ஒரே படத்துக்குள் மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என அத்தனை பேரையும் எப்படி கொண்டுவந்தீர்கள்?

`` `மின்சார கனவு’ படம் ரிலீஸாகி ஒரு வருஷம் முடிஞ்சும் அடுத்த கதையை நான் எழுதவேயில்லை. திடீர்னு ஒரு நாள் லைன் தோணுச்சு. உடனே சுஜாதா சாரோடு சேர்ந்து `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சேன். அதைத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார்கிட்ட சொல்லி ஓகே வாங்குனதுக்கு அப்புறம், எந்தெந்த கேரக்டர்களில் யார், யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சோம். முதலில் மம்முட்டி சார் நடிச்ச மேஜர் பாலா ரோலுக்கு பார்த்திபன் சார், அர்ஜூன் சார்னு சில பேர்கிட்ட பேசினோம். கால்ஷீட் பிரச்னை, டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்கிறதுக்கு ஆர்வமா இல்லைனு சில காரணங்களால் அவங்களால் நடிக்க முடியலை. அதனால, மம்முட்டி சார்கிட்ட கேட்டுப் பார்க்கலாம், அவரும் சில தமிழ்ப்படங்கள் பண்ணியிருக்காரேன்னு தோணுச்சு. அவர் நடிச்சா இந்த ரோலுக்கு சரியா இருக்கும்னு அவர்கிட்ட கதையைச் சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டார்.
தபு கமிட்டானதுக்கு அப்பறம், ஐஸ்வர்யா ராய் நடிச்ச கேரக்டருக்கு செளந்தர்யா, மஞ்சு வாரியர்னு பல ஹீரோயின்கள்கிட்ட கதை சொன்னேன். எல்லாரும் `கதை பிடிச்சிருக்கு; ஆனா...’னு யோசிச்சாங்க. யாருக்கும் செகண்ட் ஹீரோயினா நடிக்கிறதுக்கு விருப்பம் இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன். அப்பறம்தான் ஐஸ்வர்யா ராய்கிட்ட கதை சொல்லி, படத்துக்குள்ள வந்தாங்க.

அஜித் நடிச்ச கேரக்டருக்கு முதலில் பிரசாந்த்கிட்டதான் பேசினோம். அவர் ஏற்கெனவே `ஜீன்ஸ்’ படத்துல ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா நடிச்சிருந்ததுனால, இந்தப் படத்துலேயும் அதே மாதிரி நடிக்கணும்னு சொன்னார். அப்படி மாற்றினால், கதையே மாறிடும்னு அஜித்கிட்ட கேட்டோம். அவர்கிட்ட நான் கதை சொல்ல போனப்ப, அவர் முதுகு ஆபரேஷனுக்காக, அப்போலோல அட்மிட் ஆகியிருந்தார். அங்கதான் அவர்கிட்ட படத்தோட கதையைச் சொன்னேன். தனக்கு உடம்பு சரியாகி உடனே நடிக்கவந்துடுவோம்கிற நம்பிக்கை அவருக்கும், எங்க டீமுக்கும் நல்லாவே இருந்தது. ஹாஸ்பிட்டல் பெட்லதான் அவர்கிட்ட கதை சொல்லி ஓகே வாங்கினேன். இப்படித்தான் இந்த நடிகர், நடிகைகள் படத்துக்குள் வந்தாங்க.’’
ஆபரேஷன் முடிஞ்ச உடனே அஜித் நடிச்சிருக்கார். அவருக்கு எதுவும் பிரச்னையா இல்லையா?

``அஜித் ரொம்பவே சிரமப்பட்டார். ஷூட்டிங் நடக்கும்போது, பிரேக்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்பார். `என்ன சொல்லப் போகிறாய்’ பாட்டு எடுக்கும்போது, பயங்கர வெயில். அங்க நிழலுக்கு எந்த மரமுமே இல்லை. அந்தப் பாட்டுல அவர் ரயில்வே ட்ராக்ல ஆடுற மாதிரி ஷாட் இருக்கும். அதை எடுக்கிறதுக்காக கிரேன் செட் பண்ணிட்டு, அவரும் டான்ஸ் ஸ்டெப் எல்லாத்தையும் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்துட்டார். அப்போனு பார்த்து ரயில் வந்திடுச்சு. அஜித்துக்கும் செம முதுகு வலி. கிரேனைக் கொண்டுவந்த லாரியிலேயே போய் படுத்துக்கிட்டார். நாங்க ரயில் வர்றதுக்குள்ள கிரேனை மூவ் பண்ணிட்டு, ரயில் போனதுக்கு அப்புறம் அதை செட் பண்ணி அஜித்தைக் கூப்பிட்டோம். அஜித் வந்ததுக்குப் பிறகு அவருக்கு க்ளோஸ் அப் ஃப்ரேம் வைக்கும்போது, அவர் கண்ணுல கண்ணீர் இருந்துச்சு. `டஸ்ட் எதுவும் பட்டுடுச்சா’னு நான் கேட்டதும், `இல்ல சார். முதுகு வலி தாங்க முடியலை. பரவாயில்ல சார், அடுத்த ரயில் வர்றதுக்குள்ள நாம இந்த ஷாட்டை எடுத்துடுவோம்’னு சொன்னார். அஜித் அழுது அன்னைக்குத்தான் பார்த்தேன். அந்தளவுக்கு வலியோடுதான் அவர் நடிச்சுக் கொடுத்தார். ரொம்பவே ஒத்துழைச்சார்.’’

