
ரொம்பவும் மனசில் ஊறிப்போய் இருந்த கதை. எல்லாக் கதையும் என்னன்னு சொல்வீங்க! பார்த்தது, படித்தது, கேட்டதுதானே! எல்லாத்துக்கும் முன்மாதிரிகள் இருக்கு.
`சகுந்தலாவின் காதலன்' டைட்டில் எப்படியிருக்கு? தலைமுடி கோதி, இரண்டு வார தாடியை வருடிச் சிரிக்கிறார் இயக்குநர் பி.வி.பிரசாத். `காதலில் விழுந்தேன்' படத்தில் கவனம் ஈர்த்தவர். ‘நாக்கமுக்க, நாக்கமுக்க' திசையெட்டும் வெற்றி முரசு கொட்டிய குத்துப்பாட்டு. நின்று நிதானித்து ‘சகுந்தலாவின் காதல'னாக வருகிறார்.
‘‘பெரிசா நல்லபடியாக அடியெடுத்து வைக்கணும்னு நினைச்சதில் கொஞ்சம் தாமதம். ரொம்பவும் பிரியத்தோடு ஹீரோ, இயக்குநர், இசையமைப்பாளர்னு பொறுப்புகள் சுமந்தேன். தலைப்பே வசீகரம். கதையும் பல திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். ஹிட்லரும் காந்தியும் ஒரு வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்? பல சம்பவங்கள் நிறைந்த நிஜ வாழ்க்கை தரிசனம். ஷேர் ஆட்டோ டிரைவராக, எளிய மனிதனாக வர்றேன். நம்ம அத்தனை பேரும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். நல்லது, கெட்டதுன்னு ஒண்ணு, அப்படியும் போகலாம், இப்படியும் போகலாம்னு ஒண்ணு.

இதில் கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. மனுஷன்னு வந்த காலத்திலிருந்து குற்றம், வன்மம், மென்மை, துரோகம் எல்லாமே சரி விகிதத்தில் இருந்துகொண்டே இருக்கு. இதில் கெட்டவனா இருந்தவனை நல்லவனா ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்குக் கொண்டு போகிற முயற்சியும் ஒரே நேரத்தில் நடக்கிறது. அப்படிப்பட்டவனை ஒரு பொண்ணு கைக்கொள்கிற இடமும் வருது. ‘இவள் நம்மை விட்டுப் போனால் போதும்’னு நினைச்சவன் சகுந்தலாவின் காதலனாக மாறிப்போகிற இடங்களும் வருது. நல்லதுக்கு மாறுவதை விடுங்க, கெட்டதிலிருந்து மீள்வதுதான் பெரும் காரியம் என்று கதை சொல்லும்.'' - தொடர்ந்து பேசுகிறார் இயக்குநர்.
``நீங்களே எல்லா முக்கியமான பொறுப்புகளையும் ஏற்றுச் செயல்படுவது கடினமாக இல்லையா?’’
‘‘ரொம்பவும் மனசில் ஊறிப்போய் இருந்த கதை. எல்லாக் கதையும் என்னன்னு சொல்வீங்க! பார்த்தது, படித்தது, கேட்டதுதானே! எல்லாத்துக்கும் முன்மாதிரிகள் இருக்கு. ரத்தமும், சதையுமாக உணர்வு கூடி கதை உருவாகும் போதுதான் அது மனதைத் தொடுது. எங்கே நிம்மதி, எப்ப சந்தோஷம்னு எதையும் எளிதாக அர்த்தப்படுத்திவிட முடியாது. நாம் படிக்கிற கதை, இந்த உறவுகள்கூட பழையதுதான். ஆனால் அதை நமக்கான உணர்வாக, உறவாக மாற்றிக்கொண்டு வாழ்வதுதான் புதுசு. ஒரு சுவாரஸ்யமான சினிமாவைத் தர வேண்டிய பொறுப்பை நான் உணர்ந்திருக்கேன். ஒருத்தர் இன்னொருத்தர் சந்தோஷத்தைத் திருடி ரொம்ப நாள் வாழ்ந்திட முடியாதுன்னு படத்தில் சில செய்திகள் வருது. கதைத் தேர்வில் நான் சரியாக இருந்திருக்கேன்னு படம் முதல் பிரதி பார்த்ததும் தெரிஞ்சது. என் படம் விற்பனையாகணும், வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக, சுவாரஸ்யமான சினிமா தரணும்ங்கிறதுதான் என் விருப்பமாக இருக்கு.''

