
ஐஸ்வர்யா மூணு பிள்ளைகளுக்குத் தாயாக வர்றாங்க. ஒரு புகழ்பெற்ற செருப்புக் கடை வச்சிருந்து காலம் மாறினதில் வியாபாரம் குறைஞ்சுகிட்டே வருகிற கடை
`ஃபர்ஹானா' திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி கவனம் பெற்றிருக்கிறது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் நிறைந்த ஆசுவாசத்தில் பேசுகிறார். ‘ஒருநாள் கூத்து', ‘மான்ஸ்டர்' என சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் முடித்து இப்போதைய ‘ஃபர்ஹானா' தனக்கு உணர்த்தியதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
‘‘எனக்கென்ன ஒரு சந்தோஷம்னா... தீவிரத் தன்மையோடும் உண்மையோடும் எளிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கேன். பார்வையாளனும் நானும் சேர்ந்து வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வதற்கான ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். அப்படி ஒரு வழியாக ‘ஃபர்ஹானா'வைப் பார்க்கிறேன். முதல் படத்திலிருந்து எளிமையாக எப்படி படம் பண்ணுவது என்பதை நோக்கியே நகர்ந்திருக்கேன். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம். உணரக்கூடிய, புரியக்கூடிய எல்லோருக்கும் புத்துயிர்ப்பைத் தரக்கூடியதுதான் இந்தப் படம்'' - அடுத்தடுத்து சீராகப் பேச ஆரம்பிக்கிறார் நெல்சன்.


``எப்படியிருக்கும் படம்?’’
‘‘ஒரு நடிகரா இருந்தால் பலவித குணச்சித்திரங்களைச் செய்து பார்க்கலாம். பணக்காரனா, அடுத்த வேளைக்கு உணவு கிடைக்காதவராகக்கூட நடிச்சுப் பார்க்கலாம். இயக்குநரா வேறு வேறு உலகத்துக்குச் சென்று பார்க்கணும்னு ஆசைப்படுறேன். ‘ஃபர்ஹானா’வின் வெளிப்பாடுகூட அப்படி வந்ததுதான். என்னோட இளமை சென்னையின் புதுப்பேட்டையில்தான் கழிந்தது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிற பகுதி. அதிக நேரம் அவங்களோட செலவழிச்சிருக்கேன். இந்தப் படத்திற்கான பின்புலம் ஐஸ்ஹவுஸ்தான். ரொம்பவும் பரபரப்பாக இருக்கிற பகுதி. சின்னச்சின்ன சந்துகளுக்கு நடுவில் அவ்வளவு உயிரோட்டமான வாழ்க்கை இருக்கு. இங்கேயும், பாரிமுனையிலும்தான் இப்படிப்பட்ட வைப்ரேஷனை அதிகம் உணர முடியும். எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும், நகரம் பெருசா விரிஞ்சாலும், இங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கை நெரிசலில் அப்படியேதான் இருக்கு. இந்த இடத்தைப் பத்திச் சொல்லணும்னு நினைச்சிட்டே இருந்து, இப்ப நனவாகியிருக்கு. இந்த சினிமாவை அதன் பொருளோடு புரிந்துகொண்டு டிரீம் வாரியர்ஸ் தயாரித்திருப்பது மகிழ்ச்சி.''

``இஸ்லாமியர் சமூகம் பற்றிய புரிதல் கொண்ட கதையாக இருக்குமோ?’’
‘‘அப்படியான ஒரு புரிதல் தேவைப்படுது. ஒரு படைப்பாளிக்கு கதையில் அந்த சேலஞ்சுகூட இல்லைன்னா இங்கே என்ன பன்றது? எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கதையும் கதாபாத்திரங்களும் மட்டும் கொடுத்துக்கொண்டே போவதில் என்ன இருக்கு? கொஞ்சமாவது நுண்ணுணர்வை அந்த எல்லை வரைக்கும் போய்த் தொட்டுப் பார்க்கலைன்னா எனக்குத் தீனி இல்லாமப்போயிடுமே! எல்லாம் சரியா இருக்கிற கதையை மக்கள்கிட்ட கொண்டு வந்து கொடுக்கிற மாதிரி இந்த உலகமும் இல்லை. கறுப்பு, வெள்ளையைத் தாண்டி மக்கள் பலவற்றை இப்போ ஏத்துக்கிறாங்க. ஹீரோக்கள் நல்லவனாக இருக்கிற அவசியம் இல்லாமப்போச்சு. வில்லன் கிட்ட நல்ல குணத்தைப் பார்க்கிற ஆடியன்ஸ் வந்தாச்சு. இஸ்லாமியர்கள் இங்கே அரிதாகவே நல்லவர்களாக சித்திரிக்கப்படுறாங்க. இது இப்படியேதான் இருக்கணுமா? அதைத் தாண்டி கதை இல்லையா! நான் படித்த புத்தகங்கள், பழகிய மனிதர்கள் வேறு விதமாக மென்மையோடு இருக்கிறார்களே! அதையும் கவனத்தில் வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கேன்.''

