கட்டுரைகள்
Published:Updated:

“தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட அரசியலை ‘மாமன்னன்’ பேசுது!” - மாரி செல்வராஜ் எக்ஸ்க்ளூசிவ்

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

கதையை எழுதும்போதே வடிவேலு சார் மாதிரி ஒருத்தர் செய்தால் நல்லா இருக்கும்னு யோசிச்சுட்டு, அதற்கு சாத்தியமே இல்லைன்னு நம்பினேன். என்னோட ஸ்டைல்னு இருக்கே, அதுல சேர்வாரான்னு சந்தேகம் இருந்தது.

``எனக்கென்ன ஒரு சந்தோஷம்னா, தீவிரத் தன்மையோடும் உண்மையோடும் எளிய மக்களுக்கு நான் போய்ச் சேர்ந்திருக்கேன். பார்வையாளனும் நானும் சேர்ந்து வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வதற்கான ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். அப்படி ஒரு வழியாகவே ‘மாமன்னன்' படத்தைப் பார்க்கிறேன். முதல் படத்திலிருந்து எளிமையாக எப்படிப் படம் பண்ணுவது என்பதை நோக்கியே நகர்ந்திருக்கேன். உணரக்கூடிய, புரியக்கூடிய எல்லோருக்கும் புத்துயிர்ப்பைத் தரக்கூடியதுதான் ‘மாமன்னன்' திரைப்படம்’’ - இயக்குநர் மாரி செல்வராஜ் நிறைந்த ஆசுவாசத்தில் பேசுகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிப் பரபரப்பு கூட்டியிருக்கிறது. பேச்சிலிருக்கும் தெளிவைக் கைக்கொண்டால் இன்னும் அவர் வயதைக் கூட்டிச் சொல்ல வேண்டியிருக்கும்.

வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி
வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி

‘‘துருவ் விக்ரமை இயக்குவீங்கன்னு பார்த்தால் ‘மாமன்ன’னுக்கு வந்துட்டீங்க!’’

‘‘ஒரு ஸ்கிரிப்ட் செய்துட்டிருக்கும்போது மனதில் மூணு ஸ்கிரிப்ட் அடியாழமா ஓடிக்கிட்டே இருக்கும். ஸ்கிரிப்ட் பண்ணுறதை நான் பெரிய ப்ராசஸா எடுத்துக்கிறதில்லை. எப்பவும் பல ஸ்கிரிப்டுகளில் டிராவல் இருந்துக்கிட்டேயிருக்கும். ஸ்கிரிப்ட்டை ஒரு வாழ்க்கையாகத்தான் பார்ப்பேன். கதையோட தொடக்கமும் முடிவும் மாந்தர்களும் நோக்கமும் எனக்கு முன்னாடியே தெரியும். நல்ல வாய்ப்பு வந்தால் உடனே பண்ணணும்னு வச்சிருந்த ஸ்கிரிப்ட்தான் ‘மாமன்னன்.' இதோ, மாமன்னன் ரிலீஸானதும் அடுத்து துருவ் படம்தான்.’’

‘‘கதை கேட்டுட்டு உதயநிதி ரியாக்‌ஷன் என்ன? அவர் ஸ்பாட்டில் எப்படி?’’

