
“ ‘களவாணி’ படம்தான் அதுக்குக் காரணம்.
“எனக்கான ரசிகர்கள் யாருன்னு எனக்குத் தெளிவா தெரியும். அவங்க என்ன எதிர்பார்க்கிறாங்களோ அதை நான் கொடுக்கிறேன். அவங்களோட நான் நேரடித் தொடர்புல இருக்கணும்னு நினைக்கிறேன். இதுக்காகவே நான் இன்னைக்கும் பஸ், ஷேர் ஆட்டோவுல போய்க்கிட்டிருக்கேன். மீன் மார்க்கெட்ல சண்டை போட்டு மீன் வாங்கிக்கிட்டிருக்கேன்” என்கிறார், இயக்குநர் எழில். மினிமம் கியாரண்டி ரூட்டில் தனக்கே உரிய ஸ்டைலில் பயணித்துவருபவர். இந்த ஆண்டில் அவருடைய ‘ஜெகஜால கில்லாடி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ இரு படங்கள் ரிலீஸாகவிருக்கும் நிலையில், இயக்குநராகி 20 ஆண்டுகள் ஆனதையும் கொண்டாடிவருகிறார் எழில்.
“உதவி இயக்குநராக யார் யாரிடம் வேலை பார்த்தீங்க?”
“80-களின் இறுதியில இயக்குநர்கள் ராபர்ட் – ராஜசேகரோட ‘புதிய சரித்திரம்’ படம் மூலமா உதவி இயக்குநரானேன். அந்தப் படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட ரெண்டு வருடம் நடந்தது. அதனால, மற்ற உதவியாளர்களெல்லாம் பாதியிலேயே போயிட்டாங்க. நான் மட்டும்தான் கடைசிவரை இருந்தேன். கடைசி உதவி இயக்குநரா சேர்ந்த நான் எல்லா வேலைகளையும் பார்க்க ஆரம்பிச்சு, துணை இயக்குநராகிட்டேன். தொடர்ந்து ‘சக்கரைத்தேவன்’ உட்பட பல படங்கள்ல வேலை பார்த்துட்டு ‘சரி கம பத நி’ படத்துல பார்த்திபன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அந்த அனுபவங்களெல்லாம்தான் ஒரு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இப்போ எனக்குக் கைகொடுக்குது.”
“உங்கள் முதல் படமான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதுபற்றி?”
“பார்த்திபன் சார் ‘புள்ளகுட்டிக்காரன்’ படத்தை ஆரம்பிச்சப்போ, நான் தனியா படம் பண்ணணும்னு முடிவு பண்ணி, வடிவேலுவுக்காக ஒரு கதை பண்ணினேன். சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ பாதிப்புல உருவான அந்தக் கதைக்கு ‘ருக்குமணிக்காக’ என டைட்டில் வெச்சிருந்தேன். அந்தக் கதையை வடிவேலுகிட்ட சொன்னப்போ, ‘இந்தக் கதை எனக்கா’ன்னு ஆச்சரியப்பட்டார்.

அவரே நிறைய தயாரிப்பாளர்கிட்ட என்னை அனுப்பிவெச்சார். ஆனா, யாரும் அதைத் தயாரிக்க முன்வரல. என் நண்பர்களான பாலாஜி சக்திவேல், பாண்டியன் இவங்கெல்லாம் ‘இது அருமையான கதை. இதைக் கொஞ்சம் மாத்துனா, பெரிய ஹீரோவை வெச்சே பண்ணலாம்’னு ஐடியா கொடுத்தாங்க. அதுக்கப்புறம் கதையை மாத்த ஆரம்பிச்சேன். வடிவேலுவுக்காகப் பண்ணுன கதையில ஹீரோ ஒரு பெயின்டர். ஹீரோ மாறியபோது பெயின்டரைப் பாடகர் ஆக்கினேன். அந்தக் கதைதான், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம்.”
“விஜய்க்குப் பிறகு அஜித்துடன் இணைந்தது பற்றி?”
