
- கிருஷ்ணா
எப்படி இருக்கும் `விக்ரம்', அதில் கமல் எப்படி இருப்பார்? எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் என்ற அரிய கூட்டணி அமைந்து பரபரப்பில் வைத்திருக்கிறது.
‘‘இது எங்க படம், நல்லபடியா வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக, சில சினிமாக்கள்லதான் எல்லோர் நடிப்பும் பிரமாதமா இருக்கும். நீங்கள் சொன்ன மாதிரி கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில்னு முதல் கட்டமே பரபரப்பு தந்தாலும் ஒரு சின்ன டென்ஷன் மனசுக்குள்ளே இருக்கிறது உண்மை. முடிந்த அளவு வித்தியாசப்படுத்தித் தருவதில் பாடுபட்டிருக்கோம். இதோ, முதல் பிரதி பார்த்தபோது அது இன்னும் தீர்மானமாகத் தெரியுது. மக்கள் அவங்களுக்குப் பிடிச்ச ஒரு படத்தைப் பார்க்க எதிர்பார்ப்போடு காத்திருக்காங்க. எனக்கு நான் விரும்புகிற மாதிரியும், அதையே மக்கள் விரும்புகிற மாதிரியும் ஒரு படம் பண்ணணும்னு ஆசை.அதுவும் கமல் ரசிகனான எனக்கு கமல் சார் படம் வழியாவே அந்த வாய்ப்பு கிடைச்சது. சந்தோஷமா ‘விக்ரம்' எடுத்திருக்கிறேன்'' தன்மையாகப் பேசுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இன்றைக்கு விரும்பப்படும் இளம் இயக்குநர். சினிமாவுக்கு வந்து மேலே, உயரே, உச்சியில் என எகிறிக்கொண்டிருக்கும் ஸ்டேட்டஸ் அவரிடம் இருக்கிறது.

`` ‘மாஸ்டர்' வெற்றிக்குப் பிறகு ‘விக்ரம்' அமைஞ்சது எப்படி?’’
‘‘ ‘கைதி'யோட இறுதிக்கட்ட வேலைகள், ‘மாஸ்டர்’ படப்பிடிப்புன்னு இருக்கும்போது கமல் சார் கிட்ட இருந்து அழைப்பு வந்தது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் அவர் இருக்க, படப்பிடிப்புத் தளத்திலேயே அந்தச் சந்திப்பு. முதலில் ராஜ்கமலுக்காக ஒரு படம் செய்யப் போய், லாக்டௌன் காலத்தில் ‘நாமே இணைந்து ஒரு படம் செய்தால் என்ன’ன்னு அவர் கேட்கிற அளவுக்கு விரிந்தது. அந்தக் கணமெல்லாம் ஒரு புதுக் கதவு திறந்த மாதிரி இருக்கு. இன்னும் நல்ல முயற்சிகளுக்கு, தேட வேண்டிய திசைகளுக்குன்னு என்னைத் தகுதிப்படுத்திக்கிற நேரம் வந்திருச்சுன்னு நினைச்சேன். ஒரு கதையை இரண்டரை மணி நேரம் சொல்லி, அவருக்கும் பிடித்திருந்தது.
அவருடைய நிறைந்த அனுபவத்தில் அவர் செய்யாத கேரக்டர், செய்ய ஆசைப்பட்ட கேரக்டர்னு இருக்குமான்னு தெரிந்துகொள்ள நினைத்தபோது அவரும் ஒன்று சொன்னார். அதையும் இதில் கொண்டுவந்து அவகாசம் எடுத்துக்கிட்டுச் செய்த கதைதான் ‘விக்ரம்.' இவ்வளவு அழகான கமலை, இவ்வளவு ஸ்டைலான கமலை, இவ்வளவு பவர்ஃபுல்லான கமலை சீனுக்கு சீன் ஆச்சரியமா பார்ப்பாங்க. கமல் சார்னாலே ஒரு ஸ்பெஷல் கெமிஸ்ட்ரி இருக்கு. அதனால் படத்தில் கமலும் இருக்கணும், கேரக்டரும் இருக்கணும், கதையும் சொல்லணும். சேலஞ்சிங்கான வேலை இது. கமல் படம்னு தேடி வர்றவங்களுக்கு முழுத் திருப்தி இருக்கும். கேரக்டர் என்ன, கதை என்னன்னு விஷயம் தேடி வர்றவங்களுக்கு அதுவும் இருக்கும். கலர்ஃபுல்லா, பவர்ஃபுல்லா, கலகலன்னு கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில்னு இவங்க மூணு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு வர்றவங்களுக்கும் நிச்சயமா ஆச்சரியங்கள் காத்திருக்கு.''

