தொடர்கள்
சினிமா
Published:Updated:

காற்றாலைகளின் களத்தில் ஒரு த்ரில்லர்!

மிரள் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
மிரள் படத்தில்...

மிகவும் பாந்தமான குடும்பத் தலைவராக வருகிறார். குடும்பத்தைச் சூழ்ந்திருக்கிற உளவியல் சார்ந்த வகையில் உருவாக்கியிருக்கோம்.

``ஒரு த்ரில்லர்னா வீடு, ஹோட்டல், தனியறைன்னு கொண்டு வந்து அதில் பேய்களின் ஆட்டத்தைச் சேர்ப்பாங்க. அப்படி இல்லாமல் ‘Slasher Thriller'-ன்னு ஒரு புதுவகையை ‘மிரள்' படத்துல கொண்டு வந்திருக்கேன். ‘நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி மூலமாக வந்தவன் நான். இப்படி ஒரு கதைக்காகச் சில ஆரம்பப் புள்ளிகள் கிடைத்தன. அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். இந்தக் கதையை பரத்திடம் சொன்னபோது, ரொம்பப் பிடிச்சிருந்தது. வெற்றியடையும்னு நம்பினார். தயாரிப்பாளர் டில்லி பாபு மூலமாக இது நிஜத்திற்கு வந்திருக்கு. இப்போது இறுதியாக பார்வைக்கு ‘மிரள்' தயாரானபோது, அதற்கு நான் நியாயத்தைத் தந்திருக்கிறேன் என்பதுதான் என் மகிழ்ச்சி. முதல் பாதி முழுக்க அடுக்கடுக்காக வந்து விழுகிற முடிச்சுகள். அடுத்த பாதி அவை அவிழ்கிற விதம்னு நிச்சயம் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சம் இருக்காது. வெறும் த்ரில்லராக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது. பயம், த்ரில், இசை, கேரக்டர்களின் ஃபீலிங்ஸ் என நிறைய இடங்கள் இருக்கு. அதுவே மிரளை தனித்துக் காட்டும் என நினைக்கிறேன்’’ - நிதானமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல்.

காற்றாலைகளின் களத்தில் ஒரு த்ரில்லர்!

``த்ரில்லரில் உட்கார வைப்பது கஷ்டமான வேலை... இல்லையா?’’

‘‘அதை உணர்ந்தே எடுத்திருக்கிறோம். கதையில் நிறைய கவனம் செலுத்தினோம். இது காற்றாலைகளின் களத்தில் நடக்கிற த்ரில்லர். அமெரிக்காவில் மக்கள் அதிகமாக கார் பயணங்கள் தான் மேற்கொள்வார்கள். அங்கு இருக்கும் மாநிலங்களின் இடைவெளி அப்படித்தான் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட பயணங்களில் நடக்கிற நிகழ்வுகள் அங்கே படமாக்கப்படுவதுண்டு. 2010-க்குப் பிறகு சாலைகள் விரிவாக்கப்பட்டதால், இப்போதுதான் இங்கே மக்கள் சாலைகளில் கார்களில் செல்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில் யாரும் இல்லாத நீண்ட சாலையில் நடக்கிற அமானுஷ்யம் சேர்த்து இதில் பல விஷயங்கள் நிகழ்கின்றன. சொந்த ஊரில் குலதெய்வத்திற்கு பூஜை போட்டு கிடா வெட்டிக் கும்பிட்டுவிட்டு வரலாம் என்று போயிருக்கிற பயணத்தில்தான் இத்தனையும் நடக்கின்றன. காற்றாலை சார்ந்து ஒரு களம் தமிழில் வந்ததில்லை. அதற்கான புதுத் தன்மையும் இதில் கிடைத்திருக்கு. எனக்கு எப்பவும் த்ரில்லர்களில் தனி ஈர்ப்பு உண்டு. அப்பா துணை ராணுவத்தில் இருந்தவர். டெர்ரர் அட்டாக், நக்சலைட்டுகள் தாக்குகிற விதம் பற்றியெல்லாம் பேசுவார். நெருங்கிய உறவினர்கள் போலீஸ் துறைகளில் இருப்பதால் க்ரைம் பற்றியெல்லாம் அதிகம் பகிர்வார்கள். அதில் இருக்கிற திட்டமிடுதலும் ஒருங்கிணைப்பும், தாக்குதலும் அவ்வளவு துல்லியமாக இருக்குமாம். எவ்வளவு விஷயங்கள் நாட்டில் நடந்தாலும் க்ரைம் செய்திதான் எப்போவும் பார்க்க வைக்கத் தூண்டும். அதனாலும் இந்தக் கதையை முதல் படமாகத் தேர்ந்தெடுத்தேன்.’’