‘‘என் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு, நாம ஒரு படம் பண்ணலாம்னு சொன்னார். அப்போ முடியலை. அடுத்து ‘கர்ணன்' பார்த்துட்டும் மறுபடியும் கூப்பிட்டார். துருவ் விக்ரமை வெச்சு ஒரு ஸ்போர்ட்ஸ் படம் பண்ணுற வேலைகள்ல இருந்தேன். அப்போதான், ‘நான் நடிப்பை விடலாம்னு இருக்கேன். உங்ககூட என் கடைசிப் படம் இருக்கணும்'னு சொன்னார். என் கமிட்மென்ட்டைச் சொன்னேன். அப்பவே, தனுஷ் சாருக்கு இன்னொரு படம் பண்ணுற மாதிரி இருந்தது. உடனே, விக்ரம் சார், தனுஷ் சார் எல்லோர்கிட்டேயும் பேசி ‘மாமன்னன்' தொடங்க வழிவகை பண்ணிக்கொடுத்தார். இந்தக் கதை ஒரு லைனாதான் என்கிட்ட இருந்தது. உதயநிதி சார் வந்தவுடனே அதை முழுமையா எழுதி முடிச்சு, திரை வடிவத்துக்கு மாத்தினேன்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆனா, இந்தக் கதையை அவர் எப்படி ஏத்துக்குவார்னு ரொம்ப பயந்தேன். காரணம், இது ஒரு அரசியல் படம். தமிழ்நாட்டுடைய மேற்கு மாவட்ட அரசியலைப் பேசியிருக்கேன். கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடித்தது. உங்களை ரொம்ப ஒருத்தர் நம்பினால் ஒரு பயம் வருமில்லையா, அது வந்தது. வடிவேலு, பகத் வேணும், ஷுட்டிங் சேலத்தில் நடக்கும்னு சொன்ன எல்லாத்துக்கும் பதில் ஓகே மட்டும்தான். அவர் மேலுள்ள இமேஜ் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது. ஆளுங்கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கார். ஆனால் எல்லாத்தையும் உடைத்துக்கொண்டு தயக்கமின்றிப் பழகினார். தோன்றியதைச் சொல்ல இடம் கொடுத்தார். ‘அடுத்து படம் பண்ணினால் உங்களோடுதான் பண்ணுவேன்’ என்று விகடன் பேட்டியில் அவர் சொன்னது எனக்கான பரிசளிப்பு. ஆரம்பத்தில் நல்லா நடிக்கிறீங்கன்னு சொன்னதில்லை. ஆனால் அவராகவே நல்லபடியாக கேரக்டரைப் புரிந்துகொள்ள முயற்சி எடுத்தார். சமூகத்தைப் பத்தி எல்லாமே அவருக்குத் தெரியுது. பகத், வடிவேலுகிட்டே இருந்துகூட நடிக்கும்போது ஏதோ ஒன்றை வாங்கிக்கிறார். மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும்போது பாய்ச்சலாக சில விஷயங்கள் நடந்தன. நிறைய தடவை உதய் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணினார். முன்னாடி நடிச்சதை உடனே கட் பண்ணி, ‘இதுதான், இப்படித்தான் கதை போகுது’ன்னு ஒவ்வொரு நாளும் எல்லார்கிட்டேயும் காண்பிச்சுக்கிட்டே இருப்பேன். சொல்றது புரிவதைவிட பார்க்கிறது புரியும். படம் பார்த்துட்டு அவர் மனைவி கிருத்திகா, ‘உதய் நல்லா நடிச்சிருக்கார்'னு சொன்னாங்க. அவங்க வீட்டிலிருந்து ஒரு குரலாய் அது எனக்கு சந்தோஷம்.’’

வடிவேலு
வடிவேலு

‘‘வடிவேலு, பகத், கீர்த்தி, உதயநிதின்னு வரிசை களைகட்டுதே... இதில் வடிவேலு வந்தது மொத்தமாக ஆச்சர்யம்!’’

‘‘கதையை எழுதும்போதே வடிவேலு சார் மாதிரி ஒருத்தர் செய்தால் நல்லா இருக்கும்னு யோசிச்சுட்டு, அதற்கு சாத்தியமே இல்லைன்னு நம்பினேன். என்னோட ஸ்டைல்னு இருக்கே, அதுல சேர்வாரான்னு சந்தேகம் இருந்தது. தேவைப்படுகிற ஏழு பேர் லிஸ்ட் போட்டு உதய் சார்கிட்டே கொடுத்தேன். வடிவேலு சார் பெயரைப் பார்த்ததும் அவருக்கு ஷாக். பகத் பெயரும் அவருக்கு ஷாக் தான். ‘என்னங்க, எக்ஸ்ட்ரீமா போறீங்க'ன்னு சொல்லிட்டு, ‘நீங்க கேளுங்க, நான் முடிச்சுத் தர்றேன்'னு சொன்னார். வடிவேலு சாருக்குக் கதை சொன்னதும் பிடித்தது. அவர் ‘பரியேறும் பெருமாள்', ‘கர்ணன்' பார்த்திருந்தது ஆச்சர்யமா இருந்தது. பகத் சாருக்கு போன் பண்ணினேன். ‘விக்ரம்' ஷூட்டிங்கில் இருந்தார். கதையைக் கேட்டுட்டு ‘இந்த கேரக்டர் யார் பண்றாங்க’ என்றார். வடிவேலுன்னு சொன்னதும் அவருக்கும் ஷாக். இதற்கென்று தமிழ் சினிமாவில் கமர்ஷியலா சில ஆக்டர்ஸ் இருக்காங்க. அவர்களில் ஒருத்தர் பண்ணுவார்னு எல்லோரும் நம்பியிருந்தாங்க. பகத்தால் ஒரு சதவிகிதம்கூட வடிவேலுதான் அந்த கேரக்டர் பண்ணுறார்னு நம்ப முடியவில்லை. ‘நிஜமாகவா சொல்றீங்க'ன்னு கேட்டுட்டு இன்னும் உற்சாகமாகிவிட்டார். உதய் சார் தனது கடைசிப் படமாக மாமன்னனை முடிவு செய்ததில் கொஞ்சம் பெருசாகவே பண்ணலாம்னு முடிவு பண்ணினார். கீர்த்தியும் அந்த வகையில் வந்து சேர்ந்தவர்தான்.’’

