சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

90 நாள் ரிகர்சல்... 95 நிமிடப்படம்... ஒரே ஷாட்!

பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
News
பார்த்திபன்

டான்ஸ் ஆடின பொண்ணு முந்தானை கீழே சரிந்து விழுந்தாகூட நிறுத்தி, முதலிலிருந்து ஆரம்பிக்கணும். 95 நிமிடப் படத்தில் 94வது நிமிஷத்தில் கட் ஆகியிருக்கு.

“படத்தோட பெயர் ‘இரவின் நிழல்' உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள்ஷாட் பிலிம். உலகத்தில் இதுமாதிரி புதுமையில்லை என்கிறார்கள். ரொம்பப் பிரயத்தனப்பட்டுச் செய்திருக்கேன். ஒரு புன்னகைக்கு நாலைந்து டேக் போகிற சினிமாவில் இந்த முயற்சியைச் செய்து பார்த்திருக்கிறேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி ஒரு நாடகக் குழுவில் இருந்தேன். அதில் ஒரு பட்லர் வேஷம்தான். ஆனால் மொத்த சீனையும் மனப்பாடம் பண்ணி வச்சிருந்தேன். ‘ஒத்த செருப்பு’ ரெண்டு மணிநேரம் ஒரு நடிகனா என்னை நிறுத்தி வச்ச காரியம்... அதே மாதிரி இதுவும் ஒரு சவால்தான்” எனச் சட்டென்று கேள்விகளுக்கே காத்திருக்காமல் தடதடவென பார்த்திபன் ஆரம்பிக்க டேக் ஆஃப் ஆகியது பேச்சு.

90 நாள் ரிகர்சல்... 95 நிமிடப்படம்... ஒரே ஷாட்!

95 நிமிடங்கள் எப்படி ஒரே ஷாட்டில்?

“இது ரெகுலரான ஃபார்மேட் கதையல்ல. சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறதால் மட்டுமே நகர்த்த முடிஞ்சது. முற்றிலும் புதுசா யோசிச்சு அதை வழிநடத்தி வந்ததுதான் இந்த ‘இரவின் நிழல்.' ‘ஒத்த செருப்பு’ கொடுத்த அனுபவத்தில் இந்தப் படத்தை உருவாக்கினேன்.

சரியாகச் சொல்லப்போனால் 50 கோடியாவது இந்தப் படத்துக்குச் செலவாகும். அப்படி இல்லாமல் இதை சாமர்த்தியமாக உருவாக்கணும். நேர்மையாக ஒப்புக்கொண்டால், என்னால் ரஜினி, அஜித், விஜய்யோடு வியாபாரத்தில் போட்டி போட முடியாது. ஆனால் தொடர்ந்து அவர்களுடன் போட்டியில் இருக்கணும் என்பது என் ஆசை.

யார் வேண்டுமானாலும் இதுமாதிரி படங்கள் எடுக்கலாம். எக்ஸ்பரிமென்ட் படங்கள் வியாபாரம் ஆகாதுன்னு காரணங்கள் சொல்லித் தவிர்க்கப்படுது. ‘ஒத்த செருப்பு’ தாண்டி ஏதாவது ஒண்ணு செய்யணும்னு தோணுச்சு. என் ‘ஒத்த செருப்பு’ பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து கால்டுவெல் வேள்நம்பி, பாலா சுவாமிநாதன், பிஞ்சி சீனிவாசன், அன்ஷு பிரபாகர் ஆகிய நான்கு நண்பர்கள் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள்.”

90 நாள் ரிகர்சல்... 95 நிமிடப்படம்... ஒரே ஷாட்!

இதில் இருந்த கஷ்டங்கள் என்ன?

“இதில் ஃபோகஸ், காட்சித் தொடர்ச்சி, ஒரே டேக் எனப் பல விஷயங்கள் வருது. அத்தனை பேரும் ஒரே அணியில் நிக்கணும். பெரிய நடிகர்களை நடிக்க வைக்கமுடியாது. இந்தப் படம் 90 நாள்கள் ரிகர்சல் செய்யப்பட்டது.ஆனால் படம் ஒன்றரை மணிநேரத்திற்குள் முடிஞ்சிடும். 60 நாள்கள் ரிகர்சல் முடித்துவிட்டு 30 நாள்கள் காஸ்ட்யூம், மேக்கப்போடு ஷூட்டிங் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். நினைக்காத ஒரு இடத்தில் கட் ஆகும். யாராவது ஒருத்தர் தப்பு பண்ணிடுவாங்க. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கணும்.

டான்ஸ் ஆடின பொண்ணு முந்தானை கீழே சரிந்து விழுந்தாகூட நிறுத்தி, முதலிலிருந்து ஆரம்பிக்கணும். 95 நிமிடப் படத்தில் 94வது நிமிஷத்தில் கட் ஆகியிருக்கு. பூமியளவுக்கு எனக்குப் பொறுமை வேணும். படம் பார்க்கும்போதுதான் ‘இந்த பிரமிப்பை எப்படி நிகழ்த்த முடிஞ்சது’ன்னு உங்களுக்குப் புரிபடும். 30 வருஷத்திற்குப் பின்னாடியும் ஒரு கலைஞனாக நீடிச்சு இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டாலும் ‘ஒத்த செருப்பு’ ஆஸ்கரில் தகுதிப் பட்டியல் வரைக்கும் வந்ததை இங்கே புருவம் உயர்த்திப் பார்த்தாங்க. அதைத் தக்க வைக்கவே இந்த முயற்சி. என்னால் நல்ல சினிமா போலப் பண்ண முடியாது. நல்ல சினிமாவே பண்ணணும்.”

