சினிமா
தொடர்கள்
Published:Updated:

“மணிரத்னம் செய்ய விரும்பிய கதை இது!”

ரத்தசாட்சி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
ரத்தசாட்சி படத்தில்...

அப்பு, பாலன் ரெண்டு பேருமே வேற வேற காலத்தில் வாழ்ந்தவர்கள். ஆனா, ஜெயமோகனோட கதையில் அப்புபாலன்னு ஒரே ஒருத்தர்தான்.

``நான் ஜெயமோகன் சாரோட தீவிரமான வாசகன். அவரோட பல கதைகளைப் படிக்கும்போது படமா பண்ணலாம்னு தோணும். அப்படி ஒரு முறை ‘வெண்கடல்' சிறுகதைத் தொகுப்பைப் படிக்கறப்ப அதிலிருந்த ‘கைதிகள்' சிறுகதை என்னைத் தூங்கவிடாமல் பண்ணிடுச்சு. அதை நிச்சயம் படமா பண்ணிடணும்னு நினைச்சேன். ஜெயமோகன் சாரை சந்தித்து முறைப்படி கதைக்கான அனுமதியைக் கேட்டேன். அப்ப அவர் எங்ககிட்ட சொன்ன விஷயம் ஆச்சரியமா இருந்தது. ‘இந்தச் சிறுகதையை மணிரத்னம் சார் படமா பண்ண விரும்பினார். அதான் ஒரு வருஷம் ஹோல்டு பண்ணி வச்சிருந்தேன். அப்புறம் அவர் ‘பொன்னியின் செல்வன்'ல பிஸியானதால இதைப் பண்ணாமல் விட்டுட்டார்’னு சொன்னார். மணிரத்னம் சாரும் விரும்பிய ஒரு கதை இது. இப்ப ‘பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு ஜெயமோகன் சார் எங்க ‘ரத்தசாட்சி'யில இருக்கறதால படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு வந்திருக்கு'' - மனநிறைவுடன் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில். ஆவணப்படங்கள், குறும்படங்கள் எனப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் இயக்குநர்கள் வசந்தபாலன், நவீன், பிரசாத் முருகேசன், லீனா மணிமேகலை ஆகியோரிடம் சினிமா பயின்றிருக்கிறார் இவர்.

ரஃபீக் இஸ்மாயில்
ரஃபீக் இஸ்மாயில்

``இது நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றிப் பேசும் கதை அல்லவா?’’

‘‘நிஜம்தான். விறுவிறுப்பான பொலிட்டிகல் த்ரில்லர் இது. நக்சல்பாரிகள் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றியைக் கொடுக்கும்னு நம்பினாங்க. நாம கற்பனை பண்ணும் மகத்தான ஒரு உலகத்தை ஆயுதத்தால உருவாக்கிட முடியாது என்பதுதான் கதைக்கரு. இதை நக்சல்பாரிகளோட வீழ்ச்சின்னு சொல்ல விரும்பல. அவங்களுக்குக் கருத்து மாற்றம் ஏற்பட்டபின், ஆயுதப் போராட்டம் கைவிடப்பட்டு அவங்க அரசியல் இயக்கத்துக்குள் வந்தாங்க.

தர்மபுரியில் ஒரு காலகட்டத்தில் நக்சல்பாரிகள் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் செய்தாங்க. அந்த இயக்கத்தில் இருந்த அப்பு, பாலன் போன்றவர்கள் அரசினுடைய ‘காணாமல்போனவர்கள் பட்டியல்’ல இருந்தாங்க. அதே சமயம், அவங்க போலீஸால் என்கவுன்ட்டர் பண்ணப் பட்டாங்கன்னு மக்கள் நம்பினாங்க.

அப்பு, பாலன் ரெண்டு பேருமே வேற வேற காலத்தில் வாழ்ந்தவர்கள். ஆனா, ஜெயமோகனோட கதையில் அப்புபாலன்னு ஒரே ஒருத்தர்தான். அந்தச் சிறுகதையைப் படமாக்கறப்ப நிஜக்கதையை ஒட்டி, கற்பனையையும் கலந்துட்டோம். ரொம்ப சீரியஸான கதையா உங்ககிட்ட சொன்னாலும்கூட, இதை எல்லா ஆடியன் ஸுக்குமான படமாகத்தான் எடுத்திருக்கோம்.

