சினிமா
Published:Updated:

“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி

டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் பேட்டி

“சுல்தான் இப்படிப்பட்டவன்தான்னு அவ்வளவு சுலபமாக நீங்க வரையறுக்க முடியாது. இது சரி இது தப்புன்னு உலகம் எதையெதையோ சொல்லும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய்னு வாழ்றவன் சுல்தான். இதில் காய்ச்சி எடுக்கப் போற கமர்சியல் ஆக்‌ஷனும் இருக்கு. மனித உறவுகளோடு விளையாடுகிற மாதிரியும் இடங்கள் இருக்கு. நிச்சயம் நமக்கு உணர்த்தியே ஆகணும்னு வருகிற ஒரு மெசேஜ் கண்டிப்பாக உண்டு. பசியோடு வர்றவங்களுக்கு சூடா நாலு பரோட்டாவைப் பிச்சுப்போட்டு ‘சுர்’ன்னு சால்னாவை ஊத்தினா அதுதான் டேஸ்ட்! ருசி தொண்டையில் நிற்க, ‘நல்லா இருக்குப்பா’ன்னு வந்தவங்க வாழ்த்திட்டுப் போவாங்க. அப்படித்தான் ‘சுல்தான்’ இருக்கும்...” ஃபுல் ஸ்விங்கில் இருக்கிறார் டைரக்டர் பாக்யராஜ் கண்ணன். சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வில் பளிச்சென்று தெரிய வந்தவர்.
“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”

“அதென்ன ‘சுல்தான்’, கொஞ்சம் அவுட்லைன் சொல்லுங்களேன்..?”

“கதையையே சொல்லிடலாம். ஆனால் இப்போ இல்லை. எல்லோரையும் தியேட்டருக்குக் கூப்பிட்டு கலர்ஃபுல்லா கதை சொல்றேன். ‘சுல்தான்’ வெற்றி பெறுவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்து பார்த்து செய்திருக்கோம். சில சமயம் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்ட மாதிரியே பளிச்சுனு வந்து நிற்கும். அப்படி ஒரு படம். டீசரில் வந்த வசனம்தான். ‘கிருஷ்ணர் பாண்டவர் பக்கம் நிற்காமல் கௌரவர் பக்கம் நின்றிருந்தால்’னு ஒரு இடம் இருக்கும்ல... அதுதான் படம். ‘சுல்தான்’ங்கிறது கார்த்தியோட செல்லப் பெயர். நூறு ரவுடிகளோடு கூட நிற்கிற மாதிரியான கட்டம். கதை எழுதும்போது தெரியலை. எடுக்கும்போதுதான் அதன் கஷ்டம் புரிஞ்சது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வச்சுக்கிட்டு ரொம்ப அருமையாக நடந்துமுடிஞ்ச வேலை. மேன் பவர், நல்ல உழைப்பு, பெரிய பட்ஜெட், கார்த்தி மாதிரி ஒரு நல்ல நடிகர்னு எல்லாம் கைகூடி வந்திருக்கு.”

“ ‘கைதி’யின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக்கு இந்தப் படம். எப்படி சுல்தானாக வந்தார்?”

“நிச்சயம் அடுத்தடுத்த படங்கள் அவரை நல்லா மெருகேற்றி வந்திருக்கு. வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி அவரே தன்னைச் சரி பண்ணிப் பாத்துக்கிற இயல்பு இருக்கு. விமர்சனங்களை வரவேற்கிறார். கார்த்தி சாருக்கு இதில் வேலை அதிகம். ‘கைதி’ வந்தபிறகு அவரோட எதிர்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் விதத்தில் படம் வந்திருப்பதில் எனக்கே முதலில் நிறைவும் நிம்மதியும் இருக்கு. அவரும் அதை உணர்ந்திருப்பதில்தான் என்னைத் தம்பி மாதிரி நினைச்சுக் கொண்டாடுகிறார். சுல்தான் உங்களோடு இணைஞ்சு நிற்பான். நல்லது கெட்டதுக்கு ‘நான்’னு முன்னாடி வந்து சொந்தம் கொண்டாடி மனசைப் பிடிக்கிறவன். மண்ணையும் உறவுகளையும் மனிதர்களையும் பார்த்து சந்தோஷப்படுறவன். ‘நீரின்றி அமையாது உலகு’ன்னு சொல்வாங்க. அதே மாதிரியான நிஜம், ‘உறவின்றி மறையாது உலகு.’ இப்படத்தைப் பார்த்தால் எல்லோரும் அவர்களுக்குப் பிடித்தமான ஓரிடத்தில் நிச்சயம் மனசை நிறுத்துவாங்க. மறந்துபோன உறவு மனசில் வரும். ஒரு மனுஷன், நம்மை நம்பி வந்தவங்களை எப்படிப் பார்த்துக்கணும்னு சுல்தான் காட்டுவான். தன்னைச் சுத்தி இருக்குறவங்களுக்கே இப்படின்னா, அவனை ஒரு பிரச்னை உக்கிரப்படுத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுதான் சுல்தான். ஆக்‌ஷனோட பாசங்களுக்கும் பிரியங்களுக்குமான போட்டியும் இருக்கு. படம் பார்த்திட்டு கார்த்தி பிரமாதமான பெர்ஃபார்மர்ன்னு நிச்சயம் உணர முடியும்.”