“ ‘துள்ளாத மனமும் துள்ளும்’ பண்ணும்போது சிம்ரனோட கால்ஷீட்ல பிரச்னை. அப்போ அவங்க ‘வாலி’ ஷூட்டிங்ல இருந்தாங்க. அங்கே அவங்களைப் பார்க்கப்போனப்போதான் அஜித் சாரை முதன்முதலா பார்த்தேன். பார்த்ததுமே தோள்ல கை போட்டு நல்லா பேசினார். என் முதல் படம் ரிலீஸாகுறதுக்குள்ளேயே ‘உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டேன். நாம கண்டிப்பா சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு நம்பிக்கை கொடுத்தார். ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ பட சமயத்தில் சம்பளப் பிரச்னையால அஜித் சார் அதுல நடிக்க முடியாமப்போச்சு. அதுக்கப்புறம்தான் ‘பூவெல்லாம் உன் வாசம்’ல சேர்ந்தோம்.”
“ ‘ராஜா’ படத்துல அஜித் - வடிவேலுவுக்கு உரசல் ஏற்பட்டதாகவும், அந்தப் படத்துக்குப் பிறகுதான் ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கிறதைத் தவிர்த்து வருவதாகவும் பேசப்படுதே?!”
“அந்தச் சமயத்துல அவங்களுக்குள்ளே என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியல. அவங்களுக்குள்ளே சின்ன கருத்து வேறுபாடு இருந்திருக்குன்னு மத்தவங்க ஒவ்வொண்ணா சொல்றப்போதான், எனக்குத் தெரியும். அதுக்குப் பிறகு ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்காதது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.”
“ஃபேமிலி டிராமா படங்கள் பண்ணிக்கிட்டிருந்த நீங்க, காமெடி ஜானருக்கு மாறியது ஏன்?”
“ ‘களவாணி’ படம்தான் அதுக்குக் காரணம். அந்தப் படம் எனக்குள்ளே மிகப்பெரிய மாற்றத்தைத் தந்தது. அப்போ நான் சிகரெட் பிடிப்பேன். படம் முடிஞ்சு வெளியே வந்து கிட்டத்தட்ட மூணு மணி நேரம் தியேட்டர் வாசல்ல உட்கார்ந்து சிகரெட் பிடிச்சுக்கிட்டே யோசிக்க ஆரம்பிச்சேன். கிளம்புறப்போ முடிவு பண்ணிட்டேன். இனிமே, நம்ம ஜானர் காமெடிதான்னு!”
“உங்க முதல் பட ஹீரோவான விஜய்யுடன் இன்னும் தொடர்பில் இருக்கீங்களா?”
“விஜய் சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்குப் பிறகு என்னோட ரெண்டாவது படமான ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துல அவர்தான் நடிக்கிறதா இருந்தது. பிறகு, ‘ப்ரியமானவளே’ படத்தை என்னை இயக்கச் சொல்லிக் கேட்டார். கரியர் ஆரம்பத்திலேயே ரீமேக் படத்தை இயக்க வேண்டாம்னு நான்தான் மறுத்துட்டேன். ‘யூத்’, ‘வசீகரா’ படங்களையும் நான்தான் இயக்குறதா இருந்தது. வேறு சில காரணங்களால பண்ணல. ‘தீபாவளி’யில விஜய் சாரை நடிக்க வைக்கலாம்னு முயற்சி பண்ணினேன்.
* `இது அருமையான கதை. இதைக் கொஞ்சம் மாத்துனா, பெரிய ஹீரோவை வெச்சே பண்ணலாம்’னு ஐடியா கொடுத்தாங்க. * வடிவேலுவுக்காக ஒரு கதை பண்ணினேன். * சிம்ரனோட கால்ஷீட்ல பிரச்னை. * ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ சம்பளப் பிரச்னையால அஜித் சார் அதுல நடிக்க முடியாமப் போச்சு. * ``அதுக்குப் பிறகு ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்காதது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.”
