Published:Updated:

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

ஜெயபாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயபாரதி

படம்: பரத்வாஜ்

‘`தமிழ்த் திரையில் மாற்று சினிமாக்களின் முன்னோடிகளில் ஒருவரான `குடிசை ஜெயபாரதி' அவர்கள் உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். இயன்றோர் உதவி செய்யுங்கள்'’ என எழுத்தாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் அஜயன் பாலா எழுதியிருந்தார்.

இயக்குநர் சிகரம் எனப் போற்றப்பட்ட பாலசந்தரிடமே ‘நல்ல படம் என்னன்னு நான் எடுத்துக் காண்பிக்கிறேன்' என சவால்விட்டு தொடர்ச்சியாக கமர்ஷியல் சமரசங்களின்றி யதார்த்த சினிமாக்களையே எடுத்துத் தனி அடையாளம் பெற்றவர் ஜெயபாரதி. இவர் இயக்கிய முதல் படமான ‘குடிசை' 1979-ல் வெளியாகியிருந்தது. அன்றைய காலத்திலேயே கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டி எடுக்கப்பட்ட படம் அது. ‘உச்சி வெயில்', ‘நண்பா... நண்பா...', ‘புத்திரன்' என இவர் அடுத்தடுத்து இயக்கிய படங்களுமே விமர்சகர்களிடமும் விருது விழாக்களிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றவை. கொளத்தூரின் வனசக்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன்.

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

‘‘யதார்த்த சினிமா எடுக்கறேன்னு இப்படியான படங்கள் எடுத்ததனால அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமுமேதான் சிரமப்பட்டோம். அவரையும் மத்தவங்க மாதிரி பொழுதுபோக்குப் படம் எடுக்கச் சொல்லலாம்லன்னு நிறைய பேர் அறிவுரை சொல்லுவாங்க. ஆனா, அவர் இயல்புலயே இப்படித்தான். யதார்த்த சினிமாக்கள் எடுக்குற இந்தத் திறமை அவருக்குள்ளயே ஊறியிருக்கு. அதை எப்படி நாங்க வேண்டாம்னு சொல்ல முடியும்? அவர் விருது வாங்குறப்பல்லாம் ரொம்பப் பெருமையாதான் இருக்கும்’' என்கிறார் ஜெயபாரதியின் மனைவி ப்ரீத்தா.

‘‘உடல்நிலையைப் பத்தியோ, சிகிச்சை பத்தியோ பெருசா பேச வேணாம்ப்பா. மத்த விஷயங்களைப் பேசுவோம்'’ என, 70 வயதைக் கடந்துவிட்ட முதுமையின் தளர்விலும் தன் அனுபவங்களை அப்படியே அசைபோடத் தொடங்கினார் ஜெயபாரதி.

‘‘அடிப்படையில நான் ஒரு பத்திரிகைக்காரன். சினிமா பார்க்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்கிலீஷ் படங்கள்தான் நிறைய பார்ப்பேன். அந்தப் படங்களப் பார்த்துட்டு நம்ம தமிழ்ப் படங்கள பார்க்குறப்ப, ‘என்னடா இப்டியெல்லாம் எடுக்குறாங்களே’ன்னு ஆதங்கம்தான் ஏற்படும். அப்ப கூட நான் சினிமா எடுக்கணும்னு நினைக்கல. ஒரு முறை கே.பாலசந்தர் படங்கள் பத்தி கடுமையா விமர்சனம் பண்ணி பத்திரிகைல எழுதிட்டேன். அந்த விமர்சனம் அவரைக் கோபப்படுத்திவிட்டது. ‘சினிமா எடுக்குறதுன்னா அவ்வளவு சாதாரண விஷயமா? முடிஞ்சா அவன ஒரு சினிமா எடுத்துக்காட்டச் சொல்லுய்யா’ன்னு பாலசந்தர் சொன்னதாக எனக்குச் செய்தி வந்தது. அடுத்த பத்தாவது நாள் ‘குடிசை' ஷூட்டிங் கிளம்பிட்டோம்.

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

கையில பணம் கிடையாது. அப்பதான் கிரவுட் ஃபண்டிங் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். அந்தக் காலத்துல 1,000 அடி நெகட்டிவ் சுருள் 4,500 ரூபாய். நண்பர்கள் பத்துப் பேர்கிட்ட ஆளுக்கு 4,500 ரூபாயை நன்கொடையாக வாங்கினேன். ராபர்ட் ராஜசேகருக்குத் தெரிஞ்ச ஒரு அவுட்டோர் யூனிட் எங்களுக்காக வேலை பார்க்கத் தயாராக இருந்தாங்க. டெல்லி கணேஷ், கமலா காமேஷ்னு நடிகருங்க எல்லாம் புதுசுதான். லொக்கேஷன்ல ஒரு பண்ணையார் எல்லாத்துக்கும் சாப்பாடு கொடுக்குற பொறுப்ப ஏத்துக்கிட்டாரு. அப்டிதான் ‘குடிசை’ தொடங்குச்சு. இடையில பணமில்லாம நிக்கிறப்ப, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதுல வர்ற பணத்த வச்சு ஷூட் பண்ணுவோம்.