``இஸ்லாமியர்களின் உலகத்தை இந்தப் படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்களா?’’
‘‘இஸ்லாமிய மக்களின் உலகத்திற்கு எனக்கு நம்ம மக்களைக் கொண்டு போகணும்னு தோணுச்சு. மாரி செல்வராஜ்கிட்டே, ‘நீங்க ஏன் இஸ்லாமியர் பத்தி எடுக்கலை'ன்னு கேட்டாங்க. அதற்கு அவர் ‘அவங்க வாழ்க்கை தெரியலை. பரிச்சயம் இல்லை. போய்ப் பார்க்க முடியலை'ன்னு சொன்னார். எனக்கு அந்தக் கதவைத் திறந்து பார்க்கணும்னு தோணுச்சு. மலையாளத்தில் நிறைய இஸ்லாமிய கேரக்டர்களும், அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளும் வருது. நிறைய இஸ்லாமிய இயக்குநர்கள் சர்வ சாதாரணமா அவங்க வாழ்க்கையைச் சொல்றாங்க. அவங்களைப் பத்தி இங்கே படங்கள் வரும்போது நல்ல புரிதல் வரும். இது சென்சிட்டிவ்வான கதைதான். மிகவும் உணர்ந்து, கவனத்தோடு நேர்மையாக சில விஷயங்களைச் சொல்லியிருக்கோம். இதை நான் சந்தோஷமாகச் சொல்ல முடியும். வாழ்க்கையோட எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும், அதில் ஆச்சர்யங்கள் நிறைஞ்சு கிடக்கு. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருக்கு.''

``ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி உள்ளே வந்தாங்க?’’
‘‘ஐஸ்வர்யா மூணு பிள்ளைகளுக்குத் தாயாக வர்றாங்க. ஒரு புகழ்பெற்ற செருப்புக் கடை வச்சிருந்து காலம் மாறினதில் வியாபாரம் குறைஞ்சுகிட்டே வருகிற கடை. அவங்க குடும்பத்தை நிலைநிறுத்த வேற வழியில்லாம வேலைவாய்ப்புக்குத் தயாராக வேண்டியிருக்கு. தவிர்க்க முடியாமல் நகர்ந்து செல்ல வேண்டிய கட்டம். ‘ஃபர்ஹானா’வின் இந்தப் பயணம்தான் படம். நிச்சயம் புதுக்களமும் புதுக் கதையுமாக இருக்கும். வேறு சில நடிகைகளிடம்கூட கேட்டேன். மூணு பிள்ளைகளுக்குத் தாய் என்றதுமே பதற்றத்தோடு விலகிட்டாங்க. இப்போ ஐஸ்வர்யா நல்ல இடத்தில் இருக்கிறார். நல்ல கேரக்டர்களைத் தேடி அடைகிறார். திறமையை மட்டுமே நம்பி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் எவ்வளவோ தருணங்கள் அவருக்காக இருக்கு. கொந்தளிக்கிற முகபாவம், தனித்தன்மை வாய்ந்த குரல் இப்படி நிறைய காட்சிகளைத் தன்வயப்படுத்தியிருக்கார். இஸ்லாமியர் உலகத்தின் நுணுக்கமான புள்ளிகளை அவரிடம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கேன். அவரின் மொத்த நடிப்பிலும் இஸ்லாமியப் பெண்களின் முழு வடிவம் கிடைக்கும்.
‘ஜித்தன்' ரமேஷ் அவரே நம்ப முடியாத கேரக்டரில் வர்றார். 100 சதவிகிதம் அவர்தான் அந்த கேரக்டருக்குப் பொருத்தமானவர். கிட்டிக்கு மிகவும் அருமையான ரோல். அவருக்கு இருந்த இடங்களில் நான்கு இடங்களைக் கண்டறிந்து பிரமாதமா நடித்தார். அனுமோளுக்கு காத்திரமான பாத்திரம். சமூகத்தின் பல உண்மைகளைப் பேசுற இடத்தில் அவரும், ஐஸ்வர்யா தத்தாவும் இருக்கிறாங்க. செல்வராகவன் சாரின் ஸ்பெஷல் பர்ஃபாமென்ஸ் இருக்கு. என் வாத்தியார் சங்கர் தாஸ், நண்பன் ரஞ்சித் ரவீந்திரன் இருவரும் என்னோடு திரைக்கதையில் இருந்தாங்க. பிரதான வசனத்தை மனுஷ்ய புத்திரன் ரொம்ப சந்தோஷமாகச் செய்து கொடுத்தார். வார்த்தைகளின் மீது ஏறி நிற்காமல், என் நண்பன் ஐஸ்டின் பிரபாகரன் இசை அமைச்சிருக்கார். வழக்கமான என் கேமராமேன் கோகுல் பினாய்தான் இதற்கும். ஷூட்டிங்கில் அவர் உழைப்பு மனதில் நின்னுது. இப்ப பார்த்தால் அப்படியே கண்ணுக்குள் நிற்குது.''

