சினிமா
தொடர்கள்
Published:Updated:

“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”

கோவை சரளா
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை சரளா

இனிமேலெல்லாம் பிரமாதமாக யோசித்து கேரக்டர் எழுத முடியுமான்னு தெரியலை. எல்லோரும் ஒரு அழகியலோடு வந்திட்டுப் போனால் போதும்னு நினைக்கிறாங்க.

“உலகத்தில் நம்பிக்கை தருகிற விஷயங்கள் நிறைய இருக்கு. எவ்வளவு சோர்வாக இருந்தாலும் என்னை இழுத்து அரவணைத்துப் புத்துணர்ச்சி கொடுத்து அனுப்பி வைக்கும், காடு. மலையும் மலை சார்ந்த பகுதியும் எனக்குப் பரிச்சயமானவை. ஆக, ‘செம்பி' படத்தின் மூலம் என் தாய்மடியில்தான் தஞ்சம் அடைந்திருக்கேன். More we are regional, more we are international-ன்னு சொல்வாங்க. நாம் எந்த அளவுக்கு நம்ம பண்பாட்டோடு படம் பண்றோமோ அதுவே உலகத்தரத்தில் நிற்கும். நாலு ஃபைட், ஓப்பனிங் பாடல், சரமாரி காமெடின்னு சுலபம்தான். ஆனால் ‘செம்பி’யில் இந்த எதுவும் கிடையாது. திணிக்கப்பட்ட கமர்ஷியலே இல்லை. இந்த சேலஞ்ச்தான் எனக்குப் பிடிக்குது. உலகத்திலேயே உச்சபட்ச வலி பிரசவம்தான். அதிகபட்ச சந்தோஷமும் அதுதான். எனக்கும் செம்பி அப்படித்தான். நல்ல படம் செய்திருக்கோம்னு வேறு யாரும் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் எனக்கே தெரியுது...” மனதை வார்த்தைகளில் நிறுத்திப் பேசுகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”

“எழுபது வயது மூதாட்டியையும், அவங்க பேத்தியையும் பத்தின கதை. நாம நிறைய கேள்விப்பட்ட சமூகப்பிரச்னை சார்ந்த கதை. மூதாட்டி, குழந்தை செம்பியோட இன்னும் 23 பேரோட ஒரு பயணம்தான் படம். சக மனுஷனை மதிக்கணும்ங்கிற மரியாதையைத்தான் படம் சொல்லுது. ஒரு சாமானியன் ஜட்ஜ், போலீஸ், அரசியல்வாதி, மருத்துவரைக் கையெடுத்துக் கும்பிடுகிறான். அவங்கெல்லாம் அதற்குச் சரியாக நடந்துக்கணும். உயிரைக் காப்பாத்துகிற டாக்டரை, டாக்டர்னு மட்டும்தான் சொல்கிறோம். நீதிபதியை ‘மை லார்டு'னு சொல்றோம். அதுக்கெல்லாம் அவங்க அடையாளமாக இருக்கிறாங்களான்னு பார்க்கணும். இந்தப் படத்தோட மையம் அதுதான்.

இங்கே அன்பைக் கேட்டுப் பெற வேண்டியிருக்கு. அது கபடம் இல்லாமல் உள்ளேயிருந்து பெருகணும். இந்தச் சமூகத்தில் அன்பு செய்ய யாருமே இல்லையான்னு தேடும்போது ‘இன்னும் அப்படியான மனிதர்கள் இருக்காங்க’ன்னு படம் சொல்லும். பயணம் தான் இதில் தொடக்கம். பாட்டியும் பேத்தியும் ஒரு பிரச்னையோட பஸ்ஸில் ஏறுறாங்க. ஆரம்பத்தில் எப்படியிருந்தது, பயணம் முடியும்போது அந்த உறவுகள் எப்படி மேம்பட்டதுன்னு படம் காட்சிகளிலும் உணர்வுகளிலும் சொல்லிட்டுப் போகும். வாழ்க்கையில் ஒளிந்து புதைஞ்சிருக்கிற மனித உணர்வுகளை மேக்கப் போடாமல் பிரிச்சு அள்ளிக் கொண்டு வந்து கொட்டிரணும்னு முயற்சி செய்திருக்கேன். அன்பும் எளிமையுமா வாழ்ற அத்தனை எளிய மனுஷங்களுக்கும் என்னோட ‘செம்பி' சமர்ப்பணம்.”

“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”
“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”

“கோவை சரளா வேறு விதத்தில் இருக்காங்க...”

