சினிமா
Published:Updated:

உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!

கார்த்தி, அதிதி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி, அதிதி

- ‘விருமன்’ எக்ஸ்க்ளூசிவ்

“கதை சொல்லும்போதே சில இடங்களில் ‘நடிச்சுக்காட்டுங்க’ன்னு ‘கொம்பன்’ ஷூட்டிங் அப்போ சொல்வார் கார்த்தி சார். அதுமாதிரி ‘விரும’னிலும் நடந்திருக்கு. ‘விருமன்’ ரொம்ப நாளா மனசுக்குள்ளே ஓடிட்டே இருந்தது. ஒரு ஸ்கிரிப்ட்டை கச்சிதமா எழுதி முடிச்ச பிறகு மனசுக்குள்ளே அப்படியே ஏத்திக்குவேன். வாழ்க்கையோட எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் உறவுகளோட இடங்கள் ஆச்சரியம் நிரம்பியதா இருக்கு. உறவுகள், அவை தரும் உணர்வுகள், இதுதான் இந்தப் படத்தின் அஸ்திவாரம். சமூகம் சார்ந்து, உறவுகள் சார்ந்துதான் ‘விருமன்’ இருப்பான்” என்று ஆரம்பிக்கிறார் இயக்குநர் முத்தையா.

“சின்ன வயதில் என் வீட்டில் நடந்ததை எப்படி பார்த்தேனோ, அப்படியே கொம்பனை எடுத்தேன். அது மாதிரி இது எதிர்வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வாங்க. அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு யாரோ ஒருத்தர் அதைச் சுட்டிக்காட்டணும். ‘இது நல்லது கிடையாது, சரியான வாழ்க்கை முறைக்குள்ளே வராது’ன்னு சொல்லணும். அதுதான் நேர்மையான உறவு. அந்த நேர்மையைப் பேச வருபவன்தான் விருமன். மேலும் மேலும் தவறு செய்யும்போது வாழ்க்கை கேள்விக்குறி ஆவதைத் தட்டிக் கேட்கிறவனாக விருமன் இருப்பான். கார்த்திதான் விருமன். அது குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன். உசிலம்பட்டி ஏரியாவில் மூணுசாமி கும்பிடுவாங்க. அதுதான் கதைக்களம்.”

உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!
உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!

``கார்த்தி விருமனுக்குள் எப்படி செட் ஆகி வந்தார்?’’

“எனக்கு கார்த்தி சார் கிட்டே பிடித்தது அவரோட முகம். சாதுவாகவும் காட்டலாம். அதிரடிக்காரராகவும் மாத்திக்கலாம். வழக்கம்போல் இந்தப் படத்திலும் அவர் பிரமாதப்படுத்தியிருக்கார். கார்த்தி சார் என்கிட்ட ‘ஐயா, நாம இரண்டு பேரும் சேரும்போது கொம்பனைத் தாண்டித்தான் மக்கள் கேட்பாங்க. அவ்வளவு தூரம் நடுத்தர, அடித்தட்டு மக்களை அது போய்ச் சேர்ந்திருக்கு. விருமன் அதைத் தாண்டணும்’ என்றார். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்களோ, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் புடைசூழ ஒற்றுமையோடு இருக்கணும். அவர்களுக்கு ஏதாவது பிரச்னைனா முன்னாடி நிற்கிறவனும் விருமன்தான்.”

``கொம்பனைத் தாண்டியிருக்காரா கார்த்தி?’’

“கொம்பனில் கோபக்காரனா, முரட்டுப் பாசக்காரனா இருப்பார். இதில் அதிகமும் அன்பை முன்னெடுப்பார். படத்தின் க்ளைமாக்ஸ் சீன் எல்லாம் ஒரே டேக்தான் போச்சு. நான் எழுதியிருந்த டயலாக்கை அப்படியே அவ்வளவு உணர்வோடு எமோஷனலாகச் சொல்லி அழுதார். மானிட்டரில் பார்க்கும்போது எனக்கே கண்ணீர் வந்திடுச்சு. ராஜ்கிரண் சார், பிரகாஷ்ராஜ் சார், கார்த்தி சார் மூணு பேரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் எல்லாமே பேசப்படும். பொறி பறக்கும். இந்த மூன்று பேருமே கதைக்குப் பெரும்பலம். நல்லவன் வாழ்க்கை எவ்வளவு எளியதாயினும் நிம்மதியானது. ‘சந்தோஷம் என்பது என்ன? இன்னாருக்கு இவ்வளவுதான்னு எழுதியா வச்சிருக்கு?’ இப்படி எல்லாவற்றையும் புரிந்துகொள்கிற இடங்கள் படத்துல இருக்கு. கார்த்தி சார் இதில் போயிருக்கிற உயரம் அலாதியாக இருக்கும். நான் எழுதினதைவிட, சொன்னதைவிட, நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட, கார்த்தி பிரமாதமா நடிச்சிருக்கார்.”

உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!
உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!

``நீங்க உங்கள் படங்களில் உறவுகளைப் பற்றி அதிகம் பேசும் காரணம்?’’

“நம்பமாட்டீங்க... நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் முருகன் டீக்கடைக்காரரோட பையன். வாழ்க்கையின் அடித்தட்டு மக்களை ரத்தமும் சதையுமாகப் பார்த்து வளர்ந்தவன். என் கூடப் பிறந்தவங்க ஒன்பது பேரு. ஏழு ஆம்பிளை. இரண்டு பொம்பிளை. எங்க அப்பா கூடப் பிறந்தவங்க ஏழு பேர். எங்க அம்மா கூடப் பிறந்தவங்க அஞ்சு பேர். ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து, அடுத்தவங்களுக்காக அக்கறைப்பட்டு ஒட்டி வாழ்ந்திருக்கோம். பாசமா சேர்ந்திருந்து கொடுத்துதவி, விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்த சூழலில் வளர்ந்தவன். அதனால் சினிமாவிலும் என் படங்கள் உறவுகள் பத்தியே இருக்குது. உறவுகள் செய்கிற தவறுகள் எனக்குப் பெருசா கண்ணுக்குத் தெரியாது. தவறு செய்யாத மனுஷன் இந்த உலகத்தில் கிடையாது இல்லையா! அதனால் தான் கிராமத்து மனசும் மண்ணும் மறக்காத படங்களா எடுக்கிறேன்.

விஞ்ஞானம் வளர்ந்து செல்போன் வந்து நம்மை வேறு இடத்திற்குக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. ‘விருமன்’ படம் பார்க்கும்போது நம் உறவுகள், சித்தப்பா, பெரியப்பா, அங்காளி, பங்காளி தலைக்கட்டுகள் அத்தனைபேர் ஞாபகமும் வரும்!”

``ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்னு பெரிய நட்சத்திரக் கூட்டம் இருக்கே?’’

“செட்ல ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும். பிரகாஷ் ராஜ் சார் ‘முத்தையா ஒரு கதையை உருவாக்கி அதை அப்படியே ஓட்டிப் பார்த்துட்டு வேற இருக்கான். அவன் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கிற சினிமாவை நாம ஒழுங்கா நடிச்சுக் கொடுத்திடுவோம்’னு கார்த்தி சார்ட்ட சொன்னாராம். ராஜ்கிரண் சார் எல்லாம் அவ்வளவு தெளிவு. அவங்களுக்கு சரிக்கு சமமா உணர்வுகள் தெறிக்க இடங்கள் வேணும். அதை அருமையாகப் பண்றார். பந்தல் பாலுன்னு கருணாஸ், குத்துக்கல்லுன்னு ஒரு கேரக்டரில் சூரி, வசுமித்ர, மனோஜ், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய. அம்மாவாக சரண்யா. அவங்கதான் கதையே. ‘குணம் கெட்ட மனுஷங்களால் இந்தக் குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாது’ன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கான நடை உடை பாவனைகளில் வாழ்ந்திருக்காங்க.”

உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!
உறவுகளுக்காக உருகும் கார்த்தி... தேனிப் பொண்ணாக மாறிய ஷங்கர் மகள்!

``டைரக்டர் ஷங்கரோட பொண்ணு அதிதி எப்படி?’’