``யாரிடமும் பணிபுரியாமல் நேரடியாக இயக்குநர் ஆனவர் நீங்கள். அது போதுமானதாக இருக்கிறதா?’’
‘‘இங்கே டெக்னாலஜிக்கு நன்றி சொல்லணும். குறும்படங்கள் எடுத்து வந்து வெற்றிபெற்றவங்க இங்க இன்னமும் நிலைச்சு நிற்கிறாங்க. இப்போ கையில் போன் இருக்கிறவங்க எல்லாரும் இயக்குநர்கள்தான். அடிப்படையைக் கத்துக்கலாம். கிரியேட்டிவிட்டியைக் கத்துக்க முடியாது. நீங்க படிக்கிற புத்தகங்களும், பெற்ற அனுபவங்களும், வாழ்கிற உணர்வுரீதியான வாழ்க்கையில் இருந்தும்தான் உங்களுக்கான கிரியேட்டிவிட்டியைப் பெற முடியும். நல்ல சினிமாங்கிறது கதைல நீங்க யார் பக்கம் நிற்கிறீங்க, எந்தக் கோணத்தில் கதை சொல்றீங்கங்கிறதுலதான் இருக்கு. மிகவும் தனித்தன்மை கொண்ட புதிய கூறுமுறை புதிய பார்வைக் கோணங்களெல்லாம் வந்துடுச்சு. சினிமா அதிகமும் இயக்குநரின் ரசனை சார்ந்தது. படத்தை சிறு வியப்புடன் தொடர்ந்து பார்க்க வைப்பது உங்கள் கையில்தான் இருக்கு; அது பிற இயக்குநர்களிட மிருந்து பாடமாகப் பெறுவதல்ல.''

``பெண்கள் பிரச்னை சார்ந்த படங்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டன. இதை எப்படிப் பார்க்கிறீங்க?’’
‘‘எனக்கு அப்படியெல்லாம் பிரிச்சுப் பார்க்கத் தோணலை. ஒரு சூப்பர் ஸ்டாரை வச்சு நான் படம் செய்தாலும் அதில் பெண்களுக்கான முக்கியத்துவம் சரிவிகிதத்தில் இருக்கும். சில கதைகளைப் பெண்களின் பார்வையில் மட்டுமே சொல்ல முடியும். ஆண்களின் பார்வையில் கதைகள் நிறைய வருது. பெண்கள் உள்ளடங்கிய கதைகள் குறைவாகவே இருக்கு. வித்தியாசமான கதைகள் பண்ணணும்னு நினைக்கிறபோது எல்லாப் பக்கமும் யோசிக்க வேண்டியிருக்கு. இங்கே பத்து ஸ்டார்ஸ்தான் இருக்காங்க. அவங்க கையில் சில ஆண்டுகளுக்கு படங்கள் கைவசம் இருக்கு. அவங்களுக்கான எதிர்பார்ப்பு, அவங்களோட ரசிகர்கள்னு கவனத்தில் எடுத்துக்க வேண்டியிருக்கு. இன்னொரு பக்கம் கதையில் ஆழமாகப் போகும் போது பெண்கள் மட்டுமே அதில் உட்கார்வது இயல்பானதுதான். இதை நான் பெண்கள் சார்ந்த படமாகப் பார்க்காமல், ஒரு திரைப்படமாகவே பார்க்கிறேன். இந்தப் படம் பெண்ணின் மைய உணர்வை வச்சு நகருதுன்னு சொல்லலாம். ஆண்களும் இதில் பெருமளவு பங்கேற்றிருக்காங்க. ஒரு நல்ல ஹீரோவுக்குக் கதை சொன்னாலும் அம்மா, காதலி, தோழி, மனைவி இல்லாமல் எந்தப் படமும் வர்றதில்லை. இது ஒரு பாலினத்திற்கான கதை இல்லை. இது நம்மோடு இருக்கிற சமூகத்தின் கதையும்தான். எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையை உள்ளபடி உறுதியாகச் சொல்வதுதான். திறமைகளை முன்வைத்து, பிரச்னைகளை மனதில் தேக்கி கனமாக, கோபமாகச் சொல்லியிருப்பதாக நம்புறேன்.''