
‘சில்லுனு ஒரு காதல்’ல சூர்யா சார் கேரக்டருக்கு என்னையும் அறியாமல் என் குருவான கௌதம் சார் பெயரை வச்சிருப்பேன். அப்படி ஒரு சூழல் இந்தப் படத்திலும் அமைஞ்சது. மாஸான நடிகர்கள் அமைஞ்சாங்க.
‘‘என் முதல் படம் ‘சில்லுனு ஒரு காதல்’. அதைத் தயாரிச்சது ஸ்டூடியோ கிரீன்தான். அது வெளியாகி 16 வருஷத்துக்கு மேல ஆச்சு. அதே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரே மறுபடியும் என்னைக் கூப்பிட்டு, ‘பத்து தல' வாய்ப்பைக் கொடுத்திருக்கார். வருஷங்கள் கடந்தும் ஒரு இயக்குநர் மீது ஒரு தயாரிப்பாளருக்கு நம்பிக்கை இருப்பது மகிழ்ச்சியா இருந்துச்சு. எஸ்.டி.ஆர். சாரும் என் மீது நம்பிக்கை வச்சார். அப்புறம் என் ஃபேவரிட் ஏ.ஆர்.ரஹ்மான் சார். இப்படி நான் நேசிக்கறவங்களோட சேர்ந்து ‘பத்து தல'யை ரசிச்சு இயக்கியிருக்கேன்.'' - முகம் மலர்ந்து பேசுகிறார் இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணா.
`` ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’க்குப் பிறகு சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றி கொடுத்தாக வேண்டிய சூழல்... பிரஷரை எப்படிக் கையாண்டீங்க?’’
‘‘வெங்கட்பிரபு சார், கௌதம் சார் ரெண்டு பேருமே சிம்பு சாரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்காங்க. இதோட ஆரம்பத்துல நானும் ஒரு அழுத்தத்தோடதான் இருந்தேன். ஆனா, அப்படியே இருந்து மேக்கிங்ல தப்பு பண்ணிடக்கூடாதுன்னு பயம் வந்திடுச்சு. அப்புறம், பிரஷரை ஏத்திக்காமல் வேலைகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். இது கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’யோட ரீமேக்தான் என்றாலும், அதை அப்படியே பண்ணல. அதன் களம் மற்றும் ஒருசில கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்துக்கிட்டேன். குறிப்பா, எஸ்.டி.ஆர் கதாபாத்திரத்தின் தன்மையை மட்டுமே எடுத்துக்கிட்டேன். எஸ்.டி.ஆருக்கு ஒரு பெரிய இமேஜ் இருக்கு. அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மனசுல வச்சுப் பண்ணியிருக்கேன். ‘மஃப்டி’ படத்தைப் பார்த்தவங்ககூட இதுல நிறைய ஆச்சரியங்களை உணர்வாங்க.’’

``சிம்பு கதாபாத்திரத்தின் பெயர் ஏ.ஜி.ஆர்னு சொல்லியிருக்கீங்க... யார் இந்த ஏ.ஜி.ஆர்?’’
‘‘டைட்டிலுக்குப் பொருத்தமானவர். மணல் மாஃபியா கிங். அப்படி ஒரு மாஸ் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமா தன் தோற்றத்தையும் இதுக்காக அவர் மாத்தி வந்திருக்கார். ‘மாநாடு’ படத்துக்கு முன் எஸ்.டி.ஆர். எப்படி இருந்தார்னு தெரியும். ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டிலும் அவர் வேற வேற தோற்றங்கள்ல இருப்பார். இதுல நடிக்க வரும் முன்னாடி அவர்கிட்ட உடல் எடையை அதிகரிக்கச் சொன்னேன். ‘இப்பத்தானேங்க கஷ்டப்பட்டு வெயிட்டைக் குறைச்சிருக்கேன். மறுபடியும் எடையை ஏத்தச் சொல்றீங்களே’ன்னார். அதன்பிறகு ஏ.ஜி.ஆருக்கான தோற்றத்திற்கு அது அவசியம்னு புரிஞ்சுக்கிட்டார். முதல்நாள் ஸ்பாட்டுக்கு வரும்போதே, ஏ.ஜி.ஆர் ஆகவே வந்து அசத்தினார். படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணமும் கதாபாத்திரமாகவே இருந்தார். இந்தப் பண்பு அவர்கிட்ட ரொம்பப் பிடிச்சிருந்தது. சில விஷயங்கள் நான் மறந்திருந்தாலும் கூட, ‘முதல் டேக்கில் அப்படிச் சொன்னீங்களே... அப்படியே பண்ணிடலாமா’ன்னு கேட்டு நினைவூட்டுவார். அப்படி ஒரு ஞாபகசக்தி அவருக்கு உண்டு.''
