Published:Updated:

``கமல் சார் கலைஞன்... பிடிக்காம அவர் `உத்தமவில்லன்'ல நடிக்கலை... ஆனா?!'' - லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி

லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்’ படம் வெளியாகி 20-வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் படம் குறித்தும், லாக்டெளன் நாள்கள் குறித்தும் லிங்குசாமியிடம் பேசினேன்.

Published:Updated:

``கமல் சார் கலைஞன்... பிடிக்காம அவர் `உத்தமவில்லன்'ல நடிக்கலை... ஆனா?!'' - லிங்குசாமி

லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்’ படம் வெளியாகி 20-வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் படம் குறித்தும், லாக்டெளன் நாள்கள் குறித்தும் லிங்குசாமியிடம் பேசினேன்.

இயக்குநர் லிங்குசாமி

`ஆனந்தம்’ படத்தின் கதை எப்படி உங்களுக்குள் உருவாச்சு?

"என்னுடைய முதல் படத்தை எங்க குடும்பத்தில் நடந்த விஷயங்களை வெச்சே எடுக்கலாம்னு முடிவு பண்ணதுக்குப் பிறகு, அது ஒரு முழுக்கதையா இல்லை. தனி, தனி சம்பவங்களா இருந்துச்சு. அதுக்கு எப்படி திரைக்கதை எழுதுறது; இது ஒரு கதையா எப்படி மாறும்னு எனக்குள் ஒரு குழப்பம். சரி, முதல்ல இந்தச் சம்பவங்களை எல்லாம் யார்கிட்டயாச்சும் சொல்லலாம்னு நினைச்சப்பதான், நண்பர் பிருந்தா சாரதி ஊருக்கு வந்திருந்தார். அவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னதும், `இது நல்ல படமா வர்றதுக்குக்கான வாய்ப்புகள் அதிகம். உனக்கு இன்னும் எத்தனை சம்பவங்கள் தோணுதோ, அதையெல்லாம் எழுதி வை. இப்பவே அதை எப்படி திரைக்கதைக்குள்ள அடக்கணும்னு யோசிக்க வேணாம். எல்லா சம்பவங்களையும் எழுதுனதுக்கு அப்புறம், இதை எப்படி திரைக்கதையா மாத்தலாம்னு நாம பேசுவோம்'னு சொன்னார். பிருந்தா சாரதிகிட்ட மட்டுமல்லாமல், அப்போ என் ரூமுக்கு அடிக்கடி வர்ற வசந்த பாலன், மணி பாரதி, பாலாஜி சக்திவேல், நந்தா பெரியசாமினு எல்லார்கிட்டேயும் இந்தக் கதையைச் சொல்லுவேன். ஒவ்வொருத்தர்கிட்ட கதையைச் சொல்லும் போதும், ஒரு வேல்யூ பாயின்ட் படத்துல சேரும். இப்படி ரொம்ப நாளா பார்த்து, பார்த்து பண்ணதால இந்தக் கதையோட பலம் அதிகம்.

ஆனந்தம், லிங்குசாமி
ஆனந்தம், லிங்குசாமி

நான் இந்தக் கதையை எந்தத் தயாரிப்பாளருக்குச் சொன்னாலும், `என்னங்க படத்துல எந்தப் பிரச்னையும் இல்ல. படம் முழுக்கவே பாசிட்டிவ்வான ஆட்களா இருங்காங்க’னு சொல்லுவாங்க. பலர் அப்படி சொல்லியும் இந்தக் கதைக்குத் தேவையில்லாத விஷயங்கள் எதையும் நான் திரைக்கதைல சேர்க்கலை. ரொம்ப இயல்பா இருக்கணும்னு நினைச்சு நினைச்சுப் பண்ணேன். குடும்ப படங்கள்னா பக்கம் பக்கமா வசனம் இருக்கும்னு சொல்லுவாங்க; அதை இந்தப் படத்தில் தவிர்த்தேன். எமோஷனை திணிக்கக் கூடாதுனு முடிவு பண்ணேன். ஏன்னா, அந்த எமோஷனல் சம்பவங்கள் எல்லாமே எங்க வீட்ல நடந்திருந்ததுனால, அதை அப்படியே எடுத்தாப்போதும்னு நினைச்சேன். அப்படி எடுத்ததால்தான் அந்தக் காட்சிகளில் உயிர் இருந்துச்சு.’’

