
‘‘நான் ‘மாயா'வுக்குப் பிறகு ‘இறவாக்காலம்'னு ஒரு படம் பண்ணினேன். அது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதுல எஸ்.ஜே.சூர்யா சார்தான் லீடு ரோல்.
`கேம் ஓவர்' வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் படம், ‘கனெக்ட்.' ‘மாயா' படத்திற்குப் பிறகு, மீண்டும் நயன்தாராவை இயக்கியிருக்கிறார். வழக்கமான டெம்ப்ளேட்களை உடைத்து, சுவாரஸ்ய திரைக்கதையின் மூலம் திகில் அனுபவத்தைக் கொடுப்பது இவரது ஸ்டைல். அவரின் பட பாணியிலேயே இருந்த அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன்.

`` ‘கனெக்ட்' படத்திற்கான வேலைகளை எப்போ ஆரம்பிச்சீங்க?’’
‘‘ ‘கேம் ஓவர்' முடிஞ்சபிறகு, நிறைய ஆலோசனைக்குப் பிறகு, ஒரு கதையைப் படமாக்க முடிவு பண்ணினேன். ஷூட்டிங் போக நினைச்சப்போ, லாக்டெளன் வந்துடுச்சு. லாக்டெளன் முடிஞ்சவுடன், பட்ஜெட்ல இருந்து எல்லாமே மாறிடுச்சு. இப்போ இந்தப் படத்தைப் பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சுது. லாக்டெளன் சமயத்துல பயமும் பதற்றமும் உச்சத்துல இருந்தது. யாரையும் சந்திக்க முடியலை. நெருக்கமானவங்க இறந்தபோதுகூட, அங்க போகமுடியலை. நம்பிக்கையின்மைதான் எல்லார்கிட்டேயும் இருந்தது. இந்த எமோஷன்களை நம்ம படத்துல வெளிப்படுத்தணும்னு தோணுச்சு. பயம், பதற்றம், நம்பிக்கையின்மை மாதிரியான எமோஷன்களை ஹாரர் படத்துல பயன்படுத்தினா நல்லா செட்டாகும்னு நினைச்சேன். இதைப் பத்தி என் இணைக் கதாசிரியரும் மனைவியுமான காவியாகிட்ட பேசினேன். நிறைய டிஸ்கஸ் பண்ணி, எழுத ஆரம்பிச்சோம். நான் நினைச்ச மாதிரி அமைஞ்சது. மலையாளத்துல ‘C U Soon', ‘ஜோஜி' பண்ணின மாதிரி இதை ஒரு இண்டிபெண்டன்ட் படமாகவே பண்ணலாம்னு நினைச்சேன். திடீர்னு ஒரு நாள் நாம ஏன் நயன்தாரா மேம்கிட்ட கேட்டுப் பார்க்கக்கூடாதுன்னு தோணுச்சு. அவங்களைச் சந்திச்சு ஐடியாவைச் சொன்னேன். ‘என்ன பட்ஜெட் இருக்கும்'னு கேட்டாங்க. சொன்னேன். ‘நீங்க விக்கியை சந்திச்சுக் கதை சொல்லுங்க. அவருக்கும் பிடிச்சதுன்னா, நம்மளே தயாரிக்கலாம்'னு சொன்னாங்க. விக்னேஷ் சிவன்கிட்ட கதை சொன்னேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘இந்தப் படத்தை இந்தச் சமயத்துலதான் பண்ணியாகணும். அப்போதான் மக்களுக்கு கனெக்ட்டாகும். சின்னப் படமா யோசிக்காதீங்க. பெருசாவே பண்ணலாம்'னு சொல்லி ஆரம்பமானதுதான் ‘கனெக்ட்'.’’

``நயன்தாரா கேரக்டர் என்ன? ‘கனெக்ட்' தலைப்பு?’’