``படத் தலைப்புக்கு ஏற்ற மாதிரி படத்துல பத்துக்கும் மேலான நடிகர்கள் இருக்காங்க..?’’
‘‘ ‘சில்லுனு ஒரு காதல்’ல சூர்யா சார் கேரக்டருக்கு என்னையும் அறியாமல் என் குருவான கௌதம் சார் பெயரை வச்சிருப்பேன். அப்படி ஒரு சூழல் இந்தப் படத்திலும் அமைஞ்சது. மாஸான நடிகர்கள் அமைஞ்சாங்க. எஸ்.டி.ஆரைச் சுத்தி நடக்கற விஷயங்கள்தான் படத்தின் கதை. இதுல கௌதம் கார்த்திக்கை இதுவரை நடித்திராத ஒரு பரிமாணத்தில் காட்டியிருக்கோம். பிரியா பவானி சங்கர், மனுஷ்யபுத்திரன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, ‘அசுரன்’ டீஜே அருணாசலம், கலையரசன், ‘சார்பட்டா’ சந்தோஷ்னு கதைக்குப் பொருத்தமான ஆட்கள் இருக்காங்க. பிரியா பவானி சங்கரை இதுல ரொம்ப ஃப்ரெஷ்ஷா பார்ப்பீங்க. இதுல அவங்க மணல் கொள்ளையைத் தடுக்கற ஒரு துணிச்சலான தாசில்தாரா நடிச்சிருக்காங்க. கதைக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கார் ஃபாருக் ஜே.பாஷா. அவரோட விளம்பரப் படங்கள் பார்த்து, இதுல அவரை அழைச்சிட்டு வந்துட்டேன். இசை ஏ.ஆர்.ரஹ்மான் சார். அவர் ஒரு ஆலமரம். அந்த மரத்துல ஒரு சின்ன நிழல் கிடைச்சாலே சில்லுனு சுகமா இருக்கும். இதுல அவரும் விரும்பி உழைச்சிருக்கார். பிரவீன் கே.எல். எடிட்டிங் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கு. படத்தின் வசனங்களை என் படங்களின் ரைட்டர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கார். இதுல அவரோட வசனங்களும் பேசப்படும்.''
``கவிஞர் மனுஷ்யபுத்திரனை நடிகரா அறிமுகப்படுத்துறீங்க. அப்புறம் உங்க குரு கௌதம் மேனனை இயக்கின அனுபவம் எப்படியிருந்தது?’’
‘‘மனுஷ்யபுத்திரனை ஒரு கவிஞனாக, அரசியல்வாதியாக நமக்குத் தெரியும். இதுல அவர் நடிகனாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கார். மண்வளத்தைச் சுரண்டுவதைத் தட்டிக் கேட்கும் ஒரு போராளி கதாபாத்திரத்தில், யாரோ ஒரு நடிகரை நடிக்க வைப்பதற்கு பதிலாக உண்மையாகவே அதற்கான தகுதி உடைய ஒருத்தரை நடிக்க வைக்கலாமேன்னு தோணுச்சு. மனுஷ்யபுத்திரன் ஞாபகத்திற்கு வந்தார். அவர்கிட்டே கேட்டேன். கதாபாத்திரம் பிடிச்சு, சம்மதிச்சிட்டார். அதைப்போல கௌதம் சாருக்கும் சிம்பு சாருக்குமான காம்பினேஷன் காட்சிகள் ஆச்சர்யமூட்டும். திரைக்குப் பின்னாலும் அவங்க ரெண்டு பேருக்குமிடையே நல்ல புரிதலும் நட்பும் இருக்கறதால, அவங்க கெமிஸ்ட்ரி திரையில் அழகா பிரதிபலிச்சிருக்கு.''
``ஹீரோவின் தோற்றம் என்பது ஒரு படத்தின் ஐகான்னு சொல்வாங்க. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் க்ளைமாக்ஸில் சிம்பு, ‘பத்து தல’ படத்தின் தோற்றத்தில் இருப்பார்... எப்படி இப்படி ஒரு விஷயம் ஆச்சு?’’
