
சினிமாவில் எல்லாமே அமையணும்ணே. வரவேற்பு, எதிர்பார்ப்பு, நல்ல புரொடியூசர், நல்ல கதைன்னு எல்லாம் அமையணும்
“நிஜமா சந்தோஷமா இருக்கேன். நிறைய அவகாசம் எடுத்துச் செய்த ஸ்கிரிப்ட் ‘யானை.' யானைக்கு நல்ல நிதானமும் அதே அளவுக்குப் பெருங்கோபமும் இருக்கும்பாங்க. அப்படி ஒருத்தன்... எமோஷன், கோபம், பாசம், நிதானம் என எல்லாம் கலந்து நிற்கிற மண்ணின் மைந்தன். ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நடக்கும் கதை இது. ஆத்தா, அப்பத்தா, சித்தப்பு, அண்ணே, தம்பி, மச்சான், மதினின்னு ஒரு கும்பலே ஸ்பாட்ல நின்னாதான் நமக்கு வேலையே ஓடும். மனிதர்களோட கூடி வாழ்றதுதானே நம்ம பக்கத்து வழக்கம். அரிவாளைத் தூக்கிட்டுப் பாயுறதும், அப்புறம் கண்ணீர்விட்டுக் கட்டிப்பிடிச்சு அழறதும்தானே நம்ம பழக்கம்” என்றபடி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஹரி.

“பொறுமைக்கும் பாசத்திற்கும் கோபத்திற்கும் எல்லை உண்டு. அதன் எல்லையைத் தாண்டும்போது பிரச்னைகளும் பலியும் ஏற்படுது. இந்தப் படத்தில் எந்தக் கேரக்டர் மீதும் பெரிய தப்பிருக்காது. வில்லனிடம்கூட 100 சதவிகிதம் தப்பிருக்காது. எல்லோரும் நல்லவரேன்னு சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் யாரும் முழுக்க முழுக்க தப்பானவங்க கிடையாது. எல்லோருக்கும் அவங்க பக்கத்து நியாயம் இருக்கும். ‘தமிழ்’, ‘ஐயா’ மாதிரியான மூட் படத்தில் இருக்கும். ஒரு பொண்ணு எப்படி இருக்கணும், ஒரு குடும்பம் எப்படி நடக்கணும், ஒரு சகோதரன் எப்படி இருக்கணும்னு நிறைய விஷயங்களை இதில் சொல்லியிருக்கேன்.”
“உங்கள் படத்தில் ஏன் எப்போதும் பெருங்கூட்டம்?”
“நாம் வாழ்ந்த வாழ்க்கை, பழகின பழக்கம் அப்படித்தானே. இப்பத்தானே தனிக்குடித்தனம், தனிச் சமையல்னு அத்தனை பேரும் பிரிஞ்சு போய்க் கிடக்கோம். என்னால் ‘ஏலியன் மாதிரி தனியா வந்து இறங்கினான்’னு கதை எழுத முடியாது. என் வீட்டில் பத்துப் பேர் இல்லாட்டி அது வீடு மாதிரியே எனக்குத் தெரியாது. உலகமே பழிக்கிற ஒரு குற்றவாளிக்குக்கூட ஏக்கமும் உணர்வும் இருக்கே. உள்ளே பாசத்தை வச்சுக்கிட்டு வெளியே வேஷம் போட்டுக்கிட்டுதானே இருக்கோம்.”


