சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“நன்றியுணர்வு இருக்கற மனுஷன் தப்பு பண்ணமாட்டான்!”

சித்தி இத்னானி, பிரபு, ஆர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தி இத்னானி, பிரபு, ஆர்யா

என் முந்தைய படங்கள்ல உணர்வுபூர்வமான குடும்பக் கதைக்குள் ஒரு ஆக்‌ஷன் இருக்கும். ஆனா இது பக்கா ஆக்‌ஷன். ஒன்பது சண்டைக் காட்சிகள் இருக்கு.

``நான் இயக்குநராக அறிமுகமான ‘குட்டிப் புலி' வெளியாகிப் பத்து வருஷங்கள் ஆகிடுச்சு. ஆனா, சினிமாவுக்கென நான் சென்னை வந்து இருபது வருஷங்கள் ஆகிடுச்சு. அந்தக் காலகட்டங்கள்ல ஒரு இயக்குநர்கிட்ட உதவி இயக்குநரா சேர்வது என்பதே குதிரைக்கொம்பு. அதிலும் ஸ்டார் நடிகர்கள் படங்கள்ல வேலை பார்க்கற வாய்ப்பு இன்னும் சிரமம். நான், நிறைய இயக்குநர்கள்கிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன். எந்தத் தொழிலையும் நேசிக்கும்போது அது ஆயுளைக் கூட்டும்னு சொல்வாங்க. நான் உதவி இயக்குநரா சேருவதற்குத்தான் போராடினேனே தவிர, என் படங்களுக்கு ஹீரோ அமையறதுல போராட்டம் இல்ல. சசிகுமார் சார், கார்த்தி சார், விஷால் சார், விக்ரம்பிரபு சார், இப்ப ஆர்யா சார்னு எல்லா ஹீரோக்களுமே விரும்பி வந்தாங்க. என் சினிமாப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கறப்ப ஆச்சரியமாகவும் இருக்கும். நண்பர்கள், சீனியர்கள், சமகால இயக்குநர்கள்னு பார்க்கறப்ப அவங்கள்ல பலரும் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கறதைப் பார்க்கறேன். கடவுள் அருளால் இன்னிக்கும் நான் படங்கள் செய்திட்டிருக்கேன். கிராமியப் படங்கள்தான் என் பலம்னு பெயரும் வாங்கிட்டேன். ஆனாலும் இந்தப் பத்து வருஷத்துல எட்டுப் படங்கள்தான் இயக்கியிருக்கேன். என் 8-வது படம்தான் ஆர்யா சார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' '' - ஒரு ஃபிளாஷ்பேக் பயணம் சென்றுவருகிறார் இயக்குநர் முத்தையா.

இயக்குநர் முத்தையா
இயக்குநர் முத்தையா

‘‘ராமநாதபுரம் எம்.எல்.ஏ பெயரைத்தான் படத்துக்குத் தலைப்பா வச்சிருக்கீங்கன்னு ஒரு பேச்சு இருக்கே..?’’

‘‘அப்படியெல்லாம் இல்ல. பொதுவாகவே என் படத்துக்கான டைட்டிலை வைக்கும்போது, அது கதையைப் பிரதிபலிக்கணும்னு நினைப்பேன். ‘குட்டிப் புலி'யில இருந்து ‘காதர்பாட்சா' வரை அப்படித்தான் இருக்கும். ஒரு குழந்தைக்கு ஏனோ தானோன்னு ஒரு பெயரை வச்சிடமாட்டோம் இல்லீங்களா? ரொம்ப பிடிச்சவங்க பெயரையோ அல்லது நண்பர்கள், மானசீகமா மனசில நிலைச்சு நிற்கிறவங்க பெயரையோ வைப்போம். காதலி பெயரையோ அல்லது காதலன் பெயரையோதான் மகனுக்கோ அல்லது மகளுக்கோ வைக்கணும்னு இல்ல. நல்ல நட்பிலும் இது சாத்தியப்படும். ஒரு அம்மா தன் நன்றி விசுவாசத்திற்காக தன் பையனுக்கு ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'னு பெயர் வைக்குறாங்க. அப்படி என்ன விசுவாசம்? அந்தப் பெயரைச் சூட்ட வேண்டிய அவசியமென்ன? அந்த அம்மாவுக்கும் அந்தப் பெயருக்கானவருக்குமான பந்தம் என்ன? இதெல்லாம்தான் கதை.