`` ‘விக்ரம்' டிரெய்லர் எக்கச்சக்க எதிர்பார்ப்பை எழுப்பியிருக்கு...’’
‘‘ஆர்கனைஸுடு க்ரைம், ட்ரக் டீலிங், அதோடு தொடர்புடைய ஆக்ஷன் கதைதான் இது. அதுவும் சும்மா இல்லாம அந்த ஆக்ஷனுக்கான காரணங்களும் சரியா இருக்கும். கமல் சார், சேது, பகத் எல்லோருமே தங்கள் ஆன்மாக்களைக் கொடுத்திருக்காங்க. இவங்க எல்லோரும் உண்மையா உழைச்சிருக்கிறதால அவுட்புட்டும் அவ்வளவு அழகா வந்திருக்கு. டிரெய்லரில் ‘இங்கே புலி, கரடி, சிங்கம்னு நிறைய இருக்கு. விடியலை யார் பார்க்கப்போறாங்க'ன்னு கமல் சார் சொல்றார் இல்லையா, அதுவும் கதையோட அடிப்படை அம்சம்தான். எமோஷன் மீறும்போது, மனசு உடைஞ்சுபோகும்போது, உரிமை பறிபோகும்போதுதானே சண்டையும் ஆக்ரோஷமும் வரும். இது எமோஷனலான ஆக்ஷன் படம்.''

``எப்படி கமல், சேதுபதி, பகத் பாசில்னு பெருங்கூட்டணி அமைச்சீங்க?’’
‘‘கமல் சார் படம் என்றதும் நடந்தது. இது கமல் சாரைக் கொண்டாட எடுத்த படம். நான், சேது அண்ணா, பகத் பாசில் எல்லோருமே அவரோட தீவிர ரசிகர்கள். நான் ‘இவங்க இருந்தால் நல்லாருக்கும்’னு சொன்னபோது எனக்கு விருப்பமான டெக்னீஷியன்களையும் கொடுத்தார். எல்லாம் தயாராகி ஒரு முழு பைண்ட் நோட்டைக் கொண்டுபோய் கொடுத்தபோது, ‘இதில் நான் நடிக்கிற வேலையை மட்டும் பார்த்துக்கிறேன்'னு சொன்னார். படப்பிடிப்பு, டப்பிங் எல்லாம் முடிஞ்ச பின்னாடிதான் அவர் படம் பார்க்கவே வந்தார். எங்களுக்கு ஒவ்வொரு ஷெட்யூல் முடிந்ததும், அவர் அபிப்பிராயம் என்னவாக இருக்கும்னு தெரிஞ்சுக்க முயன்ற போதுகூட நிறைந்த புன்னகைதான் கிடைக்கும். அவர் எங்க மேல வச்சிருந்த நம்பிக்கையும் எங்களுக்குக் கொடுத்த நல்ல இடமும்தான் இந்தப் படம்.
ஒரு இடத்தில்கூட ஈகோ எழுந்ததில்லை. மூணு பேரும் ஒருத்தரையொருத்தர் ரசிக்கிறதும், நேரம் முன்னே பின்னே ஆனாலும் உட்கார்ந்திருக்கிறதும் நடந்திருக்கு. ஒருத்தர் நடிக்கும்போது இன்னொருத்தர் இடம் கொடுக்கிறதை அருமையா செய்தாங்க. இது அனுபவத்தால் மட்டுமே வரும். கொடுத்த இடத்தை எடுத்துக்கிட்டு அதில் தன் நடிப்பை எப்படி வைக்கிறதுங்கறது ஒரு கலை. அதில் இவங்க மூணு பேருமே கெட்டி. எல்லோரும் சேர்ந்து வரும் சீன்களில் நேரம் அதிகமாகுமோன்னு நினைப்போம். எங்களுக்கு அதில் சரியான ஏமாற்றத்தைக் கொடுத்து உடனே முடிச்சு அசத்துவாங்க. மூணு பேரும் சேர்ந்த முதல் நாளிலிருந்து இது நடந்தது. இதுக்குக் காரணம் எல்லோரும் சினிமா மேல் இருக்கிற அக்கறையும், கமல் சார் மேலே வச்சிருக்கிற பிரியமும்தான்.''