‘இரவின் நிழல்'னா?

“அப்படி ஒரு நிழல் இருந்தால், அது இரவுக்கு மட்டும்தான் தெரியும். அந்த நிழல் என்ன... அப்படி ஒரு மனிதனிடம் இருக்கிற ரகசியம் என்ன... அவன் யார்? இதெல்லாம் அவனே சொன்னால்தான் தெரியும். இப்படி அவனை நோக்கிப் போகிற கதை. ‘டார்க் ஃப்ளேவரில்’ கதை பயணப்படும். ஒரு மனிதனின் அருவருப்பான பகுதியைப் பற்றிப் பேசும் படம் இது. இந்தப் படம் கமர்ஷியலாக மாறும் என்பதை ரஹ்மான் சார் படத்தைப் பார்க்கும்போது நிறைய இடங்களில் வாய் விட்டுச் சிரிச்சதைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அவரை நான் முன்னாடி ஆரம்பிச்ச ‘ஏலேலோ’ படத்திலிருந்து தெரியும். அந்தப் படம் நின்றுவிட்டாலும், எங்கள் நட்பு தொடர்ந்துவிட்டது. இது பாதிக்குமேல் இசையால் நிரப்ப வேண்டிய படம். எங்கள் படக்குழு 340 பேர் கொண்டது. இவர்கள் மனம் ஒருமித்து 90 நாள் ரிகர்சல் பார்த்து ஒரு படம் செய்திருக்கிறோம். ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்தர் வில்சன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சகா, பிரியங்கா, சினேகா எனப் பலரும் இதன் உருவாக்கத்துக்குக் காரணம்.”

90 நாள் ரிகர்சல்... 95 நிமிடப்படம்... ஒரே ஷாட்!

படம் பார்த்துட்டு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்?

“என்னை மாதிரி திமிர்பிடிச்சவன் யாரும் கிடையாது. காலையில் இந்தி ‘SSS7’க்கு ராஜா சார் கூட இருப்பேன். அவர் எனக்காக ‘கதை திரைக்கதை வசனம்’, ‘ஒத்த செருப்பு’ பார்த்ததெல்லாம் சரித்திரம். அவர்கூட இருந்திட்டு சாயங்காலம்போல ரஹ்மான் சார்கிட்டே வந்திடுவேன். என்கிட்டே கதையைக் கேட்டதும் ‘எப்படிங்க இதை ஒரே ஷாட்டில் எடுக்கப்போறீங்க’ன்னு ஆச்சரியப்பட்டார். நீண்ட கதையாக இருக்கேன்னு அவருக்கு ஆச்சரியம். அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிப் போய் காண்பிச்சேன். பார்த்ததும் அவருக்கு நம்பிக்கை வந்துடுச்சு. ரீரெகார்டிங்கிற்குக் கொண்டுவந்து பாருங்கன்னு சொன்னால் ‘லொகேஷன் பார்க்கும்போதே படம் பார்த்திட்டேன்’ன்னு சொன்னார். படம் பார்த்துட்டு ‘பிரமாதம்’ன்னு தட்டிக் கொடுத்தார். அவர் தோளைத் தொட்டது இதயத்தைத் தொட்ட மாதிரியே இருந்தது.”

இந்தி ‘SSS7’ எப்படி வந்திருக்கு..?

“ஐஸ்வர்யா ராயிடம் `பொன்னியின் செல்வ’னில் நடிக்கும்போது ‘ஒத்த செருப்பு’ படத்தைப் போட்டுக் காண்பிக்க சடசடவென்று அபிஷேக் பச்சன் நடிக்க, அமிதாப் தயாரிக்கன்னு முடிவாகிவிட்டது. அபிஷேக் பச்சனுக்கு நடிப்பு பிரமாதமாகக் கைவந்துவிட்டது. போலீஸ் விசாரணைக்கான மனநிலையில் பின்னியெடுக்கிறார். சராசரி மனுஷனை ஜனரஞ்சக மனுஷனாக மாற்றியும் உணர்ச்சிகரமாக, சந்தோஷமாக சிரிக்கக் கூடிய விதத்திலும், உலுக்கும் விதத்திலும் படம் இருக்கும். இந்தப் படம் ஹாலிவுட்டுப் போக பேச்சுவார்த்தைகள் நடக்குது. டென்ஸில் வாஷிங்டன் அல்லது வில் ஸ்மித் நடிக்கக்கூடும். பாருங்க ‘ஒத்த செருப்பு’ இந்திக்குக் கூட்டிட்டுப் போய் பிறகு ஹாலிவுட்டுக்குப் போக வச்சிடும்போல. ரொம்ப டென்ஷன். அடுத்து சிரிக்க சிரிக்க ஒரு காமெடிப் படம் பண்ணினால்தான் கொஞ்சம் ஃப்ரீ ஆவேன் போல” என்றபடி ரிலாக்ஸ் ஆகிறார் பார்த்திபன்.