
மகாபாரதம், ராமாயணம் மீது அளவு கடந்த காதல் இயல்பாகவே வந்திடுச்சு. வியாச மகரிஷி எழுதின ‘மகாபாரதம்’ கதையில ஆதி பருவம்ல சகுந்தலை-துஷ்யந்தன் கதை வரும்.
``இந்தப் படத்துக்குப் பிறகு `சகுந்தலா’ன்னு சொன்னாலே, சமந்தாதான் மனசில வருவாங்க. அந்த அளவுக்கு அவங்களோட ஈடுபாடு இருக்கு. இந்தப் பட விழாவுல அவங்க அவ்ளோ எமோஷனலானதுக்கு இதுதான் காரணம். ‘சாகுந்தலம்' கதைக்கு சமந்தா பொருத்தமா இருப்பாங்கன்னு தோணினதும், அவங்ககிட்ட என் மகள் நீலிமா குணா பேசினாங்க. அது, சமந்தாவோட கல்யாண வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருந்த காலகட்டம். திருமணத்துக்குப் பிறகு இனி படங்கள்ல நடிக்க வேண்டாம்னு தீர்மானத்துல இருந்தவங்க, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்த நேரம்.
இது ஒரு காப்பிய காலக் கதை. துஷ்யந்தன், சகுந்தலாவின் காதல் கதை இதுன்னு சொன்ன பிறகே சமந்தா கதையைக் கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு ‘சிண்ட்ரெல்லா' மாதிரி டிஸ்னி தயாரிப்பு படங்கள்னாலே ரொம்பவே பிடிக்கும் என்பதால ‘சாகுந்தலம்' கதையில் ஈடுபாடு ஆகி, சகுந்தலாவாகவே மாறி உள்வாங்கிக் கேட்டாங்க. சகுந்தலா எப்பவும் மயில், மான்கள்னு செல்லப்பிராணிகளோடு சூழ இருக்கறதும் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. துஷ்யந்தனைப் பிரிந்ததும் சகுந்தலாவுக்கு ஏற்படுற வலி, பட்டத்து இளவரசி ஆகுறதுன்னு இந்தக் கதை மேல அவங்களுக்குப் பிடிப்பு ஏற்பட நிறைய விஷயங்கள் இருந்ததாலேயே மீண்டும் நடிக்கச் சம்மதிச்சாங்க’’ - இன்னமும் ஆச்சரியம் விலகாமல் பேசுகிறார் இயக்குநர் குணசேகர். மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கின ‘ஒக்கடு', தமிழில் விஜய்யின் ‘கில்லி'யாக இன்றும் பேசப்படுகிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரை அறிமுகப்படுத்தியவர். அனுஷ்காவை ‘ருத்ரமாதேவி' ஆக்கியவர் என குணசேகரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘‘ ‘ருத்ரமாதேவி'க்குப் பிறகு ஏன் இவ்வளவு கால இடைவெளி?’’
‘‘ ‘ருத்ரமாதேவி’க்கு அடுத்து மறுபடியும் மித்தாலஜி கதைகள் பக்கம் கவனம் செலுத்தினேன். ‘ஹிரண்ய காஷ்யபா’ என்ற ஒரு படத்தை ஆரம்பிக்க எண்ணினேன். அதை பெரிய பட்ஜெட்ல பிரமாண்டமா பண்ணலாம்னு நினைச்சேன். அதோட ப்ரீ புரொடக்ஷன் வேலைகளே நாலு வருஷம் போச்சு. முழுக்கதையும் ரெடியாகி நடிகர்கள் தேர்வு வரை வந்துட்டோம். அந்தச் சமயம்தான் கொரோனா வந்துச்சு. மொத்த வேலைகளையும் தள்ளிப்போட வேண்டியதாகிடுச்சு.
அந்தச் சமயத்தில்தான் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த என் மகள் நீலிமா குணா வீட்டுக்குத் திரும்பி வந்தாங்க. என்னை மாதிரியே அவங்களுக்கும் புராண, வரலாற்றுக் கதைகள்ல ஆர்வம் அதிகம். என் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க விரும்பினாங்க. ‘ஹிரண்ய காஷ்யபா' பெரிய பட்ஜெட் என்பதால, சின்னத் தயாரிப்பில் ஒரு படம் பண்ணலாம்னு ‘சாகுந்தலம்’ கதையை அவங்ககிட்ட சொன்னேன். ‘காதலர்கள்னாலே ரோமியோ – ஜூலியட்டைத்தான் பலருக்கும் தெரியும். இந்த 2கே தலைமுறையினருக்கு ‘சாகுந்தலம்’ கதையைச் சொன்னால் ரொம்பவே ரசிப்பாங்க’ன்னு நீலிமா ஆச்சரியமாகி சொன்னதோடு படத்தை உடனடியாக தயாரிக்கவும் முடிவு பண்ணினாங்க. இந்த புராஜெக்ட்க்குள்ள ‘வாரிசு’ படத் தயாரிப்பாளரும் என் நண்பருமான தில்ராஜூ சார் இணைந்ததில், இதுவும் பெரிய பட்ஜெட் படமாகிடுச்சு. என் ‘ஒக்கடு' படத்தை அவர்தான் தயாரித்திருந்தார். இப்ப எல்லாருமே பேன் இண்டியா படங்கள் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, ‘சாகுந்தலம்' பேன் வேர்ல்டுனு சொல்லலாம். அப்படி உலகம் முழுவதும் தெரிந்த கதை இது.’’
