சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது!”

சேரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சேரன்

நான் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் பார்த்து சினிமா கத்துக்கிட்ட ஆளு. அவங்க ரெண்டு பேருமே அதிகமா சினிமாவை சமூகத்திற்குப் பயன்படுத்தினாங்க.

’திருமணம்’ படத்திற்குப் பிறகு அடுத்த முயற்சிக்கான முனைப்பிலிருக்கிறார் இயக்குநர் சேரன். குடும்பங்களின் யதார்த்தத்தைத் தமிழ் சினிமாவில் நிறைவும் உணர்வுமாய்க் கொண்டுவந்து நிரப்பிய சேரனோடு நடந்த இந்த உரையாடல் எப்போதும்போல் பொருள் மீறி அமைந்தது!

`` ‘பாரதி கண்ணம்மா’ தொடங்கி நல்லுணர்வு தந்தவை உங்கள் படங்கள். இது எப்படிக் கைவந்தது?’’

``நம் வீடுகளில் சின்னப் பிரச்னைகூட பெரிய பிரச்னையாக மாறும். அதைப் பெரியவங்க தங்கள் அனுபவத்தால் சாதாரணமா சுருக்கிடுவாங்க. அப்படியான பிரச்னைகளைக் கையாளுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க அம்மாச்சி, அம்மா, வாத்தியார் மாமா போன்றவர்கள் ஒரு பிரச்னையைக் கையாள்வதைப் பார்த்திருக்கேன். அவர்களோடு நெருங்கி வளர்ந்தது காரணமாக இருந்திருக்கலாம். எல்லாத் தரப்பு மக்களையும் இப்படி ஒரு இடத்திற்குள்ளே கொண்டு வந்து வைச்சிடமுடியும்னு நினைச்சேன். சென்டிமென்ட் கேலிக்குரியதாகிவிட்டதுன்னு சொல்றாங்க. உறவுகளோடு இருந்த மக்கள் இப்ப அதிகமும் இணையத்தில் இருக்காங்க. அங்கே மீம்ஸ், கேலிக் கூத்துக்கள்தான் பெருசா நடக்கிறது. அதனால் உறவுகள் சார்ந்த சென்டிமென்ட் தேவையில்லாத மாதிரி ஒரு தோற்றம் காட்டுது. ஆனா எதுவும் அழியல. சொல்ற முறை மாறியிருக்கு. நாம் எல்லோருமே படிப்பு, வாழ்க்கைமுறை, தேவைகளில் பழைய இடத்திலிருந்து ரொம்ப முன்னேறியிருக்கோம். வாழ்க்கை மாற்றத்தில்தான் உலகமே இயங்கிக்கிட்டு இருக்கு. எங்கேயோ காட்டுக்குள்ள வேட்டையாடித் திரிஞ்சவங்கதானே இப்போ வெளியே வந்து நமக்குன்னு ஒரு உலகத்தைக் கட்டமைச்சு இருக்கோம். முன்னாடி அழுது தீர்த்தோம்; இப்ப பேசித் தீர்க்கிறோம். இப்பவும் வேண்டியவருக்கு ஒண்ணுன்னா பதறித் துடித்துத்தானே போறோம். அருவாளைத் தூக்குறதும் அப்புறம் கட்டிப் பிடிச்சுக் கண்ணீர் விட்டு அழறதும்தானே நம்ம அழகு. சினிமாவைப் பொறுத்தவரை 90% சென்டிமென்டிலதான் இயங்குது.”

“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது!”

``குடும்பம் சார்ந்தே இயக்கியவருக்கு பரீட்சார்த்த படங்களைச் செய்யணும்னு தோணலையா?’’

