
பொதுவா ஆதி சென்னையின் அடிப்படைன்னா குத்துச்சண்டையும் துறைமுகமும்தான்.
`` `அகிலன்' முழுக்க அண்டர்வேர்ல்டு கேங்ஸ்டர் ஆக்ஷன் படம். பார்க்கிற ஒவ்வொரு காட்சியிலும் எனர்ஜியும் ஆக்ஷனும் வேகமும் புத்திசாலித்தனமும் தெறிக்கும். கேங்ஸ்டராக இருக்கிற அகிலனின் கதை இது. எல்லாத்துக்கும் தயார்னு ஒரு ஹீரோ நிற்கும்போது, செலவழிக்க அனுமதிக்கிற தயாரிப்பாளர் சுந்தர் இருக்கும் போது, எல்லாமே சாத்தியம். மாஸ் ஹீரோவாக ரவிக்கு `அகிலன்' செம மாஸ் படம்’’ என சந்திப்புக்கு ஆரம்பமாகிப் பேசுகிறார், இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். `பூலோக'த்தில் அதிக கவனம் பெற்றவர். இயக்குநர் ஜனநாதனின் பிரதான சீடர்.
``பூலோகத்தில் பாக்ஸிங் ஆட்களைப் பத்திச் சொல்லிட்டு இதில் அண்டர்வேர்ல்டு விஷயத்திற்கு வந்துட்டீங்களே?’’
``நான் மயிலாப்பூர்க்காரன். ஆனால் அதிகம் வடசென்னைப் பக்கம்தான் திரிவேன். மரண கானாப் பாட்டு, சால்ட் வாட்டர், சல்பேட்டா மேட்டர்னு வடசென்னைக் கலாசாரத்தை முழுக்க ‘பூலோகம்’ படத்தில் கொண்டுவந்தேன். பொதுவா ஆதி சென்னையின் அடிப்படைன்னா குத்துச்சண்டையும் துறைமுகமும்தான். எங்க ஜனநாதன் சார், ஹார்பரில் வேலை பார்த்த கதையைச் சொல்லிக் கேட்டிருக்கேன். இந்தப் படம் துறைமுகத்தை ஒட்டியிருக்கிற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதில் ஒருத்தனின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கேன். இதில் நான் பெரிய அளவில் அரசியல் கருத்தெல்லாம் பேச வரலை. ஆனால் ஜனநாதனிடம் இருந்து வந்ததால் கொஞ்சம் சமூக சிந்தனைகளைத் தவிர்க்க முடியாது.’’



``அண்டர்வேர்ல்டின் மறைக்கப்பட்ட பக்கங்கள் இதில் பதிவாகியிருக்கா?’’
``சொல்லாததைச் சொல்லிவிட்டோம்னு ஒன்றும் கிடையாது. ஆனால் புதுசா சொல்லியிருக்கோம். ரௌடி, தாதான்னு நாம் கற்பனை பண்ணி வச்சிருக்கிற மாதிரி அவங்க நிஜத்தில் இல்லை. தனி மனுஷங்க மாதிரி தெரிஞ்சாலும் ஒரு அரசாங்கம் போல இருக்காங்க. வெட்டுவது குத்துறது பணத்துக்காக மட்டுமல்லாம இங்கே ஹீரோயிசம் மாதிரி ஆகிப்போச்சு. இன்னொருத்தனோட பயம் தன்னோட பலம் என்பதில் சந்தோஷமாகிடறாங்க. இந்தக் கதையைக் கற்பனையாகச் சொல்லும்போது எப்படி எடுக்கப்போகிறோம்னு மலைப்பா இருந்தது. இப்போ திரையில் வந்திருப்பதைப் பார்த்தால் நம்பிக்கையா இருக்கு. அண்டர்வேர்ல்டு என்பது மோசமானதா இருந்தாலும் அவங்க உலகத்தில் இருக்கிற நாகரிகம், ஒழுக்கம், விசுவாசம், இன்டலிஜென்ஸ் நெட்வொர்க் எல்லாமே ஆச்சரியமா இருக்கு. கொலை பண்றவன், கிட்நாப் பண்றவன், மாமூல் வசூல் பண்றவன், கட்டப்பஞ்சாயத்து பண்றவன்னு பல பிரிவுகள் இதில் இருக்கு. அதனோட எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கு.”
``இரண்டாவது படத்திலும் ஜெயம் ரவிதான் ஹீரோ. எப்படி உணர்கிறீர்கள்?’’
``பேராண்மையிலிருந்து இப்ப வரைக்கும் அவர்கிட்ட சேர்ந்து வேலை பார்த்துகிட்டு இருக்கேன். அருமையான மனிதர். ஹீரோ என்பதற்காக இதைச் சொல்ல வரலை. இவ்வளவு பெரிய படத்தை என்கிட்ட கொடுத்தது பெரிய விஷயம். ‘பூலோகம்’ வெற்றி அடைந்த பிறகும் யாரும் என்னைத் தேடி வரலை. மறுபடியும் என்னை ஜெயம் ரவி நம்பியது அவருடைய பெருந்தன்மை. இதில் எல்லாமே ரிஸ்க் காட்சிகள். கப்பல் மேலே ஏறணும்; கன்டெய்னர் மேலே ஓடணும். கிரேன் மேலே குறி தவறாமல் பிடிச்சு ஏறணும்னு ரொம்ப ஆபத்தான காட்சிகள். எல்லாத்தையும் மனமுவந்து செய்து கொடுத்தார். அகிலன் கேரக்டர்படி எமோஷனை வெளியே காட்டாதவன். அவனது உண்மையான எமோஷன் என்னன்னு யாருக்குமே தெரியாது. வெளியே தெரிகிற அவனது அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாமே பொய். அவனது உண்மையான எமோஷன் எக்ஸ்பிரஷன்ஸ் யாருக்காக என்பதுதான் படத்தோட மையம்.
காட்சி ஒரு இடத்தில் முடியாது. பரபரன்னு பத்து இடங்களில் தொடர்ந்து முடியும். அத்தனையும் சலித்துக்கொள்ளாமல் ரவி செய்து கொடுத்ததுதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல் விஷயமாக இருக்கும்.’’



