சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்!” - அனிதா இரஞ்சித்

அனிதா - இரஞ்சித்
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா - இரஞ்சித்

கிறிஸ்தவக் குடும்பமா இருந்தாலும் சின்ன வயசுலருந்தே பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடுறோம். எங்கம்மா நாங்க வெடிக்கிறதை பார்த்துக் கிட்டிருப்பாங்க.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் மூலம் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமாகியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்தின் மனைவி, அனிதா இரஞ்சித். படத்துக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் வரவேற்புகளைப்போலவே, அனிதா இரஞ்சித் வடிவமைத்த காஸ்ட்யூம்களும் `மாஸ்ட்யூம்' என்று பாராட்டுகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றன. வாழ்த்துகளுடன் அனிதா ரஞ்சித்தைச் சந்தித்தோம்.

``பா.இரஞ்சித் மனைவியாக அனிதா இரஞ்சித்தைப் பலருக்கும் தெரியும். ஆனால், அனிதா யார்?’’

``என்னுடைய சொந்த ஊர் சென்னை கொளத்தூர். அப்பா சுந்தரேசன் ரயில்வேயில் வேலை பார்த்தார். அம்மா பூங்கொடி டெய்லரிங், சிறு தொழில் என்று ஏதாவது பிசினஸ் செய்துகொண்டேயிருப்பார். எனக்கு மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி. நான்கும் பெண் பிள்ளைகளா பிறந்துடுச்சேன்னு என்னைக்குமே பெற்றோர் வருத்தப்பட்டது கிடையாது. ஆண்களுக்குச் சமமா எங்களை வளர்த்தாங்க. கிறிஸ்தவக் குடும்பமா இருந்தாலும், எங்க தாத்தா மட்டும் தீவிர நாத்திகவாதி. அதனால், பெண் பிள்ளைகளென்றால் வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கணும்னு இல்லாம மரம் ஏறுதல், ஓடி ஆடி விளையாடுதல் என்று எங்களை ரொம்ப போல்டா வளர்த்தாங்க. சின்ன வயசிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ரொம்ப இன்ட்டரஸ்ட். அப்போல்லாம் ஓவியக் கல்லூரிகளில் பெண்கள் சேர்வது ரொம்பக் குறைவுதான். `நீ நல்லா வரையுற. இதுக்கு டிகிரி இருக்கு'ன்னு எங்க டீச்சர்தான் சொன்னார். அதனாலதான், கவின் கலைக்கல்லூரிக்கு சேரப்போனேன். ஆனா, போன பிறகுதான் தெரிஞ்சது, ஓவியக் கல்லூரியில் சேர்வது அவ்வளவு சர்வ சாதாரணமானதில்லை. அதாவது, நுழைவுத்தேர்வெல்லாம் இதுக்கு வெப்பாங்க. நிறைய ஓவியங்களை வரைஞ்சு காண்பிக்கணும். அப்படி வரையுற ஓவியங்களையெல்லாம் பார்த்துத்தான் சீட் கொடுப்பாங்க. ஆனா, முதல் வருட நுழைவுத் தேர்வுல வெற்றி பெறாததால கல்லூரியில சேர முடியலை.

“பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்!” - அனிதா இரஞ்சித்

நான் நுழைவுத்தேர்வு எழுதினதுக்கு முந்தைய வருடம் இரஞ்சித் தேர்வு எழுதி பாஸ் ஆகாததால, இரண்டாவது வருடம் மீண்டும் தேர்வுக்கு வந்திருந்தார். அப்போதான், இரஞ்சித்தை மீட் பண்ணினேன். நான், வரைஞ்சுக்கிட்டிருக்கும் போது `நீங்க வரையுறது சாதா பென்சில். இந்த பென்சில் வெச்சு வரைங்க' என்று புரொஃபஷனல் பென்சிலைக் கொடுத்தார் இரஞ்சித். கீழ இருந்த ஹால் டிக்கெட்டைப் பார்த்துட்டு, `உன் பேரு அனிதா'வான்னு கேட்டாரு. முறைச்சுப் பார்த்தேன். அவர் போன பிறகு பார்த்தா, பக்கத்துல ஒரு ஸ்கேல் இருந்தது. `யாரோ ஸ்கேலை விட்டுட்டுப் போயிட்டாங்க’ன்னு சொல்லி இரஞ்சித், ஃப்ரெண்ட்ஸ்கூட இருக்கும்போது கொடுத்துட்டுப் போயிட்டேன். அவ்ளோதான், அந்தத் தேர்வுல நான் பாஸ் ஆகாததால ஒரு வருஷம் இரஞ்சித்கூட எந்தத் தொடர்பும் இல்ல. இரஞ்சித் பாஸ் பண்ணி, படிச்சிட்டிருந்தார். கவின் கலைக்கல்லூரியிலதான் சேரணும்குற ஆர்வத்துல ஓவியர் சந்துருகிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டு இரண்டாவது வருடம் நடந்த எக்ஸாம்ல கலந்துக்கிட்டேன். நான் நல்லா வரைவேன். ஆனா, ஒருசில அரசியல் காரணங்களால இரண்டாவது முறையும் என்னைக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கலை. அதனால், பணம் கட்டி கல்லூரியில சேர்ந்துட்டேன்.

கல்லூரியில் சேர்ந்து ஃப்ரெண்ட்ஸ்கூட போய்க்கிட்டிருக்கும்போது, ‘ஏய் அனிதா’ன்னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா இரஞ்சித். என் பேரை இன்னும் ஞாபகம் வெச்சுருக்காரேன்னு பயங்கர ஷாக். `உன் ஞாபகமா அந்த ஸ்கேலை நான் இன்னும் வெச்சுருக்கேன்'னு சொன்னதும் எனக்கு இன்னும் ஆச்சர்யம். இதுல காமெடி என்னன்னா, நான் அவருக்காகத்தான் அந்த ஸ்கேலைக் கொடுத்துட்டு வந்தேன்னு நினைச்சுக் கிட்டிருந்திருக்காரு. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். என்னுடைய ஓவியத்துமேல அவருக்கு ரொம்ப நம்பிக்கை. ரொம்ப சின்சியரா வரைவேன். திடீர்னு ஒருநாள் புரப்போஸ் பண்ணிட்டாரு. `என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்'னு கோபப்பட்டு அவரோட காதலை கொஞ்ச நாள் ஏத்துக்கலை. அவர்கிட்ட பிடிச்ச விஷயம் என்னன்னா காலேஜ்ல என்ன பிரச்னைன்னாலும் முன்னாடி வந்து நிப்பாரு. ரொம்ப தைரியமா இருப்பார். அப்போவே தீவிரமான அம்பேத்கரிஸ்ட். ரொம்ப நேர்மையா இருப்பார். எதுக்குமே சமரசம் செய்துக்க மாட்டார். ரொம்பத் தெளிவா இருப்பார். இதெல்லாம் ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான் எனக்கும் பிடிச்சுப் போயி, அவரோட காதலை ஏத்துக்கிட்டேன். இப்படித்தான் எங்களோட காதல் தொடர்ந்தது. 2001-லதான் நாங்க மீட் பண்ணிக்கிட்டோம். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். 2008 வரை இரஞ்சித்துக்காக நான் படிச்சுக்கிட்டே இருந்தேன்.

“பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்!” - அனிதா இரஞ்சித்

இரஞ்சித் அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணும்போதே 2011-ல திருமணம் செய்துக்கிட்டோம். நாங்க தீவிரமான கிறிஸ்தவக் குடும்பம். அவருக்கு மதம் சார்ந்து திருமணம் செய்துக்கிறதுல ஈடுபாடு இல்லை. திருமணம் எங்க முறைப்படிதான் நடக்கணும்னு சொன்னேன். சடங்குகளில் நம்பிக்கை இல்லாததால அவர் ஒத்துக்கலை. இதனால, எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரெண்டு பேருமே சில மாதங்கள் பேசாம இருந்தோம். பிரேக்அப் பண்ணிக்கலாம்னே முடிவு பண்ணிட்டோம். அப்புறம் அவரே போன் பண்ணி `உன்னை என்னால மறக்க முடியலை. உன் விருப்பப்படியே திருமணம் பண்ணிக்கலாம்'னு சொல்லிட்டாரு. அப்புறம்தான் எங்கள் திருமணமே நடந்தது.