“முதல்ல மலைவாழ் பகுதியெல்லாம் சுத்தினேன். கல்வராயன் மலை, பச்சைமலை வரைக்கும் போயிட்டேன். இந்த வீரத்தாயைத் தேடுறது சாதாரண வேலையாக இல்லை. சரியாக இருந்தால் நடிக்கத் தெரியலை. மனோரமா ஆச்சிக்குப் பின்னாடி ஆளே இல்லையான்னு நினைத்தால் சட்டுனு சரளாம்மா நினைவு வந்துடுச்சு. அவங்க இத்தனைக்கும் காமெடியன்தான். அவங்களைச் சிரிக்கவே விடாமல், வார்த்தைகளை அளந்து பேசி நடிக்க வைக்கணும். மூணு நாள் கஷ்டப்பட்டவங்க, நாலாவது நாளிலிருந்து எடுத்தது வேற வடிவம். அவங்க வழக்கமான அத்தனை பாவனைகளையும் மாற்றிக் காட்டி திடீர்னு என் கேரக்டருக்குள் வந்து புகுந்துட்டாங்க. நல்லா கண்ணீர் விட்டவனுக்குத்தான் காமெடி வரும்னு சொல்லுவாங்க. அப்படி அசல் நடிகையை நான் பார்த்தேன். இதுவரைக்கும் இப்படி ஒரு வேஷம் கிடைக்கலைன்னு வருத்தப்பட்டாங்க. இந்த வயதில் ஒரு குழந்தையைத் தூக்கிக்கிட்டு பாறை, மேடு பள்ளம், மலை உச்சி, அடிவாரம்னு ஏறுறதும், இறங்குறதுமா அவங்க நின்னு ஜெயிச்சாங்க. அந்தக் குழந்தை செம்பியை ‘நிலா'ங்கிற பெயரில் அவினாசியில் கண்டுபிடிச்சேன். தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, அஸ்வின்னு இன்னும் நடிகர்கள் இருக்காங்க.”

“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”
“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”

“நடிகர்கள் கிடைக்கலைன்னு வருத்தப்படுறீங்களே?”

“இனிமேலெல்லாம் பிரமாதமாக யோசித்து கேரக்டர் எழுத முடியுமான்னு தெரியலை. எல்லோரும் ஒரு அழகியலோடு வந்திட்டுப் போனால் போதும்னு நினைக்கிறாங்க. நவரசம் இருக்கிறதே மறந்துபோச்சு. சிரிச்சுட்டு அழுகுறதும் அழுதுட்டு சிரிக்கிறதும் எவ்வளவு பேருக்கு வரும்னு தெரியலை. ஒரு பெருமூச்சில் அவ்வளவு நெளிவு சுளிவுகள் உண்டு. சந்தோஷமா, வருத்தமா, கனத்த மனசோட நடக்கிறதில் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. நடிக்கிறதுங்கறது வசனம் பேசுறதில்லை. இப்பவெல்லாம் அழுத்தமாக கதை பண்ணவே தயக்கமா இருக்கு. யாருக்கோ எழுதின கதையில், யாரோ நடிச்சுக்கிட்டு இருக்காங்க. எழுதும்போதே யாராவது இதைச் செய்ய இருக்காங்களான்னு யோசிக்க வேண்டியிருக்கு. இல்லைன்னா மேம்போக்காக எழுதத்தான் மனசு தூண்டுது. ஆடியன்ஸுக்கு இதுதான் நடிப்புன்னு எதையோ காண்பிச்சு நம்ப வச்சிருக்காங்க. இதைத் தாண்டியும் எவ்வளவோ இருக்குன்னு மக்கள் புரிஞ்சிக்கணும்.”

“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”
“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”
“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”
“கோவை சரளாவை சிரிக்கவே விடலை!”

“இத்தனை நாள் அனுபவத்தில் கற்ற பாடம் என்ன?”

“இன்னும் கத்துக்கிட்டேதான் இருக்கேன். நம்ம படிப்பு, பாடம் படிச்சுப் பரீட்சை எழுதினதில்ல. பரீட்சை எழுதி எழுதிப் பாடம் கத்துக்கிட்டே இருக்கேன். எல்லாமே மாயை... இருக்கிற ஒரே உண்மை இதுதான். எனக்கு இன்னிக்குக் கிடைக்கிற கைத்தட்டல் நாளைக்கு இன்னொருத்தருக்குக் கிடைக்கப்போகுது. உங்களது சுகம், துக்கம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றிற்கான விதைகளை உங்களுக்குள்ளே சுமந்துகொண்டிருக்கிறீர்கள். பறவைகள் விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. காலையில் சந்தோஷமா எழுந்து கோரஸாகக் கத்துகின்றன. எங்காவது பறந்து போகும்போது சுவரில் இட்லித் துண்டு கிடைக்க, சாப்பிட்டுப் பறந்துவிடுகின்றன. 20 வருஷத்திற்குத் திட்டம் போடுகிற ஒரே முட்டாள் மனிதன்தான். வாழ்க்கையில் எவ்வளவு மாறினாலும் அடிப்படைப் பண்புகள் மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். மக்கள் மனதில் நல்ல தாக்கங்களை முன்னிறுத்தினால் நான் மகிழ்வேன்.”