சினிமா
Published:Updated:

“காதல் கலந்த உறவு இப்போது மாறிவிட்டது!”

காதல் என்பது பொதுவுடைமை படத்தில்..
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் என்பது பொதுவுடைமை படத்தில்..

காதல்ங்கிறது இன்னொருத்தர் மேலே வரும் அட்ராக்ஷன்தான். அது எப்படியும் வரலாம். இங்கே காதலைத் தீர்மானிக்கிறவர்கள் காதலர்கள் இல்லை

ஆன்லைன் வழியாக அந்தரங்கம் அம்பலப்படுகிற அவலத்தைச் சொன்ன வகையில் மனதைத் தொட்டது ‘லென்ஸ்' திரைப்படம். ஒரே படத்தில் அதிகபட்ச கவனத்திற்கு வந்தார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ். தமிழ் சினிமாவின் தனிக் குரலாக இருந்த ‘லென்ஸு'க்குப் பிறகு ‘காதல் என்பது பொதுவுடைமை’ எனக் கதை சொல்ல வருகிறார்.

‘‘எப்போதும் கதை அம்சம் சார்ந்து இயங்கி வந்திருக்கேன். ‘லென்ஸ்' எனது மரியாதையைக் கூட்டியது. ஆரவாரமாக ஓடிப் பெரும்பணம் வசூல் செய்யாமல் இருந்திருக்கலாம். படத்திற்காகச் செலவழித்த நேரம் அர்த்தமுள்ளதாக மாறியிருக்கு. கதையில் ஏதாவது புதுசா சொல்லணும். இதற்கு முன் வந்ததோட தொடர்ச்சியாக இருக்கக் கூடாதுன்னு எப்போதும் நினைச்சு வந்திருக்கேன். காலத்தைக் கடந்து நின்னவங்க எல்லோரும் நம்பிக்கையா, நேர்மையா, ரசனையோடு தீவிரமாக வாழ்ந்ததால்தான் நினைவில் நிற்கிறாங்க'' - தொடர்ந்து கவனம் மேலிடப் பேசுகிறார் ஜெயப்பிரகாஷ்.

“காதல் கலந்த உறவு இப்போது மாறிவிட்டது!”
“காதல் கலந்த உறவு இப்போது மாறிவிட்டது!”

`` ‘காதல் என்பது பொதுவுடைமை'யில் என்ன சொல்ல வர்றீங்க?’’

‘‘காதல்ங்கிறது இன்னொருத்தர் மேலே வரும் அட்ராக்ஷன்தான். அது எப்படியும் வரலாம். இங்கே காதலைத் தீர்மானிக்கிறவர்கள் காதலர்கள் இல்லை. வசதி, ஜாதி, மதம் என எல்லாம் சேர்ந்திருக்கு. காதலிக்கும்போது காதலர்களுக்கு இது எதுவும் தெரிவதே கிடையாது. காதல் யுனிவர்சலான ஒண்ணு. காதலில் இருக்கும்போது மனுஷங்க எல்லாரும் ஒண்ணுதான். காதலைத் தவிர எல்லாத்தையும் துச்சமாக மதிக்கிற இடம் அது. அந்தச் சமயம் அன்பால் இணைவாங்க, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருப்பாங்க. அதை நம்மோட மதம், நாகரிகம் எதனாலும் கட்டுப்படுத்த முடியாதுன்னு சொல்லப் பார்த்திருக்கேன். இது ஏஜ் ஓல்டு ஸ்டோரிதான்.

வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்வதும் காதல்தான். தொலைக்கச் செல்வதும் காதல்தான். இப்ப ஆண் பெண் உறவு என்பது எமோஷனல் பிளாக்மெயில் செய்கிற காதலா மாறிக்கிட்டு இருக்கு. காமம் சார்ந்த காதல் கலந்த இந்த உறவு என்பது பயங்கரமான கண்டிஷன்ஸ், நிறைய கட்டளைகள், அதிகபட்ச எதிர்பார்ப்புகள், ரொம்ப பொசஸிவ்னஸ் கூடியதாகிவிட்டது. இது எல்லாமும் கலந்த புது மையமாக என் கதையை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். இளையராஜா பாடலிலிருந்து இந்தப் பொருத்தமான தலைப்பைப் பெற்றேன்.''

“காதல் கலந்த உறவு இப்போது மாறிவிட்டது!”
“காதல் கலந்த உறவு இப்போது மாறிவிட்டது!”

``லிஜோ மோள் எப்படி இதற்குள் வந்தாங்க?’’

‘‘அவங்களுக்கு முக்கியமான கதாபாத்திரம். ‘ஜெய்பீம்’ பார்த்த பிறகு அவங்க மேலே மரியாதை கூடிவிட்டது. அதற்குப் பிறகு பல மடங்கு தூரம் வந்துட்டாங்க. கேரக்டரில் என்ன கேட்டாலும் அவங்களால் அவ்வளவு இயல்பாகத் தர முடியுது. ‘காதல் தேசம்' படத்தில் வந்த வினீத்தை நீங்கள் மறந்திருக்க முடியாது. அவர் இன்னும் பக்குவமான நிறைவான கேரக்டரில் இதில் வருகிறார். ரோகிணியும் முக்கியமான இடத்தில் படத்திலிருக்கிறார். உச்சபட்ச நிறைவோடு ஒளிப்பதிவாளர்  சரவணன் உழைத்திருக்கிறார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை எடுத்த ஜியோ பேபி தான் இந்தப் படத்தின் தயாரிப்பின் பின்னணியில் இருக்கிறார்.’’

“காதல் கலந்த உறவு இப்போது மாறிவிட்டது!”

``நீங்கள் எடுத்த ‘The Mosquito Philosophy', எடுக்கிற ‘தலைக் கூத்தல்' படங்கள் வெகுவாகப் பேசப்படுகின்றன!’’

‘‘சென்னைத் திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்தோடு ‘The Mosquito Philosophy' போட்டியில் இருந்தது. பட விழாவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதை இன்னும் சற்று பெரிதாகச் செய்யலாம் என இருக்கிறேன். குறைந்த பொருட்செலவில் எடுத்த படம் அது. ‘தலைக்கூத்தல்' இப்போது எடுத்து முடித்து விட்டேன். ரொம்பவும் முக்கியமான படமாக இருக்கும். தர்மபுரி பகுதியில் தலைக்கூத்தல் என்ற நிகழ்வு காதும் காதும் வைத்த மாதிரி நடந்துவருகிறது. வயோதிகர்களை, நோயின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களை, தலைக்கூத்தல் என்ற நிகழ்வு நடத்தி, அவர்களின் வாழ்வு முடித்து வைக்கப்படுகிறது. இந்தக் கதையின் தன்மையை உணர்ந்து சமுத்திரக்கனி, கதிர், முருகதாஸ், வையாபுரி போன்றவர்கள் நடிக்கிறார்கள். ஒய்நாட் சஷிகாந்த் இந்த முயற்சியை ஆதரித்ததற்கு நன்றி சொல்லணும். உண்மைத் தன்மைக்கும், சம்பவங்களுக்கும், கதைக்கோவைக்கும் நிறைய மெனக்கெட்டேன். ஏராளமான தரவுகளைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது. தெரிந்தோ, தெரியாமலோ சில சமயங்களில் மாற்று சினிமாவின் பாதையிலும் தமிழ் சினிமா பயணிக்கிறது என்பது எனக்கு சந்தோஷமளிக்கிறது.''