கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

எளிய மனிதன் லாரன்ஸ்... ஸ்மார்ட் வில்லன் சரத்குமார்!

லாரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
லாரன்ஸ்

எளிய மனிதன் ஒருத்தனது வாழ்க்கையில் ஒரு பிரச்னை ஏற்படுது. அந்தப் பிரச்னையினால அவன் எவ்ளோ தூரம் பாதிக்கப்படுறான். அதில் இருந்து அவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதே கதை.

``ராகவா லாரன்ஸ் சாரோட நாலு வருஷ நட்புதான். அந்த நட்பிலேயே எனக்குள் ஓர் இயக்குநர் இருக்கார்னு கண்டுபிடிச்சிருக்கார். அவரோட உதவும் உள்ளம் எல்லாருக்கும் தெரியும். அவர் நட்பை மதிக்கற குணத்தையும் நேர்ல பார்த்திருக்கேன். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு, ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம். அதை நீங்களே டைரக்ட் பண்ணுங்க'ன்னு சொன்னார். தயாரிப்பாளராக இருந்த என்னை இயக்குநராகவும் ஆக்கிட்டார். இந்த ‘ருத்ரன்' கதையை அவர்கிட்ட சொன்னதும், ரொம்பவே ஆச்சரியப்பட்டார். இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான கேரக்டர்ல அவர் நடிச்சதும் இல்ல. இப்படி ஒரு கதையை அவர் என்கிட்ட எதிர்பார்க்கவும் இல்ல. ஒரு புதுமுக இயக்குநர் மாதிரி என்னை நினைக்காமல் நடிச்சுக் கொடுத்திருக்கார். அவரும் சரத்குமார் சாரும் ‘காஞ்சனா'வுக்குப் பிறகு மறுபடியும் இதுல இணையுறாங்க. இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா ஷூட் பண்ணுறப்ப எனக்கிருந்த படபடப்பை ரெண்டு பேருமே போக்கினாங்க. நல்ல மனிதர்களின் அன்பினால்தான் இதெல்லாம் சாத்தியமாச்சு...'' திருப்தியும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.கதிரேசன். தனுஷின் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்‘, ‘நய்யாண்டி‘, அருள்நிதியின் ‘டைரி’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர், இப்போது இயக்குநராகப் புன்னகைக்கிறார்.

எளிய மனிதன் லாரன்ஸ்... ஸ்மார்ட் வில்லன் சரத்குமார்!

``உங்க நட்பு வட்டத்துல உள்ளவங்க பலரும் நீங்க தனுஷை இயக்குவீங்கன்னு நினைச்சிருப்பாங்க... ஆனா, நீங்க ராகவா லாரன்ஸ் பக்கம் போயிருக்கீங்க?’’

‘‘வாழ்க்கையில நாம எப்பவும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கிட்டிருப்போம். ஆனா, அதைத்தாண்டி சில விஷயங்கள் அதுவாகவே நடக்கும். அப்படித்தான் இயக்குநரானேன். தயாரிப்பாளர் என்றால் பணம் போடுறதோடு சரி, அவருக்கும் பட வேலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு என்னிக்குமே நான் நினைச்சதில்லை. நான் தயாரிச்ச படங்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவுன்னாலும், 'பொல்லாதவன்', 'ஆடுகளம்'னு என் அத்தனை படப்பிடிப்பிலும் இருந்திருக்கேன். கடைசியாக தயாரிச்ச ‘டைரி’யில் இணை இயக்குநர் மாதிரியும் வேலை செய்திருக்கேன். தயாரிப்பாளரா இருக்கும்போது குறிப்பிட்ட வேலைகள்தான் பார்க்க வேண்டியிருக்கும். ஆனா, இயக்குநர் பொறுப்பு பெரியது. ‘ருத்ரன்'ல நான் அந்த ரெண்டையுமே பண்ணியிருக்கேன்.''

``யார் இந்த ருத்ரன்?’’

