
நானும் முத்துவேலும் எழுத்தாளர் ஜேபி.சாணக்யாவும் இதில் மூன்று வருடங்களுக்கு மேலாகத் திரைக்கதையில் உழைத்திருக்கிறோம்.
தமிழ் சினிமா இப்போது அசல் பிரச்னைகளைப் பேசுகிறது. மலக்குழியில் இறங்கி மனிதர்கள் மரணிக்கும் ‘விட்னஸ்’ திரைப்படம் அந்தவகையில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
‘`மலக்குழியில் இறக்கும் மனிதர்களின் மரணம் எவரையும் எதையும் தொந்தரவு செய்யவே இல்லையா என்ற நினைப்பே அவர்களின் மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவதாக இருக்கிறது. வாழ்வதற்கு வேறு தொழில் கிடைக்காமலேயே இந்த முடிவை நோக்கி அவர்கள் சென்றுவிடுகிறார்கள். ‘விட்னஸ்’ மூலம் பேச வேண்டிய அரசியலைப் பேசியிருக்கிறோம். அச்சமின்றி அதிகாரத்தைக் கேள்வி கேட்டிருக்கிறோம். பிரச்னையின் ஆழம் வரை இந்தப் படம் செல்கிறது. மரணத்தின் கதவுகள் திறந்து வாழ்க்கையே தண்டனை ஆகிவிடுகிற அவர்கள் நிலைமையை நாம் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்’’ - அழுத்தமாகப் பேசுகிறார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தீபக்.


``முதல் படமாக எப்படி இப்படியான தீவிரத்தளத்தில் இறங்கினீர்கள்?’’
``பாதிக்காத எதையும் என்னால் தொட முடியாது. கலை வேடிக்கை காட்டுவதல்ல. எந்தப் படைப்பை முதலாவதாக எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தபோது மனதிற்குள் வந்தது இந்த மனிதர்கள்தான். நாம் நாகரிகத்தின் மேலான பூச்சில் வாழ்கிறோம் என்பதை இவர்களின் வாழ்க்கையை அறிய வரும்போது உணர்ந்தேன்.
கொஞ்ச காலத்திற்கு முன்பு கோவை டவுன்ஹாலிலிருந்து 20 கிலோமீட்டர் தாண்டி வெள்ளலூர் என்ற இடத்திற்கு துப்புரவுப் பணியாளர்களை இடம் மாற்றிவிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்கு மேலே இருந்த அவர்களின் வாழ்விடம் அநியாயமாக என் கண்முன்னால் பறிக்கப்பட்டது. நான் அதை ஒளிப்பதிவாளனாகப் பதிவு செய்தேன். அது ரத்தமும் சதையுமாக என்னுள் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அவர்களின் அவலமும் சிரமமும் பிரச்னைகளும் நான் சொல்லித் தீர்க்கவும் முடியாது. நீங்கள் எழுதித் தீர்க்கவும் முடியாது. இந்த சினிமாவிற்கு இந்த அரசியல் வேண்டியதாக இருந்தது. அதனால் பேச வேண்டியதைத் தெளிவாகப் பேசியிருக்கோம். எளிய மக்களை அதிகாரம் என்ன செய்யும் என்பதையும் இதில் பேசியிருக்கேன். மகனின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடும் அம்மாவுக்கு நீதி கிடைத்ததா, நீதியைத் தடுக்கவும், நிறுத்தி வைக்கவும் என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதையும் பேசியிருக்கிறோம். இது ஒரு முக்கியமான அரசியல். இதில் தன் பையனுக்காகப் பேச ஆரம்பிக்கிற அம்மா ரோகிணி கடைசியில் சமுதாயத்திற்காகப் பேச ஆரம்பிக்கிறார்.''



