
‘`என் மனைவி டாக்டர். இருந்தாலும் அவங்களுக்குச் சிறுகதைகள் எழுதுறதுல ஆர்வம் அதிகம். ‘மாயா’, ‘இறவாக்காலம்’ ரெண்டும் நான் மட்டும் எழுதின கதை.
‘மாயா’, ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வின் சரவணன், தற்போது நயன்தாரா தயாரித்து நடிக்கும் ‘கனெக்ட்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘`பேனா - பேப்பரில் ஆரம்பித்த எங்கள் உறவு, கவிதையாக மாறி திருமண பந்தத்தில் முடிந்திருக்கிறது’’ என, தன்னுடைய திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். சுவாரஸ்யமான கதைகளை அபாரமான திரைமொழியால் ரசிக்க வைக்கும் அஸ்வின் சரவணனின் காதல் கதையையும் பதிவு செய்ய நினைத்துத் தொடர்புகொண்டபோது, உடனே யெஸ் சொன்னார்கள் அஸ்வின் சரவணன் - காவியா ராம்குமார் தம்பதியினர்.
‘`என் மனைவி டாக்டர். இருந்தாலும் அவங்களுக்குச் சிறுகதைகள் எழுதுறதுல ஆர்வம் அதிகம். ‘மாயா’, ‘இறவாக்காலம்’ ரெண்டும் நான் மட்டும் எழுதின கதை. அடுத்த படம் ஒரு ரைட்டர்கூடச் சேர்ந்து வேலை செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்தச் சமயத்துல எனக்கு அறிமுகமானவங்கதான் காவியா. எழுத்து, கதைன்னு பேச ஆரம்பிச்சு நண்பர்களானோம். அப்படியே, ‘கேம் ஓவர்’ படத்துல கதை, திரைக்கதை, வசனத்துல வொர்க் பண்ணினோம். இந்த இடைப்பட்ட நாள்கள்ல எங்களுடைய நட்பு ஒரு படி மேல போய் காதலாகிடுச்சு’’ என்ற அஸ்வினைத் தொடர்ந்தார், காவியா. ‘`எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் இருக்காங்க. அப்படிதான் இவருக்கு என் கதை போயிருக்கு. பேஸ்புக்லதான் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம். அப்புறம்தான், இவர் டைரக்டர்னு தெரிஞ்சது. நாங்க ஃப்ரெண்ட்ஸான பிறகுதான், நான் இவருடைய ‘மாயா’ படமே பார்த்தேன். அடுத்து ஒரு படம் சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு முடிவெடுத்தப்போ, டாக்டரா இருந்துட்டு சினிமாவுக்குப் போறேன்னு சொன்னா, வீட்ல என்ன சொல்வாங்கன்னு பயமும் தயக்கமும் இருந்தது. அப்புறம், ‘இதுல ஆர்வமா இருக்கு. ஒரு வருஷம் டைம் கொடுங்க’ன்னு வீட்ல கேட்டேன். இவரும் பேசினார். அப்படியே ஆரம்பமானதுதான்’’ என்றார் புன்னகைத்தபடி.