“பரீட்சார்த்த படங்கள் தனிப்பட்ட ஒருத்தரை மேலே தூக்கிட்டுப் போகலாம். நம்பர்-1, பெரிய டைரக்டர்னு சொல்ல வைக்கலாம். நான் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் பார்த்து சினிமா கத்துக்கிட்ட ஆளு. அவங்க ரெண்டு பேருமே அதிகமா சினிமாவை சமூகத்திற்குப் பயன்படுத்தினாங்க. சமூக வளர்ச்சிக்கு, மாற்றத்திற்கு, விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தியதால் இந்த ஊடகம் வலிமையானதுன்னு நம்பினாங்க. அவங்களுக்கான சினிமாவையே நான் எடுக்க நினைக்கிறேன். வியாபாரச் சூழல்கள் மாறினால்கூட நான் எடுக்கிற படங்கள் மக்களுக்குப் பயன்படணும். ‘திருமணம்’ கூட அப்படி எடுத்ததுதான். எப்பவும் மெசேஜ் சொல்றதுன்னு பிடிவாதமாக இருந்திருக்கிறேன். ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’க்கு முன்னாடி மெசேஜ் இருந்திருக்கலாம். இதற்குப் பிறகு என் படங்கள் கலை வடிவமாக மாறியிருக்கு. ‘பொக்கிஷம்’ நிச்சயமாக கலை வடிவம்தான். இன்னைக்கும் அந்தப் படத்தை டிவில பார்த்துட்டு எனக்கு வருகிற அலைபேசி அழைப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.”

``சினிமா மாறிவிட்டதை கவனிக்கிறீங்களா?’’

“ஆசிரியர் - மாணாக்கராகக் கத்துக்கிட்ட சினிமா போய் இப்ப எல்லோரும் ஆசிரியர்கள் ஆகிட்டாங்க. எங்க அம்மாவுக்கு 72 வயசாகுது. அவங்களே இன்டர்நெட்டில் போய்ப் பார்த்து யோகா பயிற்சி எடுத்துக்கிறாங்க. இப்ப சினிமாவில் லேசாகக் கோடிட்டுக் காட்டினாப் போதும். முன்னாடி படத்தில் ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தினா அதற்கு பெரிய சீனே வைக்கணும். இன்னிக்கு ஒரு வார்த்தையில் ஒருத்தன் கேரக்டரைச் சொல்லிடறாங்க. முன்னாடி ஒருத்தன் இருக்கான்னா அவன் வீட்டை உள்ளும் புறமும் காட்டுவாங்க. இப்ப இருக்கிற இடம்தான் வீடுன்னு ஆகிப்போச்சு. சினிமா மக்கள்கிட்ட சேரும்வரை அந்த மொழி கடினமாக இருந்தது. சினிமா வந்தே நூறு வருஷத்துக்கு மேலே ஆகிப்போச்சே. ஏதாவது ஒரு முன்னேற்றம் வரணும்ல. அது இப்ப வந்திருக்கு.”

“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது!”

``சினிமாவால் சமூக மாற்றம் வருமா?’’

“கலை நம்மை மாற்ற முடியும்னு நினைத்தால் அது பரிதாபமான நம்பிக்கை. ஆயிரம் வருஷமா அரிச்சந்திர மயான நாடகம் நடந்தது. அதைப் பார்த்துட்டு காந்தி என்ற ஒரே ஒரு மனிதர்தான் பொய் சொல்லக் கூடாதுன்னு நினைச்சார். ஒரு கலை ஒருத்தனைத்தான் கண்டுபிடிக்கும். அதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உலகத்தில் சிறு மாற்றங்கள்தான் பிறகு பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கு.

ஒட்டுமொத்தச் சமூகத் திற்கும் மாற்றம் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், சினிமா தனிமனிதக் குழப்பங் களைத் தீர்க்கும். ‘தாரே ஜமீன் பர்’ பார்த்துட்டு நிறைய பெற் றோர்களுக்குக் குழந்தைகள் பற்றிப் பல விஷயங்கள் புரிந்தது. எனக்கு என்ன உறுத்தல்னா, நாம் மதம், ஜாதி, குறிப்பிட்ட கொள்கைகள்னு கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம். இதுதான் வன்மத்தை உருவாக்குது. விரிச்ச கையில் காசை வச்சாலும் அப்படியே தான் இருக்கும். ஆனால் அதை இறுக்கிப் பிடிச்சிட்டு இருக்கோம். என் அம்மா என்னை வலியில் பெத்த மாதிரி என் வலியில்தான் படங்களைத் தந்தேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்!”

`` ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?’’

“நிறைய. முன்னாடி இருந்த மனநிலையும், போயிட்டுவந்த பிறகான மனநிலையும் வேற வேற. முன்னாடி கோபம் வரும். சொல்லவந்ததைப் புரிஞ்சுக்கலைன்னா வெடிச்சிடுவேன். ஒரு இயக்குநராக உள்ளே போயிட்டு, வெளியே வரமுடியாமல் மனிதர்களை அவ்வளவு பூரணமாகப் புரிஞ்சுக்க முடிஞ்சது. வெளியே வராமல் உள்ளேயிருந்தே மனங்களை தரிசிக்க முடிந்தது. பக்குவம் கூடிவந்ததுன்னு சொல்வேன்.”

`` ‘ஃபேமிலி மேன் 2’ சீரிஸ் பார்த்திட்டு கொதிச்சு எழுந்துட்டீங்களே?’’

“அது என் தார்மிகப் பொறுப்பு. தமிழ் நிலத்தில தமிழ்ப் பால் குடிச்சு வளர்ந்த தமிழன். என் வீட்டின் மீது கல்லெறிகிற, தீ வைக்கிறவனைத் தட்டிக் கேட்காம இருக்க முடியாது. மான, இன உணர்வு உள்ள எவரும் இந்த சீரிஸுக்குத் தடை விதிக்கக் குரல் கொடுக்கணும். எதிர்ப்பது என் சுதந்திரம்.”

``புது அரசு வந்திருக்கு...’’

“முதல்வர் ஸ்டாலின் எந்த அத்துமீறலும் இல்லாமல் படிப்படியாக வந்திருக்கிறார். ஜெயலலிதா இறந்த பிறகு அந்த ஆட்சியைக் கவிழ்க்காமல் முறையாக, நாகரிகமாக சரியாக வந்து சேர்ந்தது எனக்குப் பிடித்திருக்கிறது. கொரோனா சமயத்தில் அவரது திட்டமிடலும் அணுகுமுறையும் சுறுசுறுப்பும் மிக அருமையானது. முன்பெல்லாம் ஜெகன்மோகன் ரெட்டி, பினராயி விஜயன் போன்ற முதல்வர்களைப் பாராட்டுவோம். இனிமேல் ஸ்டாலினையும் சேர்த்துக்கலாம். நல்ல மாற்றம். தொடரவேண்டும்.”

“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது!”

``முன்னாடி எந்தப் பிரச்னைக்கும் முந்திக்கிட்டுக் கருத்து சொல்வீங்க. இப்ப அமைதியாகிட்டீங்க...’’

“கருத்து சொல்லி ஒரு மாற்றமும் நிகழப் போறதில்லை. சினிமா மூலம்தான் எனக்கு எல்லாம் கிடைச்சது. அதற்கு உண்மையாக இருந்தால் போதும். வெற்றி வந்தால் மேடையில் இருக்கிற நாற்காலிகள் நம்மை உட்கார வைக்கப் போட்டி போடும். ஒரு தோல்வி வந்தால் அந்த ஹாலில் இருக்கிற கடைசி நாற்காலிகூட நம்மைப் பார்த்து முகம் திருப்பிக்கொள்ளும். ஆக இப்ப சந்தோஷங்களும் இல்லை, வருத்தமும் இல்லை. காத்துல அடிச்சு வந்த தூசி மாதிரி எங்கேயோ எட்டி விழுந்து எங்கேயோ சேர்ந்து எங்கேயோ பறந்துக்கிட்டு இருக்கோம். இதில் பெரிய ஆள், சின்ன ஆளுன்னு யாரும் கிடையாது.”