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

‘‘வடிவேலுவை இதற்கு முன்னால் சந்தித்திருக்கிறீர்களா?’’

‘‘தியேட்டரில் வாயைப் பிளந்து அவரைப் பார்த்ததுதான். பாடும்போது, மேடையில் பேசும்போது பார்த்திருக்கேன். என் வீட்டில் படுக்கையறையில் இளையராஜா, வடிவேலு படம்தான் மாட்டியிருக்கேன். வடிவேலு சாரை சந்திக்கிறது என் வாழ்நாள் கனவு. யார் மூலமாவது நடக்கும்னு நினைச்சுட்டிருந்தேன். அவருக்குக் கதை சொல்வேன், அவரை வச்சுப் படம் இயக்குவேன்னு நினைச்சுப் பார்க்கவே இல்லை.’’

‘‘வடிவேலுவோ காமெடியின் உச்சம்... உங்க ஸ்டில்களைப் பார்த்தால் ரொம்ப சீரியஸாக இருக்கு... உங்க கதையை எப்படி ரசித்தார்?’’

‘‘உதய், வடிவேலு, பகத், கீர்த்தி இந்த நாலு பேருமே என்னைப் பத்தி நல்ல புரிதல் வச்சிருந்தாங்க. எதுக்காக இந்தப் படத்தை எடுக்க நினைச்சேன்னு அவங்களுக்குப் புரிஞ்சது. வடிவேலு சாரை நல்லா கவனிச்சால் தெரியும். படத்தில்தான் அவர் காமெடி பண்ணியிருக்கார். கடந்த பத்து வருடமாக அவர் சீரியஸாக, ஆக்ரோஷமான காலகட்டத்தில் இருந்தார். நான் என்ன சொன்னாலும் வரிக்கு வரி புரிஞ்சு நடிச்சார். அவர் என்னைவிட இன்னும் அதிகமான வாழ்க்கையை வாழ்ந்தவர். இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காரா என்ற அளவுக்கு அவருக்கு விஷயம் தெரியுது. ‘Life is beautiful' படம் பார்த்துட்டு, ‘இந்தப் படத்தை நீயும் நானும் பண்ணணும்’னு ஒரு நைட் பூரா என்னிடம் பேசினார். எனக்கு அவரைக் கையாள்வது கஷ்டமாகவே இல்லை. என்னைக்கு கதை கேட்டாரோ அன்னையிலிருந்து இந்தக் கதையின் போக்கு எப்படி இருக்கும், எப்படி நம்ம நடிப்பு மாறும்னு உள்வாங்கிட்டுத்தான் நடிச்சார். ‘நான் உக்கிரபுத்தனா வரணும், அவ்வளவுதானே'ன்னு கேட்டுட்டே வந்தார். எல்லாமே நல்லபடியாக நடந்தது.’’

பகத் பாசில்
பகத் பாசில்
பகத் பாசில்
பகத் பாசில்

‘‘பகத் பாசில் நடிப்பு அரக்கனாச்சே!’’