‘‘படத்துல என்ன ஸ்பெஷல்?’’
‘‘படத்துல நட்சத்திரங்கள் நிறைய இருக்காங்க. சகுந்தலாவாக சமந்தா, துஷ்யந்தனாக தேவ் மோகன், துர்வாச மகரிஷியாக மோகன் பாபு, அனுசுயாவாக அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கவுதமி, மதுபாலான்னு தெரிஞ்ச முகங்கள் நிறைய பேர் இருக்காங்க. விஷுவல்ல ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கோம். இமயமலை அடிவாரத்துல தான் கதை ஆரம்பிக்குது. காஷ்யப அரசர் இருந்த இடம்தான் இப்ப காஷ்மீர் ஆகிடுச்சு. அப்ப உள்ள இடத்தை விஷுவலா கொண்டு வர்றதுல நிறைய சவால் இருந்துச்சு. இதுவரை துஷ்யந்தனோட அரண்மனையை யாரும் காட்டினதில்ல. அதையும் பிரமாண்டமா கொண்டு வந்திருக்கோம்.
சமந்தா அணிந்திருக்கும் வைர நகைகள் அத்தனையும் ஒரிஜினல் நகைகள். ‘ருத்ரமாதேவி’யில் அனுஷ்கா அணிந்திருந்த தங்க நகைகள் எல்லாம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிஜத் தங்க நகைகளைச் சென்னை என்.ஏ.சி. நிறுவனத்தினர்தான் ஸ்பான்சர் செய்திருந்தனர். சகுந்தலா அரசியான பிறகு ஒரு போர்ஷன் இருக்கு. அதுல அவங்க அணிந்திருக்கும் நகைகள் வைர நகைகள்தான். ரூ.14 கோடி மதிப்பில் ஒரிஜினல் வைர நகைகளைப் பயன்படுத்தி யிருக்கோம். ஹைதராபாத்தில் உள்ள வசுந்தரா டைமண்ட்ஸ் நிறுவனத்தினர் இந்த நகைகள் எல்லாம் செய்து கொடுத்ததாங்க. காஸ்ட்யூமர் நீத்தா லுல்லா உதவியோட அந்த ஆபரணங்களை வடிவமைச்சுக் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் அவங்க ‘சாகுந்தலம் கலெக்ஷன்ஸ்’னு விற்பனைக்கும் கொண்டு வர்றாங்க.''

``சென்ற நவம்பர்லேயே ரிலீஸ் ஆகப்போகுதுன்னு பேச்சு வந்தது. அப்புறம் ஏன் 3டி முடிவுக்கு மாறுனீங்க?’’
‘‘இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் பண்ணுற ஐடியாவோடு எடுக்கல. ‘ருத்ரமாதேவி’யை 3டி-யில் பண்ணியிருந்தோம்னா அந்தப் படத்தை ஷூட் பண்ணும்போதே ‘அவதார்’ டெக்னாலஜியில் 3டி கேமராவோடு ஷூட் போனோம். ‘சாகுந்தலம்' நவம்பர்லதான் வெளியாகியிருக்க வேண்டியது. அந்தச் சமயத்துல சமந்தாவுக்கு உடல்நல பாதிப்பு இருந்ததால அவங்களால புரொமோஷனுக்கு வர முடியாத சூழல் ஆகிடுச்சு. அவங்களும் எங்ககிட்ட டைம் கேட்டாங்க. சொன்ன மாதிரியே அவங்க உடல்நலனையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தாங்க. எங்களுக்கு டைம் கிடைச்சதால 3டி தொழில்நுட்பத்துக்கு மாத்தியமைக்க நினைச்சோம். இப்பத்தான் தொழில்நுட்பங்கள் அட்வான்ஸாகிடுச்சே! எளிதா கொண்டு வந்துட்டோம்.