‘‘ரொம்பவே சாதாரணமான ஒருத்தன். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வச்சு, இந்தக் கதையைப் பண்ணியிருக்கோம். எளிய மனிதன் ஒருத்தனது வாழ்க்கையில் ஒரு பிரச்னை ஏற்படுது. அந்தப் பிரச்னையினால அவன் எவ்ளோ தூரம் பாதிக்கப்படுறான். அதில் இருந்து அவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதே கதை. ருத்ரனாக லாரன்ஸ். இதுவரை பார்த்திராத கேரக்டர்கள்ல லாரன்ஸ் சார் மிரட்டுவார். எண்பதுகள்ல பிறந்தவங்கள்ல இருந்து இந்தத் தலைமுறை ரசிகர்கள் வரை எல்லாருக்குமான படமா இருக்கணும்னு விரும்பினோம். அப்படியே வந்திருக்கு. லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிச்சிருக்காங்க. ஹீரோவோட அப்பாவாக நாசர், அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ், சரத் லோகிதாஸ், காளிவெங்கட்னு நிறைய தெரிஞ்ச முகங்கள் நடிச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷ் இசை, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவுன்னு தொழில்நுட்ப டீமும் பக்கா. அந்தக் கால ஆடியன்ஸையும் கட்டிப் போட ‘பாடாத பாட் டெல்லாம் பாட வந்தாள்’ பாடலை ரீமிக்ஸ் பண்ணியிருக்கோம். சென்னை, கோவை, பொள்ளாச்சி, ஹைதராபாத், லண்டன்னு பல இடங்கள்ல படப்பிடிப்பு நடத்தினோம்.''

``இங்கே இருக்கும் ஸ்டில்களைப் பார்த்தால், லாரன்ஸ் - பிரியா பவானி லவ் கெமிஸ்ட்ரி தூக்கலா இருக்கே?’’

‘‘இந்த ஜோடி ரொம்ப ஃப்ரெஷ்ஷான ஜோடி. லாரன்ஸ் சார் படம்னாலே நிறைய கதாநாயகிகள் இருப்பாங்க. ஆனா, இந்தக் கதைக்கு ஒரே நாயகிதான். ரெண்டு ஹீரோயின்களுக்குக் கதையில் வேலையில்லை. இவங்க ரெண்டு பேருக்குமான லவ் கெமிஸ்ட்ரி, கலர்ஃபுல்லா இருக்கும். ஒரு பாடலை லண்டன் வரைக்கும் போய்ப் படமாக்கி யிருக்கோம். இந்தக் கதையில் பிரியா ஹீரோவின் காதலியாக, அன்பான மனைவியாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட கதை சொன்னதும், ‘ஒரு குழந்தைக்கு அம்மாவா!’ன்னு தயங்கினாங்க. அதன் பிறகு, கேரக்டரின் ஆழத்தை உணர்ந்து சம்மதம் சொன்னாங்க. அதைப்போல லாரன்ஸ் சாரின் அம்மான்னாலே நமக்குக் கோவை சரளா ஞாபகத்துக்கு வருவாங்க. இந்தப் படத்தில் அவரின் அம்மாவா பூர்ணிமா மேம் நடிச்சிருக்காங்க. எமோஷனலாகவும் பேச வைப்பாங்க.''

`` ‘காஞ்சனா'விற்குப் பிறகு மீண்டும் சரத்குமார் - லாரன்ஸ் கூட்டணி?’’

‘‘சரத்குமார் சார் ‘காஞ்சனா'விலேயே மிரட்டியிருப்பார். பன்னிரண்டு வருஷத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் மீண்டும் சேர்ந்து, படத்தை அதிரடி ஆக்‌ஷனாக்கிட்டாங்க. இதுல சரத் சார் கேரக்டர் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி, ‘இரும்புத்திரை’ அர்ஜுன் மாதிரி ஒரு ஸ்மார்ட் லுக் வில்லனாகவும், பேசக்கூடிய ரோலாகவும் இருக்கும். கதை வெவ்வேறு விதமான காலகட்டங்களைப் பிரதிபலிக்கறதால, அவரும் வேறு வேறு தோற்றங்கள்ல வருவார். லாரன்ஸுடன் அவர் மோதும் சண்டைக்காட்சிகளில் விறுவிறுப்பு கேரண்டி.''

``ஜி.வி.பிரகாஷின் குட்புக்கில் நீங்களும் இருக்கீங்க..!’’