`அட்டக்கத்தி’யிலருந்து நிறைய படங்கள் டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்காரு. அவர்கிட்ட, இந்த வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டதில்லை. `நட்சத்திரம் நகர்கிறது' வாய்ப்பு அவரா கொடுத்தது. எனக்கு ஈஸியா கிடைச்சிருக்கும்னு எல்லோரும் நினைக்கலாம். ஈஸியா கிடைச்சது உண்மைதான். ஆனா, அது சரியான நபருக்குக் கிடைச்சிருக்குங்குறதுதான் முக்கியம். ஏன்னா, என்னோட வொர்க் எப்படின்னு இரஞ்சித்துக்கு நல்லாவே தெரியும். நான், காலேஜ் படிக்கும்போதே ரொம்ப வித்தியாசமாக டிரெஸ் பண்ணிக்கிட்டு போவேன். காகிதத்துல பூ செஞ்சு தலையில வெச்சுக்கிட்டு போவேன். இறகுல கம்மல் செஞ்சு போட்டுக்கிட்டு போவேன். காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கிரியேட்டிவிட்டியா ஃபேஷன் ஷோ பண்ணியிருக்கேன். அதனால, காஸ்ட்யூம் டிசைனிங்ல ரொம்ப இன்ட்டரஸ்ட். என் கணவர்தானே டைரக்டர்னு ‘அட்டக்கத்தி’ படத்துலேயே வாய்ப்பு கேட்டு வொர்க் பண்ணியிருக்கலாம். இரஞ்சித் சினிமாவுல இருக்கிறதால, இதே ஃபீல்டு நமக்கு வேணாம்னு விட்டுட்டேன். நானும் நடிகர் கலையரசன் மனைவி பிரியாவும் `மகிழம் பொட்டிக்’ ஆன்லைன் ஷாப்பிங் நடத்திக்கிட்டிருந்தோம். `மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியின்போது, கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் குழுவுக்கு நான்தான் காஸ்ட்யூம் பண்ணிக் கொடுத்தேன். அதுல இரஞ்சித் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாரு. அதனால, அவரேதான் `நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்!” - அனிதா இரஞ்சித்

நிறைய பேரு படம் பார்த்துட்டு காஸ்ட்யூம் பற்றிப் பாராட்டினாங்க. ஆனா, இரஞ்சித் கொஞ்சம் லேட்டாதான் பாராட்டினார். `உன்னோட வொர்க் பத்தி எல்லோரும் கேட்டாங்க. ரொம்ப ஆர்டிஸ்ட்டிக்கா இருக்குன்னு பாராட்டினாங்க'ன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எல்லாரும் கொடுத்த பாராட்டுதான், இப்போ தி.நகர்ல `பொட்டிக்’ ஆரம்பிக்கிற அளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்கு.''

``இரஞ்சித் படங்களில் நிறைய உண்மைகள் இருக்கும். உங்க காதல் கதை இடம்பெற்ற படம்னா எதைச் சொல்வீங்க?’’

`` `அட்டக்கத்தி' தொடங்கி `மெட்ராஸ்', `சார்பட்டா பரம்பரை' வரைக்கும் எல்லாப் படங்கள்லயுமே எங்க காதல் இருக்கு. `மெட்ராஸ்' கலையரசி பேசின நிறைய வசனங்கள் எனக்கும் அவருக்கும் நடந்ததுதான். அதேமாதிரி, `சார்பட்டா பரம்பரை'யில `தினமும் வர்ற... போற… ஆனா, நான் கட்டுற புடவையெல்லாம் நீ பார்க்கணும்குறதுக்காகத்தானே?'ன்னு மாரியம்மா சொல்வாங்களே, அதுவும் நான் அடிக்கடி அவர்கிட்ட சொல்றதுதான். காதல், திருமணம்னு இருபது வருஷம் இரஞ்சித்கூட பயணிக்கிறேன். சினிமா ஷூட்டிங்ல வெளியூர்ல பிஸியா இருந்தா மட்டும் வீட்டுக்கு வர மாட்டாரு. சிலநேரம் அவரோட பிறந்தநாளில்கூட எங்க இருக்காருன்னு தெரியாது. ஆனா, என்னோட பிறந்தநாள், குழந்தைகளின் பிறந்தநாள்னா மிஸ் பண்ணாம வந்துடுவாரு. இத்தனை வருஷம் எங்க காதல், நல்ல புரிதலோட இருக்குன்னா, அதுக்கு உண்மையான அன்புதான் காரணம். காதலில் உண்மையான அன்பு இருந்தால் பிரிவு வராது.''