இதுல தொழில்நுட்பமும் பிரமிக்க வைக்கும். என்னோட பெரும்பாலான படங்களுக்கு மணிசர்மா இசையமைச்சிருப்பார். மணிசர்மா – குணசேகர் கூட்டணின்னாலே ஹிட் கூட்டணி எனப் பெயர் வாங்கிட்டோம். ‘ஒக்கடு’ அவ்ளோ பெரிய ஹிட். ‘ஒக்கடு’வுக்கு ஒளிப்பதிவு பண்ணின சேகர் வி.ஜோசப், கலை இயக்குநர்னு அந்தப் பட டீமே இதுலயும் இணைஞ்சிருக்காங்க. நீத்தா லுல்லாவின் காஸ்ட்யூம்ஸும் பேசப்படும். இந்தியில் ‘ஜோதா அக்பர்’ல காஸ்ட்யூம் டிசைனரா இருந்தவங்க அவங்க. வசனங்களை இங்கே ஸ்ரீஜாரவியும், பாடல்களைக் கபிலனும் எழுதியிருக்காங்க!''
‘‘உங்க படங்கள்ல ‘ஒக்கடு’, இங்கே ‘கில்லி' ஆகியிருக்கு. நீங்க நேரடித் தமிழ்ப் படம் இங்கே எப்போ பண்ணப்போறீங்க?’’
‘‘சீக்கிரமாகவே! சென்னைக்கும் எனக்கும் ஒரு அழகான பாசப்பிணைப்பு உண்டு. என் சொந்த ஊர் விசாகப்பட்டினம்னாலும், நான் உதவி இயக்குநரா ஆகணும்னு வீட்டை விட்டு ஓடி வந்த இடம் சென்னைதான். அதனால இந்த ஊரைப் பெருமையா சொல்வேன். இங்கே 12 வருஷத்துக்கு மேலாக இருந்திருக்கேன். சினிமாவை எனக்குக் கத்துக் கொடுத்த இடம் சென்னைதான். பாரதிராஜா சார், பாக்கியராஜ் சார், மணிரத்னம் சார் படங்கள் பார்த்துதான் வளர்ந்தேன். தேவி தியேட்டர், கேஸினோ, சபையர்னு சுத்தித் சுத்தி படங்கள் பார்த்திருக்கேன். நண்பர்களும் நிறைய பேர் சென்னையில் இருக்காங்க. எனவே தமிழ்ல நேரடிப் படம் கண்டிப்பா பண்ணுவேன். அது ‘கில்லி’ மாதிரி ஒரு படமாக இருக்கும்.’’
‘‘உங்க மூணாவது படமே 'ராமாயணம்'. 1997லேயே புராணங்கள்மீது நம்பிக்கை வச்சிருந்தீங்க..?’’
‘‘ஆமா. அது ‘ராமாயணம் வித் கிட்ஸ்'. ராமாயணக் கதைதான். அதுல நடிச்ச எல்லாருமே குழந்தைகள் தான். அதுலதான் ஜூனியர் என்.டி.ஆர். அறிமுகமானார். ராமராக நடிச்சிருந்தார். அந்தப் படத்துக்காக எனக்கு தேசிய விருதும் கிடைச்சிருக்கு. 25 வருஷத்துக்கு முன்னாடியே புராண, வரலாற்றுக் கதைகளைத்தான் ஜனங்க எப்பவும் ரசிப்பாங்கன்னு உணர்த்தினேன். இப்ப ‘பாகுபலி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்களுக்கான வரவேற்பு அதை உண்மைன்னு நிரூபிச்சிருக்கு. நான் மட்டுமல்ல என் ரெண்டு பொண்ணுங்களுக்குமே வரலாற்று, புராணக் கதைகள்னா ரொம்ப பிடிக்கும். என் இரண்டாவது மகள் யுக்தா முகி, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களையும் வரிவிடாமல் வாசிச்சிருக்காங்க. மணி சாரோட ‘பொன்னியின் செல்வன்’ பார்த்துட்டு அவளும் நானும் நிறைய விவாதிச்சிருக்கோம்.
பொதுவாகவே நான் புத்தகங்கள் நிறைய படிப்பேன். மகாபாரதம், ராமாயணம் மீது அளவு கடந்த காதல் இயல்பாகவே வந்திடுச்சு. வியாச மகரிஷி எழுதின ‘மகாபாரதம்’ கதையில ஆதி பருவம்ல சகுந்தலை-துஷ்யந்தன் கதை வரும். இதை அடிப்படையாக வச்சுதான் மகாகவி காளிதாசர் ‘அபிஞான சாகுந்தலம்’னு எழுதினார். அபிஞான சாகுந்தலத்தை நாடகமாக உலகம் முழுவதும் பண்ணியிருக்காங்க. இந்தியாவைவிட வெளிநாடுகளில் இந்த நாடகம் நிறைய நடக்கும். நான், வியாசர், காளிதாசர் இருவர் படைப்புகளையும் அடிப்படையா வைத்து ‘சாகுந்தல'த்தை உருவாக்கியிருக்கேன்.''