
என் நண்பர் மூலமாக அவரைப் பார்க்கப் போனேன். இந்தக் கதையைக் கேட்டால் யோகி பாபு தயாரிக்கக்கூட ஆசைப்படுவார்னு சொன்னாங்க.
``அவரவருக்கு ஒரு ரசனை, தேடுதல் எப்பவும் இருக்கும். பிடிச்சதைப் பண்ற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கு. அதை சரியாக மனசில் வச்சுக்கிட்டு இந்த சினிமாவை எடுத்திருக்கேன். டைரக்டர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்தபோது தேனிக்கு மேலே இருக்கிற குரங்கணி, அகமலைக்குப் போயிருக்கேன். இந்த மலை என்னை பாதிச்சது. என்னோட முதல் படம் இந்த மலையைச் சார்ந்து இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்படி உருவான படம்தான் ‘மலை.' மலையும் மலை சார்ந்த இடமும் இந்தப் படத்தோட களம். இங்கே 150 வீடுகளுக்கு மேல இருக்கு. வீட்டில் 20 படி ஏறி இறங்க நாம் யோசிக்கிறோம். இங்கே ஊரே மேலே கீழே சளைக்காமல் ஏறி இறங்கிக்கிட்டு சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் இந்த மலையும் காடும்தான் தருது. ஆனால் தாங்கள் வசதியாக வாழ்வதற்காக ஒரு செடியைக்கூடப் பிடுங்காத மனசு அவர்களுடையது’’ இன்னும் பேசுகிறார், அறிமுக இயக்குநர் இ.ப.முருகேஷ். சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகியோரின் சீடர்.

``இந்த ‘மலை' எப்படியிருக்கும்?’’
‘‘இங்கே ஒரு தபால்காரரைப் பார்த்திருக்கேன். காலையில் தபால்களைத் தேடிப்போய்க் கொடுத்துட்டு, சாயங்காலம் ஆரம்பிச்சு மாலை மயங்குகிற வரைக்கும் மருந்து மாத்திரை களையும் கொடுப்பார். பாம்புக்கடி, மருந்தைக் குடிக்கிற கேஸ்னு ஆத்திர அவசரத்திற்கு கீழே அவர்களால் இறங்க முடியாது. குதிரையோ, ஜீப்போ இருந்தால்தான் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரி வந்து சேர்ந்து உயிரைக் காப்பாத்திக்க முடியும். அப்படிப்பட்ட நேரத்தில் இவரே தெரிந்த மருத்துவத்தை கவனமாகச் செய்து காப்பாற்றிவிடுவார். சொல்லப்போனால் அது தவறுதான். போலி டாக்டர்னு சுருக்கமாகச் சொல்லிவிடலாம். ஆனால் அந்த ஊருக்குள்ளேயே திரிஞ்சு அவங்க சுகதுக்கங்களில் ஒன்றாகத் திரிகிற மனுஷன். அந்த ஊருக்கு வந்து சேர்கிற மருத்துவம் முறையாகப் படிச்ச பொண்ணு. இவங்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் சந்தித்தால் என்னவாகும்? அங்கே இருக்கிற மலையைக் கூறு போடவும், பசுமையைக் கேள்விக்குறியாக்கவும் ஒருத்தர் முனைப்பாக இருக்கிறார். இந்த மூன்று பேரின் வாழ்க்கையில் அந்த கிராமம் என்னவானது என்பதுதான் கதை. ஊடாக அன்பும் கோபமும் எளிமையும் உண்மையுமா வாழும் அந்த மக்களின் வாழ்க்கையையும் பேசுகிறது படம்.’’