``அவர் கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்?’’

``நான் காலேஜ் படிக்கும்போது கையில பைசா இருக்காது. வீட்ல ட்ரெயின் பாஸ் எடுத்துக் கொடுத்துடுவாங்க. இரஞ்சித்தும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான். பொதுவா, படிக்கும்போது எல்லாருக்கும் இதே நிலைமைதான். அந்தச் சூழலிலும் மசால் வடை எனக்கு ரொம்பப் புடிக்கும்னு இரஞ்சித் வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருப்பாரு. புடிச்சதை வாங்கிக் கொடுக்குறதுதானே கிஃப்ட்... அதனாலதான், இதை என்னால மறக்க முடியாதுன்னு சொல்றேன். அப்புறம், என் பர்த்டேவுக்கு வைரக் கம்மல் வாங்கிக் கொடுத்தாரு. அதுவும் மறக்க முடியாதது.’’

“பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்!” - அனிதா இரஞ்சித்

``ஒரு இயக்குநரா படத்தை இயக்கினோமா, பணம் சம்பாதிச்சோமான்னு இல்லாம… `வானம்' கலைத்திருவிழா. `மார்கழியில் மக்களிசை'னு நிறைய நிகழ்ச்சிகளுக்குப் பணம் செலவழிக்கிறாரேன்னு உங்களுக்கு எப்பவாவது தோன்றியிருக்கா?’’

``நாம ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சா நூறு ரூபாய் மத்தவங்களுக்கு உதவணும்னுதான் சின்ன வயசிலிருந்தே என்னோட பெற்றோர் சொல்லியிருக்காங்க. அதனால, சினிமாவுக்கு வந்து பணம் சம்பாதிச்சு செட்டில் ஆகணும்னுல்லாம் வரலை. தேவைக்கதிகமா வெச்சுக்க மாட்டோம். அடுத்தவங்களுக்கு உதவுவோம். அவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம், அவர் விருப்பப்படுற மாதிரி செலவாகட்டும்னுதான் இருக்கேன். பணமே இல்லைன்னாலும் எங்ககிட்ட படிப்பு இருக்கு, தொழில் இருக்கு. திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு போறதைப் பத்திக் கவலைப்பட மாட்டோம்.''

``காஸ்ட்யூம் டிசைனரா ஷூட்டிங் ஸ்பாட்டுல இயக்குநர் இரஞ்சித்கிட்ட திட்டு வாங்கியிருக்கீங்களா?’’

``டெஸ்ட் ஷூட்டுல ஒரே ஒரு முறை திட்டு வாங்கியிருக்கேன். இந்தப் படத்துல வொர்க் பண்றேன்னதும் கேஷுவல், பார்ட்டி, மேக்கப்புன்னு பல வொர்க் பண்ணி ஃபைல் கொண்டு போயி கொடுத்தேன். அதைப் பார்த்துப் பாராட்டினார். ஆனா, டெஸ்ட் ஷூட்டப்போ சின்னதா ஒரு மிஸ்டேக் ஆயிருச்சு. அதனால, `தயவு செஞ்சு இப்படிப் பண்ணாத அனிதா'னு கொஞ்சம் கோபமா சொன்னாரு, அவ்ளோதான்.''

``நீங்க ஓவியக் கல்லூரியில படிச்சிருக்கீங்க. ஆர்ட் டைரக்டராக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா?’’

``ஆர்ட் டைரக்டர் வேலை ரொம்ப க‌ஷ்டமான, சவாலான வேலை. கரெக்டா கன்டினியூட்டி மிஸ் ஆகாமப் பண்ணணும். ஒரு இடத்தையே உருவாக்கணும். அதனால, அது பத்தி எனக்கு யோசனையே இல்லை.''

