
இது ஒரு குறிப்பிட்ட பெண் டிரைவருடைய கதை இல்லை. பெரும்பாலான உழைக்கிற பெண்களோட கதை. படிச்சு முடிச்ச பெண்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு
`வத்திக்குச்சி' - ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்து பரவலாய் கவனம் பெற்ற படம். அதன் இயக்குநர் கின்ஸ்லின் ஒன்பது ஆண்டுகள் கழித்து, இப்போது ‘டிரைவர் ஜமுனா' படத்தின் மூலம் மீண்டும் களம் காண இறங்கியிருக்கிறார்.

``ஒன்பது வருடங்கள் இடைவெளி ஏன்?’’
‘‘முயற்சிகள் இல்லாமலில்லை. ‘வத்திக்குச்சி' முடிச்சவுடனே அடுத்த பட வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ஆனா, சினிமாவுல நாம நினைக்கிறது அப்படியே நடக்காது. சில புராஜெக்ட்ஸ் அடுத்த வாரத்துல ஆரம்பிக்கப்போறமாதிரி இருக்கும். ஆனா, சில காரணங்களால நடக்காமப்போயிடும். கடந்த பத்து வருடங்கள்ல சினிமா, மீடியா, அதுக்கான பிசினஸ்னு எல்லாமே மாறிடுச்சு. ஒட்டுமொத்த சிஸ்டமும் மாறும்போது அந்த சிஸ்டத்துல ஒரு துளியா இருக்கிற நாமும் மாறணும். அதுக்கு எனக்கு டைம் எடுத்துச்சு. இந்த இடைவெளியில நிறைய படிச்சேன்; நிறைய கதைகள் எழுதினேன். நிறைய கத்துக்கிட்டேன். ஒன்பது வருடமும் நான் உழைக்காமல் இல்லை.''



`` ‘டிரைவர் ஜமுனா' நீங்க சந்திச்ச ஒரு நபருடைய கதையா?’’
‘‘இது ஒரு குறிப்பிட்ட பெண் டிரைவருடைய கதை இல்லை. பெரும்பாலான உழைக்கிற பெண்களோட கதை. படிச்சு முடிச்ச பெண்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு. படிக்க வாய்ப்பில்லாத பெண்கள் அந்தந்த ஊருக்குத் தகுந்த மாதிரி, ஒவ்வொரு வேலை செய்வாங்க. சிட்டிக்குள்ள நிறைய பெண்கள் ஆட்டோ, டாக்ஸி டிரைவரா இருக்காங்க. மத்த தொழில்கள் எல்லாமே ஒரு இடத்துலதான் வேலை, தினமும் பார்த்த முகங்களாதான் இருக்கும். ஆனா, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுறதுல அப்படியில்லை. தெரியாத இடங்கள், தெரியாத மனிதர்கள்னு பயணிப்பாங்க. அதுல எந்த அளவுக்குப் பாதுகாப்பு இருக்கும்னு தெரியாது. கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் டாக்ஸி சர்வீஸ்ல ஒரு விஷயம் இருக்கு. விருகம்பாக்கத்துல வீடு இருக்குற டிரைவர் காலையில மொபைலை ஆன் பண்ணினார்னா, அவருக்கு வர்ற சவாரிகள் கொஞ்ச கொஞ்சமா அவரை சிட்டியுடைய இன்னொரு மூலைக்கே கூட்டிட்டுப் போயிடும். டிரைவர்களை நிறைய ஓட்டவச்சாதான் கம்பெனிக்கு லாபம் கிடைக்கும்னு நினைக்கிற கார்ப்பரேட் கம்பெனிகளோட பிளான் இது. இப்படியான சூழல்ல வேலை பார்க்கிற பெண் ஓட்டுநர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் தேவைப்படுது. அதெல்லாம் நிறைஞ்ச ஒரு பெண்தான் இந்த ஜமுனா. இது ஒரு க்ரைம் த்ரில்லர். முழுக்க முழுக்க காருக்குள்ள நடக்கிற கதை. ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜமுனா ஒரு ட்ரிப் எடுக்குறாங்க. ரெண்டு மணி நேர ட்ரிப்தான் மொத்தப் படமும். அந்த ட்ரிப்ல என்ன நடக்குது, அதுல வர்ற சிக்கலை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்ங்கிறதைத்தான் பேசியிருக்கோம்.''



``ஐஸ்வர்யா ராஜேஷ் கதை கேட்டுட்டு என்ன சொன்னாங்க?’’
‘‘நான் தயாரிப்பாளர்கிட்ட கதை சொன்னதும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சா நல்லாருக்கும்னுதான் சொன்னேன். உடனே அவங்ககிட்ட நேரம் வாங்கிக்கொடுத்தாங்க. கதை சொல்லி முடிச்சவுடனே, ஓகே சொல்லிட்டாங்க. ஜமுனாவுடைய கேரக்டர் ஸ்கெட்ச் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சூப்பரா கார் ஓட்டுறாங்க. கார் ஓட்டிக்கிட்டே நடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. இந்தச் சவாலை சூப்பரா எதிர்கொண்டாங்க. ரொம்ப அழகா நடிச்சுக் கொடுத்தாங்க.''
``டெக்னிக்கல் டீம்?’’
‘‘இது காருக்குள்ள நடக்கிற கதைங்கிறதால வசனங்கள் ரொம்பக் குறைவு. நிறைய சைலன்ஸ் இருக்கும். அந்த நிசப்தத்துக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். ஜிப்ரான் அந்த மாதிரி இடத்துல சூப்பரா ஸ்கோர் பண்ணிடுவார். எனக்கு ரொம்ப நல்ல நண்பரும்கூட. கோகுல் பினாய் ஒளிப்பதிவு, வெற்றிமாறன் சார் படங்களுடைய எடிட்டர் ராமர்தான் இந்தப் படத்துக்கு எடிட் பண்றார், அனல் அரசு மாஸ்டர் ஸ்டன்ட்னு டெக்னிக்கலா ரொம்ப பலமான நபர்கள் இருக்காங்க. தவிர, இதுல பத்துப் புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. அவங்க எல்லோருமே கவனிக்கப்படுவாங்க.''