தயாரிப்பாளர் எப்படி கிடைச்சார்?

ஆனந்தம்
ஆனந்தம்

"இந்தக் கதையை நாம எடுத்தால் நிச்சயம் நல்லா வரும்னு நம்புனேன். ஏன்னா, அந்த எமோஷன்களுக்குள்ளதான் நான் வாழ்ந்தேன்கிறதால, இந்தக் கதையை நாம எடுத்தால், அதில் வேற எந்தப் படங்களின் சாயலும் வராதுனு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதே நம்பிக்கை இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சாருக்கும் இருந்ததுனாலதான், அது படமாச்சு. அவரும் கூட்டுக் குடும்பம்கிறதால, இந்தக் கதையோடு ரொம்பவே கனெக்ட் ஆகிட்டார். முதல் முறை கதைகேட்கும் போது எந்தெந்த இடங்களில் அழுதாரோ, அதே இடங்களில் எல்லாம் அடுத்தடுத்து கதை கேட்கும் போதும் அழுதார். செளத்ரி சார் மாதிரி ஒரு கதை ஞானம் இருக்கிற தயாரிப்பாளர் அமையாமல் இருந்திருந்தால், `வானத்தை போல’ படத்துக்கு அப்புறம் இது படமாகி இருக்காது.’’

‘ஆனந்தம்’ படத்தோட இரண்டாம் பாகம் எடுக்குற ஐடியா இருக்கா?

"இந்த 19 வருஷத்துல ’ஆனந்தம்’ படம் எப்போலாம் டிவியில போடுறாங்களோ, அப்போலாம் ஒரு புது ஆள் என்கிட்ட பேசிடுவார். இந்தப் படம் பத்தின அவரோட ஞாபகங்களை என்கிட்ட பகிர்ந்துப்பார். பல பேர், ``ஆனந்தம்’ மாதிரி இன்னொரு படம் எடுங்க’னு சொல்லுவாங்க. `ஆனந்தம்’ படத்துக்காக நான் எழுதி எடுக்காமல் போன காட்சிகளே ஒரு வெப் சீரிஸ் எடுக்கிற அளவுக்கு இருக்கு. நேரம் கிடைக்கிறப்போ, அந்தக் காட்சிகளை எல்லாம் எடுத்துப் படிப்பேன். இவ்வளவு விஷயங்களை எழுதி மட்டுமே வச்சிருக்கோமேனு தோணும். நேரம் சரியா அமைஞ்சா, `ஆனந்தம்’ படத்துக்கு முந்தைய பகுதியை படமா எடுக்கலாம்னு ஐடியா இருக்கு. நாங்க சின்ன வயசுல இருந்தப்போ நடந்த விஷயங்களை நேரம் கிடைக்கும்போது தொகுத்துட்டு இருக்கேன். அது எதிர்காலத்துல படமாகுதானு பார்க்கலாம்.

அப்பாஸ், சினேகா
அப்பாஸ், சினேகா

`ஆனந்தம்’ படம் ரிலீஸாகி 20-வது வருஷம் ஆரம்பிச்சிருக்க இந்த நேரத்துல நான் பலருக்கு நன்றிகள் சொல்லணும்னு ஆசைப்படுறேன். முதலில் கேமராமேன் வில்சன் சார். எனக்கு முதல் படம் இயக்கும்போது பல விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கும். அதையெல்லாம் எனக்கே தெரியாமல் எனக்கு சொல்லிக் கொடுத்தார். உதாரணத்துக்கு ஒரு சீன் முடிச்சிட்டு அடுத்த சீனுக்கு கேமராவை எங்க வைக்கிறதுன்னு எனக்கு ஒரு குழப்பம் இருக்கும். அதை மத்தவங்களுக்கு காட்டிக்கொடுக்காமல், அவரே ஒரு இடத்துல போய் வைப்பார். அப்போ நான் புரிஞ்சுப்பேன்; அங்கதான் கேமராவை வைக்கணும்னு. இப்படி உட்கார வெச்சு பாடம் எடுக்காமல், வேலை நடக்கும்போதே எனக்குத் தெரியாததை எல்லாம் சொல்லிக்கொடுத்தார். அடுத்து இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் சார். இந்தப் படம் பண்ணும்போது அவர் செம பீக்ல இருந்தார். கம்போஸிங்கிற்கு டைம் வாங்குறதே ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி பரபரப்பான வேலைகளுக்கு நடுவிலும் எனக்கு அற்புதமான பாடல்களைக் கொடுத்தார். அடுத்து வசனம் எழுதிய பிருந்தா சாரதி. `ஆனந்தம்’ படத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்கூட சேர்ந்து வேலை பார்த்திட்டு இருக்கார். இப்படி ஓர் ஆள் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். ஒரு படத்துக்கு இயக்குநரா நான் எவ்வளவு உழைக்கிறேனோ, அதே அளவுக்கான உழைப்பை பிருந்தா சாரதியும் கொடுப்பார். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சார், யுகபாரதி, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், நந்தா பெரியசாமி, மணிபாரதி அப்புறம் இந்தப் படத்தில் என்கூட உதவி இயக்குநரா வேலை பார்த்த எல்லாருக்கும் நன்றிகளைச் சொல்லிக்கிறேன்.’’