அஜித் வந்ததுக்குப் பிறகு அவருக்கு க்ளோஸ் அப் ஃப்ரேம் வைக்கும்போது, அவர் கண்ணுல கண்ணீர் இருந்துச்சு. `டஸ்ட் எதுவும் பட்டுடுச்சா’னு நான் கேட்டதும், `இல்ல சார். முதுகு வலி தாங்க முடியலை. பரவாயில்ல சார், அடுத்த ரயில் வர்றதுக்குள்ள நாம இந்த ஷாட்டை எடுத்துடுவோம்’னு சொன்னார்.
மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ்னு எல்லாரும் இருக்கிற இந்த போட்டோ ரொம்பவே ஃபேமஸ். அந்த போட்டோஷூட் அனுபவத்தைச் சொல்லுங்க?

``இவங்க 5 பேரை வெச்சும் ஒரு போட்டோஷூட் எடுக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தோம். அதுக்குனு ஒரு நாள் ஒதுக்கி எடுக்கிற மாதிரிதான் ப்ளான். ஆனா, அதுக்குள்ள `கண்ணாமூச்சி ஏனடா’ பாட்டோட ஷூட்டிங்ல 5 பேருக்கும் ஒரே நாள்ல கால்ஷீட் இருந்துச்சு. அதனால அப்பவே போட்டோஷூட்டை எடுத்துக்கலாம்னு ஏற்பாடு செஞ்சோம். ஒரு செட்டிநாட்டு வீட்டோட கதவைக் கொண்டு வர வெச்சு, இந்த போட்டோஷூட்டை எடுத்தோம். இந்த போட்டோஸ்ல யார், யாருக்கு ஜோடினு எதுவுமே இல்லாம, எல்லாரும் ஜாலியா வீட்டு வாசல்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறமாதிரி கேண்டிட் ஷாட்ஸா எடுத்தோம். போட்டோஸ்க்கும் நல்ல ரீச் கிடைச்சது.’’
`மின்சார கனவு’ படத்துக்குப் பிறகு நீங்க இயக்குற ரெண்டாவது படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசைனு எப்ப முடிவு பண்ணுனீங்க?

`` 'மின்சார கனவு’ படத்துக்கு அப்புறம் அடுத்த படத்தோட வேலைகளை ஆரம்பிக்கும்போதே, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் மியூசிக்னு பேசி கமிட் பண்ணிட்டோம். `மின்சார கனவு’ படத்தோட பாடல்கள் பெரும்பாலும் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருந்ததுனால, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துக்கு இந்தியன் ஸ்டைல்லதான் பாடல்கள் இருக்கணும்னு முடிவெடுத்தோம். அதுக்கு ஏத்த மாதிரிதான் எல்லா பாடல்களையும் ரஹ்மான் இசையமைச்சார். அதுமட்டுமல்லாம, ஐஸ்வர்யா ராய் நடிச்ச மீனாட்சி கேரக்டருக்கு தமிழ் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும்கிறதால, அந்தக் கேரக்டருக்கான பாடல்களை எழுதும்போது வரிகளில் அதிக கவனம் செலுத்தினோம். வைரமுத்து சாரும் அதைச் சிறப்பா எழுதிக் கொடுத்தார்.’’
`கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் ரிலீஸாகி 20 வருடங்கள் நிறைவாகி இருக்கு. மக்கள் இப்பவும் இந்தப் படத்தை ரசிக்கிறாங்க... எப்படி ஃபீல் பண்றீங்க?

``இந்தப் படம் ரிலீஸான சமயத்தில் எனக்கு நிறைய பாராட்டுகள் வந்துச்சு. அதே அளவுக்கான பாராட்டு, டிவியில இப்பப் போட்டாலும் வருது. 20 வருஷம் ஆகியும் இந்தப் படத்தை மக்கள் மறக்காமல் இருப்பதில் டிவி சானல்களுக்கும் ஒரு முக்கியப்பங்கு இருக்கு.’’