ஆனா, அப்போ அவர் ‘கில்லி’, ‘போக்கிரி’ன்னு வேற ரேஞ்சுல இருந்ததால, அந்தக் கதை அவரை இம்ப்ரஸ் பண்ணல. ஆனா, எனக்கு மறுபடியும் விஜய் சாரை வெச்சுப் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. சமீபத்துல எஸ்.ஏ.சி சாரை மீட் பண்ணிப் பேசினேன். ‘தம்பிக்கேத்த கதை பண்ணிட்டு வா; கண்டிப்பா பண்ணலாம்’னு சொல்லியிருக்கிறார்.”
“ ‘ஜெகஜால கில்லாடி’ ரிலீஸ் ஏன் தாமதமாகுது?”
“முதல் காரணம், சினிமா ஸ்டிரைக். 35 நாள்ல மொத்த ஷூட்டிங்கையும் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம். கடைசி மூணு நாள் ஷூட்டிங் பாக்கி இருந்தப்போதான் ஸ்டிரைக் வந்தது. அந்த மூணு நாள் ஷூட்டிங்கிற்காக மூணு மாசம் காத்திருக்க வேண்டிய கட்டாயம். பிறகு, ஸ்டிரைக் முடிஞ்சு விஷ்ணுகிட்ட கால்ஷீட் வாங்கிப் படத்தை முடிக்கிறதுக்குள்ள தயாரிப்பாளர் தரப்புல கொஞ்சம் தாமதம் ஆச்சு. இப்போ எல்லாப் பிரச்னைகளும் முடிஞ்சு, ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. காமெடி கலந்த த்ரில்லர் படமா வந்திருக்கு. சீக்கிரமே ரிலீஸாகும்.”
“ ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்துல என்ன ஸ்பெஷல்?”
“முருகன் என்பவரோட கதையை வாங்கிப் படமா பண்ணியிருக்கேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கதை இது. சமீபத்துல நான் பண்ணுன படங்களோட வரிசையில, இந்தப் படம் கண்டிப்பா சேராது.

ஒரு முழுநீள ஹாரர் காமெடி ஜானர்ல இந்தப் படம் உருவாகிட்டிருக்கு. உச்சக்கட்ட பயமும் இருக்கும், விழுந்து புரண்டு சிரிக்க காமெடியும் இருக்கும். ரஜினி சார் நடிச்ச ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த டைட்டில், இந்தப் படத்துக்குக் கிடைச்சது ரொம்ப சந்தோஷம். முதன்முறையா இந்தப் படம் மூலமா ஜி.வி.பிரகாஷ்கூட இணைகிறேன்.”
“ஓர் இயக்குநராக 20 ஆண்டுக்கால சினிமா அனுபவத்தில் உணர்ந்தவை என்னென்ன?”
“ ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ரிலீஸாகி அந்த வெற்றியை நான் ஒரு வாரம்தான் அனுபவிச்சேன். மறுவாரமே அடுத்து நாம என்ன பண்ணப்போறோம்ங்கிற கேள்வியும் பயமும் வந்திடுச்சு. அதன்விளைவு, தொடர்ந்து மூணு ஹிட் படம் கொடுத்தேன். அதேசமயம் மிகப்பெரிய தோல்விகளையும் பார்த்தேன். சினிமாவுல வெற்றி தோல்வி ஒரு விஷயமே கிடையாது.”
“அடுத்து?”
“என் குருநாதர் பார்த்திபனை முதன்முறையா இயக்கப்போறேன். அவர்கூட இன்னொரு ஹீரோவையும் நடிக்க வைக்கப் பேசிக்கிட்டிருக்கோம். படம் பண்ண நினைக்கிற ஒரு இளைஞர் குழு, ரவுடி கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்கங்கிறதுதான் அந்தப் படத்தோட கதை. ரெளடியா பார்த்திபன் சார் நடிக்கிறார்.”