‘‘எஸ்.டி.ஆர் ‘வெந்து தணிந்தது காடு’ முடிந்த பிறகுதான் ‘பத்து தல’ படப்பிடிப்புக்கே வந்தார். இடையே கௌதம் சார் அவர் படத்தின் கதையில் சில மாறுதல்களைச் செய்தார். அதுக்கு ரீஷூட் பண்ண வேண்டிய சூழலாகிடுச்சு. அப்ப எஸ்.டி.ஆர். ‘பத்து தல’ தோற்றத்தில் இருந்தார். எஸ்.டி.ஆரை என் குருவே நடிக்கக் கேட்டது ஒரு இக்கட்டான சூழல்தான். இன்னொரு விஷயம், எஸ்.டி.ஆரும் என் நண்பர். அதனாலேயே சம்மதிச்சிட்டேன்.
‘பத்து தல’ லுக்னு எல்லாருமே மனசுல வச்சிருப்பாங்க. அப்படி ஒரு லுக்ல கௌதம் சார் படத்துல நடிக்கப் போறாரேன்னு எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எஸ்.டி.ஆர் என் தர்மசங்கடத்தைப் புரிஞ்சிக்கிட்டார். ‘நான் வேணும்னா தாடி, ஹேர் கலரிங்னு சின்னச் சின்ன மாறுதல்களைப் பண்ணிக்கவா’ன்னு அக்கறையா கேட்டார். அவர் அப்படிக் கேட்டதுல, அவர்மீதான மதிப்பு இன்னும் உயர்ந்தது. அதே சமயம் அந்தப் படம் வந்ததும், எல்லாருமே ‘இது ‘பத்து தல லுக்'னு சொன்னதும் ஆச்சரியமாகிடுச்சு. ரசிகர்கள் மனசுல பதியணும்னுதான் அந்த லுக்கிற்கு அவரை மாற வச்சோம். அதை ரசிகர்களும் கொண்டாடினது மகிழ்ச்சியாகிடுச்சு.’’

``எங்களுக்கெல்லாம் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ கிருஷ்ணான்னு சொன்னால்தான் தெரியும். நீங்க திடீர்னு டோலிவுட் இயக்குநர் மாதிரி பெயரை மாத்தியிருக்கீங்க..?’’
‘‘பெரிய காரணம் ஏதுமில்லை. லட்சுமி நரசிம்மரைத்தான் ஓபிலின்னு சொல்வாங்க. அவர் எங்க குலதெய்வம். ‘குலதெய்வத்தோட பெயரையும் சேர்த்து வச்சுப் பாருங்க’ன்னு என் வீட்டுல விரும்பினாங்க. அவங்க ஆசைப்படி பெயரை மாத்தியிருக்கேன்.’’
`` ‘பத்து தல'க்கு முன்னாடி ஒரு பெரிய இடைவெளியாச்சு?’’
‘‘இதுக்கு முன்னாடி ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்ணலாம்னு யோசிச்சிருந்தேன். முழுவதும் அமெரிக்காவில் நடக்கற கதை. அந்தக் கதையை ரஹ்மான் சார்கிட்ட சொன்னபோது, அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘நானே இசையமைக்கறேன்... தயாரிப்பாளராகவும் இருக்கேன்’னு சொல்லி ஆச்சரியங்கள் கொடுத்தார். அவரும் நானும் அந்தப் படத்துக்காக கம்போஸிங்ல உட்காரலாம்னு நினைச்சு, ஒரு நாளைக் குறிச்சோம். அதுக்கு அடுத்த நாள்ல அதிர்ச்சிச் செய்தி. கொரோனா லாக்டௌன் ஆரம்பிச்சிடுச்சு. அதுக்கு முன்னாடியே நான், அமெரிக்காவுக்குப் போய் லொகேஷன் எல்லாம் பார்த்துட்டு வந்திருந்தேன். எல்லாம் கனிந்து வந்த சூழல்... லாக்டௌன் ஆகிடுச்சு. அப்படி ஒரு சூழல்ல இருந்தப்பதான் ஞானவேல் ராஜா சார் கூப்பிட்டு இந்தப் படத்தைக் கொடுத்தார்.’'
``அதுசரி, மணல் மாஃபியான்னாலே அரசியல் இருக்கும். படத்தில் அரசியல் உண்டா?’’
‘‘நிச்சயம் அரசியல் இருக்கும். சமகாலத்து அரசியலைப் பேசியிருக்கோம்.''