Published:Updated:

தி வாரியர்: கண் கலங்கிய லிங்குசாமி; மணிரத்னம், ஷங்கர் முதல் விஷால் வரை - யார் என்ன பேசினார்கள்?

'தி வாரியர்' பட விழாவில்...

"எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம். எனக்கு ஆபீஸ் இல்லாமல் இருக்கலாம். என் கார் போகலாம். என் மனிதர்கள் என் நண்பர்கள் என் வாழ்க்கை மொத்தமும் இருப்பார்கள்..." - இயக்குநர் லிங்குசாமி

Published:Updated:

தி வாரியர்: கண் கலங்கிய லிங்குசாமி; மணிரத்னம், ஷங்கர் முதல் விஷால் வரை - யார் என்ன பேசினார்கள்?

"எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம். எனக்கு ஆபீஸ் இல்லாமல் இருக்கலாம். என் கார் போகலாம். என் மனிதர்கள் என் நண்பர்கள் என் வாழ்க்கை மொத்தமும் இருப்பார்கள்..." - இயக்குநர் லிங்குசாமி

'தி வாரியர்' பட விழாவில்...
நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் லிங்குசாமி ரிட்டர்ன்ஸ். தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, நதியா உட்படப் பலரை வைத்து அவர் இயக்கியுள்ள `தி வாரியார்' விரைவில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ளது. அதனையொட்டி சென்னையில் படத்துக்கான ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, விக்ரமன், ஷங்கர், மணிரத்னம், ஆர்.கே.செல்வமணி, சிவா, பார்த்திபன், பாலாஜி சக்திவேல் ஆகியோருடன் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ஆர்யா, ஆதி, ராம்பொத்தினேனி, தேவி ஸ்ரீ பிரசாத் எனப் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். விழாவில் நடந்த சில சுவாரஸ்யங்கள் இதோ...
'தி வாரியர்' விழாவில்...
'தி வாரியர்' விழாவில்...

* "தெலுங்கில் கமெர்ஷியல் படங்கள் பண்றது பெரிய சவால். அதில் ராம் மிகப்பெரிய ஹிட்ஸ் கொடுத்தவர்" என ராம்பொத்னேனியை தமிழுக்கு வரவேற்று ஆர்யா பேசியதை இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்தே ஆமோதித்தார்.

* இயக்குநர் விக்ரமன், "இங்கே மேடையில் உள்ள இயக்குநர்கள் அனைவரையும் எங்க இயக்குநர் சங்க பொதுக்குழுவில் கூட பார்த்தது கிடையாது. இயக்குநர்கள் சங்கம் சார்பாக எதாவது தீர்மானம் நிறைவேற்ற இருந்தால், அதை இங்கேயே போட்டுக்கலாம் போலிருக்கு..." என்றார் நகைச்சுவை பொங்க!

உடனே ஆர்.கே.செல்மணி தன் டர்ன் வரும் போது, "விக்ரமன் சார் சொன்னது கரெக்ட்தான். ஷங்கர் சார், சிவா சாரையெல்லாம் சங்கத்துல பார்க்க முடியாது. நானும் லிங்குசாமியும் பேசும் போது எடுத்த முடிவை இங்கே இவ்வளவு இயக்குநர்கள் இருப்பதால் அறிவிக்கிறோம். இயக்குநர் பாரதிராஜா சாருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க உள்ளோம். அதுக்காக ஒரு வருஷமா ஒர்க் பண்ணிட்டு இருக்கோம். டி.எஸ்.பி.சாரும் அதில் பங்கேற்கணும். அந்தப் பாராட்டு விழாவை மொத்த இண்டஸ்ட்ரியும் திரும்பிப்பார்க்கணும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

'தி வாரியர்' நிகழ்ச்சியில் பங்குபெற்ற இயக்குநர்கள்
'தி வாரியர்' நிகழ்ச்சியில் பங்குபெற்ற இயக்குநர்கள்

* விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, "'ஜாஸ்தி பேசாதீங்க'ன்னு லிங்குசாமி சொல்லி அனுபிச்சார். இங்கே இவ்ளோ வாரியர்ஸ் வருவாங்கனு எனக்குத் தெரியாம போச்சு. இவ்ளோ பேர் இங்கே இருக்கறது தெரிஞ்சா நான் வார் சீன்ஸை (போர்க்களக் காட்சிகள்) இங்கே ஷூட் பண்ணியிருப்பேன். கஷ்டப்பட்டு ஹைதராபாத்துல போய் பண்ணியிருக்கோம். லிங்கு பாசிட்டிவ் பர்சன். இயக்குநர்கள் நாங்க அடிக்கடி சந்திக்கறதுக்கு மையப்புள்ளி லிங்குதான். ஹைதராபாத்துல எங்க பட ஷூட் போறப்பதான், லிங்குவின் இந்தப் படமும் ஷூட் போச்சு. நாங்க மெதுவா பின்னாடி வந்திட்டு இருக்கோம். நீங்க முன்னாடி கோடு போட்டால் பின்னாடி நாங்க ரோடு போடுறோம்" எனக் கலகலத்தார் மணி.