``அவங்களுக்குள்ளே பாராட்டிக்கொள்வார்களா?’’
‘‘அது அடிக்கடி நடக்கும். மூணு பேருக்குமே ஸ்ட்ராங்க் கேரக்டர்ஸ். அவங்க எல்லோருக்கும் முட்டல், மோதல்னு படத்தில் நடந்துக்கிட்டே இருக்கும். இந்த இடத்தில் ‘சேது பின்னிட்டார்'னு பகத் சொல்ல, ‘நீங்க சும்மாவா'ன்னு சேது அண்ணா சொல்றதும் கேட்கும். கமல் சாருக்கும் சேதுபதி அண்ணாவுக்கும், பகத்திற்கும் அவங்களாகவே நடிக்கணும்னு எண்ணம் கிடையாது. கேரக்டராகவே மாறி விடுவதில் எங்கோ, எப்படியோ, எந்த விதத்திலோ மாறிட்டாங்க. அதனால்தான் அவங்க பெரிய நடிகர்கள்.
கமல் சார் எல்லாம் ஆறு தலைமுறை தாண்டி வந்துவிட்டார். எவ்வளவு அனுபவச் சேர்க்கை பாருங்க. இதெல்லாம் படத்தில் தெரியாமல் என்ன செய்யும்! கேரக்டரை நம்ம லெவலுக்குக் கொண்டு வரணும்னு ஹீரோக்கள் நினைச்சது போய், கேரக்டருக்குள்ளே நாம் எந்த அளவுக்குப் போகணும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த இடத்தில் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறவங்க இந்த மூணு பேரும். எனக்கு வேலை சுலபமா இருந்ததுன்னு சொல்லணும்.''

``அனிருத்திற்கும் உங்களுக்குமான நட்பு பலமா இருக்கே...’’
‘‘எனக்குன்னு எப்பவும் கொஞ்சம் தனியா உழைப்பார். அது இந்தப் படத்திலும் தெரியுது அவரோட ஆர்வமும் தேடலும் அற்புதம். முக்கியமான படங்களை எல்லாம் அவர்தான் கையில் வைத்திருக்கிறார். ஆனால் அது பழகுற விதத்திலும் குணநலனிலும் தெரியவே தெரியாது. அதேசமயம் எதிர்பார்ப்பையும் நழுவவிடக்கூடாதுன்னு நினைப்பார். எல்லாப் பாடலும் பிரயாசைப்பட்டு உருவாக்கியதுதான். இப்படியொரு ஆக்ஷன் படத்தையும் அவர் இதுவரைக்கும் பண்ணினதில்லை.''
``திடீர்னு சூர்யா உள்ளே வந்து ஆச்சரியப்படுத்திட்டாரே?’’
‘‘படம் பார்க்கும்போதுதான் இதை மக்கள் சர்ப்ரைஸா ரசிக்கணும்னு நினைச்சோம். ஆனால் பாருங்க, ஷூட் பண்ணிட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ளே எப்படியோ தெரிஞ்சுபோச்சு. சூர்யா சாரை இவ்வளவு அதிரடியாகப் பார்த்திருக்க மாட்டீங்க. நடிச்சுக்கொடுத்துட்டு ‘இந்த செட்டே எனக்குப் பிடிக்குது ஐயா'ன்னு பிரியமா சொல்லிட்டுப் போனார். சூர்யா சாரின் என்ட்ரிகூட கமல் சார் மீதான அன்பில் வந்ததுதான்.’’


``படத்துல சண்டைக்காட்சிகள் பலமாய் இருக்கே?’’
‘‘ஸ்டன்ட் அன்பறிவ். அனேகமா முக்கால்வாசி நாள்கள் எங்ககூடதான் இருந்தாங்க. இவ்வளவு நுணுக்கமா, வேகமா, தீவிரமா ஆக்ஷன் காட்சிகள் இதுக்கு முன்னாடி வந்திருக்குமான்னு தெரியலை. எல்லோருமே இதில் இருக்கிற சிரமங்களை ரசிச்சதுதான் காரணம். பெரிய கேன்வாஸில் சொல்ல வேண்டிய கதையை அப்படியே சொல்ல விட்டதுதான் ஒரு தயாரிப்பாளரா கமல் சார் செய்த, கைகூப்ப வேண்டிய காரியம். அதற்கு தயாரிப்பாளர்கள் மகேந்திரனும் டிஸ்னியும் செய்த உதவிகளும் முக்கியமானவை.''
``அடிக்கடி அட்லி, நெல்சன்னு கூட்டணி போட்டு விஜய்யைச் சந்திக்கிறீங்க..?’’
‘‘சும்மா எங்கேயாச்சும் பார்த்துப் பேசிக்குவோம். அவங்கவங்க வேலையில் இருக்கும்போது சின்ன பிரேக். சிரிப்பும் கலகலப்புமா பேச்சு நீளும். அதில சும்மா கதை, சம்பளம்னு பேசிக்கிட்டதைத்தான் விஜய்ண்ணா கிண்டலடித்து ஜாலி பண்ணிட்டார். இப்ப மனசெல்லாம் ‘விக்ரம்' மேலதான். உங்களை மாதிரியே நானும் ரொம்ப ஆர்வமா இருக்கேன். சேர்ந்துகூட பார்க்கலாம். நாம் விரும்புகிற கமல் படம்'' - அழகாகச் சிரிக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.