சினிமா
தொடர்கள்
Published:Updated:

“அண்ணாமலைக்கு நடிப்புத்திறமை அதிகம்!”

இயக்குநர் ராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் ராஜ்குமார்

‘எனது முதல் படம், ‘அரபி'. பாரா விளையாட்டு வீரர் விஸ்வாஸ் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாக்கியுள்ளேன்

நெட்டிசன்களிடையே வைரல் ஆகிவருகிறது கன்னடத் திரைப்படமான ‘அரபி' டீசர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதன்முறையாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் என்பதால் சமூக வலைதளங்களில் ‘அரபி' டீசரைப் பரப்பிப் பரப்பி வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றுப் பதக்கங்களைக் குவித்த கர்நாடக விளையாட்டு வீரர் கே.எஸ்.விஸ்வாஸ் ‘அரபி' படத்தில் ரியல் லைஃப் ஹீரோவாகவே நடித்துள்ளார். அண்ணாமலை இதில் விஸ்வாஸின் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘அரபி' இயக்குநர் ராஜ்குமாரிடம் பேசினேன்.

“அண்ணாமலைக்கு நடிப்புத்திறமை அதிகம்!”

‘‘எனது முதல் படம், ‘அரபி'. பாரா விளையாட்டு வீரர் விஸ்வாஸ் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாக்கியுள்ளேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்குச் சென்றபோது விஸ்வாஸை முதல்முறையாக மேடையில் பார்த்தேன். கைகள் இல்லாவிட்டாலும் கால்களாலேயே நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யமூட்டினார். இந்தியாவிற்காக பாரா வேர்ல்டு சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தவர் என்பதும் தெரிந்தது.

சிறுவயதில் மின்சாரம் தாக்கி இரண்டு கைகளை இழந்ததோடு, காப்பாற்ற வந்த தன் தந்தையையும் மின்சாரத்திற்குப் பறிகொடுத்தவர். ஆனாலும், நம்பிக்கையை இழக்காமல் விளையாட்டில் அவர் ஜெயித்த கதை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. அதனால், விஸ்வாஸின் வலி நிறைந்த கதையையே படமாக்குவதோடு, அவரையே நடிக்க வைக்கவேண்டும் என்று நினைத்தேன். நான்கு மாதங்கள் அவருடனேயே பயணித்து நடிக்க சம்மதிக்கவும் வைத்தேன்.

விஸ்வாஸின் கதை அரபிக்கடலில் இருந்துதான் தொடங்குகிறது. 60 சதவிகிதப் படப்பிடிப்பும் உடுப்பியில் அரபிக்கடலையொட்டித்தான் படமாக்கினோம். அரபிக்கடலிலிருந்து எப்படி சர்வதேச அளவில் சாதித்தார் என்பதைக் காட்டவே தலைப்பை இப்படி வைத்தோம்.”

“அண்ணாமலைக்கு நடிப்புத்திறமை அதிகம்!”

``இந்தக் கதையில் அண்ணாமலை எப்படி வந்தார்?’’

‘‘தன்னம்பிக்கை நிறைந்தவராக இருந்தாலும் பயிற்சியாளரின் ஊக்கம் இல்லாமல் விஸ்வாஸால் இந்த தூரத்தை எட்டியிருக்க முடியாது. அதனால், விஸ்வாஸுக்குப் பயிற்சியாளராக நடிக்கவைக்க யாரை அணுகலாம் என்று யோசித்தபோது நினைவில் நின்றவர் அண்ணாமலைதான். அதிரடி நடவடிக்கைகளால் ‘கர்நாடக சிங்கம்' என்று மக்களிடையே பெயரெடுத்தவர். ஏற்கெனவே, விஸ்வாஸுக்கு அண்ணாமலை சார் நல்ல அறிமுகம். அதனால், மங்களூரில் நடந்த ஒரு விழாவில் அண்ணாமலை சாரை எளிதாக அணுக முடிந்தது. அப்போது அவர், ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் இல்லை. அரசியல்வாதியாகவும் இல்லை. ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்த ஐந்து மாதம் கழித்தே சந்தித்து சம்மதம் வாங்கினேன்.

சம்பளம் குறித்துப் பேசும்போது, ‘நீங்கள் செய்வது நல்ல விஷயம். எனக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும்’ என்று கூறி ஒரு ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டவர், ‘இதனை ஐயப்பன் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திவிடுவேன். உங்களுக்கு நல்லது நடக்கட்டும்’ என்று வாழ்த்திவிட்டு நடிக்க வந்தார்.

அண்ணாமலைக்கு நடிப்புப் பயிற்சி கொடுக்க அணுகினோம். ஆனால், அவருக்கு காலேஜ் படிக்கும்போதே நடிப்புமீது ஆர்வம் இருந்திருக்கிறது. அது எங்களுக்கு இன்னும் எளிதானது. அவரது காட்சிகளை இரண்டு நாள்கள் படமாக்கினோம். அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொண்டார். மொத்தப் படத்தில் 8 நிமிடம் வருகிறார். அதில், ஹீரோவுடன் சேர்த்து அவருக்கு ஒரு பாடலும் உள்ளது. அண்ணாமலைக்கு நடிப்புத் திறமை அதிகமாகவே இருக்கு. ஒரு தொழில்முறை நடிகரைப்போல நடித்தார்.’’

“அண்ணாமலைக்கு நடிப்புத்திறமை அதிகம்!”

``டீசர் குறித்துத் தமிழகத்தில் பேசப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தமிழ் மக்கள் ‘அரபி' டீசர் குறித்துப் பேசுவது உற்சாகமாக உள்ளது. அண்ணாமலை சார் எப்படி நடித்துள்ளார் என்பதை எதிர்பார்ப்புடன் பார்த்தார்களோ, அப்படித்தான் கர்நாடக மக்களும் வியப்புடன் பார்த்துப் பாராட்டினார்கள். இந்த ஆண்டிற்குள் படத்தை தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வெளியிட யோசனை செய்துகொண்டிருக்கிறோம். தமிழில் ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால், கண்டிப்பாக படத்தைத் தமிழிலும் வெளியிடுவோம்.’’

“அண்ணாமலைக்கு நடிப்புத்திறமை அதிகம்!”

``ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க-வினர்மீது எதிர்ப்பு மனநிலை இருக்கிறதே... படம் சக்சஸ் ஆகும் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘இது ஒரு மோட்டிவேஷனல் படம். ஒரு மாற்றுத்திறனாளி வீரர், தன் வாழ்வில் இருக்கும் தடைகளைத் தாண்டி எப்படி சாதித்தார் என்பதை மட்டும் பார்க்கவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட படமாக நினைத்து தமிழர்கள் ‘அரபி' படத்தைப் பார்க்க வேண்டும். பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.’’