* "இந்தப் படத்தோட தயாரிப்பாளரை எனக்கு 23 வருஷமா தெரியும். நான் ஒரு உதவி ஒளிப்பதிவாளரா ஹைதராபாத்திற்கு போனப்ப எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் அவர். ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டார். என்னோட ஒவ்வொரு படமும் வெளியானதும் அதன் நிறைகுறைகளை ஒரு நல்ல நண்பரா லிங்கு சார் எடுத்துச் சொல்வார். ஹீரோ ராமின் எனர்ஜி ஆச்சரியப்பட வைக்கும். கீர்த்தி, தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினா வலம் வருவாங்க..." என மனதிலிருந்து பேசினார் 'அண்ணாத்த' சிவா.

மணிரத்னம்
மணிரத்னம்

* நேற்று இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதியின் பிறந்தநாள் என்பதால், அதிதிக்கான வாழ்த்தை ஷங்கரிடம் தெரிவித்தார்கள். பஞ்சாபில் ராம் சரணின் படப்பிடிப்பிலிருந்து நண்பர் லிங்குவிற்காக இந்த விழாவிற்கு வந்திருந்தார் ஷங்கர்.

* விழா துவங்கிய பிறகுதான் விஷால் வந்தார். வந்ததும் பாரதிராஜாவின் காலில் விழுந்து ஆசி வணங்கினார். "இன்னிக்கு என்னை எல்லாரும் ஆக்‌ஷன் ஹீரோனு சொல்றதுக்குக் காரணம் ரெண்டு சாமிதான். ஒரு சாமி இந்த (லிங்கு) சாமி... இன்னொரு சாமி மேல இருக்கறவரு..." என்று நெகிழ்ந்தார் விஷால்.

ராம், கீர்த்தி ஷெட்டி
ராம், கீர்த்தி ஷெட்டி
ஷங்கர்
ஷங்கர்

* "எல்லாருமே எந்நேரமும் எதுக்காகவோ போராடிட்டு இருக்கோம். அப்படிப் பார்த்தால் எல்லாருமே வாரியர்ஸ்தான். நம்ம வீட்டுப் பசங்களோட பாடல்களில் எதெல்லாம் ரிப்பீட் மோட்ல இருக்குதோ அதெல்லாம் ஹிட் ஆகிடும். என் வீட்டுப் பசங்களோட ரிப்பீட் மோட்ல 'புல்லட் சாங்'தான் இப்ப இருக்குது. கீர்த்தி சுரேஷ் மாதிரி கீர்த்தி ஷெட்டியும் தேசிய விருது வாங்க வாழ்த்துறேன். லிங்குசாமி நல்ல ரசிகன். கவிதைக்காரன். அவரோட ரசனை முழுப்படத்திலும் இருக்கும். கொரோனா டைம்ல எனக்கு நிறைய பிரச்சினைகள் வந்துச்சு. அப்ப அவர்கிட்டதான் நிறைய ஷேர் பண்ணிக்குவேன். நல்ல நண்பர் அவர்" என்றார் ஷங்கர்.

* விழாவின் நிறைவாக லிங்குசாமி பேச வரும்போது குரல் உடைந்து, வார்த்தையற்று சிறிது நேரம் மௌனத்தில் கரைய... இதை கவனித்த ஹீரோ ராம், உடனே லிங்குவைக் கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார். சிறிது அமைதிக்குப் பின் பேசினார் லிங்கு.

லிங்குசாமி
லிங்குசாமி

"நான் மனுஷங்களை சம்பாதிச்ச கோடீஸ்வரன். என்னை இழந்தாலும் என் நண்பர்களை இழக்காமல் வாழ்ந்தாலே அதுவே மிகப்பெரிய சந்தோஷம். மணி சாருக்கு போன் செய்து கூப்பிட்டதும், 'எங்கே... எப்போ?'ன்னு அவர் படம் மாதிரி கேட்டார். நான் எது கேட்டாலும் ஷங்கர் சார் பண்ணுவார். யார் யார் வீட்டு வாசல்ல நானும் பிருந்தா சாரதியும் வாய்ப்புக் கேட்டு நின்னமோ அவங்க எல்லாம் என் விழாவுக்கு வந்து நிற்கிறாங்க என்பதை நினைக்கும் போது இதைவிட பெரிய வெற்றி வேற என்ன இருக்கு!

எங்க அம்மா உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் இருக்கிறார். இல்லன்னா இந்த விழாவுக்கு அவங்களையும் அழைச்சிட்டு வந்திருப்பேன். எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம். எனக்கு ஆபீஸ் இல்லாமல் இருக்கலாம். என் கார் போகலாம். என் மனிதர்கள், என் நண்பர்கள், என் வாழ்க்கை மொத்தமும் இருப்பார்கள். நான் ஊர்ல இருந்து எதுவும் எடுத்துட்டு வரல. என் வாழ்க்கையில் நண்பர்களை மட்டும் சம்பாதிக்கறதையே குறிக்கோளா வச்சிருப்பேன்" என கண்ணீர் மல்க நெகிழ்ந்தார் லிங்கு.