ரிலீஸ் அப்ப பணத்துக்கு இன்னும் சிக்கல் ஏற்பட்டுச்சு. கூட இருந்த நண்பர்கள் நம்பிக்கை இல்லாமப்போயிட்டாங்க. அப்ப கொல்கத்தால இருந்து மிர்ணாள் சென் சென்னைக்கு வந்திருந்தாரு. ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி மூலமா அவரப் போயி சந்திச்சேன். ‘உங்கள மாதிரியே பாட்டு, ஃபைட்டுனு கமர்ஷியல் விஷயம் எதுவும் இல்லாம படம் பண்ணிருக்கேன்’னு சொன்னேன். உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டார். அதை வச்சு படத்த ரிலீஸ் பண்ணினேன். சஃபையர் தியேட்டர்ல மட்டும் 3 வாரம் ஹவுஸ்ஃபுல்லா போச்சு. பெங்களூரு, கல்கத்தான்னு இந்தியாவின் எல்லா ஊர் பிலிம் இன்ஸ்டிட்யூட்லயும் படத்தைத் திரையிட்டுட்டே இருந்தாங்க’’ என்றவரிடம், ‘‘உங்களின் முதல் படத்திலேயே கமல்ஹாசன் நடிப்பதாக இருந்ததாமே?’’ என வினவினேன்.

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

‘‘ஆம். கமல் ஒரு மகா கலைஞன். கல்லூரிகளில் சென்று பாடம் படிச்சவங்களவிட அதிக விஷய ஞானம் உடையவர். டெக்னிக்கலாக பெரிய திறமைசாலி. பாட்டே இல்லாம பரீட்சார்த்த முயற்சியா என் இயக்கத்துல ஒரு படம் பண்ணணும்னு விருப்பப்பட்டார். நானும் தயாரானேன். ஆனா, படத்தோட தயாரிப்பாளர் பாட்டு இருந்தே ஆகணும்னு கண்ணதாசன வச்சு 3 பாட்ட ரெக்கார்டு பண்ணி கமல்கிட்டயும் விஷயத்த சொல்லிட்டாரு. பாட்டு இல்லாம இருந்தா மட்டும்தான் ஜெயபாரதி படத்துல நடிப்பேன்னு சொல்லி கமல் படத்துல இருந்து வெளியேறிட்டாரு. அதுக்குப் பிறகு இப்ப வரைக்கும் அவரோட பெரிய தொடர்பு எதுவும் இல்ல. கமல் மட்டுமல்ல, ரஜினியுமே அவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல இருந்த காலத்திலிருந்தே பழக்கம்தான். அவர்கிட்டயும் என் டைரக்‌ஷன்ல படம் பண்ணச் சொல்லிக் கேட்டேன். ‘இந்த கமர்ஷியல் படமெல்லாம் ஒரு காலத்துல சலிச்சுப்போய்டும். அப்ப நா உங்க படத்துல நடிக்கிறேன்’னு சொன்னாரு. அவருக்கு இன்னும் சலிப்பு ஏற்படல. இப்ப 4 வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு அழைச்சு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தார். அவர் பிஸியா இருக்குறதனால அவர அடுத்தடுத்து தொந்தரவு பண்ண வேணாம்னு தொடர்புகொள்ளுறது இல்ல. எப்போதுமே அவர் ஒரு நல்ல நண்பர்.’'

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

‘‘இப்போதும் மலையாளத்தில் மக்களின் வாழ்வியலை ஒட்டிய யதார்த்த படங்கள் அதிகமாக வெளியாகின்றன. தமிழில் அந்த மாதிரியான சூழல் இல்லையே. ஏன்?’'