‘‘இதுல அவங்க வொர்க்கிங் வுமன். தவிர, டீன் ஏஜ் பொண்ணுக்கு அம்மா. வேலை, குடும்பம்... ரெண்டிலும் இருக்கும் பிரச்னைகளை சாதுர்யமா கையாளுற, மல்டி டாஸ்கிங் பண்ணக்கூடிய பெண். இவங்களுடைய கேரக்டர் எல்லோராலும் தொடர்புப்படுத்திக்க முடியும். வழக்கம் போல, நயன் மேம் பெர்ஃபாமன்ஸ்ல மிரட்டியிருக்காங்க. லாக்டெளன் சமயத்துல நான் அதிகமா கேட்ட வார்த்தை ‘ஜூம்.' அப்புறம், ‘கனெக்டாச்சா ஆகலையா.' நாம இன்னொருத்தரைத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தக்கூடிய ஆப்கள் எல்லாத்திலுமே ‘Connecting'னு வரும். டெக்னிக்கலான வார்த்தைங்கிறதைத் தாண்டி அதுக்குள்ள ஒரு எமோஷன் இருக்குன்னு தோணுது. இந்த வார்த்தைக்குப் படத்துல ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. படம் பார்க்கும்போது இந்தத் தலைப்பு ரொம்ப சரின்னு தோணும்.
லாக்டெளன்ல நாம கடந்து வந்த எமோஷன்களைப் பத்திப் பெருசா யாரும் பேசுறதில்லை. அப்படிப் பேசினா, மறுபடியும் அந்தச் சூழல் வந்திடுமோன்னு பயம். நாம எல்லோருமே அந்த எமோஷனை ஒரு ரூமுக்குள்ள போட்டுப் பூட்டி வெச்சுட்டு கடந்து வந்துட்டோம். அதை இந்த ‘கனெக்ட்’ பேசும். லாக்டெளன் சமயத்துல பணக்கஷ்டம், குடும்பத்துல இழப்பு, பயம் எல்லாத்தையும் பார்த்தாச்சு. இந்தப் படத்தை மக்கள் பார்க்கும்போது, ‘இவ்வளவு பெரிய பிரச்னைகளைக் கடந்து வந்திருக்கோம். இனி எதுனாலும் பார்த்துக்கலாம்ங்கிற நம்பிக்கையைக் கொடுக்கும்னு நினைக்கிறேன்.’’

``அனுபம் கெர், சத்யராஜ்னு வித்தியாசமான காம்பினேஷனா இருக்கு?’’
‘‘விக்னேஷ் சிவன்கிட்ட நான் கதை சொன்னதும் ‘நடிகர்கள் யார் வேணும்னு சொல்லுங்க. நாம பேசலாம்'னு சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையும் சுதந்திரமும்தான் இவங்களை மாதிரியான நடிகர்கள் படத்துக்குள்ள வந்ததற்கு காரணம். அனுபம் கெர் சார் 500 படங்களுக்கு மேல் பண்ணியிருக்கார். அப்படியான லெஜண்ட் என் படத்துல நடிக்கிறது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுல அவருக்கு பாதிரியார் கேரக்டர். இந்தக் கேரக்டர் எழுதி முடிச்சவுடனே எனக்கு இவர்தான் ஞாபகத்துக்கு வந்தார். ‘சரி, கேட்டுப் பார்ப்போம். அவர் நோதான் சொல்லுவார். அப்புறம், வேற நடிகர்கள் பத்தி யோசிப்போம்’னு நினைச்சுதான் அவரை அணுகினேன். ‘லாக்டெளன் சமயத்துல நாம கடந்து வந்த எமோஷனைப் பதிவு பண்ணணும்னு நினைக்கிறேன்'னு சொன்னேன். அடுத்த நிமிஷம் ஓகேன்னு சொல்லிட்டார். எனக்கு இன்ப அதிர்ச்சி. அவர் நடிக்கிறதை நேர்ல பார்க்கும்போது, நடிக்கிறார்னு தெரியவே தெரியாது. எடிட்ல பார்க்கும்போது அவ்வளவு பவர்ஃபுல்லா, நேர்த்தியா இருந்தது. அவர் உள்ள வந்ததும் படத்துடைய டோனே மாறிடுச்சு. அவர் அனுபவத்துல நிறைய கத்துக்கிட்டேன். சத்யராஜ் சார் இதுல நயன் மேமுக்கு அப்பாவா நடிச்சிருக்கார். அவர்கிட்ட கதை சொல்லப் போனபோது, அவர் ‘மாயா' பத்திப் பேசினார். கதை சொன்னதும் பன்றேன்னு சொல்லிட்டார். முதல் படம், ரெண்டாவது படம் பண்ணும்போது இருக்கிற ஆர்வம் அவருக்கு இப்போவும் இருக்கு. எவ்வளவு நேரமானாலும், ரொம்ப கூலா சப்போர்ட் பண்ணினார். நல்ல நடிகர்ங்கிறதைத் தாண்டி நல்ல மனிதர். அவர்கூட மறுபடியும் வேலை செய்யணும்னு நினைக்கிறேன்.’’