“முதல் தடவையாக உங்கள் படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறாரே?”
“சினிமாவில் எல்லாமே அமையணும்ணே. வரவேற்பு, எதிர்பார்ப்பு, நல்ல புரொடியூசர், நல்ல கதைன்னு எல்லாம் அமையணும். அருணுக்கும் எனக்கும் அது தெரியும். அருணுக்கு எல்லாத் திறமையையும் கடவுள் கொடுத்திருக்கான். நடிப்பு, நடனம், உழைப்புன்னு எல்லா விஷயங்களிலும் தேறியிருக்கார். நல்ல டைரக்டர்கள் அவரைப் பயன்படுத்தி இருக்காங்க. என் படத்தில் எல்லாம் பத்துப் பேரை அடிச்சா நம்பற மாதிரி இருக்கணும். நான் கதையை எழுதி முடிச்ச பிறகுதான் நடிகர்களைப் பற்றி யோசிப்பேன். அப்படி இந்தக் கதைக்கு ஏத்தபடி இருந்தவர்தான் அருண். அருமையாக நடித்திருக்கிறார். நான் எப்பவும் மிலிட்டரி டிஸ்ப்ளின்தான். கால் பிசகினால் ‘அடடா, அப்படியா மாப்ஸ், அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துருங்க’ன்னு சொல்லிட்டுப் போயிடுவேன். நமக்கு வேலைன்னா போர்க்களம் மாதிரி இருக்கணும். துப்பாக்கியை உயர்த்திப் பிடிச்சுக்கிட்டே இருக்கணும். எல்லாத்துக்கும் ரெடியாக இருக்கார் அருண்.”


“அருண் - பிரியா பவானிசங்கர் ஜோடி எப்படி இருக்கு..?”
“ராமநாதபுரத்துப் பொண்ணா வரணும். ஒரு நாள் நானும் என் மனைவியும் ஹைதராபாத் போனோம். பிளைட்டில் எங்களுடன் டிராவல் பண்ணுன பிரியா பவானிசங்கர் என் மனைவிகிட்டே பேசிட்டு வரும்போது பார்த்திட்டே வந்தேன். என் கேரக்டர் மலர் மாதிரியே பேசுகிற தோரணையும், ஜாடையும் இருந்தது. பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். எனக்கெல்லாம் நம்ம வேகத்திற்கு ஸ்பாட்டுல நின்னாத்தான், கிரகித்துக்கொண்டால்தான் ஷூட்டிங் நல்லபடியா போகும். ஒரு இம்மி மிஸ்டேக் வராமல் நடிச்சுக் கொடுத்தாங்க.
ராதிகாவுக்கு இதில் லைஃப் டைம் கேரக்டர். அவருடைய முழுத்திறமையும் இதில் வெளிப்பட்டிருக்கு. ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் அசத்தியிருப்பாங்க இல்லையா, அது மாதிரி. யோகி பாபுவை ‘மண்டேலா' பார்த்தபோது பிடிச்சது. அவரை வேறு வடிவத்தில் கொண்டு வந்திருக்கேன். ஹைதராபாத்திலிருந்து பறந்து பறந்து வந்து நடிச்சுட்டுப் போனார். தயாரிப்பாளருக்கு உதவுகிற மனசு அவர்கிட்ட இருக்கு. சமுத்திரக்கனியை இப்பத்தான் டைரக்ட் பண்ணிப் பார்க்கிறேன். ஒரு டைரக்டருக்குத்தான் இன்னொரு டைரக்டரோட வலி தெரியும். 25 பேர் நடிக்கிற மாதிரியான சீன் எடுத்தோம். சமுத்திரக்கனி எல்லோரையும் மூட் செட் பண்ணி வச்சு எனக்கு உதவி பண்ணுவார். நல்ல நடிகர் மாதிரியே நல்ல மனுஷன். என்னைப் புரிந்துகொண்டு படமாக்கியதில் ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பங்கு அதிகம், தயாரிப்பாளர் வெடிக்காரப்பட்டி சக்திவேலுக்கு நன்றி. அவர் இன்றி இந்த பிரமாண்டம் சாத்தியமில்லை!”