லாக் டெளன் நாள்கள் எப்படிப் போயிட்டிருக்கு?

Lingusamy, Madhavan, Meera Jasmine
Lingusamy, Madhavan, Meera Jasmine

நிச்சயமா முடியல. ஆரம்பத்துல நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சோம். ஆனா, வேலை இருந்தாதானே ரெஸ்ட் எடுக்கமுடியும். ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து போர் அடிச்சிடுச்சு. நாலு இடங்களுக்குப் போகணும், மனிதர்களைச் சந்திக்கணும், வேலைகள் செய்யணும், அந்த டயர்ட்லதான் போய் தூங்கணும். சும்மாவே இருந்தோம்னா எப்படித் தூக்கம் வரும். ராஜு மாஸ்டர் டான்ஸ் பண்ணும்போது `எப்பா இந்த பாட்டை நல்லா பண்ணணும்பா... இல்லைன்னா சும்மா இருக்குறவன் எதாவது சொல்லிட்டுப் போயிடுவான்'னு சொல்லுவார். உண்மையிலேயே இப்போ சும்மா இருக்குறவங்கமேல எனக்கு பெரிய மரியாதையே வந்துடுச்சு. சும்மா இருக்கிறது சாதாரண விஷயமே கிடையாது. அரசு வெளில வரக்கூடாதுன்னு சொன்னதுல இருந்து கிட்டத்தட்ட 2 மாசம் கழிச்சு இப்பதான் வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளியிருக்க இந்த ஆபிஸுக்கு வந்திருக்கேன். ஆரம்பத்துல நிறைய எழுதலாம்னு தோணுச்சு. ஆனா, கெளதம் மேனன் சொன்ன மாதிரி உட்கார்ந்தா 2 வரிக்கூட எழுத தோணமாட்டேங்குது. இதுல எதாவது பண்ணணும்னு பண்ணா அது சரியா வராது. இந்த லாக்டெளன்ல எனக்குப் பர்சனால நடந்த நல்ல விஷயம்னா எது பண்ணணும்கிறதைவிட, எது பண்ணக்கூடாதுன்ற ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. மனசு ரெஃப்ரஷ் ஆகியிருக்கு.

`சண்டைக்கோழி' ஆரம்பிச்சு, இப்ப `சண்டைகோழி-2' வரைக்கும் 5 படங்கள் யுவன்கூட பயணிச்சிருக்கீங்க... ஏன் இப்போலாம் தொடர்ந்து யுவன்?

"லவ் சீக்வென்ஸ்லாம் சொல்லும்போது அவர்கிட்ட இருந்து ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி வந்துடும். நாங்க தயாரிச்ச `தீபாவளி' பட பாடல்கள்லாம் ரொம்ப சூப்பரா இருக்கும். எனக்கு அவர் உடன்பிறந்த சகோதரர் மாதிரி. அவர் ஸ்டுடியோ எனக்கு வீடு மாதிரி. பெரிய குடும்பத்துல இருந்து வந்த எந்த ஒரு ஈகோவும் அவர்கிட்ட இருக்காது. புதுசு புதுசா ட்ரை பண்ணுவார். இன்னும் 15 வருஷம் கழிச்சுப் பார்த்தாக்கூட அவர் ஃபீல்டுல நிச்சயம் இருப்பார். `பியார் பிரேமா காதல்' பட பாடல்கள் கேட்டுட்டு அவருக்கு போன் பண்ணேன். `யுவன் சவுண்ட்லாம் ரொம்ப புதுசா இருக்கு'னு சொன்னேன். அவர் இசைல ஒரு ஸோல், ஒரு உயிர் இருக்கு. அவர் அப்பாகிட்ட இருந்துவந்த விஷயம் அது.''

