
நான் நினைக்கிறதைப் படமா எடுக்க முடியுமா, மக்கள் மனதைப் புரிஞ்சு நல்ல படம் கொடுக்க முடியுமா என்பதற்கான பரிசோதனையாதான் ‘விடியும் முன்' படத்தைப் பார்த்தேன்
2013-ம் ஆண்டு வெளியான பல படங்களில் ‘விடியும் முன்' கூடுதல் கவனம் பெற்றது. அதன்பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து, இப்போது ‘கொலை' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலாஜி குமார்.
‘‘எல்லோரும் சாதாரணமா ‘கொலை'ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துறோம். ஆனா, 100 வருஷ சினிமாவுல ஒரு படம்கூட ‘கொலை'ன்னு வந்ததில்லை. எப்படி இந்த வார்த்தையை விட்டாங்கன்னு ஆச்சர்யமா இருந்தது. மைக்கேல் ஏஞ்சலோ சொன்ன மாதிரி, ‘Trifles make perfection and perfection is no trifle.’ சின்னச்சின்ன விஷயங்கள்தான் பர்ஃபெக்ஷனைக் கொடுக்கும். ஆனா, அந்தச் சின்ன விஷயங்கள் பண்றது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அப்படிச் சின்னச்சின்னதா பண்ணின நிறைய விஷயங்கள் படத்துக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கு’’ - இயக்குநர் பாலாஜி குமார் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.

``2013 - 2022... முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் ஏன் இந்த இடைவெளி?’’
‘‘நான் நினைக்கிறதைப் படமா எடுக்க முடியுமா, மக்கள் மனதைப் புரிஞ்சு நல்ல படம் கொடுக்க முடியுமா என்பதற்கான பரிசோதனையாதான் ‘விடியும் முன்' படத்தைப் பார்த்தேன். படம் வெளியான கொஞ்ச நாளிலேயே நிறைய தயாரிப்பாளர்கள் ‘அடுத்து என்ன'ன்னு கேட்டாங்க. ஆனா, அவசர அவசரமா ஒரு கதை எழுதி, அதைப் படமாப் பண்ண எனக்குப் பிடிக்கலை. அப்படிப் பண்ணினாலும் நல்லா வராது. டைம் எடுத்தாலும் பரவாயில்லை, நல்ல படமா கொடுக்கணும்ங்கிறது மட்டும்தான் என் இலக்கா இருக்கு. நான் ஒரு கதை எழுதினா முப்பது, நாற்பது டிராஃப்ட் வரை போகும். அப்படி இந்த இடைவெளியில மூணு ஸ்கிரிப்ட் முடிச்சிருக்கேன். அதுல ஒண்ணுதான் ‘கொலை' படம்.’’

`` `கொலை' படத்துக்கான ஐடியா எப்போ வந்தது?’’
‘‘நான் மர்டர் மிஸ்டரி கதைகள் நிறைய படிப்பேன். அதுல ‘Who done it’னு ஒரு கேட்டகிரி இருக்கு. எனக்கு இந்த ரகத்துக் கதைகளும் படங்களும் ரொம்பப் பிடிக்கும். அகதா கிரிஸ்டி, பில் ப்ரன்சீனி என நிறைய பேர் இந்த ஜானர்ல நிறைய கதைகள் எழுதியிருக்காங்க. யார் இதையெல்லாம் செஞ்சதுங்கிற கேள்விக்குப் பதில் கடைசியா தெரியவரும். எந்த மொழியாக இருந்தாலும் இதுதான் டெம்ப்ளேட்.
அதுல இருந்து எப்படி வேறுபட்டுக் கதை சொல்லலாம்னு யோசிச்சுதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். மிகப்பெரிய சவால். இது 100 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் தழுவல் மட்டுமல்ல, நான் படிச்ச இருநூறு, முந்நூறு புத்தகங்களுடைய இன்ஸ்பிரேஷனும்கூட. மற்ற ஜானர் படங்கள் பண்ணும்போது நாம சந்தித்த சூழல்களை வெச்சு எழுதலாம். ஆனா, இந்த ரகக் கதை எழுதும்போது நாம போலீஸாகவோ அல்லது கொலையாளியாகவோ இருக்கணும். நான் அப்படி இல்லை. அப்புறம் எப்படி யோசனை பண்ண முடியும்? அதனாலதான் 1920, 1930களில் வந்த புத்தகங்கள் நிறைய தேடிப் படிச்சு, அதுல என்னைக் கவர்ந்த விஷயங்களை இதுல சேர்த்திருக்கேன்.’’