“ரொம்பக் கண்டிப்பு என்று கேள்விப்பட்டிருக்கோம்...”
“நிறைய பணம் புழங்குகிற இடம். இங்கே நேரம் பொன்னானது. கோடு போட்டது மாதிரி எனக்கு எல்லாம் நடக்கணும். யாரையும் காக்க வைக்க மாட்டேன். எந்த ஹீரோவையும் பி அண்ட் சி வரைக்கும் இழுத்துட்டுப் போயிடுவேன். இதனால் இந்த ஏரியாவில் நம்ம படம் ஸ்கோர் பண்றது ஹீரோக்களுக்குப் பிடிக்கும். எனக்கும் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தப் பிடிக்கும். இங்கே ஹீரோக்களைக் காட்டித்தானே தியேட்டருக்குக் கூட்டத்தை இழுக்க வேண்டியிருக்கு. சூர்யாவோட அஞ்சு படம் பண்ணியாச்சு. விக்ரமோட மூணு, விஷால், தனுஷ், சிம்பு, சரத்குமார் இப்ப அருண் வரைக்கும் வந்தாச்சே. நம்மகிட்டே விஷயம் இல்லாட்டி வருவாங்களா?”
“நிறைய ஹீரோக்களுக்கு நல்ல இடம் அமைச்சுக் கொடுத்தீங்க. நன்றியுடன் இருக்காங்களா?”
“அவர்களுக்காக மட்டும் கதை பண்ணலையே. அதில் நம்ம சுயநலமும் சேருதுல்ல. அவங்களுக்குத் திறமை இல்லாமல் இந்த இடத்திற்கு வர முடியாது. ரொம்பவும் தூசிதட்டி யாரையும் கொண்டு வரமுடியாது. அவங்க திறமையைத்தான் நாம் பயன்படுத்துறோம். நன்றி எல்லாம் வேண்டாம்ணே. நான் யார்கிட்டயும் அதை எதிர்பார்க்கிறதே கிடையாது. நான் கிரியேட்டிவ் டைரக்டர் கிடையாது. கமர்ஷியல் டைரக்டர்தான். ஏற்கெனவே ஹிட் கொடுத்து லைம்லைட்ல இருக்கிற நடிகரை வச்சுத்தான் என்னால் படம் பண்ண முடியும். அவங்கள வச்சு ஹிட் கொடுத்து எனக்கு நானே தான் நல்லது பண்ணிக்கிறேன். அவர்கள் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கிற கைத்தட்டல், எனக்கும் ஆனதுதான். ஹீரோக்களுக்கு நல்ல பெயர் கிடைச்சா எனக்கு சந்தோஷம்தான். சினிமா சுயநலம் சார்ந்தும் இருக்கு. அருண் மாப்பிள்ளையை வச்சு படம் பண்ண 20 வருஷம் ஆகிப்போச்சு. காலம் சிலவற்றைச் சேர்க்கும். சிலவற்றைக் கோக்கும்.”


“சூர்யாவோட ‘அருவா’ என்ன ஆச்சு!”
“அருவா வெயிட்டிங். அதற்கான நேரம் வரும்போது ஆரம்பிக்கும். சிலர் சொல்றது மாதிரி எந்தப் பிரச்னையும் இல்லை. எனக்கும் அவருக்கும் எப்பவும் செட்டாகும்.”
“கடைசிவரை கமர்ஷியல் ரூட்தானா? வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மாதிரி படம் செய்யணும்னு தோணலையா?”
“அண்ணே... அவங்க ரியல் கிரியேட்டிவ் ஆளுமை உள்ளவங்க. அவங்களுக்கு முன்னாடி நான் டைரக்டர் ஆகிருக்கலாம். அது முக்கியம் கிடையாது. யார் வேலையை எப்படிப் பார்த்துக்கிட்டு இருக்காங்க என்பது முக்கியம். ‘விசாரணை’யைப் பார்த்தால் எவ்வளவு உழைப்பு, மேக்கிங் மிக்ஸிங் ஆகியிருக்கு பாருங்க. புல்லா ஒரு அழுத்தம் கொடுக்கிறாரே... சும்மாவா! அது தனித்திறமை. அது அலாதிதான். அவங்களால்தான் இண்டஸ்ட்ரிக்குப் பெருமை. நம்ம புகழ் அதனால்தான் நார்த் வரைக்கும் அடிக்குது. மாரி தம்பிகிட்டே போன் போட்டுப் பேசியிருக்கேன். லோகேஷ் கனகராஜ் கமர்ஷியல் + ஆளுமையை மிக்ஸ் பண்றார். இதுவும் புதுசு. அது பேருக்கு, இது சோறுக்குன்னு வெச்சுக்கங்க. பிழைப்பு ஒண்ணு, ரசிப்பு ஒண்ணுன்னு ரெண்டு கட்டம் எங்கேயும் இருக்குண்ணே...”
சிம்பிளாகச் சிரிக்கிறார் ஹரி.