறொரு வாழ்க்கை வேணும்னு நினைச்சு யோசிக்கும். நிறைய எமோஷனல் போர்ஷனும் இருக்கு. அதுலயும் ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்.’’

``வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?’’
‘‘வைபவ்கூட படம் முழுக்க ஆந்தக்குடி இளையராஜா வருவார். ‘நட்பே துணை’ படத்துல நடிச்ச அனாகா ஹீரோயின். தவிர, ‘ஆடுகளம்’ ஜெயபாலன் சார், நரேன் சார் நடிச்சிருக்காங்க. எம்.பி.விஸ்வநாதன்னு ஒரு நாடகக் கலைஞர் வைபவுக்கு அப்பாவா நடிச்சிருக்கார். நடிகர் சங்க டேட்டா பேஸ்ல எல்லா நாடகக் கலைஞர்களும் அவங்களுக்கான இன்ட்ரோவை வீடியோவா சொல்லியிருந்தாங்க. அதுல தேடிப் பிடிச்சு இவரை அணுகினேன். மதுரை நாடக சங்கத்துல இருக்கார். இன்னமும் மேடையில பர்ஃபார்ம் பண்ணிக்கிட்டிருக்கார். கவுண்டமணி சார்கூட இங்க நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கார். சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து நிறைய முயற்சி பண்ணியிருக்கார். ஆனா, எதுவும் கிடைக்கலை. ‘கடைசிக் காலத்தை அப்படியே ஓட்டிடலாம்னு நினைச்சேன். உங்க மூலமா சினிமா வாய்ப்பு கிடைச்சிருக்கு தம்பி’ன்னு ரொம்ப நெகிழ்ச்சியாப் பேசினார். ரொம்பப் பிரமாதமா நடிச்சிருக்கார். இவங்க இல்லாமல், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் கேமியோ ரோல்ல நடிச்சிருக்கார்.’’
``உங்க இயக்குநரே உங்க முதல் படத்துக்குத் தயாரிப்பாளரானது எப்படி?’’
‘‘நான் அவர்கிட்ட ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’யில கொஞ்ச போர்ஷன் வொர்க் பண்ணினேன். அவருடைய அசிஸ்டென்ட்ஸ் எல்லோரும் கதை எழுதினா, அவர்கிட்ட படிக்கக் கொடுப்போம். ரொம்ப ஆர்வமா படிச்சுட்டு அவருடைய கருத்தைச் சொல்வார். அப்படி நான் கொடுத்த ‘பபூன்’ ஸ்கிரிப்டைப் படிச்சு முடிச்சவுடன் ‘இதை நம்ம பேனர்லேயே பண்ணலாம்’னு சொன்னார். எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்தது. தயாரிப்பாளரைத் தேடிப்போறது மிகப்பெரிய வேலை. அந்தச் சிரமத்தை கார்த்திக் சுப்புராஜ் சாரும் கார்த்திகேயன் சந்தானம் சாரும் எனக்குக் கொடுக்கலை. சந்தோஷ் நாராயணன் சாரை எனக்கு ‘பீட்சா’ டைம்ல இருந்தே தெரியும். கதை கேட்டதும் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் உடனே ஓகே சொல்லிட்டார். அவருடைய இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.’’