`` ‘மாயா', ‘கேம் ஓவர்', இப்போ ‘கனெக்ட்'... எல்லாமே பெண்ணை மையப்படுத்தின கதைகளா இருக்கே?’’
‘‘நான் ‘மாயா'வுக்குப் பிறகு ‘இறவாக்காலம்'னு ஒரு படம் பண்ணினேன். அது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதுல எஸ்.ஜே.சூர்யா சார்தான் லீடு ரோல். அந்தப் படம் வெளிவந்திருந்தால், இந்தக் கேள்வி வந்திருக்காது. ‘கனெக்ட்'டை ஒரு குடும்பத்தைப் பத்தின கதையாதான் நான் பார்க்கிறேன். அந்தக் குடும்பத்தை வழிநடத்துறது நயன்தாரா. கொரோனாப் பெருந்தொற்று காலத்துல நடக்கிற சம்பவம் அந்தக் குடும்பத்தை எந்த அளவுக்கு உடைக்குது, அந்தச் சூழலைக் குடும்பமா சேர்ந்து எப்படி எதிர் கொள்றாங்கங்கிறதுதான் படத்துடைய ஐடியா. ‘யாவரும் நலம்' படம் ஒரு குடும்பத்தைப் பத்தின படம்தான். ஆனா, மாதவன் பார்வையில இருந்து கதை சொல்வாங்க. அது ஹீரோ சென்ட்ரிக் படம்னு சொல்ல முடியாது. அது ஒரு ஹாரர் படம். இந்தப் படமும் அப்படித்தான். வுமன் சென்ட்ரிக் படம்னு சொல்றதுல எனக்கு பெருசா உடன்பாடில்லை. நாம எடுக்கிற படங்கள்ல முதன்மைக் கதாபாத்திரம் பெண்ணா இருக்காங்கன்னுதான் நான் பார்க்கிறேன்.’’
``படத்துல வினய் இருக்கார். அவருடைய கேரக்டர் என்ன?’’
‘‘வினய் சாருக்கு நல்ல கேரக்டர். அது பத்தி இப்போ விரிவா சொல்லமுடியாது. நிறைய படங்கள்ல அவரை ரசிச்சிருக்கேன். இப்போ ரொம்ப ஸ்டைலிஷான நெகட்டிவ் ரோல் பண்ணிட்டு இருக்கார். எனக்கு அவரை வில்லனா காட்ட வேண்டாம்னு தோணுச்சு. ரொம்ப நல்ல நடிகர். சூப்பரா பண்ணியிருக்கார். இதுல நயன் மேமுடைய பொண்ணா ஹனியா நஃபிசா நடிச்சிருக்காங்க. அவங்க ஒரு சிங்கர்னு தெரியும். நடிக்கிறதுல ஆர்வமா இருக்காங்கன்னு தெரியாது. என் டீம்ல அவங்க ப்ரொஃபைல் பார்த்துட்டுச் சொன்னாங்க. ஒரு சீனைக் கொடுத்தோம். அதை அவங்க பர்ஃபாம் பண்ணி அனுப்பினாங்க. ரொம்ப நல்லா இருந்தது. அப்படித்தான் அவங்க படத்துக்குள்ள வந்தாங்க.’’