காற்றாலைகளின் களத்தில் ஒரு த்ரில்லர்!

``பரத் எப்படி நடித்திருக்கிறார்?’’

‘‘மிகவும் பாந்தமான குடும்பத் தலைவராக வருகிறார். குடும்பத்தைச் சூழ்ந்திருக்கிற உளவியல் சார்ந்த வகையில் உருவாக்கியிருக்கோம். அவர்தான் இதில் முதன்முதலாக ஈர்ப்பாகி படமாக்குவதற்கான முழு முயற்சியில் இறங்கினார். ஒரு பயணத்தில் நடக்கிற அமானுஷ்யங்களில் திகைத்து அதைச் சமாளித்து வெளிவரும் இடங்களில் எல்லாம் அருமையாகச் செய்திருக்கிறார். சாக்லேட் பாய் இடத்திலிருந்து அருமையான நகர்தல் நடந்திருக்கிறது. ‘எம். மகன்' மாதிரி குடும்பம் ஒன்றிலிருந்து வெளிப்படுகிற இடம் அவருக்கு. வாணி போஜன் மிகத் திறமையாக நடித்திருக்கிறார். படத்தை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நான் சமரசத்திற்கு உள்ளாகவில்லை. அதற்கு பரத்தும், தயாரிப்பாளரும் துணையாக இருந்ததுதான் விஷயம். படத்தை 20 நாள்களில் முடித்துவிட்டேன். 35 அடி காற்றாலை செட்டில் பரத் ஏறி நடித்ததே த்ரில்லான விஷயம்தான். கதையோடு வாழ்க்கையையும் நிகழ்ச்சிகளையும் சரியானபடி சேர்த்தால் அங்கே நம்மை எப்படி பிடிக்காமல் போகும்? கதைதான் உயிரோட்டம். நம்பகத்தன்மைதான் அதில் பெரும் விஷயம். இந்தப் படத்தின் நிஜத்தன்மைக்கு பரத் ரொம்பவும் உயிர் கொடுத்திருக்கிறார்.’’

காற்றாலைகளின் களத்தில் ஒரு த்ரில்லர்!
காற்றாலைகளின் களத்தில் ஒரு த்ரில்லர்!

``த்ரில்லர் படமென்றால் ஒளிப்பதிவுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் இருக்குமே?’’

‘‘இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு சுரேஷ் பாலா. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் சீடர். ‘பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் வெற்றிமாறன் சாருடைய கதைக்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் காலையில் படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்கு போட்டிருப்பேன். ஆனால், சுரேஷ் அதில் கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம், திகில் வரும்படி ஒரு மேஜிக் செய்திருப்பார். த்ரில்லர் படத்திற்குப் பின்னணி இசை அமைப்பது மிகவும் கடினமான பணி. மற்ற ஜானர்களைவிட இதில் உழைப்பு அதிகம் அமைய வேண்டும். இசையமைப்பாளர் பிரசாத் இதில் பிரமாதப்படுத்திருக்கிறார். தனிமையான சாலையில் அடையாளம் காணமுடியாதவர்களின் தாக்குதல்கள், அதன் த்ரில் உங்களுக்கு வேறு விதமான அனுபவத்தைத் தரப்போவது நிச்சயம். ஒரு அமானுஷ்ய படத்திற்கான அத்தனை விஷயங்களையும் இந்த ‘மிரள்' தரும் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும்.’’