`` `கொலை' படத்துடைய எழுத்திலும் மேக்கிங்கிலும் என்ன புதுமையா இருக்கும்?’’
‘‘இந்தப் படத்துடைய திரைக்கதை எழுத ரொம்ப சிரமமா இருந்தது. ஆறேழு முறை இது வேலைக்காகாதுன்னு தூக்கிப் போட்டுட்டேன். அப்புறம் ஒரு புது ஐடியா வரும், மறுபடியும் எடுத்து எழுதுவேன். அப்படி இந்தக் கதையை 45 டிராஃப்ட் எழுதினேன். எனக்குத் திருப்தி கிடைக்கிற வரை எழுதிக்கிட்டே இருந்தேன். எப்படி இந்தக் கதையைச் சொல்றதுனே தெரியலை. 40 ப்ளாஷ்பேக் இருக்கு. எப்படிக் கதை சொல்லிப் புரிய வெக்குறதுன்னு குழப்பமா இருந்தது. கதை கேட்டவங்க எல்லோரும் ‘இதை எப்படி மூணு மணி நேரத்துக்குள்ள கொடுக்கப்போறீங்க’ன்னு கேட்டாங்க. இப்போ படத்தை 2 மணி 12 நிமிஷத்துல முடிச்சிருக்கோம். நான் எழுதும்போது ஹாலிவுட் ஷீட்ஸ்தான் பயன்படுத்துவேன். அதுல நாம எழுதுறதைப் படமாக்கும்போது சரியான அளவு கிடைக்கும். ஒரு பக்க சீனைப் படமாக்கினால், ஒரு நிமிஷம்தான் இருக்கும். 120 பக்கம் இருந்தது. சரியா 2 மணி நேரம். 3 பாடல்கள் சேர்த்தால் 12 நிமிஷம். மொத்தம் 2 மணி 12 நிமிஷ நேரம் படம் இருக்கு. இந்தப் படத்துல நான் வேறொரு சென்னையைக் காட்டுறேன். ‘நீங்கள் சென்னைவாசியாக இருந்தால், இந்தத் திரைப்படத்தில் சென்னை மாநகராட்சியின் புவியியல் விவரங்கள் சற்று வேறுபட்டு இடம்பெறுவதைக் காண்பீர்கள். கதையைத் திறம்படச் சொல்ல நம் சென்னையை மேலும் சுத்தமாகவும் குறைந்த நெரிசலுடனும் சில அடையாளச் சின்னங்களை இங்கும் அங்குமாய் இடம் மாற்றிக் காட்டியிருக்கிறோம்'னு படம் ஆரம்பிக்கும்போதே டிஸ்க்ளைமர் போட்டிருக்கோம். நமக்கு ஏத்த மாதிரி மெட்ராஸை மாத்திக் காட்டியிருக்கோம். ‘Madras Police Force'னு புதுசா ஒரு பேட்ஜ் உருவாக்கியிருக்கோம்.’’

``விஜய் ஆண்டனிதான் முதல் சாய்ஸா? கதை கேட்டவுடன் என்ன சொன்னார்?’’
‘‘விஜய் ஆண்டனிதான் முதல் சாய்ஸ்னு சொல்லமாட்டேன். ஆனா, விஜய் ஆண்டனிதான் சரியான சாய்ஸ்னு சொல்லுவேன். சில நேரங்கள்ல ஒரு ரெடிமேட் சட்டையைப் போடும்போது, நமக்கே தைத்த மாதிரி இருக்குன்னு தோணும். அப்படித்தான் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி. ‘இந்தப் படத்துல நான் நடிச்ச மாதிரி தெரியுது சார்’னு சொன்னார். சூப்பரா பண்ணியிருக்கார். விஜய் ஆண்டனி என்னுடைய ‘விடியும் முன்' பார்த்ததில்லை. கதை சொல்ல அவரைச் சந்திச்சப்போ, ‘20 நிமிஷத்துல சொல்லிடுவீங்கதானே'ன்னு கேட்டார். ‘ரொம்ப கஷ்டம் சார். நான் முயற்சி பண்றேன்'னு சொன்னேன். அவரால அந்த சஸ்பென்ஸ் தெரிஞ்சுக்காமல் இருக்க முடியலை. அப்படியே முழுக் கதையையும் சொல்ல ஆரம்பிச்சேன். முதல் பாதி கேட்டவுடனே, தயாரிப்பாளருக்கு போன் பண்ணி ஓகே சொல்லிட்டார். ‘எனக்கு யார் கொலை பண்ணுனாங்கன்னு தெரிஞ்சுக்கணும். செகண்ட் ஆப் சொல்லுங்க'ன்னு சொன்னார். அவர் கதையில ரொம்ப ஈடுபாடாகி இப்படிப் பண்ணலாம், அப்படிப் பண்ணலாம்னு நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் கொடுத்த ஐடியாக்களையும் இதுல பயன்படுத்தியிருக்கேன். இதுல ஜான் விஜய் ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவர் உள்ள வந்தவுடன், அவர் மேனரிசத்துக்காகவும் சில விஷயங்கள் மாத்தினேன். ரித்திகா சிங் ஹீரோயின். ராதிகா மேடம் ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.’’



