சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“சாதி ஒழியணும்னா அடித்தளம் மாறணும்!”

தமிழ்க் குடிமகன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்க் குடிமகன்

மலையாள நடிகர்னு பேரு. ஆனால் தமிழின் அத்தனை கலாசாரத்தையும், அமைப்பையும் தெரிஞ்சு வச்சிருக்கார். தமிழையே நல்லா புரிஞ்சுக்கிட்டு அருமையாகப் பேசுவார்.

``இளைஞர்கள்கிட்டே பெரும் மாற்றத்தை ‘தமிழ்க் குடிமகன்' உருவாக்கும். இங்க நடந்துக்கிட்டு இருக்கிற எல்லா விஷயங்களையும் விவாதிக்கும். நடந்து வந்த பாதையை, கடந்துபோனதை, பார்த்தும் பார்க்காமல் போனதை, பார்க்க மறந்து போனதை எல்லாம் சேர்த்தே பேசியிருக்கோம். திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் நடக்கிற கதை. சாதியின் அம்சங்கள் குறித்தும் சார்ந்தும் இருக்கிற கதைக்கரு. அதிலிருந்து மனித உணர்வுகள், மதிப்பீடுகள் என்று வெளியே கொண்டு வந்திருக்கேன். மனுஷங்களைப் பிரிச்சு வைக்கற சாதிக்கு ஒரு முடிவு கட்டணும்னு உள்ளே நெருப்பு எரிஞ்சுகிட்டு இருக்கிறவங்க அத்தனை பேருமே ‘அட, இது என் கதை'ன்னு இனம் காண முடியும்'' - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

“சாதி ஒழியணும்னா அடித்தளம் மாறணும்!”

``சாதி வேரூன்றி நிற்பதைப் படம் பேசுகிறதா..?’’

‘‘சில குறிப்பிட்ட சமூகத்தைப் பத்திச் சொல்லும்போது ‘குடிமகன்’னு சொல்வாங்க. அவங்களுக்கு மேல் சாதிக்கு உதவுற வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கு. இதில் முடி திருத்துபவர்கள், துணி துவைத்துக் கொடுப்பவர்கள்னு இன்னும் சிலர் அடக்கம். சாதிக் கொடுமைகளைப் பத்தியே சொல்லிக்கிட்டு இருக்காமல் தீர்வையும் முன்வச்சிருக்கோம். படத்தோட அடிப்படையே அதுதான்.

‘சாதியெல்லாம் எங்கே பார்க்கிறார்கள்’ என்று ரொம்ப நெருங்கிக் கேட்டால் சொல்வாங்க. கல்யாணம், கொடுக்கல் வாங்கல், சேர்ந்து வாழறது, காதலிப்பதுன்னு எல்லாத்திலும் சாதிதான் வந்து குறுக்கே நிக்குது. சர்ட்டிபிகேட்டில் சாதி இன்னும் நிலையாக இருக்கு. ஊருக்குள்ளே இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் சாதி அடையாளம் இருக்கு. நகரத்திற்கு உள்ளே மட்டும் தெரியலைன்னாலும் குழந்தைக்குப் பள்ளிக்கூடம் சேர்க்கிற போது தெரிஞ்சிடும். சாதி ஏற்றத்தாழ்வுகள் தான் இங்கே பகையின் பின்னணி. அதையும் பதிவு செய்திருக்கேன் வெட்டுக்குத்து, கௌரவக் குறைச்சல் எல்லாம் தாழ்த்தப்பட்ட இடத்தில் கல்யாணம் செய்தால்தான் நடக்குது. இதை ஒழிக்கணுமா இல்லையா! இதுகுறித்துப் பேசணுமா இல்லையா! அப்படிப் பேசும் ‘தமிழ்க் குடிமகன்.' அடித்தளத்திலிருந்தே இது மாறணும். அதற்கான கதைக்களத்தில் இதைப் பேசியிருக்கேன்.''

“சாதி ஒழியணும்னா அடித்தளம் மாறணும்!”

``சேரன் இதில் எப்படி வந்தார்?’’

‘‘மொதல்ல சமுத்திரக்கனியை நினைச்சேன். அவரும் என் ஸ்கிரிப்ட்டை வாங்கிப் படிச்சார். ரொம்பப் பிடிச்சுப் போய், ‘நான் பண்றேன். தெலுங்கில் அஞ்சு மாதம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வந்திடவா'ன்னு கேட்டார். கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில், இந்தச் சாதிக்குள்ளே கிடந்து அல்லாடுறதில் சேரன்தான் பொருந்துவார்னு பட்டது. அவரைப் போய்ப் பார்த்தேன். சில திருத்தங்களோடு ஸ்கிரிப்டை ஏத்துக்கிட்டார். சொல்லப்போனால் பாரதிராஜா, மகேந்திரன்னு அடுத்தடுத்து படியிறங்கி வந்தால் சேரன் சார்தான் நிற்கிறார். இப்பவும் இந்தக் கதைக்குள் இறங்கி வேலை செய்ததைப் பார்த்தால் வியப்பாக இருக்கு. ஒரு உணர்வுபூர்வமான சினிமாவுக்குள் இறங்கி நிற்கிற எல்லாத் தகுதியையும் வெச்சிருக்கார். நடுவில் அவரை மறந்துவிட்டு நாமெல்லாம் திரிஞ்சிருக்கோம். பிரமாதமாக நடிச்சிருக்கார். ஒவ்வொரு படம் இயக்கும்போதும் நடிக்கும்போதும் அது மக்களுக்கான விஷயமாக இருக்கணும்னு நினைக்கிறார். அவர் பட வரிசையில் நாம் ஒன்றிப்போய் இருந்த காலங்கள் எவ்வளவு நல்லாருந்தது. அவரை நான் பல்கலைக்கழகம்னு சொல்வேன்.''

