Published:Updated:

"என்னை வைத்து வளரவேண்டிய அவசியம் பா.ம.க., பா.ஜ.க-வுக்கு இல்லை!"- இயக்குநர் மோகன்.ஜி

நிகழ்வில் இயக்குநர் மோகன்.ஜி

"சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு முறையும் என்னைக் குறித்து வரும் கருத்துகளுக்கு அமைதியாக இருந்தால், அது உண்மையாகிவிடும் என்பதனால் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துகளுக்குப் பதிலளித்து வருகிறேன்." - இயக்குநர் மோகன்.ஜி

Published:Updated:

"என்னை வைத்து வளரவேண்டிய அவசியம் பா.ம.க., பா.ஜ.க-வுக்கு இல்லை!"- இயக்குநர் மோகன்.ஜி

"சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு முறையும் என்னைக் குறித்து வரும் கருத்துகளுக்கு அமைதியாக இருந்தால், அது உண்மையாகிவிடும் என்பதனால் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துகளுக்குப் பதிலளித்து வருகிறேன்." - இயக்குநர் மோகன்.ஜி

நிகழ்வில் இயக்குநர் மோகன்.ஜி
சேலத்திலுள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் 'பகாசூரன்' படக்குழுவின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் மோகன்.ஜி கலந்துகொண்டார்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "இயக்குநர் செல்வராகவன், நடராஜன் (நட்டி) நடித்துள்ள 'பகாசூரன்' திரைப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது. இதற்காகக் கல்லூரிகளில் மாணவிகளிடையே செல்போன் தொடர்பான ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

வீடுகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பெற்றோருக்குத் தெரிவதில்லை. அதிலுள்ள சிக்கல்கள், பிரச்னைகளைப் பெண்கள், இளைஞர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இந்தத் திரைப்படத்தில் கூறியிருக்கிறோம்.

நிகழ்வில் இயக்குநர் மோகன்.ஜி
நிகழ்வில் இயக்குநர் மோகன்.ஜி

தொடர்ச்சியாக இயக்குநர்களை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நடிகர்களை வைத்து படம் எடுப்பதை விட இயக்குநர்களை வைத்து படம் எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது. 'வாத்தி' மற்றும் 'பகாசூரன்' இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன. படத்தின் பட்ஜெட்டை வைத்து படங்களை ஒப்பிடுவது தவறானது. ஒரு படத்தை அது கூற வரும் கருத்துகளை வைத்து மட்டுமே ஒப்பிட வேண்டும். அந்த வகையில் 'பகாசூரன்' திரைப்படம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் 'வாத்தி' திரைப்படமும் தனியார்ப் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற சிறந்த சமூகக் கருத்தோடு எடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் ஒரு படத்தைத் திரையிடுவது சாதாரண விஷயம் அல்ல. இயக்குநர் செல்வராகவன் ஏற்கெனவே கதாநாயகனாக நடித்த 'சாணிக் காயிதம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் கதாநாயகனாக அவர் நடித்து திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் இதுதான். அதனால் திரையரங்கம் கிடைப்பதற்குக் கால தாமதம் ஆனது" என்றார்.

சமூக வலைதளங்களில் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அதற்கு அவர் ஆற்றும் எதிர்வினை பற்றிய கேள்விக்குப் பதிலளித்தவர், "சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு முறையும் என்னைக் குறித்து வரும் கருத்துகளுக்கு அமைதியாக இருந்தால், அது உண்மையாகிவிடும் என்பதனால் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துகளுக்குப் பதிலளித்து வருகிறேன். திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பெயர் வைப்பதும், காட்சிகளை வைப்பதும் மக்களைக் கவர்வதற்கு அல்ல, மக்களுக்கு ஒரு விதமான புரிதலை ஏற்படுத்தத்தான்.

இயக்குநர் மோகன்.ஜி
இயக்குநர் மோகன்.ஜி

சிவன் பாடலை திரைப்படத்தில் வைப்பது நிறைவாக உள்ளது. சமுதாயத்தில் என்னைச் சுற்றி உள்ள விஷயங்களைப் படம் ஆக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

'திரௌபதி' படத்துக்குப் பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் மூன்றாம் நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்பதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. 'திரௌபதி' படத்தினால் இது நடந்தது என்று நான் கூறவில்லை. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 'பகாசூரன்' படமும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

என்னை வைத்து பா.ஜ.க, பா.ம.க வளரவில்லை, ஏற்கெனவே அவர்கள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டனர். எனவே என்னை வைத்து வளர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை" என்றார்.