Published:Updated:

`மருத்துவமனைல இருந்தபோதும் கோர்ட்டுக்குப் போறதா சொன்னார்!' - டிராஃபிக் ராமசாமி குறித்து ராஜுமுருகன்

டிராஃபிக் ராமசாமி - ராஜுமுருகன் ( Photo: Vikatan )

``இந்த நாடு ஒப்பற்ற சமூக சேவகரை இழந்திருக்கிறது. ராமசாமி ஐயா போன்று தன்னியல்பாகவே மக்கள் நலப்பணிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல." - ராஜுமுருகன்

Published:Updated:

`மருத்துவமனைல இருந்தபோதும் கோர்ட்டுக்குப் போறதா சொன்னார்!' - டிராஃபிக் ராமசாமி குறித்து ராஜுமுருகன்

``இந்த நாடு ஒப்பற்ற சமூக சேவகரை இழந்திருக்கிறது. ராமசாமி ஐயா போன்று தன்னியல்பாகவே மக்கள் நலப்பணிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல." - ராஜுமுருகன்

டிராஃபிக் ராமசாமி - ராஜுமுருகன் ( Photo: Vikatan )

நம் நாட்டில் இன்று சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் அறம் சார்ந்து தன் இறுதி மூச்சு வரையிலும் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய சமூக சேவகர்களில், டிராஃபிக் ராமசாமி என்று எல்லோராலும் அறியப்படும் கே.ஆர்.ராமசாமியும் ஒருவர். சமூக சேவை செய்ய வயது தடையல்ல என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்.

நூல் ஆலை ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கையோடு சமூக நலப்பணிகளில் இறங்கிய ராமசாமிக்கு `டிராஃபிக்' ராமசாமி என்ற அடைமொழியை வழங்கி கௌரவித்தது சென்னை மாநகரம். பாரிமுனையில் தன்னார்வலராக முன்னின்று சாலைப் போக்குவரத்தை சீர்செய்த ராமசாமி பின்னாளில் சமூக நலப்பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு களத்தில் இறங்கினார். பாரிமுனையில் போக்குவரத்தைச் சீர்செய்த ராமசாமிக்கு காவல்துறையினர் வழங்கிய அடைமொழிதான், `டிராஃபிக் ராமசாமி.'

ஆரம்பத்தில் சாலை போக்குவரத்தைச் சீர்படுத்தி வந்த டிராஃபிக் ராமசாமி, தொடர்ந்து சமூகத்தில் எண்ணற்ற மாற்றங்களுக்கு வழிவகுத்தார். பொதுமக்கள் நலன் கருதி ஏராளமான பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு சென்றவர், அவற்றைத் தானே வாதாடி வென்றிருக்கிறார். அதிக எடை ஏற்றிக்கொண்டு கட்டுப்பாடு இல்லாமல் சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு வாதாடி தடை விதித்தது, சென்னையில் அனுமதியின்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிய முதலாளிகளுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடி கட்டடங்களை இடிக்க வைத்தது, எல்லா கட்டடங்களிலும் வாகன நிறுத்தும் வசதி அமைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற ஆணைக்கு வித்திட்டது என எண்ணற்ற சமூக நலப்பணிகளை ராமசாமி இந்த சமூகத்துக்குச் செய்திருக்கிறார். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்றெல்லாம் அரசியல் சாயலுடன் சமூகப் பிரச்னைகளைக் கையாளாமல் அறம் சார்ந்து செயல்பட்டவர். அதன் காரணமாக ராமசாமி பல முறை சிறைக்குக் கைதாகிச் சென்றிருக்கிறார். என்றாலும் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராகத் திமிறி எழுந்தபடி சாலையில் புரட்சி செய்தவர் அவர்.

டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் ராமசாமி எதிர்த்தார். தமிழக அரசியலின் அடையாளமாக விளங்கும் பேனர், கட்-அவுட் கலாச்சாரத்துக்கு எதிராகப் பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடி கட்டுப்படுத்தியதும் டிராஃபிக் ராமசாமிதான்.

நூல் ஆலையிலிருந்து ஓய்வுபெற்ற பின் தன் அடுத்த 20 ஆண்டுக்காலத்தை மக்கள் நலப்பணிகளுக்காக ஒதுக்கிய சேவகர் ராமசாமி, கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ராமசாமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இருதய நோய் இருந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (4.5.2021) மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

சமூக சேவகர் ராமசாமியின் இழப்பு, தமிழகத்தின் இழப்பாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஏராளமான தகவல் அறியும் ஆர்வலர்கள் உருவாகவும், சமூக சேவை மனப்பான்மை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியவும் மிகமுக்கியக் காரணமாக இருந்த டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக சேவகர்கள் என அனைவரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்த வண்ணமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் ராஜுமுருகன் டிராஃபிக் ராமசாமி அவர்களின் மறைவு குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கிய `ஜோக்கர்' திரைப்படத்தில் நடிகர் சோம சுந்தரம் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க காந்தியவாதி சசி பெருமாள், டிராஃபிக் ராமசாமி ஆகியோரை மையமாகக் கொண்டே வடிவமைத்திருப்பார். படத்தைத் திரையில் பார்த்த ஒவ்வொருவரும் டிராஃபிக் ராமசாமியின் தாக்கத்தைப் படம் முழுவதும் உணர்ந்திருப்பார்கள். ராஜுமுருகன் டிராஃபிக் ராமசாமியின் மேல் கொண்ட ஈர்ப்பால் அவரை மையமாக வைத்து கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார்.