``லால் வேற இருக்கார்?’’

‘‘மலையாள நடிகர்னு பேரு. ஆனால் தமிழின் அத்தனை கலாசாரத்தையும், அமைப்பையும் தெரிஞ்சு வச்சிருக்கார். தமிழையே நல்லா புரிஞ்சுக்கிட்டு அருமையாகப் பேசுவார். ஆனால் இதில் இருக்கிற தீவிரத்தை உணர்ந்து அப்படியே மலையாளத்தில் எழுதி வச்சிட்டு, பிரமாதமாகப் பேசினார். அவரே சிறந்த நடிகர், தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர். ஆனால் இங்கே இருக்கிற ஏற்றத்தாழ்வை நல்லா புரிஞ்சுக்கிட்டார். அவரோட இடம் இதில் அருமையாக வந்திருக்குன்னு சொல்லணும். ‘மிக மிக அவசரம்' படத்தில் நடித்த பிரியங்கா இதில் சேரனின் இணையாக வர்றாங்க. ‘மைக்கேல்' படத்தில் ஹீரோயினாக வருகிற திவ்யான்ஷாவும் அருமையாக நடிச்சிருக்காங்க. நிச்சயமா அவங்களுக்கு இந்தப் படத்தில் நல்ல பெயர் இருக்கு.

டைரக்டர் எஸ்.ஏ.சி இதில் செய்திருக்கிற ரோல் ரொம்ப முக்கியமானது. சாதியத்தை அசைச்சுப் பார்க்கிற வேடம். ‘துணிச்சலாக எழுதிக் கொடுத்திட்டே. பேசிட்டு பிரச்னையில்லாமல் இருக்கணுமே'ன்னு சொல்லிட்டே இருப்பார். ஆனால் உணர்ந்து நடிச்சார். இவ்வளவு தீவிரமான களமாகவே சாதிப் பிரச்னையை எடுத்திருக்கீங்களே என்று பலர் சொன்னாங்க. போற வழியெல்லாம் குப்பை சேர்ந்தால் சுத்தப்படுத்திட்டுதான் என்னால் அடுத்த இடத்திற்குப் போக முடியுது. யாராவது ஒருத்தர் தீவிரமாக முன்னெடுத்துச் செய்யணுமே, அதைத்தான் செய்கிறேன்.''

``தெலுங்கு, இந்தின்னு பிஸியாகிட்ட சாம் சி.எஸ் இருக்காரே?’’

‘‘டெக்னீஷியன்கள் விஷயத்தில் எந்த சமாதானமும் செய்துக்கவேயில்லை. ஆறு பாடல்கள். நடுவில் தமிழ் சினிமா பாட்டைக் குறைச்சுட்டு இருந்தது. இப்ப இதில் அவசியமாக இருந்து பாடல்கள் வெச்சிருக்கோம். ஏன் இப்ப இந்தி வரைக்கும் சாமைத் தேடுறாங்கன்னு இதில் புரியுது. எனக்கும் அவருக்கும் மக்களுக்கும் பிடிக்கிற மாதிரி வந்தால்தான் ஒரு டியூனைக் கையிலெடுக்கிறார்.

“சாதி ஒழியணும்னா அடித்தளம் மாறணும்!”

விவேகாவும், ஏக்நாத்தும் இந்தப் பாட்டு இந்தக் கதையோட எந்த இடத்தில் வருது, முன்னே பின்னே எந்த இடம்னு தெரிஞ்சுக்கிட்டு முப்பரிமாணமும் தெரிய எழுதினாங்க. அதனால் பாடல் வரிகள் படு ஆத்மார்த்தமாக வந்திருக்கு. ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், சேரனோடு முன்னாடியே மூன்று படம் செய்திருக்கிறார். அப்படியே என் கனவுகளைத் திரையில் கொண்டு வந்தார். இப்போ தமிழ் சினிமா நல்ல ஒரு இடத்தில் மாறி வந்து நிக்குது. சரியாகச் சொன்னால் காரண காரியத்தோடு சொன்னால் அதை மக்கள் ஏத்துகிறாங்க. அந்த நம்பிக்கையில் வருவதுதான் ‘தமிழ்க்குடிமகன்.' ஒரு நல்ல சினிமாவுக்கு திரைக்கதை தான் அச்சாணின்னு புரிஞ்சிக்கிட்டு எடுத்த படம் என்பதால் வெற்றிக்கான இடம் கூடுதலாக இருக்குன்னு நம்புறேன்.''