``பிரியா பவானி ஷங்கர் முதல் தடவையாக ஜெயம் ரவியுடன் நடிக்கிறாங்களே?’’
``அவங்க போலீஸ் அதிகாரியாக வர்றாங்க. பிரியா முக்கியமான கேரக்டரா, படத்தை நகர்த்திக் கொண்டு போகிறவரா வர்றாங்க. புல்லட் ஓட்டணும்மான்னு சொன்ன சில நாள்களில் அதிலேயே `நச்'னு வந்து இறங்கினாங்க.
அவங்களும் சரி, தான்யா ரவிச்சந்திரனும் சரி, அருமையா செய்திருக்காங்க. அந்த கேரக்டரை யார் செய்திருந்தாலும் இவ்வளவு நல்லா செய்திருக்க முடியுமான்னு எனக்குத் தோணிக்கிட்டே இருக்கு. அஞ்சாறு வில்லன்கள் அதகளம் பண்ணியிருக்காங்க. ஹரிஷ் உத்தமன், ஹரிஸ் பெராடி, சிராக் ஜானி, தமிழ்னு நிழல் உலகத்திற்கு நல்ல மூட் கிடைச்சிருக்கு. ஷூட்டிங் முழுக்க துறைமுகங்களில்தான். நான் ஒரு பக்கம், உதவியாளர்கள் இன்னொரு பக்கம், நடிகர்கள்னு தனியாக நின்று கப்பலில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகள். ஒளிப்பதிவாளர் விவேக், பி.சியோட சீடர். அந்தப் பெயரை நிறைய முறை நிரூபிச்சிருக்கார். சாம் சி.எஸ் தேர்ந்தெடுத்து படங்களும் பாடல்களும் செய்கிறார். நேரம் காலம் இல்லாமல் ஷூட்டிங் போய்க்கிட்டே இருக்கும். கப்பலோட மூவ்மென்ட் அதனுடைய வேகம் எல்லாம் அறிந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்புக்கு ஏத்த பலன் கிடைச்சிருக்கு.”


``உங்க குரு டைரக்டர் ஜனநாதனை எப்படி மிஸ் பண்றீங்க...’’
``25 வருடமா அவர்கூடதான் இருந்தேன். எங்க அம்மா அவரை இரண்டாவது தாய் மாதிரின்னுதான் சொல்வாங்க. அவர் வீட்லதான் உண்டு உறங்கிக் கிடந்தோம். அவரோடு பேசியது எல்லாம் படிப்பினை. யாரை வேண்டுமானாலும் நேசித்துவிடுகிற, யாரையும் நேசிக்க வைத்துவிடுகிற மனுஷன். அன்புதான் அவரோட ஜனநாயகப் பண்பு. மூடத்தனங்களுக்கு அப்பாற்பட்டு தீவிர சாதி எதிர்ப்பாளரா இருந்து, கலகக்காரனாகவே வாழ்ந்து தீர்த்த மனுஷன். அவரை வெறுத்தவர்களை நான் பார்த்ததே இல்லை. கம்யூனிசத்தை வளர்த்து நல்ல விஷயங்களைப் பேசிக்கிட்டே இருந்தார். அரியணைகளை உதறி சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். அவரை மறக்கவே முடியலை. அவரை மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியலை என்பதுதான் உண்மை. எப்போதும் என் நினைவில் அவர் இருப்பார்!”