தமிழில் பொங்கல் விருந்தாக 'வாரிசு', 'துணிவு' வெளியாகிறது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை வருவதால் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதாக வந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் 'வீர நரசிம்ம ரெட்டி', அகில் அக்கினேனியின் 'ஏஜெண்ட்' ஆகிய படங்களுடன் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' படமும் வெளியாகின்றன. அஜித்தின் 'துணிவு' படத்தின் தெலுங்கு மொழிமாற்ற படமும் இதே நாளில் அங்கு வெளியாகிறது.
இந்நிலையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதுடன், அதற்கு அதிக தியேட்டர்களும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் 'வாரிசு', 'துணிவு' படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்கு திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரிக்கிறேன்” என்றும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். '

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிக்கு வந்திருந்த இயக்குநர் லிங்குசாமியிடம் கேட்ட போது, ''சினிமாவின் பொற்கால காலகட்டம் இது. பான் இண்டியா என்ற வார்த்தை இப்போதுதான் புதிதே தவிர, தமிழ்ல இருந்து பல மொழிகளுக்கு படங்கள் செல்வது பல காலமாகவே நடக்கற ஒன்றுதான். அதுவும் ஒடிடி வந்த பிறகு, நம்ம படத்தை எங்கோ ஒரு மாநிலத்தில் இருந்தபடி பார்க்க முடியும். இப்படி ஒரு காலகட்டத்துல இப்படி ஒரு பிரச்னை வரவே கூடாது. தமிழ்ப் படங்களை வெளியிட தியேட்டர்கள் தரமுடியாதுனு பிரச்னை இருந்ததாக சொன்னால், அதோட விபரீதம் எந்தளவுக்கு செல்லும்னு வார்த்தைகளால சொல்ல முடியல. 'வாரிசு'க்கு முன்னும் 'வாரிசு'க்கு பின்னும்னு ஆகிடும். அந்தளவுக்கு விஷயம் மிகப் பெரியதாகிடும். தமிழ், தெலுங்கு இந்த ரெண்டு பட உலகிலும் தரமான ஆட்கள் இருக்கோம். இருக்காங்க. அவங்க பேசி இதற்கு ஒரு சுமுகமான தீர்வை தரணும்.
இப்படி ஒரு பிரச்னையை அங்கே குறுகிய எண்ணத்தோடு யாராவது நினைத்திருந்தால், அந்த எண்ணத்தை உடனே மாத்திக்கணும். அதை மாத்திக்கலைனா, நான் சொன்னது போல 'வாரிசு'க்கு முன், 'வாரிசு'க்கு பின்னு சினிமாவே மாறிடும். இங்கே இருக்கற சூப்பர் ஸ்டார் விஜய், அங்கே தெலுங்கு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுத்து படம் செய்திருக்கார். இதை ஒரு பிரச்னையாகவே ஆக்கியிருக்க கூடாது. எனக்குத் தெரிந்து இது சின்னதொரு சலசலப்புனு தான் நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும்.'''' என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.