
‘‘இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் இயக்கியிருந்தாலும், கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லாருமே பிரிஞ்சு போறோமேன்னு எமோஷனல் ஆனதில்ல.
பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்த ‘சாருலதா'வை இயக்கிய பொன்குமரன், ஒரு சின்ன இடைவெளிக்குப்பின் கன்னடத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். ஜீவா, ‘மிர்ச்சி' சிவா கூட்டணியில் ‘கோல்மால்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இவர்.

‘‘கன்னடத்தில் உங்க முதல் படத்துக்கு (‘விஷ்ணுவர்த்தனா') சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது கிடைச்சது...’’
‘‘ஆமாங்க. இந்த நேரத்துல விகடனுக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன். ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்குள் சினிமாக் கனவை விதைத்தது விகடன்தான். ‘சின்னதம்பி' படம் வந்த புதிதில் குஷ்பு செம பிரபலம. அப்போ விகடனில் ‘குஷ்பு கவிதைப் போட்டி' வச்சிருந்தாங்க. அதில் என் கவிதையும் தேர்வானது. நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குஷ்புவுடன் டின்னர் சாப்பிட்டோம். அப்போது குஷ்புவுடன் நாங்க எடுத்துக்கிட்ட புகைப்படம் விகடனில் அட்டைப் படமா வந்தது.
அப்ப குஷ்பு, ‘உங்க கவிதை நல்லா இருக்கு. நீங்க சினிமாவுக்குப் பாட்டெழுத வரலாமே’ன்னாங்க. சினிமாவின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. கே.பாக்யராஜ் சார், கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் வேலை செய்தேன். அப்புறம்தான் கன்னடத்தில் இயக்குநராக அறிமுகமானேன். அதில் சுதீப் சார் ஹீரோ. நல்ல படம்னு பெயரும் கொடுக்கவே அங்கே பல படங்கள் இயக்கினேன். ‘சாருலதா'வுக்குப் பின் ‘லிங்கா' வசனத்தையும் எழுதினேன். கன்னடப் பட உலகில் நல்ல அனுபவம் கிடைச்சாலும், தமிழ்ல படம் இயக்க விரும்பி வந்திருக்கேன்.''


‘‘முழுப்படத்தையும் மொரிஷியஸில் எடுத்திருக்கீங்க... அப்படி அங்கே என்ன ஸ்பெஷல்?’’
‘‘பிரியதர்ஷன் சாரோட ஒன்லைன்ல இருந்து இந்தக் கதையைப் பிடிச்சேன். ஒரு சிம்பிள் லைன்தான் கதை. கலகலப்பா, குளுகுளுன்னு பண்ணியிருக்கோம். படத்துல சிங்கம், புலி, சிறுத்தையெல்லாம் கிராபிக்ஸ்ல உருவாக்க விரும்பல. நிஜ விலங்குகளை நடிக்க வைக்கவே மொரிஷியஸ் பறந்தோம். ஜீவா, ‘மிர்ச்சி' சிவா, யோகிபாபு, மாளவிகா, பாயல் ராஜ்புத், தன்யா ஹோப், மது சினேகான்னு கலர்ஃபுல்லான ஆட்கள் இருக்காங்க. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு யூகிசேது ஒரு நல்ல பாத்திரத்துல நடிச்சிருக்கார்.
ஃபிரேம்ல எப்பவும் பத்துப் பேர் கலகலன்னு இருப்பாங்க. ஒவ்வொருத்தருக்குமே முக்கியத்துவம் இருக்கும். பொதுவா, வெளிநாட்டுல ஒரு பாடல் ஷூட் பண்ணணும்னா அதிகபட்சம் 35 பேர் அழைச்சிட்டுப் போவாங்க. ஆனா, நாங்க 120 பேரை அழைச்சிட்டுப் போய் படத்தை முடிச்சிட்டு வந்தோம். அப்படி தாரளமா செலவு பண்ணுற தயாரிப்பாளர்கள் அமைஞ்சிருக்காங்க. டெக்னீஷியன் டீமும் சிறப்பா வந்திருக்கு. ‘பூவே உனக்காக' சரவணன் சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அருள்தேவ் இசையமைக்கிறார். பாடல்கள் சிறப்பா வந்திருக்கு.''
‘‘ஜீவா, சிவா, யோகிபாபு எல்லாரும் என்ன சொல்றாங்க?’’
‘‘இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் இயக்கியிருந்தாலும், கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லாருமே பிரிஞ்சு போறோமேன்னு எமோஷனல் ஆனதில்ல. முதல் முறையா அப்படி ஒரு உணர்வை ‘கோல்மால்' ஏற்படுத்திடுச்சு. ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ விட்டுக்கொடுத்து நடிச்சாங்க. யோகிபாபு படப்பிடிப்பிலேயே காமெடி நடந்துச்சு. யோகிபாபுவை ஒரு புலி துரத்தும். அவர் புலியை விட வேகமா ஓடி பைக்ல ஏறிக்கணும். அதான் காட்சி. அவரோ, ‘என்னாது... புலி என்னைத் துரத்துமா’ன்னு பயந்துட்டார். அவருக்கு நம்பிக்கை கொடுக்கறதுக்காக ஜீவா, புலியை விட வேகமா ஓடிக் காட்டினார். ‘நீ ஹீரோப்பா... ஓடிடுவே. நான் அப்படியில்லையே'ன்னு சொல்லிக் கலாய்ச்சவர், புலியுடன் தைரியமா நடிச்சும் கலக்கினார். இன்னொரு விஷயம், படத்துல முக்கியமான ரோலில் சிங்கம் நடிக்குது. காலையில ஆறு மணியில இருந்து ஒன்பதரை மணி வரைக்கும்தான் சிங்கத்தை நடிக்க வைக்க முடியும். வெயிலானால் குகைக்கு ஓய்வெடுக்க அனுப்பிடுவாங்க. இதுக்காகவே ஜீவா, மிர்ச்சி சிவா உட்பட அத்தனை பேரும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து ரெடியாகி வருவாங்க. இப்படி சிங்கத்துக்காக அவங்க கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. குழந்தைகளுக்கும் பிடிச்ச ஒரு படமா கொண்டு வந்திருக்கோம்.''