``த்ரில்லர், ஹாரர் ஜானர் படங்களுக்கு ஒளிப்பதிவும் இசையும் ரொம்ப ரொம்ப முக்கியம். இதுல யாரெல்லாம் உங்களுக்கு டெக்னிக்கல் சப்போர்ட்?’’
‘‘என் படங்களுக்கு ரான் ஈதன் யோகன்தான் இசையமைப்பார். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ரானுக்கு வேற வேலைகள் இருந்தது. அப்போ ‘பூமிகா' படத்துடைய லைவ் ரெக்கார்டிங்கை புரொமோ மாதிரி வெளியிட்டிருந்தாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, இசையமைப்பாளர் ப்ரித்வி சந்திரசேகரைப் பிடிச்சேன். ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. லாக்டெளன் சமயத்துல எனக்கு அவருடைய ஷோ ரீல் அனுப்பியிருந்தார். அவர் ஒளிப்பதிவு செஞ்சு நெட்ப்ளிக்ஸ்ல வெளியான ‘செத்தும் ஆயிரம் பொன்' பார்த்தேன். அந்த ஊர்ல இருக்கிற ஒரு கேரக்டராவே கேமரா இருக்கும். இந்தப் படத்துல ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். எடிட்டர் ரிச்சர்ட் கெவின். ‘கேம் ஓவர்' படத்துக்கும் அவர்தான். இந்தப் படத்தை எடிட் பன்றது ரொம்ப கஷ்டம். ஆனா, பிரமாதமா பண்ணியிருக்கார்.’’

``இடைவேளை இல்லாமல் படத்தைக் கொடுக்கலாம்னு எப்போ முடிவு பண்ணுனீங்க?’’
‘‘படம் மொத்தம் 99 நிமிஷம். இதுல எங்க இன்டர்வெல் வைக்கிறதுன்னு தெரியலை. இன்டர்வெல் இல்லாமதான் புரொடக்ஷன் டீமுக்குப் போட்டுக் காட்டினேன். ஆனா, இன்டர்வெல் இல்லைன்னு அவங்ககிட்ட சொல்லலை. இந்தப் படத்தை இப்படித்தான் பார்க்கணும். இடைவேளை விட்டுப் பார்த்தா சரியிருக்காதுன்னு சொன்னாங்க. ‘அப்படிப் பண்ண முடியுமா? தியேட்டர்ல இன்டர்வெல்லதான் ஸ்நாக்ஸ் பிஸினஸ் நடக்குது. இன்டர்வெல் இல்லைன்னா பிஸினஸ் பிரச்னையாகும்னு யோசிப்பாங்களே'ன்னு கேட்டேன். ‘வரும்போதே வாங்கிட்டு வரச் சொல்லலாம். புது முயற்சியா பண்ணிப் பார்ப்போம்'னு சொன்னாங்க. விக்னேஷ் சிவனுக்குதான் அந்த கிரெடிட் போகணும். அதை நடைமுறைக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் போய்க்கிட்டிருக்கு. ப்ரேக் இல்லாமல் பார்த்தால், நிச்சயமா நல்ல அனுபவமா இருக்கும்.

இந்த மாதிரியான படத்தை ஓ.டி.டி-யில பார்த்தா நிறுத்தி நிறுத்திப் பார்ப்பாங்க. அப்படிப் பார்த்தா அதனுடைய தாக்கம் இருக்காது. தவிர, என் படங்கள்ல சவுண்ட் டிசைனிங், மிக்ஸிங்கிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இதுல இன்னும் கூடுதலா டீட்டெயிலிங் பண்ணியிருக்கோம். அந்த வீட்ல நீங்க மாட்டிக்கிட்டீங்க, வெளியே வரமுடியலைங்கிற உணர்வைக் கொடுக்கும். சிங்க் சினிமாஸ் சச்சின் சுதாகரன், ஹரிஹரன் பண்ணியிருக்காங்க. அதை அனுபவிக்க தியேட்டர்தான் சரியான இடம்.’’