யுவன்
யுவன்

ரஜினியின் தீவிர ரசிகர் நீங்கள். அவருடனான உங்கள் அனுபவம் சொல்லுங்க?

"சில வருஷங்களுக்கு முன்னாடி சோழிங்கர்ல ரஜினி சார் ரசிகர் பெரிய விழா ஒன்று ஏற்பாடு செஞ்சிருந்தார். அந்த விழாவுக்கு நான் போயிருந்தேன். விழா முடிஞ்சி திரும்பும்போதே ரஜினி சார்கிட்ட இருந்து போன். `கஷ்டமா இருந்துச்சா, ரொம்ப தூரம் ட்ராவல்ல... கூட்ட நெரிசல்ல கஷ்டப்படுத்திட்டாங்களா'னு விசாரிச்சிட்டே இருந்தார். அவர் அப்படிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. `இப்படி ஒரு விழாவுல பேச வாய்ப்பு கிடைச்சதுக்கு நான்தான் சார் நன்றி சொல்லணும்'னு சொன்னேன். ஊர்ல குட்டிப் பையனா சினிமாவுல பார்த்தப்போ அவர்மேல இருந்த ஒரு மயக்கம் எனக்கு இப்ப வரைக்கும் இருக்கு.''

கமல்ஹாசனுடனான உங்கள் பயணம் குறித்து சொல்லுங்க?

'ஆனந்தம்' முடிச்சவுடனே கமல் சாருக்குத்தான் நான் போய் அடுத்த படத்துக்கான கதை சொன்னேன். மம்முட்டிக்கு அடுத்து கமல் சார்க்கு ஏத்த மாதிரி கதை அமைஞ்சது. நான் சொன்ன கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ராஜ்கமலுக்கு பண்ணலாம்னு சொன்னார். ஆனா, அப்புறம் பண்ணமுடியலை. அந்தக் கதையை அப்படியே வெச்சிருக்கேன். எதிர்காலத்தில் பார்க்கலாம்.

லிங்குசாமி, தரணி, கமல்ஹாசன், ஏ.ஆர்.முருகதாஸ்
லிங்குசாமி, தரணி, கமல்ஹாசன், ஏ.ஆர்.முருகதாஸ்

`உத்தம வில்லன்' படத்தை தயாரிச்ச அனுபவம் சொல்லுங்க?

"`த்ரிஷ்யம்' ரீமேக் பண்ணலாம்னுதான் முதல்ல ஆரம்பிச்சோம். எங்களுக்கு `தேவர் மகன்' மாதிரி, `அபூர்வ சகோதரர்கள்' மாதிரி கமல் சார்கூட ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஆனா, அது அப்புறம் `உத்தம வில்ல'னா மாறுச்சு. கமல் சார்க்கு பிடிக்காம ஒரு ஷாட் கூட அந்தப்படத்துல வைக்கல. அவருக்கு பிடிக்காம அவர் ஒரு சீன் கூட நடிக்கவே மாட்டார். கமல் சார் மிகப்பெரிய கலைஞன். படம் ஓடுறது, ஓடாதது யார் கையிலயும் இல்ல. எனக்கு அந்தப் படம் பிடிக்கும். பிடிச்சக் காட்சிகள் நிறைய இருக்கு. ஃப்ளாஷ்பேக்ல சில சீன்ஸ் கொஞ்சம் நீளம். அதுதான் மிஸ் ஆச்சு. மத்தபடி லைவ் போர்ஷன் ரொம்ப நல்லாயிருக்கும். கெளதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ்னு நிறையபேர் எனக்கு போன் பண்ணி லைவ் போர்ஷன்ஸ் பத்தி அவ்ளோ பாராட்டி பேசினாங்க. ஆனா, படத்தோட வெற்றி தோல்வி நம்ம கையில் இல்லை."