“எனக்கும் அவங்க பொண்ணுதான். என்னோட தொழில் சார்ந்த சூப்பர் சீனியர் டைரக்டரோட பொண்ணும் என் பொண்ணு மாதிரிதான். ‘ஷங்கர் சார் நம்ம டீமை நம்பிப் பொண்ணை அனுப்பியிருக்கார். அந்தப் பொண்ணுக்கு நல்லபடியாக வேலை கொடுத்து வேலை வாங்கணும்’னு சூர்யா சார் சொன்னார். இதில் அவங்க கேரக்டர் பெயர் தேன்மொழி. நான் எப்பவும் என் படங்களில் பெண்களுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்பேன். இதில் அதிதி ஸ்பெஷலா உணர்ந்து நடிச்சிருக்காங்க. தேனிப் பொண்ணாவே மாத்திட்டோம். கேமராவுக்கு அவங்க பயப்படவே இல்லை. ஒரு தடுமாற்றமும் கண்ணுல காட்டலை. துறுதுறுன்னு சொன்னதை அப்படியே உள்வாங்குறதைப் பார்க்கவே நல்லாருக்கும்.”

``இசை பற்றிச் சொல்லுங்க...’’

“எனக்கு யுவனுடன் வேலை பார்க்க ரொம்ப பிரியம். இது அவருக்குப் பிறந்த மண் வேறயா! பாட்டுகளை உருக்கி எடுத்திட்டாரு. வார்த்தைகளின் மீது ஏறி நின்னுடாமல் அப்படியே துள்ளல் இசை வருது. நம்ம சைக்காலஜி புரிஞ்சுகிட்டு செய்தார். எனக்கே இது அடுத்த கட்டப் படமாக இருக்கும். செல்வகுமார்தான் கேமரா. நான் பிராக்டிக்கலான ஆளு. அவர் தியரியோட வேலை செய்கிறவர். ரெண்டும் சேர்ந்ததில் சிறப்பாக இருக்கு. படத்துக்காக நான் கேட்டதெல்லாம் சூர்யா சாரும் ராஜசேகர் சாரும் கொடுத்தாங்க. மூணு செட், ஹீரோ வீடு, சந்தையில் பென்னி குயிக் சிலைன்னு பெரிய செட் போட்டோம். ஒவ்வொன்னும் 70 லட்சம் ஆச்சு. ஷூட்டிங் நடக்க தங்குதடையில்லாமப் பணம் வேணும். அதை ஏத்த இறக்கம் இல்லாமல் பார்த்துக்கிட்டாங்க. இதில் பிரமாண்டம், பிரமாதமா வந்திருக்கு. சந்தோஷமா இருக்கு.

என் படங்களில் உழைப்பை மட்டும் நம்பி வாழ்றவங்களை எப்பவும் வெளியே கொண்டு வந்திருக்கேன். எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இது நடிகர், டைரக்டர், கேமராமேன், இசையமைப்பாளர்னு சேர்ந்து விளையாடுகிற விளையாட்டு. நான் என் திருப்தியை எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுக்கத்தான் விரும்புவேன்.”

கார்த்தி, முத்தையா
கார்த்தி, முத்தையா

``சாதி மறுப்பை முன்வைக்கும் சமூக உணர்வுள்ள படங்கள் வெளியாகும் காலகட்டம் இது. ஆனால் உங்கள் படங்கள் சாதியத்தை முன்வைப்பதாகக் கடும் விமர்சனங்கள் இருக்கே?’’

“எனக்கே தெரியலை. நான் சாதாரணமான சம்சாரி குடும்பம். டீக்கடை வெச்சு, மனுஷங்களோட பழகி வியாபாரம் செய்து வாழ்ந்த குடும்பம்தான். சக மனுஷங்க பாடு தெரியும். சமூகம் பார்த்தா, காசு வாங்கிப் போட்டு வியாபாரம் செய்து பிழைக்க முடியாது. என்மீது உள்ள குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் பத்தி எவ்வளவோ விளக்கம் கொடுத்திட்டேன். எப்படி இந்தப் பெயர் வந்துச்சுன்னே தெரியலை. எப்படித் தொடருதுன்னும் புரியல. ‘சரி, படம் எடுப்போம். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன்னிறுத்துவோம்’னு அப்படியே போய்க்கிட்டு இருக்கேன். அவ்வளவுதான் இப்போ சொல்ல முடியும்.”