“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”
“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”

“ராஷ்மிகா அதிகமும் ரொமான்ஸ் படங்களில் அறியப்பட்டவர் ஆச்சே?”

“ராஷ்மிகா பக்கத்து வீட்டில் இருக்கிற துறுதுறு பொண்ணு மாதிரி. செட்ல பார்த்தால் சந்தோஷமும் கேலியும் கிண்டலுமாக இருக்கிறவங்க, டேக் போயிட்டால் அப்படியே மாறிடுவாங்க. இன்னைக்கு எல்லோருக்கும் பிடிச்ச ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் ரொம்ப சாதாரணமாப் பழகுகிற பொண்ணு. கார்த்திக்கும் ராஷ்மிகாவுக்கும் வர்ற லவ், படு ஜாலியான கலர்ஃபுல் கலைடாஸ்கோப்! கார்த்தி மனசுக்குள்ளே ராஷ்மிகா நுழையறதும் தொடர்ந்து வருகிற திருப்பங்களும், ரகளைகளும்... வெயிட் பண்ணிப் பாருங்க தெரியும். தெலுங்குப் பக்கமெல்லாம் அவங்க அத்தனை செல்லம். சுல்தானுக்குப் பின்னாடி இங்கேயும் அப்படி ஆகிடுவாங்க.”

“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”
“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”

“தெலுங்கில் நானி இந்தக் கதையில் நடிக்க ஆசைப்பட்டார் என்று கேள்விப்பட்டோமே..?”

“சி.பி.ஐ விசாரணை நடத்திக்கிட்டுதான் வந்திருக்கீங்கபோல. ‘ரெமோ’ பண்ணும்போது பி.சி.ஸ்ரீராம் சார் அவரைப் பார்க்கச் சொன்னார். ஜாம்பவான் சொல்லும்போது அதை மீறலாமா! அவரைப் பார்த்துக் கதை சொன்னேன். நானிக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. ஆனாலும் என்ன இருந்தாலும் அந்த மொழி நமக்குத் தெரியாது. கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. அப்புறம் கார்த்தி சாருக்குக் கதை சொன்னதும் பிடித்துப்போனதும் அதை பிரகாஷ், பிரபு சார் தயாரிக்க முன்வந்ததும்னு படம் டேக் ஆஃப் ஆயிடுச்சு.”

“கார்த்தி-யோகிபாபு காம்பினேஷன் எப்படி இருக்கு?”

“அள்ளுது. இரண்டு பேரும் தொடக்க நாள்களிலேயே மனசு நெருங்கி வந்துட்டாங்க. அவங்க ஒன்லைன்களில் விளையாட, செட்டு கலகலத்துப் போயிடுச்சு. இனிமே இந்த காம்பினேஷனும் பேசப்படும்.”

“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”
“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”

“கே.ஜி.எஃப் வில்லன் ராமச்சந்திர ராஜு மிரட்டுகிறாரே?”

“சரியான முரட்டு வில்லன் வேணும். கொஞ்சம் தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகாத வில்லன் தேவைப்பட்டது. அவரைக் கொண்டுவந்து சேர்த்துட்டோம். மனுஷன் பின்னி எடுக்கிறார். ஷூட்டிங் முடிஞ்சதும் நாற்காலியில் உட்கார்ந்தால்கூட அவரைப் பார்க்க பயமா இருக்கு. படத்தில் அவருடைய அட்டகாசங்களைப் பாருங்க பிரதர்!”

பாக்யராஜ் கண்ணன்
பாக்யராஜ் கண்ணன்
“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்!”

“விவேக் - மெர்வின் புது இசை எப்படியிருக்கு?”

“அதுதான் நீங்களே சொல்லிட்டிங்களே... முரட்டு அடியா, மெல்லிசையா... எதற்கும் படத்திற்கு ஏற்ற மாதிரி இணங்கி வர்றாங்க. படத்தோட ட்யூன் தனக்கு மட்டும் பிடிச்சா போதும் என்று நினைக்காமல் நம்மளையும் சந்தோஷப்படுத்தணும்னு நினைப்பாங்க. பாடல்கள் தனிக் கொண்டாட்டமா நடந்து முடிஞ்சிருக்கு. எங்களோட நேர்த்தி, ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாம் படம் ரிலீஸான பிறகு எல்லோருக்கும் புரியும்.”