``டெக்னீஷியன்கள்?’’
‘‘இசையமைப்பாளர் கிரிஷ் ரொம்ப கூல். நான் சொன்னதை அப்படியே அழகா புரிஞ்சுக்கிட்டு நிறைய விஷயங்கள் சொல்வார். ‘இந்தப் படம் முழுக்க டாங்கோ, ஃப்ளமிங்கோன்னு லத்தீன் அமெரிக்க, ஸ்பானிஷ் ஸ்டைல் மியூசிக்தான் இருக்கணும், கர்நாடக சங்கீத வாசனையே இருக்கக்கூடாது’ன்னு சொல்லிட்டேன். சூப்பரா பண்ணிக் கொடுத்திருக்கார். சிவகுமார் விஜயனுடைய ஒளிப்பதிவு பிரமாதமா இருக்கும். கிரேடிங்ல ஐந்து வித்தியாசமான லுக் கொடுத்திருக்கோம். ஆர்ட் டைரக்டர் ஆறுச்சாமியுடைய வொர்க் நிச்சயம் பேசப்படும். எத்தனையோ படங்கள்ல போலீஸ் ஸ்டேஷன் பார்த்திருப்போம். இதுல வேற மாதிரி டிசைன் பண்ணியிருக்கோம். படம் 40% அப்பார்ட்மென்டுக்குள்ளதான் நடக்கும். அதுக்காக ஒரு அப்பார்ட்மென்ட் செட் போட்டோம். எது செட், எது ஒரிஜினல்னு தெரியாத அளவுக்கு ரொம்ப யதார்த்தமா இருக்கும். VFXக்கு இதுல ரொம்ப முக்கியமான பங்கு இருக்கு. ரமேஷ் ஆச்சார்யா பிரமாதமா பண்ணியிருக்கார். அதை நாங்க சொன்னால்தான் தெரியுமே தவிர, படமா பார்க்கும்போது VFXனு தெரியாது. ‘சார்பட்டா பரம்பரை' எடிட்டர் ஆர்.கே.செல்வாதான் இந்தப் படத்துக்கும் எடிட்டர். மனுஷன் செம ஷார்ப்.’’
``பிரசன்னா - ஆண்ட்ரியாவை வெச்சு ஒரு பிரெஞ்ச் நாவலைப் படமாக்கணும்னு ஒரு பேட்டியில் சொல்லிருந்தீங்க... எப்போ எதிர்பார்க்கலாம்?’’
‘‘அந்த பிரெஞ்ச் நாவலுக்கான உரிமை இன்னும் கிடைக்கலை. ஒன்பது வருடங்களா உரிமையை வாங்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். பிரசன்னா, ஆண்ட்ரியாவுக்கு அந்த நாவல் கதையைச் சொல்லி அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. எப்போ நடக்குதுன்னு பார்ப்போம். தவிர, சுஜாதாவுடைய ‘கொலையுதிர் காலம்' நாவலைப் படமாக்கும் உரிமையை வாங்கிட்டேன். அதுல சில மாற்றங்கள் செஞ்சு சயின்ஸ் பிக்ஷன் கதையா மாத்தி வெச்சிருக்கேன். அதுக்கு பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்கள் தேவை. நிச்சயமா அந்தப் படம் சீக்கிரம் ஆரம்பமாகும்னு நம்புறேன்.’’