‘‘எப்படா நமக்குத் தீனி கிடைக்கும்னு காத்திட்டிருக்கிற நடிகர்தான். அவரை நாம் பின்தொடர்வது மாதிரி, அவரும் தமிழ் சினிமாவை கவனிக்கிறார். நல்ல டைரக்டர்களை ஃபாலோ பண்ணுறார். நம்மைத் தெரியுமோ தெரியாதோன்னு போன் பண்ணி பெயரைச் சொன்னால் சந்தோஷமா ‘எப்ப நீங்க போன் பண்ணுவீங்கன்னு காத்திருந்தேன்’ என்கிற மாதிரி தொனியில் பேசினார். ஒரு கிரியேட்டரா என்னுடைய அரசியலை, நேர்மையை, ஏக்கத்தைப் புரிஞ்சுகிட்டு அதை எப்படி நடிப்பில் கொண்டு வரணும்னு பார்க்கிறார். ‘இதை ஏத்துக்க மாட்டாங்க, சென்சாரில் போயிடும்’னு சொன்னால், ‘போனால் போகுது எடுப்போம்'னு சொல்ற நடிகர். பகத் கிட்ட ஒரு சீன் சொன்னால், அதற்கு முன்னாடி பின்னாடியிருக்கிற விஷயங்களைச் சொல்லணும். சீனைத் தாண்டி அதோட ஆதாரத்தைப் பேசச் சொல்லிக் கேட்கிறது பெரிய விஷயம். அந்த சீனோட வேர் எங்கே இருக்கோ, அந்த லைஃப் பத்தி ஒரு மணி நேரம் பேசுவார். இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பிறகுதான், டயலாக் பேப்பரையே வாங்குவார். ஆச்சர்யப்படுத்துகிற நடிகர். லால் சாரும் நடிக்கிறார். ‘நான் நடிக்கிறேன்’ என்று ஆசைப்பட்டு வந்தார். இந்தக் கதையோட மையப் புள்ளி அவர்தான்.’’

உதயநிதி
உதயநிதி

‘‘படத்தில் ‘மாமன்னன்' யார்?’’

‘‘அதுதான் படத்தோட கேள்வி. மாரி செல்வராஜ் ‘மாமன்னன்'ங்கிற டைட்டிலை ஏன் வைக்கணும்? சமத்துவம் குறித்துப் பேசுகிற நான் ஏன் இப்படித் தலைப்பு வைக்கணும்? ‘மாமன்னன்' என்ற டைட்டில் எதுக்கு, யாருக்குன்னு ஒரு கேள்வி இருக்கில்ல... அந்தக் கேள்வியை நான் முன்வைக்கிறேன். அதுதான் படம். ‘மாமன்னன்' தலைப்பு வைத்ததற்கான காரணத்தை உதய் சார் கேட்டார். நான் சொன்னதும் அவர் உட்பட அனைவருக்கும் பிடிச்சது. டைட்டில் என்பது படத்தோட பெரிய குறியீடு. உங்க திரைக்கதையை விஷுவலாக மாற்றுவதில் டைட்டில்தான் முக்கியப் பங்கு வகிக்குது. ‘கர்ணன்' டைட்டில் வச்சதும் அந்த டைட்டிலே என்னை வேலை செய்ய வச்சது. இந்த டைட்டிலுக்கே ஒரு வரலாறு, நம்பிக்கை, குறியீடு இருக்கு.’’

வடிவேலு
வடிவேலு

‘‘கோபத்தோடு ரத்தம் தெறித்த முகத்தோடு உதய், அதைவிட உக்கிரமாக துப்பாக்கியோடு வடிவேலு... என்ன விஷயம்?’’

‘‘ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. வடிவேலு சிரிப்பு மூட்டுறதை அப்படி ரசிப்பேன். மிகப்பெரிய காமெடி கிங். ஊரையே சிரிக்க வைத்தவர். அவரை கொஞ்சம் அமைதியா இருங்கன்னு சொல்லிட்டுத் தள்ளி நின்னு பார்க்கிறது பெரிய அனுபவம். நான்தான் அதைப் பார்க்கிற முதல் ஆடியன்ஸ். அவருக்காக விடிய விடிய படம் பார்த்து சேனலைக்கூட மாத்தாம இருந்திருக்கோம். அவர்கிட்டே ரசிச்சுக் கொண்டாடியதையெல்லாம் ‘அது வேண்டாம்'னு சொல்லும்போது, அவர் காட்டுகிற அமைதி அத்தனை பவராக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் பகத், உதய், கீர்த்தி விழுந்து விழுந்து சிரிச்சு உருளுவாங்க. வடிவேலு அமைதியாக நிற்கிறபோது அந்த முகத்தின் மதிப்பு இன்னும் கூடுது. எனக்கு உதய் சாரையும், வடிவேலு சாரையும் பார்த்தாலே மனதில் சீன் ஓட ஆரம்பிக்கும். படத்தில் நிறைய உண்மைகள் இருக்கு. யாருக்கும் நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. கேரக்டர்களுக்கு நியாயங்கள், தர்க்கங்கள் இருக்கும். நியாயப்படுத்த முயற்சி பண்ணும்போது அது எங்கெங்கோ கூட்டிக்கிட்டுப் போகுது. ஒவ்வொருத்தருக்கான இடத்தையும் நியாயம் கொடுத்து, கனவுகள் தந்து நான் எழுதுவேன். எது சரி, எது தப்புன்னு படம் பார்க்கும்போதுதான் தெரியும். ‘மாமன்னன்' என் வயதிற்கு மீறிய படம். ரொம்ப பக்குவமா செய்ய வேண்டிய படம். சமகாலத்தில் பெரிய விவாதங்களை எழுப்பக்கூடிய படமும்கூட!’’