என் முந்தைய படங்கள்ல உணர்வுபூர்வமான குடும்பக் கதைக்குள் ஒரு ஆக்‌ஷன் இருக்கும். ஆனா இது பக்கா ஆக்‌ஷன். ஒன்பது சண்டைக் காட்சிகள் இருக்கு. ‘நன்றியுணர்வு மட்டும் ஒரு மனுஷனுக்கு இருந்தால் அவன் எந்த விதத்திலும் தப்பு பண்ணமாட்டான்' என்பதுதான் கதை. ஏன்னா, நன்றிங்கற வார்த்தைக்குள்தான் உண்மை, உழைப்பு, நம்பிக்கை எல்லாம் அடங்கியிருக்கு. கதாநாயகன் (ஆர்யா), அவங்க அப்பா (பிரபு), கதாநாயகி (சித்தி இத்னானி) இவங்க மூணு பேரின் கதாபாத்திரமும் முக்கியமானது. இவங்க தவிர ரேணுகா, ‘டாணாக்காரன்' தமிழ், சிங்கம்புலின்னு கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமானவங்க படத்துல நிறைய பேர் இருக்காங்க. திட்டமிட்ட தேதியைவிட முன்கூட்டியே படத்தை முடிச்சதுல தயாரிப்பாளர் சக்திவேல் சாருக்குக் கூடுதல் சந்தோஷம். ‘கொம்பன்' படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் சார் இசையமைக்கிறார். வேல்ராஜ் சார் ஒளிப்பதிவு பண்ணுறார்.''

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்... சித்தி இத்னானி, ஆர்யா
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்... சித்தி இத்னானி, ஆர்யா

‘‘ஆர்யாவோட தோற்றமே வேற லெவல்ல இருக்கே..?’’

‘‘இந்தப் படத்துக்குள் அவர் வந்ததே, சுவாரசியமானது. லாக்டௌனுக்கு முன்னாடி, கன்னடத்தில் சிவராஜ்குமார் சார் நடிச்ச ‘டகரு' படத்தைப் பார்த்தேன். படம் பிடிச்சு, உடனே அதோட ரைட்ஸை வாங்கி, தமிழுக்கு ஏற்ற மாதிரி மாத்தியும் வச்சிருந்தேன். அந்தச் சமயத்துல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சாரை சந்திக்கற சூழல் அமைந்தது. அவர் அப்ப ஆர்யா சாரை வச்சு, ‘மகாமுனி' படம் பண்ணிட்டிருந்தார். அவர் என்கிட்ட ‘நீங்க ஆர்யாவுக்கு ஒரு படம் பண்ணுங்க'ன்னு கேட்டார். எனக்கும் ஒரு சிட்டி சப்ஜெக்ட் பண்ணணும்னு ஆசை. எல்லாம் கைகூடி வந்த நேரத்துல லாக்டௌன் வந்துடுச்சு. அது முடிந்ததும் ஆர்யா சார் ‘சார்பட்டா பரம்பரை'க்குப் போயிட்டார். நான் கார்த்தி சாரோட ‘விருமன்' படப்பிடிப்பு போயிட்டேன். மறுபடியும் நாங்க சந்தித்ததும் ‘கிராமத்துக் கதையா சொல்லுங்க'ன்னார். என்கிட்ட ‘காதர்பாட்சா' கதை ரெடியா இருந்ததால, இந்தப் படத்தை ஆரம்பிச்சிட்டோம். ஆர்யா சார், இயக்குநர்களின் நடிகர். எல்லாப் பொறுப்பையும் நம்மகிட்ட விட்டுட்டு, நம்ம பொறுப்பை அதிகமாக்கிடுவார். நடிப்பு தவிர, ஃபிட்னஸிலும் அக்கறை காட்டுவார். எங்க படப்பிடிப்புனாலும் காலையில ஆறு மணிக்கு வாக்கிங், சைக்கிளிங்னு போக ஆரம்பிச்சிடுவார். ‘வாங்க பிரதர், பத்து கிலோமீட்டர் வாக்கிங் போயிட்டு வரலாம்'னு கூலா மிரட்டுவார். இந்தப் படத்துல ஆர்யாவோட தோற்றம் ஏற்கெனவே பாராட்டுகளைக் குவிச்சதுல ரெண்டு பேருக்குமே சந்தோஷம்.''

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்... சித்தி இத்னானி, பிரபு, ஆர்யா
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்... சித்தி இத்னானி, பிரபு, ஆர்யா

``உங்க படங்களில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இதுல மும்பை நாயகி சித்தி இத்னானி நடிச்சிருக்காங்க..?’’