‘‘தமிழோட ஒப்பிடும்போது மலையாளத்திலும் கன்னடத்திலும்தான் அழுத்தமான படங்கள் அதிகம் உருவாகுது. காரணம், அவங்க சிறுகதையையோ நாவலையோ அடிப்படையா வச்சுப் படங்கள் செய்றாங்க. எம்.டி.வாசுதேவன் நாயர், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரிஷ் கர்னாட்னு எல்லாருமே அப்படிதான். இங்க டைரக்டருங்க எல்லாத்துக்குமே கதை சொல்லத் தெரிய வேண்டியிருக்கு. அது ஒரு சாபக்கேடு. டைரக்டர் ரைட்டரா இருக்கணும்னு அவசியமே இல்ல. டைரக்டர் ஒரு டெக்னீஷியன், அவ்ளோதான். மணிரத்னம் இப்ப ‘பொன்னியின் செல்வன்' பண்ணுறாரு. வெற்றிமாறன் நாவல்கள மையமா வச்சுப் படம் பண்ணுறாரு. இதெல்லாம் வரவேற்க வேண்டிய விஷயம்.’’

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

‘‘தொடர்ச்சியாக மாற்று சினிமாக்களை மட்டுமேதான் எடுத்திருக்கீங்க. இந்த 40 ஆண்டுக்கும் மேற்பட்ட பயணத்துல உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் முழுசா கிடைச்சிருக்கிறதா நினைக்கிறீங்களா?’’

‘‘விருதுகள ரெண்டா பிரிக்கலாம். மெரிட்ல வர்ற விருதுகள் ரொம்பவே கம்மி. காசுக்காக வர்ற விருதுகள் ஜாஸ்தி. ‘உதிரிப்பூக்கள்' மகேந்திரன் எனக்கு ரொம்பவே பிடித்தமான இயக்குநர். அவர் தேசிய விருதுக் குழுவுல இருந்தப்போ என் படங்களும் விருதுக்காகப் போயிருக்கு. ஆனா, விருது கிடைக்கல. ‘இங்க விருதெல்லாம் காசுக்குத்தான்' என வருந்திக் கூறினார்.

சினிமா ஆளுங்க யாரும் என்னைத் தொடர்பு கொள்றதோ, உதவி செய்யறதோ இல்ல. டெல்லி கணேஷுக்கு ‘குடிசை’தான் முதல் படம். அதை அவர் எங்கேயுமே சொல்றது கிடையாது. வாகை சந்திரசேகருக்கு ‘நண்பா... நண்பா...' படத்துக்காக தேசிய விருது கிடைச்சது. ஆனா, அவர் இப்ப பேசுறதே இல்ல. இதையெல்லாம் வருத்தத்தோட பதிவு செய்றேன். சத்யராஜ் மட்டும்தான் என் படத்துல நடிக்கணும்னு சம்பளமே வாங்காம ‘குருஷேத்திரம்' படத்துல நடிச்சுக் கொடுத்தாரு.

“சினிமா ஆளுங்க யாரும் உதவி பண்ணுறதில்ல!”

அரசு சார்பிலோ திரைத்துறை சங்கங்கள் சார்பிலோ ஏதேனும் அங்கீகாரமும் உதவியும் கிடைக்கறதுக்கு, நான் எந்தச் சங்கத்துலயும் உறுப்பினர் கிடையாது. அதனால சங்கங்கள் எதுவும் பண்ணுறதில்ல. 10-12 வருஷத்துக்கு முன்ன, குழந்தைத் தொழிலாளர் கொடுமைகளப் பத்தி ‘புத்திரன்'னு ஒரு படம் எடுத்தேன். அதுக்கு சமீபத்துலதான் தமிழக அரசு 3 விருதுகள் கொடுத்தாங்க. முன்னெல்லாம் சிறுபடங்களுக்கு உதவித்தொகை கொடுப்பாங்க. இப்ப அதெல்லாம் கொடுக்கிறதில்லன்னு நினைக்கிறேன். உதயநிதி சினிமால இருந்து போய் அமைச்சர் ஆகியிருக்காரு. அவர் நலிந்த கலைஞர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்குறது, உதவித்தொகை வழங்குறது மாதிரியான விஷயங்கள முன்னெடுக்கணும்.

என் உடம்புக்கு பெரிசா ஒன்னும் இல்லப்பா. வயசான எல்லாத்துக்கும் வர்ற உபாதைகள்தான். சிகிச்சைகள் எடுத்துக்கிட்டு இருக்கேன். இருக்குற வரைக்கும் இருந்துட்டு சந்தோஷமா போக வேண்டியதுதான். இப்பவும் இரண்டு கதை தயாரா இருக்கு. தயாரிப்பாளர் கிடைச்சா உடனே ஷூட்டிங் போயிடலாம். நல்ல தயாரிப்பாளர் இருந்தா சொல்லுங்க தம்பி...'’ என அவ்வளவு அயர்ச்சியிலும் தளர்விலும்கூட நம்பிக்கையோடு வழியனுப்பி வைத்தார்.