
மனைவி, மகன், வயதான பெற்றோர் என்று எல்லோரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் ஏலத்தோட்ட வேலைக்கே வந்துவிட்டேன்
மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லையில் ஏலத்தோட்டத்தில் தொழிலாளியாக இருந்துகொண்டு ஃபேஸ்புக் மூலம் முயற்சி செய்தே ஒருவர் சினிமா இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.அவர், 36 வயது ராஜபாண்டியன்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அடர்வனத்துக்குள் இருக்கும் இஞ்சிப்பிடிப்பு என்ற பகுதியில் உள்ள ஏலத்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த அவரை, காட்டுக்குள் நீண்ட பயணம் செய்து சந்தித்தோம்.
``1930-களில் தென்தமிழகத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து கஞ்சிக் கூலி அடிப்படையில் எங்கள் முன்னோர்களை ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்தார்கள். ஐந்து தலைமுறைகளாக ஏலத்தோட்டங்களில் வேலை பார்த்தும் தற்போது வரை குடியிருக்க சொந்த வீடு இல்லை. தற்போது ஒரு நாள் கூலி 550 ரூபாய். கஷ்ட ஜீவனம் செய்தாலும், சினிமாதான் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடைசிக்கடவு என்ற பகுதியில் ஷோபனா தியேட்டர் இருக்கிறது. பெரும்பாலும் மலையாளப் படங்கள் மட்டுமே போடுவார்கள். இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் அவ்வப்போது தமிழ்ப் படங்களும் திரையிடப்படும். எனக்கும் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
அந்த ஆசை வந்ததும் எல்லோரும் செய்வதைப்போல நானும் கோடம்பாக்கம் புறப்பட்டேன். என்னால் இயக்குநர்களை மட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டைக்கூட நெருங்க முடியவில்லை. சென்னையில் யாரையும் எனக்குத் தெரியாது. சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தேன். ஓரளவுக்கு அனிமேஷன் கற்றுக்கொண்டேன். அப்போது ஒரு நிறுவனம் சிறுவர்களுக்கு அனிமேஷனில் படம் தயாரிக்க ஆட்கள் தேர்வு செய்வதாக அறிந்தேன். ஓவியமும் அனிமேஷனும் தெரிந்த நம்பிக்கையில் ஆங்கிலமே தெரியாத நான் கிழிந்த சட்டையுடன் அங்கு இன்டர்வியூவுக்குச் சென்றேன். என் ஆர்வத்தைப் பார்த்த நிறுவனம் எனக்கு வேலை வழங்கியது. அங்கு பணியாற்றியது பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அங்குள்ளவர்கள் ``இவ்வளவு ஆர்வம் உள்ள நீங்கள் சுயமாக முயற்சி செய்து சினிமாவே எடுக்கலாம்' என உற்சாகப்படுத்தினர்.

மனைவி, மகன், வயதான பெற்றோர் என்று எல்லோரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் ஏலத்தோட்ட வேலைக்கே வந்துவிட்டேன். இருப்பினும் சினிமா ஆசை அணையாத நெருப்பாக இருந்தது. முதலில் ஒரு குறும்படம் இயக்கலாம் என்ற எண்ணத்தில், ஏலத்தோட்டத்தில் வேலை செய்து 50,000 ரூபாய் சேமித்தேன். குறும்படத் திட்டம் குறித்து ஃபேஸ்புக் மூலம் தொடர்பைப் பிடித்து பி.சி.ராம் சாரிடம் பேசினேன். அவர் தன் உதவியாளர் வைஷாலி சுப்ரமணியத்தைத் தொடர்புகொள்ளச் சொன்னார். அவரிடம் போனிலேயே என் கதையைக் கூறினேன். அவர் உடனே என் குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து தர சம்மதித்தார். அதற்கு சம்பளம்கூடத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.
`தீண்டாதே' என்ற பெயரில் ஏலத்தோட்டத்தில் ஒரு சிறுமிக்கு நேரும் அவலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தக் குறும்படத்தை ஒளிப்பதிவாளர் வைஷாலி உதவியுடன், பாரதிராஜா, பா.இரஞ்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினார்கள்.

நறுமணப்பொருள்களின் ராஜா, ஏலக்காய். ஆனால் அந்த ஏலக்காயை விளைவித்துக் கொடுக்கும் ஏலத்தோட்டத் தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கை, ஏல வியாபாரத்தில் உள்ள அரசியல் குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். பா.இரஞ்சித் இந்தக் கதையை சினிமாவாக எடுக்கலாம் என நம்பிக்கை கொடுத்தார். அவரின் தயாரிப்பிலேயே படம் எடுக்கப் பேசப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அது தாமதமானது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் துபாயில் தொழிலதிபராக உள்ளவருமான அழகுராஜா என்பவர் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். `ஏலவனம்' எனப் பெயரிடப்பட்ட படத்திற்கு கம்பத்தில் பூஜை போடப்பட்டது. `கயல்' சந்திரன், அம்மு அபிராமி, பசுபதி, சாய் தீனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உதவியாளர் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ராஜாசேதுபதி படத்தொகுப்பு செய்கிறார். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஏலத்தோட்டங்களில் படமாக்க இருக்கிறோம். இங்கு எடுக்கப்பட்ட `மேற்குத்தொடர்ச்சி மலை’, `தேன்’ உள்ளிட்ட படங்கள் சர்வசேத அளவில் விருதுகளைக் குவித்தன. ஏலவனம் படமும் சர்வசேத அளவில் கவனம் பெறும் படைப்பாக இருக்கும்'' என்றார்.
ராஜபாண்டியனின் வெற்றி ஏலத்தோட்டத் தொழிலாளர்களின் வெற்றியாக இருக்கும்.