``இதில் யோகிபாபு எப்படி உள்ளே வந்தார்?’’
‘‘என் நண்பர் மூலமாக அவரைப் பார்க்கப் போனேன். இந்தக் கதையைக் கேட்டால் யோகி பாபு தயாரிக்கக்கூட ஆசைப்படுவார்னு சொன்னாங்க. கதையை முழுசா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, ‘இதில் நான் இருந்தால் எப்படியிருக்கும்? எல்லா ஏற்பாடுகளையும் செய்ங்க. எனக்குக் கதை பிடிச்சுப்போச்சு. அட்ஜஸ்ட் பண்ணி நடித்துக் கொடுக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். என் நண்பரும் அவரும் சேர்ந்து தயாரிக்கிற எண்ணம்கூட இருந்தது. கொரோனா வந்து சில முடிவுகளை மாத்திவிட்டது. அந்தப் படிக்காத மருத்துவராக யோகிபாபு நடிக்கிறார். அவரை காமெடியனாக சுருக்கமாகப் பார்த்திட்டோம். இன்னமும் எந்த மருத்துவமும் போய்ச் சேராத இடத்தில் இருக்கிற மக்களின் பிரச்னைகள் சொல்லப்படுவது அவருக்கு ரொம்பப் பிடிச்சது. அவங்க அந்த மலை வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தாலும், அடிமனசில் இருக்கிற தீராத துக்கம் அவருக்குப் புரிஞ்சது. சிரிப்பு மூட்டும் யோகிபாபுவைவிட, மனநுட்பங்களைப் பிரதிபலிக்கிற யோகி இதில் அதிகம் தெரிவார். வேறு வழியில்லாமல் ஒரு பிரசவம் பார்க்கிற சூழ்நிலை ஒண்ணு அவருக்கு வந்திடும். அப்ப அவருக்கு இருக்கிற தைரியம், கூடவே வருகிற பயம், எப்படியாவது காப்பாற்றிவிடணும் என்ற அக்கறை எல்லாம் சேர்ந்து முகத்தில் கொண்டு வந்தார். பிரமாதமான காட்சி அது. நாம, ஒவ்வொருத்தரையும் இந்தந்த வேடத்திற்குன்னு சட்டகம் போட்டு வச்சிடுவோம். அது தப்புன்னு அந்தக் காட்சியின்போது தெரிந்தது. படத்தில் அவர் சட்டவிரோதமா மருத்துவம் பார்ப்பதுகூட சரிதான்னு நம் மனசாட்சி ஒப்புக்கும். ‘தர்மம் வெல்லும்' என்கிற மாதிரி எளிய நியாயமல்ல இந்தக் கதை. மலைவாழ் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த ஒருவன், தன் அனுபவங்களிடமிருந்து உண்டாக்கிக் கொண்ட நியாயம். இதுவே கதை முழுக்க இழையோடி இருக்கு.’’

``லட்சுமி மேனனையும் கதைக்குள்ள கொண்டு வந்துட்டீங்களே...’’
‘‘அவங்களையும் கொண்டு வந்தது கதைதான். கொஞ்ச நாளாக சினிமாவிலிருந்து தள்ளி இருந்தாங்க. இதில் டாக்டராக வர்றங்க. கதையைப் புரிந்துகொண்டு, உண்மையைத் தெரிந்துகொண்டு நடிச்சதால் அதெல்லாம் நடிப்பு மாதிரியே தெரியலை. யோகிபாபுவிற்கும், அவருக்கும் இருக்கிற மோதல், முறையான மருத்துவம் படிக்காமல் சிகிச்சை செய்கிறதைப் பார்த்து வருகிற பதற்றம், யோகி மூலமாக ஊரின் நிலைமையையும் கஷ்டத்தையும் உணர்கிற இடங்கள், அவர்களிடையே இருக்கிற மெலிதான அன்பு என எல்லாம் நல்லா வந்திருக்கு. யோகியின் தங்கையா செம்மலர் அன்னம் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்காங்க. மலைகளின் மூலம் பிரச்னையை ஏற்படுத்துகிற காளி வெங்கட் நம்பத்தக்க விதத்தில் கேரக்டரைச் சித்திரிக்கிறார். பிரியா, சிங்கம் புலி, ராம்ஸ் போன்றவர்களின் நல்ல இடங்களும் இருக்கின்றன. அப்புறம் ஊர் மக்களும் அவர்களாகவே வருகிறார்கள். படம் முழுக்க ஜனரஞ்சகமாக இந்த மக்களின் வாழ்க்கைக் குரல் ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.’’
``படம் பெரிய விஷயங்களைப் பேசும் போலிருக்கே...’’
‘‘தனிப்பட்டு எதையும் சொல்லவில்லை. ஒரு சினிமாவிற்குள்தான் இடையோடி இந்த அக்கறைகள் வெளிப்படுது. இந்த மலைகளில் படம் எடுக்கிறது சாதாரண வேலை கிடையாது. கைச்சுமையாக கேமராவைத் தூக்கிக்கொண்டு கல்லும் முள்ளுமான பாதைகளில் மலையேறிப் போய்ப் படம் பிடித்த நாள்கள் நிறைய. தேனி ஈஸ்வர் பெரிய பெரிய படங்களைச் செய்துட்டிருந்தபோதும் கதையினால் ஈர்க்கப்பட்டு இதைச் செய்து கொடுத்தார். ‘அழகர்சாமியின் குதிரை’யிலிருந்து அவர் கூட பயணச்சிக்கிட்டு இருக்கேன். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். அவரே தேனிக்காரர். அந்த இடங்களின் அத்தனை பரிணாமங்களும் அவருக்குத் தெரியும். இமான்தான் மியூசிக். ஸ்ரேயா கோஷலும், வாணி ஜெயராமும் பாடியிருக்கிற பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லணும். யோகிபாபு ஹீரோன்னு தனியான எந்தப் போற்றுதலும் கிடையாது. படம் முடியும்போது, உங்களுக்கு இதில் வித்தியாசமான யோகி கிடைப்பார். யோகிக்கு பதிலாக கணேசமூர்த்தி இதை மனமுவந்து தயாரித்தார். படத்துக்கு மக்கள் ஆதரவு இருந்தால் இன்னும் இதுபோல் தொடரலாம். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.’’