ஜோக்கர் !
ஜோக்கர் !

இதுகுறித்து இயக்குநர் ராஜுமுருகன் நம்மிடம் பேசியபோது, ``இன்று நாட்டில் டாஸ்மாக் பார் நடத்துபவர்களும், இயற்கையை அழித்து விற்றுக்கொண்டிருப்பவர்களும், விவாதங்களில் கலந்துகொண்டு ஊடக வெளிச்சத்தை விரும்புபவர்களும், சமூக நல அமைப்புகளை நிறுவி பணம் பார்ப்பவர்களும்தான் சமூக ஆர்வலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். சமூக சேவகர் என்ற அடையாளத்தை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருப்பவர்கள் சமூகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், இத்தகைய சூழ்நிலைவாதிகளுக்கு மத்தியில் சில தூய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய தூய அப்பழுக்கற்ற மனிதர்தான் டிராஃபிக் ராமசாமி ஐயா.

நாட்டில் ராமசாமி ஐயா போன்ற சமூக ஆர்வலர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். பணம் சார்ந்து, அரசியல் சார்ந்து செயல்படாமல் அறம் சார்ந்து சமூகத்துக்காகச் செயல்பட்டவர். சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பணம் சம்பாதிப்பது ஒன்றினை முழு நோக்கமாகக் கொண்டு செயல்படும் போலிகளுக்கு மத்தியில் ராமசாமி ஐயா போன்றோர் வைரங்களாகவே ஜொலிக்கிறார்கள்.

மக்கள் பிரச்னைகளில் சமரசமில்லாமல் போராடியவர் ஐயா ராமசாமி. இத்தகைய உயர்ந்த மனிதருக்கு மரியாதை செய்யும் பொருட்டாகத்தான் என்னுடைய `ஜோக்கர்' திரைப்படத்தில் சோம சுந்தரத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தேன். டிராஃபிக் ராமசாமி ஐயா மற்றும் காந்தியவாதி சசி பெருமாள் ஆகியோரின் தாக்கம் படம் முழுதும் நிறைந்திருக்கும். பாக்கெட்டில் பேனா வைத்திருப்பது, நடை, உடை பாவனை என ராமசாமி ஐயாவின் பிரதிபலிப்பாகவே அந்த கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதே போன்று படத்தில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி போன்ற சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கும் சாமானியர்களின் தாக்கமும் நிறைந்திருக்கும்.

ராஜுமுருகன்
ராஜுமுருகன்

`ஜோக்கர்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு டிராஃபிக் ராமசாமி ஐயா என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினார். அவருடனான அந்த உரையாடல் அத்துணை உணர்வுபூர்வமாக இருந்தது. கொண்ட கொள்கையில் சமரசமில்லாத ஒரு போராளி இந்த சமூகத்தில் எப்படி கோமாளியாகப் பார்க்கப்படுகிறான் என்று என்னிடம் மிகவும் மனம் வருந்தினார். சமூக ஆர்வலர்களின் போராட்டங்களை உணர்வுபூர்வமாக முழு நீள படமாகப் பதிவு செய்தது குறித்து வாழ்த்தி மனம் நெகிழ்ந்துபோனார். தொடர்ந்து என்னுடன் ராமசாமி தொடர்பிலேயே இருந்தார். கலை ரீதியான அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொள்வது, அவரிடத்தில் கருத்துகள் கேட்பது என இருவருக்குமிடையே ஆரோக்கியமான உறவு இருந்தது.

கடைசியாக அவரிடம் 6 மாதத்துக்கு முன்பாகத் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், அப்போதுகூட அவர், `எனக்கு ஒண்ணுமில்ல தம்பி, நான் நல்லாதான் இருக்கேன். இப்பகூட ஒரு கேஸ் விஷயமா கோர்ட் போகப்போறேன்' என்றார். அதுதான் அவருடன் இறுதியாகப் பேசியது.

டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி

தற்போது அவர் இறந்துவிட்டார், அவர் இல்லை என்ற செய்தி எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த நாடு ஒப்பற்ற சமூக சேவகரை இழந்திருக்கிறது. ராமசாமி ஐயா போன்று தன்னியல்பாகவே மக்கள் நலப்பணிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர் தன் இறுதி மூச்சு நிற்கும் வரையிலும் இந்த சமூகத்துக்காக அறம் சார்ந்து இயங்கினார். சமூக ஆர்வலர் என்ற சொல்லுக்கு அடையாளமாய் விளங்கியவர். அரிதிலும் அரிதானவராகவே அவரை நான் பார்க்கிறேன். அறம் சார்ந்த அடுத்த தலைமுறைக்கான விதைகளை விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அது விருட்சமாக வளர்ந்தோங்கி சமூகத்துக்கு பயனளிக்கும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.