‘‘என்னோட வளர்ச்சிக்கு நிறைய பேர் உதவியிருக்காங்க. சினிமாவில் ஆடியோ பிசினஸ் மூலம் காலடி எடுத்து வச்சேன். படவுலகில் `ஃபைவ் ஸ்டார்' கதிரேசன்னு சொன்னால்தான் தெரியும்னு ஆகியிருக்கு. இப்படி ஒரு சந்தோஷப் பயணத்திற்கு நிறைய நண்பர்கள் காரணமா இருக்காங்க. ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சார்னு நிறைய பேரைச் சொல்லலாம். ஜி.வி.யை நான் ‘ப்ரோ'ன்னுதான் கூப்பிடுவேன். ப்ரோவை ‘பொல்லாதவன்’ல இருந்து தெரியும். அவர்கிட்ட ‘நான் டைரக்‌ட் பண்ணப்போறேன்... நீங்கதான் இசையமைக்கணும் ப்ரோ’ன்னு கேட்டேன். ‘உங்க வெற்றியில் என்னோட பங்களிப்பு இருக்கணும்’னு விரும்பி வந்து பாடல்களைக் கொடுத்திருக்கார்.''

`` ‘பொல்லாதவன்’ 15 வருஷம் ஆனதை ரீயூனியன், கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கீங்க..?’’

‘‘வெற்றிமாறனோட உள்ள நட்பு அண்ணன் – தம்பி நட்பு மாதிரி. தனுஷ் சாரோட மூணு படங்கள் பண்ணியிருக்கேன். ‘பொல்லாதவன்’ வெளியாகி பதினைந்து வருஷம் ஆனது என்பதை, எங்க நட்பு வளர்ந்து பதினைந்து வருஷம் ஆனதாகவே உணர்ந்தோம். அதனால, எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து கெட் டுகெதர் மாதிரி சந்திச்சு, கேக் வெட்டிக் கொண்டாடினோம். அதைப்போல ‘ஆடுகளம்’ வெளியாகியும் 12 வருஷம் ஆகுது. அதோட க்ளைமாக்ஸ் படப்பிடிப்பில் தனுஷ் சாரின் அர்ப்பணிப்பை மறக்கவே முடியாது. சிக்ஸ்பேக் உடலமைப்பு வச்சிருந்ததால சாப்பாட்டைக்கூட ஒரு ஸ்பூன் அளவுக்குத்தான் அவரால சாப்பிட வேண்டியிருக்கும். அப்படி அர்ப்பணிப்போடு நடிச்சுக் கொடுத்ததை மறக்கவே முடியாது. அதைப்போல வெற்றிமாறன். ‘ருத்ரன்' கதை அவருக்குத் தெரியும். ஸ்பாட்டில் அவர் அசுர உழைப்பாளி. ராத்திரி பத்து மணிக்கு ஷூட் முடிச்சாலும், மறுநாள் காலையில ஆறு மணி ஸ்பாட்டுக்கு வந்துடுவார். ஒருநாளில் நாலு மணி நேரம் தூங்கினாலே அதிகம். அப்படி உழைப்பார். அவர்கிட்ட நான் கத்துக்கிட்டதுல அந்த உழைப்பும் ஒண்ணு!''

எளிய மனிதன் லாரன்ஸ்... ஸ்மார்ட் வில்லன் சரத்குமார்!

``அடுத்தும் வெற்றிமாறன் - லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்' படத்தையும் தயாரிக்கிறீங்க.. அதையும் நீங்களே இயக்கியிருக்கலாமே..?’’

‘‘அடுத்தடுத்து படங்கள் இயக்குவேன். ‘ருத்ரன்' படப்பிடிப்பு இன்னும் சில நாள்கள் மீதமிருக்கு. பொள்ளாச்சியில் திருவிழாக் காட்சிகள் வெகு சமீபத்தில்தான் படமாக்கினோம். ‘ருத்ரன்' படத்துக்குப் பிறகு சில மாதங்களாவது இடைவெளி விட நினைக்கறேன். ‘அதிகாரம்' கதையை வெற்றிமாறனும், தங்கமும் சேர்ந்து எழுதியிருக்காங்க. படத்தை ‘பட்டாஸ்' துரை செந்தில்குமார் இயக்குறார். வரும் ஆகஸ்ட்டில் அதன் படப்பிடிப்பு தொடங்கும்.''