‘‘என் கதைகளுக்கான நாயகிக்கு ‘அவங்க முகம் பார்த்ததும் பிடிச்சிடணும். அப்படி ஒரு லட்சணம் இருந்தால் போதும்'னு நினைப்பேன். லட்சுமி மேனன் இதுவரை மூணு படங்கள்ல நடிச்சாங்க. ‘விருமன்' படத்துக்குப் பிறகு மறுபடியும் அதிதி ஷங்கரை நடிக்க வைக்கலாம்னு எண்ணியிருந்தேன். இதுவும் கிராமத்துக் கதை. அதிதிக்கு மறுபடியும் தாவணிதான் கொடுக்கணும் எனும்போதுதான், வேற ஹீரோயின் பத்தி யோசிச்சோம். ‘வெந்து தணிந்தது காடு'ல சித்தி இத்னானியோட நடிப்பு பார்த்ததும் பிடிச்சிடுச்சு. அவங்க மும்பைப் பொண்ணு, அவங்களுக்குத் தமிழ் தெரியலைனாலும்கூட, நம்ம ஊர் பொண்ணு சாயல் இருக்கு. சசி சாரோட ‘நூறு கோடி வானவில்'லதான் அறிமுகமானாங்க. இதுல கிராமத்துப் பொண்ணாகவே அசத்திட்டாங்க.''

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்...
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்...

‘‘நீங்க இப்ப தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கீங்க...’’

‘‘ஆமாங்க. முன்னாடியே சொன்னது மாதிரி கன்னடப் படம் ‘டகரு' ரீமேக் ரைட்ஸ் வாங்கி வச்சிருந்தேன். அதனால நானே தயாரிப்பாளர் ஆனேன். ‘டகரு'வை ‘ரெய்டு' ஆக்கிட்டோம். வசனம் மட்டும் நான் எழுதுறேன். என்கிட்ட உதவி இயக்குநரா இருந்த என் தங்கச்சி மகன்தான் இயக்கியிருக்கார்.''

‘‘கிராமத்து எளிய மனிதர்களின் எமோஷன்களும், உறவுமுறைகளும் உங்களுக்கு எளிதாகக் கைகூடுதே... வேறு ஜானர்களையும் எதிர்பார்க்கலாமா?’’

‘‘என் கதைகளை நானேதான் எழுதுறேன். கதை விவாதங்கள்ல பேசி சீன்கள் பிடிக்க மாட்டேன். கோபம்ங்கறது எல்லாருக்கும் ஒண்ணுதான். ஆனா, அதை எங்கே, எப்போ, யார்கிட்ட வெளிப்படுத்துறோம் என்பதுதான் முக்கியமானது. நிஜ சம்பவங்கள், கிராமங்கள்ல நான் பார்த்த, என்னை பாதிச்ச விஷயங்களை வச்சுதான் உணர்வுகளைப் பிடிக்கறேன். சில எமோஷனல் சீன்கள் எழுதும்போதே, வொர்க் அவுட் ஆகும். அந்த சீனை உள்வாங்கி நடிக்கறதுக்கு ராஜ்கிரண் சார், பிரபு சார் மாதிரி அருமையான நடிகர்கள் அமையும்போது, உணர்வுகள் பேசப்படும்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்...
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில்...

இப்ப வரை ஒரு பாணியில நான் போய்ட்டு இருக்கேன். எனக்கும் ‘பொல்லாதவன்' மாதிரியோ, பாரதிராஜா சார் இயக்கத்தில் விஜயகாந்த் சார் நடிச்ச ‘தமிழ்ச் செல்வன்' மாதிரியோ, ராதாமோகன் சார் இயக்கின ‘மொழி' மாதிரியோ படங்கள் பண்ணணும்னு ஆசை இருக்கு. ஆனா, தயாரிப்பாளர்கள் என்கிட்ட கிராமத்துக் கதைகள்தான் எதிர்பார்க்கறாங்க. உலகம் முழுவதும் இருக்கற ஒரே விஷயம், மனித உணர்வுதானே! உணர்வுபூர்வமான குடும்பக் கதைகள் காலம் கடந்தும் நிலைக்கும். இப்ப வர்றது எல்லாம் நகரத்துப் படங்களா இருக்கும். என் காலத்துல ஒரு கிராமத்துப் படம்னு எடுத்தால், அது நான் இயக்கின ‘விருமன்' படமாகத்தான் இருக்கும். மத்தவங்க படங்கள்ல இருந்து வேறுபட்டுக் கொடுக்கறது எனக்கும் எளிதான வேலைதான். ஆனா, என் படங்கள்ல இருந்து வேறுபட்டுக் கொடுக்கறது எனக்கே ரொம்பப் பெரிய சவால். ஹீரோவுக்கான காஸ்ட்யூம்ல ஒரு சட்டை கொடுத்தால்கூட, இதுக்கு முந்தைய படங்கள்ல அவருக்குக் கொடுத்திராத சட்டையாக இருக்கணும்னு மெனக்கெடுவேன். என்னோட ஹீரோக்களும் ‘பேன்ட் ஷர்ட்ல நிறைய நடிச்சிட்டேன். வேட்டி சட்டை கொடுங்க'ன்னு கேட்குறாங்க. நானும் சந்தோஷமா கொடுக்கறேன். அவ்ளோதான்!''