``இதற்கான தரவுகளை எப்படிச் சேகரித்தீர்கள்?’’
``இங்கே கடைசி ஐந்து வருடத்தில் 144 மலக்குழி மரணங்கள் நடந்திருக்கின்றன. இது அரசு தரும் புள்ளிவிவரம். உண்மையான அளவு இதைவிடக் கூடுதலாகவே இருக்கும். மலக்குழி மரணங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. ‘டெக்னாலஜி, தொழில் வளர்ச்சி, நகர மேம்பாடு என வளர்ந்துவிட்டோம், வட இந்திய மாநிலங்கள் போல நாம் இல்லை’ என்று சொல்லிக்கொண்டாலும் இதுதான் உண்மை. இதில்தான் எல்லாக் கட்சிகளும் ஒன்றுசேர்வதே இல்லை. குறிப்பிட்ட அதிகாரம் படைத்தவர்கள் இதில் கவனமாக இருக்கிறார்கள். ஆழ்வார்பேட்டையில், அடையாறில் ஒரு தெரு வீடுகளை இடித்துத் தள்ளிவிட முடியாது. ஆனால் இந்த எளிய துப்புரவுத் தொழிலாளர்களை கருணையில்லாமல் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். கொரானா காலத்திலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கடைசி வரை அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்படவில்லை. நன்றாக கவனித்தால் நகரத்தின் வெளித்தோற்றம்தான் மாறிக்கொண்டிருக்கிறது. உள்கட்டமைப்பு அப்படியே மாறாமல் இருக்கிறது.’’
``இதையெல்லாம் ஒரு சினிமாவில் கொண்டு வந்து சேர்த்தது எப்படி?’’
``நானும் முத்துவேலும் எழுத்தாளர் ஜேபி.சாணக்யாவும் இதில் மூன்று வருடங்களுக்கு மேலாகத் திரைக்கதையில் உழைத்திருக்கிறோம். உணர்ச்சிப்பெருக்கும் கதையில் ஏராளமான மடிப்புகளும் இருக்கின்றன. டிஜிட்டல் யுகமும் ரோபாட்டிக் வகை இயந்திரங்களும் வந்தாலும் இதில் பெரிதாக மாற்றங்களுக்கு வழி இல்லை என்பதை உணர்த்தியிருக்கோம். இதில் குறிப்பிட்ட சாதியினர் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறார்கள். நிலாவுக்குப் போகிற மாதிரி உடைகள் அணிந்துகொண்டு போனாலும் அதனால் ஒரு பாதுகாப்பும் உயிருக்கான உறுதியும் அவர்களுக்கு இல்லாததை இதில் உணர்த்தியிருப்போம். சில மனிதர்களின் கோரமுகமும் காட்டப்படுகிறது. அரசு நினைத்தால் மட்டுமே சில நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும். எங்களுக்கு பாஷாசிங் எழுதிய Unseen: The Truth about India’s Manual Scavengers என்ற புத்தகம் உதவியாக இருந்தது. இதுவே தமிழில் `தவிர்க்கப்பட்டவர்கள்' என வந்தது. இதனால் எங்களுக்குத் தெளிவான பார்வை கிடைத்தது. செம்மஞ்சேரிதான் கதைக்களம்.''



``ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி பாத்திரங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...’’
``ஸ்ரத்தாவின் கண்ணோட்டமும் சமூக உணர்வும் விசேஷமானது. அவர் மிகவும் அக்கறையோடு பணியாற்றியதை படத்தைப் பார்க்கும்போது உங்களால் உணர முடியும். ரோகிணி எப்போதுமே சமூக உணர்வு உள்ளவர்தான். அவரால் கதை நிகழும் எந்த இடத்தையும் துல்லியமாக உணர்ந்து அதற்கேற்றது போல நடிப்பிலும் கடத்த முடியும். சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் நிறைய கூட்டங்களுக்குப் போனது மிகவும் உதவியாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வாவும் நடித்திருக்கிறார். அவருடைய இயல்பும் பேச்சும் படத்திற்குப் பெரும் பலம். இதுமாதிரி நல்ல சினிமாக்களை எடுத்து வைக்கும் போது அதை ரசிகர்கள் வரவேற்கும்போது நிச்சயம் சினிமா மாற்றுப் பாதையை எடுக்கும். இதில் நான் போதனையையோ, மெலோ டிராமாவையோ, கண்ணீரைக் கொண்டு குளிப்பாட்டுவதையோ செய்யவில்லை. உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறேன். அதனாலேயே இதயம் தொட வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க குறுக்கிடாத மனமும், தயாரிப்பாளரும் வேண்டும். அதற்கு ஹைதராபாத்தில் டி.ஜி. விஷ்வா பிரசாந்தும், விவேக் குட்சிகோட்லாவும் உதவியாக இருந்தார்கள். அதிகாரத்தின் மாறாத முகங்களைக் காட்டியும், உண்மைகளை நெருக்கிக்கொடுத்தும் `விட்னஸ்' படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் சொல்லிய எல்லாவற்றையும்விட மக்கள் தீர்ப்பே இறுதியானது.''