``படத்தில் நிறைய நடிகர்கள், ஒரு இலக்கிய படைப்பாளி வசனம் எழுதுகிறார். என்ன விசேஷம்?’’
‘‘முக்தா பானு, பசுபதி, சுமன், கருணாஸ், மொட்டை ராஜேந்திரன்னு நிறைய நடிகர்கள் இருக்காங்க. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிற அ.வெண்ணிலா இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். இந்தக் கதைமீது ஆர்வம் கொண்டு அவர் பிரியப்பட்டு செய்து கொடுத்த வேலை இது. கெட்டவனாகவும், நல்லவனாகவும் இருக்கிற ஹீரோ. ஒரு பொறுக்கி போலீஸ், ஆயுள் கைதி கருணாஸ், ஒரு சில ரவுடிகள் இப்படி அடித்தட்டு வரைக்கும் கதை போகும். எங்கே கிரிமினல்கள் உருவாகி வர்றாங்கன்னு தேடினால் உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். நல்லவன் வாழ்க்கை எவ்வளவு எளிமையாக இருந்தாலும் நிம்மதியானது. சந்தோஷம் என்பது என்ன? இன்னாருக்கு இவ்வளவுன்னு எழுதியா வெச்சிருக்கு! இப்படி எல்லாவற்றையும் புரிந்துகொள்கிற இடங்கள் படத்தில் இருக்கு.''
``பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு... வைரலாகவும் போகுதே...’’
‘‘நான் எழுதிய ‘நாக்க முக்க'தான் இன்னைக்கு வரைக்கும் தமிழ்நாட்டின் குத்துப் பாடல்களில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கு. இதில் முதல் தடவையாக பாடல்களோடு இசையிலும் இறங்கியிருக்கேன். படத்தோட சம்பந்தப்பட்டு இன்னும் கவனமாக செய்யலாமேன்னுதான் இசையையும் எடுத்துக்கிட்டேன். ராசாமதிதான் கேமராமேன். என் மனசில் இருக்கிற ஃப்ரேமை அப்படியே திரைக்குக் கொண்டு வந்த மனிதர். சினிமா மாறிவிட்டது. படங்களின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் எந்நாளும் நல்ல தன்மையுள்ள படங்களைக் புறக்கணித்தது கிடையாது.’’
``உடனே ‘வேலையில்லா விவசாயி' ஆரம்பிச்சிட்டீங்க?’’
‘‘விவசாயத்தைப் புறக்கணிச்சிட்டோம். அதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க மறந்துட்டோம். விவசாயிகள் சென்னைக்குக் குடிபெயர்ந்து பங்களா, ஏ.டி.எம், ஐ.டி ஆபீஸ், பேங்க் வாசலில் செக்யூரிட்டி ஆபீஸர்னு புதுப் பெயர் வச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருக்காங்க. எல்லாம் இங்கே நிறைவாக இருக்கு. சோறு மட்டும் இல்லைன்னு எதிர்காலக் குரலாக வரப்போகுது. தொழில் புரட்சி பசியைப் போக்காது. விஞ்ஞானத்திற்கு கோதுமையை மந்திரம் போட்ட மாதிரி உருவாக்கத் தெரியாது. படம் பாதிக்கு மேலே ரெடியாகிவிட்டது. விவசாயியின் குரலைக் காரமும் சாரமுமாகப் பதிவு பண்ணியிருக்கேன். இது நம்ம மண்ணோட கதை. நம்ம மக்களோட சரிதம். என்னோட அடுத்த பாய்ச்சல் அங்கேதான். அதற்கு முன்னேதான் இந்த ‘சகுந்தலாவின் காதலன்.' ''