
கதைக்குப் பொருத்தமான தோற்றத்துலதான் இருக்கார். அவர், வழக்கமான கதையில் நடிக்க விரும்பமாட்டார்.
``என் முதல் படமான ‘கப்பல்' படத்தை ஷங்கர் சாரே அவரோட எஸ் பிக்சர்ஸில் ரிலீஸ் பண்ணியிருந்தார். அதன்பிறகு அவரோட தயாரிப்பில் அடுத்து படம் பண்ணுறதா இருந்தது. ஆனா, அப்ப சூழல் அமையல. பொதுவா, ஒரு படம் பண்ணுறதுங்கறது நமக்கு முதல்ல ஒரு கதை ரெடியாகணும். அந்தக் கதை ஒரு ஹீரோவுக்குப் பிடிச்சிருக்கணும். அப்புறம், அந்தக் கதைக்கு சரியான தயாரிப்பாளர் அமையணும். இத்தனையும் பொருந்தி வந்த பிறகுதான் அந்தப் படம் தொடங்கும். அப்படி தொங்கின படம்தான் சித்தார்த்தின் ‘டக்கர்'.'' - உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரின் சிஷ்யர்.
‘‘ஒரு இடைவெளிக்குப் பிறகு சித்தார்த் படம் திரைக்கு வருது?’’
‘‘ஆமாங்க. சமீப காலமா வர்ற படங்களை கவனிச்சா ஒரு விஷயம் புரியம். த்ரில்லர், ஹாரர்னு மோனோ ஜானர் படங்கள்தான் அதிகம் வந்திட்டிருக்கு. ஜனரஞ்சகமான படங்கள் வந்து ரொம்ப காலமாச்சு. ‘டக்கர்' அப்படியான படம். காதலும் ஆக்ஷனும் டார்க் காமெடியும் கலந்த கலவையா இருக்கும். ‘டக்கர்'னா மோதல்னு அர்த்தம். ஈகோவும், முரண்பட்ட சிந்தனையுமாக உள்ள ஹீரோவும் ஹீரோயினும் ஒரு நேர்க்கோட்டில் இணையற சூழல் உருவாகுது. அவங்க ரெண்டுபேருக்குமான வாழ்க்கையில் நடக்கற விஷயங்கள்தான் படத்தின் கதை.

காதல்னா அழகான உணர்வுன்னு எண்ணுகிற, லவ்வுல நம்பிக்கையுள்ளவர் சித்தார்த். காதல் வெறும் பம்மாத்து, செக்ஸுக்கு இன்னொரு பெயர்தான் காதல்னு இருக்கற பொண்ணா திவ்யன்ஷா கௌசிக். இப்படி எதிரெதிர் கருத்துள்ளவர்களிடையே காதல் வந்தால் எப்படியிருக்கும்னு யோசிச்சேன். டக்கரா உருவாகிடுச்சு. சித்தார்த்துக்கு இது ஒரு சரியான ஆக்ஷன் படமா இருக்கும். இதுல அவர் பி.எம்.டபிள்யூ, ஆடி மாதிரியான காஸ்ட்லி கார்களின் கால் டாக்ஸி டிரைவரா நடிக்கறார். கார் கம்பெனி உரிமையாளராக திவ்யன்ஷா நடிச்சிருக்காங்க.
இவங்க தவிர, யோகிபாபு, முனீஷ்காந்த், ‘தீரன் அதிகாரம் ஒன்று' டெர்ரர் வில்லன் அபிமன்யு சிங், ஆர்.ஜே விக்னேஷ்னு நிறைய பேர் இருக்காங்க. வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இதுக்கு முன்னாடி ‘நான் சிரித்தால்'னு ஒரு படம் பண்ணினவர். ‘தெகிடி', ‘சேதுபதி' படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் கே.பிரசன்னா இசையமைச்சிருக்கார். சென்னை, சிக்கிம்னு படப்பிடிப்பை நடத்தியிருக்கோம்.''

``சித்தார்த் ரொம்பவும் ஸ்லிம்மா இருக்காரே..?’’
‘‘கதைக்குப் பொருத்தமான தோற்றத்துலதான் இருக்கார். அவர், வழக்கமான கதையில் நடிக்க விரும்பமாட்டார். சில சீன்கள்ல, நாம மனசுல நினைச்சிருந்த விஷயங்களை அவர்கிட்ட எப்படிச் சொல்லிக் கடத்துறதுன்னு சின்னதா ஒரு சந்தேகம் எழும். ஆனா, அவர்கிட்ட சீனை விளக்கினதும், நாம நினைச்சு வச்சதைவிட அழகா பண்ணிடுவார். சென்னையில ஒரு கார் சேஸிங் சீன் எடுத்தோம். சென்னை ரோடுகள்ல அவ்ளோ எளிதா பர்மிஷன் கிடைச்சிடாது. டிராபிக் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆறு மணியிலிருந்து காலை எட்டு மணி வரைக்கும்தான் எடுக்க முடியும். இப்படி பத்து ஞாயிறுகள் படப்பிடிப்பு நடத்தி அந்த சேஸிங்கை முடிச்சோம். சித்தார்த், காலை ஐந்து மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து ரெடியாகிடுவார்.''

``யோகிபாபுவுக்கு இதுல டபுள் ஆக்ஷனா?’’
‘‘உண்மைதான். இதுல அப்பா-மகன் என முதல் முறையா டபுள் ஆக்ஷன் பண்ணியிருக்கார். கதை சொல்லும்போதே, ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்பா யோகிபாபு மிகப்பெரிய டான். ஆனா, பையனுக்கு டான்தனம் எதுவும் வரமாட்டேங்குதுன்னு கவலைப்படுவார். அதனால, மகனை ரவுடி அபிமன்யு சிங்கிட்ட பயிற்சிக்கு அனுப்பி வைப்பார். யோகியோட போர்ஷன் முழுவதும் டார்க் காமெடி களைகட்டும். அபிமன்யு சிங்கை இதுக்கு முன்னாடி படங்கள்ல டெர்ரர் வில்லனாகத்தானே பார்த்திருக்கோம். இதுல அவரும் நகைச்சுவையில் அசத்தியிருக்கார்.''
``என்ன சொல்றார் உங்க குரு..?’’
‘‘ஷங்கர் சார்கிட்ட ‘சிவாஜி', ‘எந்திரன்' படங்கள்ல உதவி இயக்குநரா இருந்திருக்கேன். அதன்பிறகும் அவரோட தொடர்பில்தான் இருக்கேன். என்னை அக்கறையா விசாரிப்பார். என் ஹீரோ சித்தார்த் அவரோட இப்ப ‘இந்தியன் 2' படப்பிடிப்பில இருக்கார். ஷங்கர் சார் சென்னை வந்ததும் என் படத்தை அவருக்குப் போட்டுக் காட்டப்போறேன்.’’