``பா.இரஞ்சித்தோட ஒவ்வொரு படத்துக்கும் எதிர்மறையான விமர்சனங்களும் வரும். அப்போதெல்லாம் இருவரும் அதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?’’

``சின்ன வயசிலிருந்தே சாதிரீதியான பிரச்னைகளைப் பேசி, அதற்கான எதிர்வினைகளை அவர் எதிர்கொண்டுக்கிட்டுத்தான் இருக்காரு. ரொம்ப வன்மமா சிலர் திட்டியிருப்பாங்க. அதையெல்லாம், நானும் இரஞ்சித்தும் பொருட்படுத்திக்கவே மாட்டோம். நாம ஒரு விஷயம் பண்றோம்னா, அதுல மாற்றம் வருதுன்னா அதை தயங்காம பண்ணுவாரு. அவர் நினைக்கிற மாற்றம் கண்டிப்பா வரும்.''

“பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்!” - அனிதா இரஞ்சித்

``பா.இரஞ்சித்துக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கிறதா?’’

``இப்போதைக்கு அவருக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை. அவருடைய அரசியலை படத்து மூலமா பேசுறாரு. ஓட்டரசியலுக்கு வந்துதான் பேசணும், நல்லது செய்யணும்னு அவசியமில்லை.''

``பா.இரஞ்சித் அதிகமா உச்சரிக்கிற வார்த்தைகள்?’’

`` `ஜெய்பீம்’, `அம்பேத்கர்’ ஆகியவைதான் அதிகமா அவர் உச்சரிக்கிற வார்த்தைகள். தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட அந்த வார்த்தைகளைத்தான் உச்சரிப்பாரு. அந்த அளவுக்கு அவரோட உணர்வுல கலந்துவிட்ட வார்த்தைகள் அவை.''

``தீபாவளி கொண்டாடுவீங்களா?’’

``கிறிஸ்தவக் குடும்பமா இருந்தாலும் சின்ன வயசுலருந்தே பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடுறோம். எங்கம்மா நாங்க வெடிக்கிறதை பார்த்துக் கிட்டிருப்பாங்க. அம்மா மேல பட்டாசு விழுந்து அவங்க விழுந்தடிச்சு ஓடின ஞாபகமெல்லாம் இருக்கு. இப்பவும் அப்படித்தான். குழந்தைகள் மகிழினி, மிளிரனுக்காக தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பாரு. கார்த்திகை தீபம் அன்று மாவலி சுத்துவோம்.''

``உங்களோட அடுத்த படம்?’’

``எனக்கு `நட்சத்திரம் நகர்கிறது' நிறைய அனுபவங்களைக் கொடுத்திருக்கு. நான் சுதந்திரமா வொர்க் பண்ணி பழகிட்டேன். ஒரு தலைமையின் கீழ் வொர்க் பண்றது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும், அதையே சவாலா எடுத்துக்கிட்டு சக்சஸ் பண்ணிக் காட்டுவேன். `நெக்ஸ்ட் வொர்க் பண்றியா'ன்னு இரஞ்சித் என்கிட்ட கேட்டாரு. பொட்டிக் திறக்குற வேலைகள் இருக்கறதால, கொஞ்சம் டைம் வேணும்னு சொல்லிட்டேன்.''

``பா.இரஞ்சித்தோட படங்களில் உணவும் கண்டிப்பா வந்துடும். உங்களோட சமையலில் அவருக்குப் பிடித்த உணவு எது?’’

``பீஃப், சிக்கன் பிரியாணினு எல்லா பிரியாணியும் நல்லா செய்வேன். விரும்பிச் சாப்பிடுவாரு. ஆனா, என்னோட சமையலைவிட அவரோட அம்மா சமையலுக்குத்தான் அவர் அடிக்ட். அவங்க கொஞ்சம் காரசாரமா செய்வாங்க. நான் அப்படிச் செய்ய மாட்டேன். சில நேரங்களில், என் சமையலை `ஆஹா ஓஹோ’ன்னு பாராட்டுவாரு. திடீர்ன்னு சில நாள்களில் `என்ன அனிதா, ஒரே இனிப்பா இருக்கு'ன்னு சொல்லி சிரிப்பாரு. ஒரே காமெடியா போகும்.''