“மணிரத்னம் செய்ய விரும்பிய கதை இது!”
“மணிரத்னம் செய்ய விரும்பிய கதை இது!”

கதை வலுவா இருந்ததால பெரிய ஸ்டார்கள் இந்தக் கதைக்குத் தேவைப்படல. நடித்திருக்கும் எல்லோருமே கதைக்கான ஆட்கள்தான். ‘கைதி'ல உளவாளியா நடித்த கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல் ரெண்டு பேருக்குமே சரிசமான கேரக்டர்கள். ‘மெட்ராஸ்' வினோத், கல்யாண் மாஸ்டர், அர்ஜுன் ராம், பிரவீன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ‘ஆஹா'வில் ‘குத்துக்கு பத்து' வெப்சீரிஸிற்கு ஒளிப்பதிவு பண்ணின ஜெகதீஷ் ரவியின் ஒளிப்பதிவு இந்தக் கதைக்கு பலமா இருக்கும். ‘மாநகரம்' ஜாவேத் ரியாஷ் இசையமைக்கிறார். என் நண்பர்கள் ராஜாராம், வாசு ரெண்டு பேர் முயற்சியினால் தான் இந்த புராஜெக்ட்டுக்கு ‘ஆஹா' ஓ.டி.டி, ‘மகிழ் மன்றம்’ அனிதா மகேந்திரன் மேம், டிஸ்னி சார்னு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைச்சிருக்காங்க. கமல் சாரோட பிறந்தநாள் பரிசா டைட்டில் அறிவிச்சது மறக்க முடியாத சந்தோஷமாகிடுச்சு.''

``ஆர்.ஆர்.சீனிவாசன், குட்டிரேவதி, லீனா மணிமேகலைன்னு இவங்களோட ஆவணப்படத் துறையில் சீரியஸா இயங்கியிருக்கீங்க. ஆவணப்படம், சினிமா, ரெண்டுமே வேறவேற பரிமாணங்கள். அங்கிருந்து சினிமா எளிதானதா இருந்ததா?’’

‘‘டாக்குமென்ட்ரியும், சினிமாவும் ஒருசேரப் பண்ணக்கூடிய இயக்குநர்கள் உலகம் முழுவதும் இருக்காங்க. ஆவணப்படங்களை ஒரு தொழிலாக ஆரம்பிச்சு, இப்பவும் பண்ணிட்டிருக்கேன். டாக்குமென்ட்ரியைப் பொறுத்தவரை சட்டுனு பண்ணிட முடியாது. காலங்கள் எடுக்கும். ஆராய்ச்சி, பொறுமைன்னு எல்லாம் தேவைப்படும். அதுல எடிட்டிங்கும் பண்ணிடுவேன். ஆனா, சினிமா அப்படியில்ல. இங்கே எல்லாமே முன்கூட்டியே எழுதி வச்சிக்கிட்டுக் கிளம்பணும்.

“மணிரத்னம் செய்ய விரும்பிய கதை இது!”
“மணிரத்னம் செய்ய விரும்பிய கதை இது!”

தவிர, இலக்கிய வாசிப்பில் தீவிரமா இருக்கறதால சினிமா எனக்கு சவாலானதா தெரியல. வேறவேற தளங்கள்ல வேலை செய்த அனுபவம் இருக்கறதால, எல்லாமே எனக்குக் கைகூடியிருக்குன்னு நம்பறேன். அதிலும் நல்ல தயாரிப்பாளர்கள் அமையும்போது படம் இன்னும் அழகாகிடுது. ஏன்னா, இந்தப் படத்தை எடுத்து முடிச்சிட்டு அவங்ககிட்ட காட்டினேன். ‘படம் நல்லா வந்திருக்கு. ஆனா, இன்னும் சில விஷயங்களைச் சேர்த்தால் பலமா இருக்கும்'னு சொன்னதோடு கூடுதலா மூணு நாள்கள் ஷூட் போயிட்டு வரவச்சாங்க. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஒரு இயக்குநருக்கான பலமே இப்படி தயாரிப்பாளர்கள் அமையறதுதான். அதனாலதான் ‘ரத்தசாட்சி'யை நான் நினைச்ச மாதிரி கொண்டு வர முடிஞ்சிருக்கு!''