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

‘‘ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரோடு மறுபடியும் இணைகிறீர்கள்...’’

‘‘அவரும் வடிவேலுவும் அண்ணன் தம்பி மாதிரி. என் உலகத்தோடு இணைந்து வந்து நிற்பார் ஈஸ்வர். அவரோட இடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சரியாகப் புரிந்துகொள்வதில், ஃபாலோ பண்ணுவதில் ஈஸ்வர் ரொம்பவும் துல்லியம். அப்படியானவர்களை நான் விரும்புவேன்.’’

‘‘ஏ.ஆர்.ரஹ்மானோடு முதல் தடவையாக வேலை பார்க்கிற அனுபவம்?’’

‘‘வீடியோ காலில்தான் முதல் தடவை பார்த்தோம். முதல் வார்த்தையாக என்ன பேசுவது என அதற்குமுன்பு மனத்துக்குள் சொல்லிச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். இயல்பாக ‘ஹாய் மாரி... எப்படி இருக்கீங்க?'ன்னு வந்தார். ஒன் லைன் சொன்னேன். ‘ஓகே, நேரில் முழுக்கதை கேட்கிறேன்’ என்று சொன்னார். சில பேர்கிட்ட கதை சொல்லும்போது இதயத்திற்குள்ளே போக விடாமல் வெச்சிருக்கிறது தெரியும். ஆனால் ரஹ்மான் மனதுக்குள் கதை போய், கண்ணில் வெளியே தெரிந்தது. ‘மாமன்னன்' படத்தைப் பார்க்கணும்னு சொன்னார். நான் ‘வாழை' படப்பிடிப்பில் இருந்தேன். எப்ப வருவீங்கன்னு அவர் கேட்டதற்கு ‘ஒண்ணரை மாதம் ஆகும். ஆனால் உங்களுக்கு படம் போட்டுக் காட்ட ஏற்பாடு பண்ணுறேன்'னு சொன்னேன். ‘உங்களோடுதான் படம் பார்க்கணும்'னு திருநெல்வேலிக்கே புறப்பட்டு வந்துட்டார். என்னோடு தங்கியிருந்து படம் பார்த்துட்டு அடுத்த நாள் காலையில்தான் போனார். என் கதையை, படத்தை அவர் உள்ளே வாங்கிக்கொண்ட விதம், ‘வேறு எதுவுமே தேவையில்லை, போதும்’ என்று தோன்றிவிட்டது. என் மண்ணிற்கு வந்து, என் படத்தைப் பார்த்துவிட்டு, என்னைப் பாராட்டியது இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.’’

உதயநிதி
உதயநிதி

‘‘உங்கள் குரு இயக்குநர் ராம் என்ன சொன்னார்?’’

‘‘ ‘மாமன்னன்' படத்தோடு சேர்ந்து ‘வாழை' படத்தையும் பார்த்துவிட்டார். என் படங்களை அவரிடம் முதலில் காண்பித்துவிடுவேன். அவர் என்னோட கிராஃப்ட் எப்படி வந்திருக்கு என்று மட்டும்தான் பார்ப்பார். அதனால்தான், அவர் எனக்கு வாத்தியார். ‘மாமன்னன்' கதை கேட்டதும், ‘முள்மேல் நடக்கிறது போலிருக்கே, சரியா எடுத்துடுவியா'ன்னு கேட்டார். கவனமாக எடுன்னு சொன்னார். படம் பார்த்திட்டு ‘டைரக்‌ஷன், ரைட்டிங்கில் ஒரு பாய்ச்சல் இருக்கு’ என்றார். அதுவே எனக்கு நிறைவு.’’