‘`ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருந்தது. ஒரு படம் பார்த்தாலோ, ஒரு விஷயத்தை யோசித்தாலோ ஒரே மாதிரியே இருந்தது. அதனால்தான், இவங்ககூட வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். ஒரு கதையை எழுதின பிறகு, நிறைய க்ராஃப்டை சேர்ந்தவங்க உள்ள வரும்போது, அது சினிமாவா மாறும். ஆனா, எதுவும் இல்லாத வெள்ளை பேப்பர்ல ஒரு கதையை ஆரம்பிச்சு அழகா எழுதி முடிக்கிறது சாதாரண விஷயம் கிடையாது. அப்படிப்பட்ட விஷயங்கள்ல ஒருத்தர்கூட வேலை செய்றப்போ, அவங்க மேல நம்பிக்கையும் மரியாதையும் இருக்கணும். அது காவியா மேல எனக்கு இருந்தது’’ என்று அஸ்வின் சொல்லும்போது அவரைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்த காவியாவிடம், ‘டாக்டர் டு சினிமா செட்டாகிடுச்சா?’ என்றேன். ‘`என் நேட்டிவ் கேரளா. படிச்சது பாண்டிச்சேரியில். காலேஜ் படிக்கும்போது நடிக்க ஆசைப்பட்டிருக்கேன். சில மலையாளப் படங்களுக்கான ஆடிஷனுக்கெல்லாம் கூப்பிட்டிருந்தாங்க. நடிக்கிறதுக்கான வொர்க் ஷாப் போய் கோர்ஸ் பண்ணினேன். அப்பவே, நமக்கு நடிப்பு செட்டாகாதுன்னு தெரிஞ்சிடுச்சு. ஒரு பக்கம் அப்பப்போ கதைகளும் எழுதிக்கிட்டிருந்தேன். காலேஜ் முடிச்சுட்டு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்த சமயத்துலதான், இவருடைய அறிமுகம், சினிமா எல்லாமே. மெடிசின், ரைட்டிங் ரெண்டும் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, நேரம் சரியா இருந்தது. அப்புறம்தான் வீட்ல பேசி நான் எடுத்துக்கிட்ட ஒரு வருஷத்துல அஸ்வினும் நானும் சேர்ந்து ரெண்டு ஸ்கிரிப்ட் முடிச்சிட்டோம். ‘கேம் ஓவர்’ ஆரம்பமாகிடுச்சு. வீட்ல ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இருந்தாலும் நான் மீண்டும் ப்ராக்டீஸ் பண்ணணும்னு நினைக்கிறாங்க, பார்ப்போம்’’ என்று சிரிக்கிறார்.
“என் ப்ளஸ், மைனஸ் காவியாவுக்குத் தெரியும். எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகலாம்னு நினைச்சு நான்தான் முதல்ல சொன்னேன்’’ என்று காவியாவைப் பார்க்கிறார் அஸ்வின். ‘`எடுத்தவுடனே லவ்னு ஆரம்பிக்கலை. நல்ல நண்பர்களா இருந்ததனால, எங்களுக்குள்ள யார் யார் எப்படின்னு புரிஞ்சிடுச்சு. இவர் ரொமான்டிக்கான நபர் கிடையாது. ஒரு படத்துக்கான கதையை எப்படி சொல்வாங்களோ அப்படிதான் என்கிட்டயும் லவ் சொன்னார். எனக்கும் அந்த ஃபீல் இருந்தது. வீட்ல என்ன சொல்வாங்கன்னுதான் பெரிய தயக்கம் இருந்தது, குறிப்பா அவங்க வீட்ல. வீட்ல சொல்றதுக்கு முன்னாடியே டாப்ஸிகிட்ட சொல்லிட்டேன். ‘கேம் ஓவர்’ ஷூட்டிங் முடிஞ்சும் கூட ‘வீட்ல சொல்லிட்டீங்களா’ன்னு அடிக்கடி விசாரிப்பாங்க. என்னை அவங்க ஃபேமிலிக்குத் தெரிஞ்சதைவிட அஸ்வினை எங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு நல்லா தெரியும். அஸ்வினும் அவங்க டீமும் அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. நான் சொல்றதுக்கு முன்னாடி, அவங்களுக்கே தெரிஞ்சிடுச்சு. அதனால, சிம்பிளா முடிஞ்சிடுச்சு’’ என்ற காவியாவை இடைமறித்துப் பேசத் தொடங்குகிறார் அஸ்வின்.

‘`கல்யாணம் சொன்ன தேதியில நடக்குமான்னே தெரியலை. காரணம், அந்தச் சமயத்துல என் வீட்ல என்னையும் அம்மாவையும் தவிர, எல்லோருக்கும் கோவிட் வந்திடுச்சு. நிறைய ப்ளான் பண்ணி வெச்சிருந்தோம். கல்யாணம் பண்ற மண்டபமே மாறிப்போய், கோவில்லதான் எங்க கல்யாணம் நடந்தது. டாப்ஸிக்குத்தான் முதல்ல சொன்னோம். ஆனா, அவங்களால எங்க கல்யாணத்துக்கு வர முடியலைன்னு வருத்தம். ரிசப்ஷன் ப்ளான் பண்ணிட்டு அவங்களை இன்வைட் பண்ணணும்’’ என்கிறார்.
வாழ்த்துகள் அஸ்வின் - காவியா!